கட்டுரை : அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.

 

 

எப்படா அடுத்தவனை அவமானப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என அல்ப சந்தோசத்தோடு அலையும் மக்கள் எக்கச்சக்கம். ஏன் தான் மக்கள் இப்படியெல்லாம் நடந்துக்கிறாங்களோ ? என நாம் பல வேளைகளில் தலையைப் பிய்த்துக் கொள்வோம். விஷயம் புரிபடாது ! பெரும்பாலான அவமானங்கள் மூன்று வகை தான். ஒன்று நம்ம உருவம் சார்ந்தது. இரண்டாவது நமது செயல் சார்ந்தது. மூன்றாவது நமக்கு சம்பந்தமே இல்லாத நம்ம சூழல் சார்ந்த விஷயம்.

இதுல ஏதாவது நாலு குறை கண்டுபிடித்து நம்ம காதுல கொஞ்சம் ஈயம் ஊற்றிட்டு அவங்க பாட்டுக்கு போயிடுவாங்க. நாம அந்த வார்த்தைகளை திரும்பத் திரும்ப நினைச்சுப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகிடுவோம். இல்லேன்னா, அந்த அவமானத்தை மறைக்க நம்ம பங்குக்கு நாமும் நாலுபேரை இன்சல்ட் பண்ணிட்டு திரிவோம்.  இது தான் வாழ்க்கையின் யதார்த்தம்.

“நீ வெற்றியாளனாய் பரிமளிக்க வேண்டுமானால் அடுத்தவர்கள் உன்னை நோக்கி எறியும் கற்களைக் கொண்டு வாழ்க்கையில் வலுவான அடித்தளம் கட்டிக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும் ” என்கிறார் டேவிட் பிரிங்க்லி. மண்வெட்டி பிடிக்கிற உழைப்பாளியோட கை ஆரம்பத்துல சிவந்து, அப்புறம் கிழிஞ்சு கடைசில பாறை மாதிரி உரமாயிடும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனசும் உடைந்து விடாமல் அவமானங்களை திறமையாகச் சமாளித்தால் வலிமையாகி விடும். அப்படி ஒரு மனசு அமைந்து விட்டால் வாழ்க்கையின் எந்த சிகரத்திலும் கூடி கட்டிக் குடியிருக்கலாம்.

ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் ஒரு பெண் போய் நடிக்க  வாய்ப்புக் கேட்டார். அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்த தயாரிப்பாளர் சிரித்தார். “என்னம்மா.. உன்னை பாத்தா ரொம்ப சாதாரண பொண்ணா இருக்கே ? நடிகைக்குரிய எந்த ஒரு இலட்சணமும் உன்கிட்டே இல்லையே ? நீ ஸ்டாராக முடியாது. வேற ஏதாச்சும் வேலை பாரும்மா” என்று கூறி திருப்பி அனுப்பினார். பெண்கள் கேட்க விரும்பாத ஒரு அவமான வார்த்தை “ நீ அழகா இல்லை” என்பது தான். அந்தப் பெண்ணோ அந்த அவமானத்தை போர்த்துக் கொண்டு சோர்ந்து போய் படுத்து விடவில்லை. விக்கிரமாதித்ய வேதாளமாய் மீண்டும் மீண்டும் முயன்றார்.

ஒரு காலகட்டத்தில் வாய்ப்புக் கதவு திறந்தது. பின் உலகமே வியக்கும் நடிகையாகவும். சர்வதேச மாடலாகவும். அற்புதமான பாடகியாகவும் அந்தப் பெண் கொடி கட்டிப் பறந்தார். அந்தப் பெண் மர்லின் மன்றோ. இன்னிக்கு கூட நம்ம சினிமா பாடலாரிசியர்கள் “நீ மர்லின் மன்றோ குளோனிங்கா” என அவரை விடாமல் துரத்திக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே !

அவமானங்களை எய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் தான் வெற்றியாளர்கள்.

பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவு வரும்போது முதல் பக்கத்தில் சாதனை புரிந்த மாணவர்களின் படங்கள் வரும். தொடர்ந்த நாளிதழ்களில் தோற்றுப் போய் விட்டதால் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களும் இடம்பெறுவதுண்டு. ஒரு சாதாரண தேர்வில் தோற்றுப் போவதைக் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் எப்படி சாதிக்க முடியும் ? அடைக்கப்பட்ட ஒரு கதவின் முன்னால் நின்று புலம்புவது திறந்திருக்கும் கோடானு கோடி கதவுகளை உதாசீனப்படுத்துவதற்குச் சமமல்லவா ?

பள்ளிக்கூடத்தில் தோற்றுப் போனால் வாழ்க்கையே போச்சு என நினைப்பவர்கள் வின்ஸ்டன் சர்ச்சிலை அவமானப்படுத்துகிறார்கள். அவர் ஆறாம் வகுப்பிலேயே தோற்றுப் போனவர். அந்தத் தோல்வியுடனேயே மனம் உடைந்து போயிருந்தால் பின்னாளில் அவர் அடைந்த உயரத்தை அடைந்திருக்க முடியுமா ? இங்கிலாந்து நாட்டில் இரண்டு முறை பிரதமராய் இருந்தவர் சர்ச்சில். பிரிட்டிஷ் பிரதமர்களிலேயே இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கியவர் இவர் மட்டும் தான். ஆறாம் வகுப்பில் தோல்வி பெற்ற ஒருவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கிறது ! இது தான் தன்னம்பிக்கையின் வியப்பூட்டும் விளையாட்டு.

தோல்விகளும் அவமானங்களும் நம்மை புதைத்து விடக் கூடாது. நம்மை ஒருவர் அவமானப் படுத்துகிறார் என்றால், நம்மிடம் அபரிமிதமான சக்தி இருக்கிறது எனும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

“சார் எங்ககிட்டே ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு இதை புத்தகமா போடுவீங்களா ?” எனும் கோரிக்கையுடன் ஜேக் கேன்ஃபீல்ட் மற்றும் விக்டர் ஹேன்சன் இருவரும் ஒரு பதிப்பகத்தை அணுகினார்கள்.

“சாரி.. இதையெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது. ஓவர் அட்வைஸா இருக்கு” என பதிப்பகத்தார் அதை நிராகரித்தனர். எழுத்தாளர்கள் சோர்ந்து விடவில்லை. இரண்டாவது மூன்றாவது நான்காவது என வரிசையாய் எல்லா பதிப்பகங்களிலும் ஏறி இறங்கினார்கள். அந்த புத்தகம் எத்தனை இடங்களில் நிராகரிக்கப்பட்டது தெரியுமா ? சுமார் 140 இடங்களில். இருந்தாலும் அவர்கள் தங்கள் முயற்சியை விடவில்லை. கடைசியில் ஒருவழியாக அந்த நூல் அச்சானது. கடைகளுக்கு வந்த உடனேயே உலகம் முழுவதும் அதன் விற்பனை சட்டென பற்றிக் கொண்டது. இன்று உலகெங்கும் 65 மொழிகளில், ஏகப்பட்ட தலைப்புகளில், பத்து கோடிக்கு மேல் பிரதிகளில் என அந்த நூல் பிரமிப்பூட்டுகிறது. அந்த நூல் தான் “சிக்கன் சூப் ஃபார் த சோல்” !.  நிராகரித்தவர்களெல்லாம் வெட்கித் தலைகுனியும் படி அந்த நூலின் பிரபலம் இருப்பது நாம் அறிந்ததே.

140 அவமானங்களுக்குப் பின் இந்த வெற்றியை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்றால் தங்கள் மேல் வைத்த நம்பிக்கை தான் காரணம். ஒரு சிறுகதை நிராகரிக்கப்பட்டாலே கதை எழுதுவதை மூட்டை கட்டி வைக்கும் மக்கள் வாழும் ஊரில் தானே அவர்களும் வாழ்கிறார்கள் ! அவமானங்களோடு மூலையில் படுத்திருந்தால் இன்று அவர்கள் உலகின் பார்வையில் தெரியவே வந்திருக்க மாட்டார்கள்.

“ஏய் உன் மூஞ்சி சதுரமா இருக்கு. நீயெல்லாம் நடிகனாவியா ? உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை” என்று விரட்டப்பட்டவர் தான் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஜான் டிரவோல்டா. இன்று அவருக்கு இந்தியாவிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள். “என் மூஞ்சி எப்படி வேணா இருக்கலாம். ஆனா நான் நடிகனாவேன், ஏன்னா எனக்குத் திறமை இருக்கு” என்பது தான் அவருடைய பதிலாய் இருந்தது. முயற்சி அவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது.

உறுதியான மனம் இருந்தால் அவமானங்கள் வரும்போது மனதின் கதவை இறுக அடைத்துத் தாழ் போட்டுக் கொள்ளலாம். நாம் அனுமதிக்காவிடில் அவமானங்கள் நமக்குள் போய் அமர்வதேயில்லை.  பிறர் அவமானமான வார்த்தைகளைப் பேசும்போது அதை வரவேற்று உள்ளே உட்காரவைத்து அதையே நினைத்து உருகி, நமது வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.

“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.

“இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.

நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்.

அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே. விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால் அதை தூரத்தில் நின்று பார்த்துவிடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும். அது தான் வெற்றிக்கான வழி.

வீழ்த்தும் கணைகளாய் பாயும் அவமானம்

வீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்

0

நன்றி

சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்”

தினத் தந்தி – இளைஞர் மலர்.

தொலைபேசியில் ஆபாசப் பேச்சு

தொலைபேசியில் ஆபாசப் பேச்சு !

செக்ஸ். இந்த ஒற்றை வார்த்தையைக் கழித்து விட்டு மனித குல வரலாற்றையோ, இலக்கியங்களையோ, வாழ்க்கை முறையையோ முழுதாகப் புரிந்து கொள்ள முடியாது. மனிதன் தோன்றிய காலத்திலேயே துவங்கிவிட்டது பாலியல் விஷயங்கள். ஒவ்வோர் காலகட்டத்திலும் அதன் பரவலும் பாதிப்பும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பது மட்டும் தான் கவனிக்கப் பட வேண்டிய விஷயம். மற்றபடி செக்ஸ் எனும் ஒரு விஷயம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

ஒத்துக் கொள்ள முரண்டு பிடிப்பவர்கள் ஏதேனும் ஒரு தினசரியைப் புரட்டிப் பார்த்தாலே போதுமானது. டீன் ஏஜ் பெண்களின் காதல் முதல் முக்கால் கிழடுகளின் கள்ளக் காதல் வரை எல்லாமே சொல்லித் தரும் பாடம் செக்ஸ் பற்றியதாகவே இருக்கிறது. இந்த பட்டியலில் சமீபகாலமாக திடுக்கிட வைக்கும் முன்னேற்றம் தொலைபேசி செக்ஸ் உரையாடல் !

அதென்ன போன் செக்ஸ் ? கொஞ்சம் கண்ணியமாய்ச் சொல்ல வேண்டுமெனில் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் இருவர் பாலியல் ரீதியான உரையாடல்களில் லயித்து, உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்வது எனலாம். மின்னஞ்சலில் பேசிக்கொள்வது, இண்டர்நெட் சேட் விண்டோக்களில் பேசிக்கொள்வது போல ஒரு முகம் தெரியா செக்ஸ் தூண்டுதல் தான் இது.

நள்ளிரவு தாண்டியபின்னும் தனியாக அமர்ந்து, வெட்கத்தின் நகத்தைக் கடித்துத் தின்றபடி, போனில் பேசிக்கொண்டிருக்கும் பெண்களும், ஆண்களும் பெரும்பாலும் இந்த ஏரியாவில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் தான். திருமணமாகி தனியே வாழும் தம்பதியரும் இத்தகைய தொலைபேசி உரையாடல்களில் லயிப்பதுண்டு. இவை எப்போது எல்லை மீறுகிறது தெரியுமா ? அறிமுகமற்ற நபர்களை தொலைபேசி செக்ஸ் பேச்சுகளுக்காக நாடும்போது தான்.

இந்தியாவில் இது கொஞ்சம் அதிர்ச்சிகரமான அறிமுகமாக இருந்தாலும் வெளிநாடுகளைப் பொறுத்தவரை இது பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான பிஸினஸ். பல ஆண்டுகளாக நடந்து வருகின்ற சட்டபூர்வமான தொழில். ஒருவகையில் இது ஒரு விபச்சாரத் தொழில் போலத் தான். ஆனால் என்ன இங்கே இரு நபர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவோ, உண்மையான தொடுதல் உணர்வுகளைப் பெறவோ முடியாது அவ்வளவு தான். இருவரும் கற்பனையான உலகுக்குள் சுற்றித் திரிவார்கள்.

நல்ல வசீகரிக்கும் குரல் மட்டும் தான் இந்தத் தொழிலில் ஈர்க்கப்படும் அம்சம். அப்படிப்பட்டவர்களைத் தான் தேர்வு செய்து பணியில் அமர்த்துகின்றனர். அழைக்கப்பட்டவர்களை பேச்சில் குஷிப்படுத்துவது மட்டுமே இவர்களுக்கான பணி. “உங்களுக்காக இதோ நாங்கள் காத்திருக்கிறோம் தனிமையை இனிமையாக்க கால் பண்ணுங்கள்” என விளம்பரம் வரும். அதில் வரும் எண்ணுக்குப் போன் செய்தால் பெண்கள் பேசுவார்கள். இவர்களெல்லாம் பயிற்சி அளிக்கப்பட்ட பெண்கள். காதலில் கசிந்துருகுவது போலவும், காமத்தின் கால்வாயில் நீந்துவது போலவும் பேசுவதில் எக்ஸ்பர்ட்.

மேலை நாடுகளில் இவற்றுக்கென தனி எண்கள் வைத்து நிமிடக் கணக்கில் டாலர்களைக் கறக்கிறார்கள். பெரும்பாலும் டெலிபோன் பில்லுடன் அந்தக் கட்டணமும் வரும். தொலை பேசி நிறுவனங்கள் அந்தத் தொகையில் கணிசமான ஒரு தொகையை இந்த பாலியல் பேச்சு நிறுவனங்களுக்குக் கொடுத்து விடும். அமெரிக்காவில் ஒரு பெண் ஒரு வாரத்துக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய்கள் வரை சம்பாதித்து விட முடியும் என்கிறது புள்ளி விவரம். 

“உங்களுடைய இரவை இனிமையாக்க வேண்டுமா. இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள் லிஸா காத்திருக்கிறார்” என மேற்கத்திய உலகம் விற்றுக்கொண்டிருந்ததை தமிழ்ப்படுத்தியிருப்பது தான் கொடுமை. “உங்களில் யாருக்காவது ஸ்பைஸி சேட் வேணுமா மாலதியும், கல்பனாவும் உங்களுக்காக காத்திருக்காங்க. கால் பண்ணுங்க” என்பது போன்ற ஏதேனும் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தால் அப்படியே டிலீட் பண்ணிவிட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடுங்கள். அத்தகைய அழைப்புகளெல்லாம், விவகார அழைப்புகள் தான்.

கொஞ்சம் அசந்தால் ஆண்டுக்கு ஐயாயிரம் என பேரம் பேசி, அது பிறகு அப்படியே உங்களுடைய சம்பாத்தியத்தின் கடைசிப் பணத்தையும் உறிஞ்சாமல் விடப் போவதில்லை என்பதே நிஜம். பெரும்பாலும் இத்தகைய போன் பேச்சு பார்ட்டிகள் நேரடியாக சந்தித்துக் கொள்வதில்லை. ஆனால் சில சம்பவங்களில் நல்ல வெயிட் பார்ட்டிகளை நேரில் சந்தித்து பணம் பறிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன ! உண்மையான தகவல்களைக் கொடுத்து விட்டால் பிளாக்மெயில், குடும்ப சிக்கல்கள் என்று இதன் தாக்கம் பின்னியெடுக்கும்.

வெளிநாட்டிலுள்ள ஆபாசப் பேச்சு நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவின் பல இடங்களிலும் கமுக்கமாய் நடந்து வருகிறது. ஆபாசப் பேச்சை விரும்புபவர்கள் “ஆசியப் பெண்களிடம், அல்லது இந்தியப் பெண்களிடம்” பேச வேண்டுமென ஸ்பெஷலாய் விரும்பினால் அந்த அழைப்புகளை இங்குள்ள கிளைகளுக்கு அனுப்பி விடுகிறார்களாம். சில நிறுவனங்கள் இந்தியாவிலுள்ள அழைப்புகளை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றன.

எண்பதுகளில் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்த இந்தத் தொழில் பல்வேறு மாற்றங்களை அடைந்திருக்கிறது. இந்த சந்தை இன்னும் அதிகமாக விரிவடைந்திருக்கிறது. இந்தியாவை இணைத்தும் ஒரு சர்வதேச வலையமைப்பில் இப்போது இந்த ஆபாசப் பேச்சு தொழில் விரிவடைந்திருப்பது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயமாகும்.

ஆபாசப் பேச்சுகள் குடும்ப உறவுகளின் மீதான பிடிப்பைப் போக்கி ஒரு விதமான மயக்க கற்பனை உலகிற்குள் மக்களை சிறைப்படுத்தி விடுகிறது. மேலை நாடுகளில் இத்தகைய ஆபாச அழைப்புகளுக்கான வாடிக்கையாளர்களில் 30 சதவீதம் பேர் பார்வையிழந்தவர்கள் மற்றும் நிரந்தர ஊனமானவர்கள் என்கிறது புள்ளி விவரம் ஒன்று. அப்படிப் பார்த்தாலும் 70 சதவீதம் பேர் சாதாரண வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்களுடைய குடும்ப வாழ்க்கை பலவீனமடைய இது மிக முக்கியக் காரணமாகி விடுகிறது.

ஒருவகையான அடிக்ஷனாகவும் இது மாறிவிடும் என்கின்றனர் உளவியலார்கள். இந்தப் புதை குழிக்குள் விழுபவர்கள் பின்னர் சாதாரண தாம்பத்யத்தில் விருப்பம் இழந்து, போனில் பேசினால் தான் தாம்பத்ய உறவு எனும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உண்டு என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

இந்தியாவைப் பொறுத்தவரை இது சட்ட விரோதமானது. ஒரு வகையில் விபச்சாரத்துக்கான கடுமையுடன் இதையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. பதின் வயதுப் பசங்களும், பெண்களும் இத்தகைய வலைகளில் சிக்கிக் கொண்டால் அவர்களுடைய எதிர்காலமே ஒட்டு மொத்தமாய் அழிந்து போகும் அபாயமும் உண்டு.

“இதெல்லாம் சும்மா பேச்சுக்குத் தானே ?” என யாராவது நியாயப்படுத்தினால் அவர்கள் நிலமையின் வீரியத்தை உணராதவர்கள் என கருதிக் கொள்ளுங்கள். மன ரீதியான பாதிப்புகளே உடல் ரீதியான பாதிப்புகளை விட நீண்டகாலம் துயரம் தரக் கூடியது என்பதை உணர வேண்டும். மனதின் ஊனத்துக்கு உத்தரவாதம் தரும் இத்தகைய பேச்சுகளை வரவேற்பது என்பது மனுக்குலத்துக்குச் செய்யும் அவமானம் என்பதைத் தவிர வேறில்லை.

பெண்கள் தான் இந்த விஷயத்தில் ரொம்பவே கவனமாய் இருக்க வேண்டும். ஏதேனும் பத்திரிகையின் மூலையில் “வீட்டிலிருந்தே பேசலாம், அலுவலகத்திலிருந்தும் பேசலாம் மாசம் பத்தாயிரம், பதினையாயிரம்” என ஆசை காட்டினால் விழுந்து விடாதீர்கள். அல்லது தவறான வேலை என புரிகின்ற கணத்தில் அந்தத் தொடர்பைத் தாமதமின்றித் துண்டித்து விடுங்கள். வெறுமனே ஒரு வேலையாக இதைச் செய்ய முடியாது என்பதும், இது மனரீதியான கடுமையான பாதிப்புகளை உருவாக்கும் என்பதையும் உணரவேண்டும்.

பாசிடிவ் விஷயங்களையே பேசிக்கொண்டிருக்கும் ஒருவருடைய மனதில் பாசிடிவ் விஷயங்கள் அலைமோதும். நெகடிவ் விஷயங்களையே பேசிக்கொண்டிருக்கும் ஒருவருடைய மனதில் நெகடிவ் விஷயங்கள் குடிகொள்ளும். அதே போல செக்ஸ் தொடர்பாகப் பேசிக்கொண்டே இருப்பவருடைய மனதிலும் அத்தகைய எண்ணங்கள் காலப்போக்கில் கால்நீட்டி அமர்ந்து விடும் என்பது தான் நிஜம்.

வெளிப்பார்வைக்கு சாதாரண கால்செண்டர் போல தோற்றமளிக்கும் இடங்களில் கூட திரைமறைவில் இத்தகைய வேலைகள் நடக்கக் கூடும். எனவே எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்க வேண்டியது அவசியம். இப்போதெல்லாம் இத்தகைய வேலை வாய்ப்பு அழைப்புகள் பிரபல பத்திரிகைகளிலேயே தைரியமாய் அழைப்பு விடுக்கின்றன என்பதில் கவனம் தேவை.

சமீபத்தில் கோவையை மையமாகக் கொண்டு இயங்கி வந்த ஒரு கும்பலைப் பிடித்த காவல்துறையினர் இந்த தொழிலில் வேர்களை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு திரைமறைவு தொழில் இருப்பதே அப்போது தான் பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.

குடும்பவாழ்க்கையைச் சிதைக்கும் பாதையில் மும்முரமாய் இணையமும், தொழில் நுட்ப வளர்ச்சிகளும் பயணிப்பது அபாயகரமானது. இவற்றின் தேவைகள் சரியான வகையில் பயன்படுத்தப்படுவதே இன்றியமையாதது. இத்தகைய கலாச்சாரச் சீரழிவுத் தொழில்களை விட்டு விலகுவது மட்டுமன்றி, எதிர்த்துக் குரல் கொடுப்பதிலும் நமது கரங்களை இணைக்க வேண்டியது அவசியம்.

சட்டமும் விதிமுறைகளும் ஒழுங்குகளைக் கட்டாயப்படுத்தித் திணிக்கும். ஆனால் தனி மனித கோட்பாடுகளும், சிந்தனைகளும் நேர்வழியில் இருக்கும் போது தான் இத்தகைய ஆபத்துகள் பரவாமல் இருக்கும்.

சேவியர்

நன்றி : பெண்ணே நீ

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

மறதிக்கு மருந்து…

“இங்கே தானே வெச்சேன் எங்கே போச்சு ?” எனும் தினசரி புலம்பல் முதல். ஐயோ கிரெடிட் கார்ட் பில் கட்ட மறந்துட்டேனே என மாதாந்திரப் புலம்பல் வரை எக்கச் சக்க மறதிகள் நமது வாழ்க்கையில். எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க யாராலும் முடியாது. ஆனால் என்ன ? சிலர் இந்த விஷயத்துல கெட்டிக்காரங்களா இருப்பாங்க. குறிப்பா மனைவிகள். கணவனோட விஷயத்தை ஞாபகம் வைத்திருப்பதில் கில்லாடிகள் அவர்கள். சிலர் எல்லாத்தையும் மறந்து தொலைப்பாங்க. கல்யாண நாளையே மறந்துட்டு மனைவி கிட்டே அசடு வழியற கணவன் மாதிரி. இதுக்கெல்லாம் காரணம் நம்மோட NR2B என்கிற ஜீன் தானாம்!. 

இந்த ஜீன் மூளையிலுள்ள ஹிப்போகேம்பஸ் எனும் உள் பகுதியில் இருக்கிறது. இந்த ஹிப்போகேம்பஸ் எனும் பகுதி தான் நமது நினைவாற்றலின் பெட்டகம். இந்த இடம் டேமேஜ் ஆனால் நமது நினைவும் அத்தோடு காலியாகிவிடும். அப்படி சேதமாவதால் வருவது தான் அல்சீமர்ஸ் போன்ற கொடிய நோய்கள். அந்த நோய் வந்தால் தனது குடும்பம், பிள்ளைகளைக் கூட மறந்து விடுவார்கள். ஞாபகத் தளம் வெள்ளைப் பேப்பர் போல ஆகிவிடும். இந்த நோயை மையமாய் வைத்து சில ஆண்டுகளுக்கு முன் “தன்மாத்ரா” எனும் மலையாளப் படம் ஒன்று வெளியானது. அது கேரளாவில் இந்த நோய் குறித்த மாபெரும் விழிப்புணர்வையே ஏற்படுத்தியது என்பது தனிக் கதை.

இந்த NR2B ஜீனை எக்ஸ்பிரசிங் செய்யும் போது நினைவாற்றல் அதிகரிக்கும் என கண்டறிந்திருக்கிறார்கள். எக்ஸ்பிரசிங் என்பது ஜீன்களில் மாற்றம் செய்யும் ஒரு அறிவியல் முறை. எலிகளை வைத்து முதலில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்படி ஜீனில் மாற்றம் செய்த எலி நினைவாற்றலில் அசத்தி  விட்டதாம். மற்ற எலிகளை விட பல மடங்கு கூர்மையாய் விஷயங்களை நினைவில் வைத்திருந்ததாம். எலிகளிடம் இருப்பதும், மனிதனிடம் இருப்பதும் ஒரே தன்மையிலான NR2B என்பதால் இது மனிதனுடைய நினைவாற்றலையும் நிச்சயம் அதிகரிக்கும் என நம்புகின்றனர் விஞ்ஞானிகள்.

ஷங்காயிலுள்ள கிழக்கு சீனா நார்மல் பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு நினைவாற்றல் சம்பந்தமான நோயில் உழல்பவர்களுக்கு ரொம்பவே பயனளிக்கும். குறிப்பாக அல்சீமர், டெமிண்டியா போன்ற நோயாளிகளின் சிகிச்சைக்கு புதுக் கதவு திறந்திருக்கிறது என்கிறார் ஆராய்ச்சியாளர் க்சியாவோகா. இவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் மூளை தொடர்பான ஆராய்ச்சிகளில் புகழ்பெற்ற பேராசிரியர்.

இந்த NR2B எனும் ஜீன் எல்லா உயிரிகளிலும் ஒரே போல இயங்கும் என்பது மருத்துவ நம்பிக்கை. இதன் மூலம் உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் பல கொடிய நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ஃ 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

ஆடு ஜீவிதம் : நாவல் ஒரு பார்வை

 

ஒரு நாள் மாலையில் ஓய்வாக எக்மோரிலுள்ள புளூ மவுண்டன் ஹோட்டலில் சுவையான மட்டன் பிரியாணியைச் சுவைத்துக் கொண்டிருந்தோம். என்னுடன்  மலையாள மனோரமா இயர்புக் ஆசிரியர் நண்பர் ராமனும், பத்திரிகையாளர் நண்பர் ஆரிஃப் அவர்களும். மட்டன் பிரியாணி என்றால் எனக்கு எப்போதுமே பிரியம் ஜாஸ்தி. அதுவும் இஸ்லாமியர்களின் கைவண்ணத்தில் தயாராகும் சமாச்சாரமெனில் சொல்லவே வேண்டாம்.

பிரியாணியையும், அதைவிடச் சுவையான பல்வேறு விஷயங்களையும் மென்று கொண்டிருக்கையில் பேச்சினூடே நண்பர் ராமர் சொன்னார், “என்னோட புக் ஒண்ணு வந்திருக்கு. ஒரு மொழிபெயர்ப்பு. ஆடு ஜீவிதம்ன்னு பேரு“.

மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறீர்களா ? என்று கேட்டேன். ஆமா, பென்யமீன்னு ஒரு எழுத்தாளரோட அற்புதமான படைப்பு அது. படிச்சுப் பாருங்க. என்றார். மனசுக்குள் அந்தப் பெயரை மட்டும் எழுதிக் கொண்டேன். தமிழில் உயிர்மை வெளியீடாக வந்திருந்தது நாவல்.

என்னைப் பற்றி எனக்குத் தான் தெரியுமே ! காலைல ஒன்பது மணிக்கு அலுவலகம் ஓடினால் கூர்க்கா ரோந்து போற நேரத்துல தான் வீடு வந்து சேருவேன். இதை ஐ.டி ஜீவிதம்ன்னு சொல்லலாமா ? இந்த ஓட்டத்துக்கு இடையே ஆடு ஜீவிதம் மனசுக்குள் இருந்தாலும் புக்கை போய் வாங்கக் கூடிய அளவுக்கு நேரம் கிடைக்கவேயில்லை. எப்படியாவது இந்த வாரம் போய் வாங்கியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் ஒரு பார்சல் வீட்டுக்கு வந்தது. பிரித்துப் பார்த்தால் “ஆடு ஜீவிதம்” நூல்.

இவன் என்னிக்கு போய், எப்போ வாங்கி, என்னத்த வாசித்து என நொந்து நூடுல்ஸ் ஆகிப் போன எழுத்தாளரே சொந்தக் காசைப் போட்டு ஒரு புக்கை அனுப்பி வைத்திருந்தார். மானசீகமாக ஒரு நன்றியை மட்டும் சொல்லிக் கொண்டு நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.

பல்வேறு கனவுகளோடு குடும்பத்தை விட்டு விட்டு கல்ஃப் போகும் ஒருவன் அங்கே படும் அவஸ்தைகளும், அங்கிருந்து தப்பி வரும் நிகழ்வுகளும் தான் கதை. இப்படிச் சொன்னால் ஒருவேளை நீங்கள் ‘இதிலென்ன இருக்கிறது’ என யோசிக்கக் கூடும். உண்மையில் நான்கூட அப்படித் தான் நினைத்தேன். பக்கங்களைப் புரட்டப் புரட்ட, அந்த நாயகன் நஜீப்-போல மாறிப் போனேன். அவனோடு அழுக்கு ஆடையில் புரண்டு, ஆடுகளின் வாழ்க்கையைப் படித்தறிந்து, உதை வாங்கி, பெல்ட்டால் அடி வாங்கி, தப்பித்து, திகிலடைந்து, ஜெயிலில் உழன்று படித்து முடிக்கும் போது மன பாரத்தால் உடல் பத்து கிலோ அதிகரித்திருப்பது போல ஒரு உணர்வு.

மணலும், மணல் சார்ந்த இடமும் தான் கதைக் களன். ஏதோ கம்பெனியில் வேலைசெய்யப் போகிறோம் எனும் கனவுடன் வளைகுடா நாட்டுக்கு வரும் நாயகனுக்கு வாய்ப்பதோ கொடுமைக்கார அர்பாபுவும், ஆட்டு மந்தைகளும் தான். அர்பாவுவின் கண்களுக்கு ஒரு அடிமையாய் மாறிப்போகும் நஜீப் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழலின் வீரியத்தில் சூழப்படுவதை மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் பென்யமீன்.

நெற்றியில் விழும் ஒரு துளி நீர், நேரம் செல்லச் செல்ல சம்மட்டி அடியின் அளவுக்கு வலிக்கும் என்பது போல, நஜீபின் வாழ்க்கை பக்கங்கள் புரட்டப் புரட்ட வலியைக் கூட்டிக் கொண்டே போகிறது. துயரங்களிடையே வாழ்க்கையின் நிலையையும், அர்த்தத்தையும் புரிய வைக்கும் தத்துவங்களைப் போல நூலும் போகிற போக்கில் சொல்லிச் செல்கின்ற கருத்துகள் அனாயாசமானவை. சமீபத்தில் வேறெந்த நாவலையும் படித்து நான் இப்படிக் கலங்கிப் போனதில்லை எனும் எனது கூற்றில் சிறிதும் கலப்படமில்லை !

ஒரு மொழிபெயர்ப்பு நூலுக்கான எந்த விதமான அடையாளங்களும் இல்லாமல் தமிழ் ஆடு ஜீவிதம் இருப்பது மொழிபெயர்ப்பாளர் ராமன் அவர்களுடைய மொழி ஆளுமையை பறை சாற்றுகிறது. பத்திரிகை உலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் பரிச்சயமும், ஏற்கனவே குஞ்ஞப்துல்லாவின் மருந்து நாவலை மொழிபெயர்த்த அனுபவமும் நூலை அழகாக முழுமைப்படுத்தியிருக்கிறது. வேண்டுமென்றே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில மலையாள வார்த்தைகளை விட்டுச் சென்று கவித்துவப்படுத்தியிருக்கிறார். மற்றபடி, இது ஒரு மொழி பெயர்ப்பு நாவல் எனும் உணர்வே எங்கும் எழவில்லை.

“படிக்கலேன்னா ஆடுமேய்க்கத் தான் போவே’ என்று ஊரில் திட்டுவார்கள். இந்த நூலைப் படிக்கும் எவரும் இனிமேல் எந்தக் காலத்திலும் அப்படித் திட்டமாட்டார்கள் என நிச்சயமாய் நம்புகிறேன்.

பத்தனம் திட்டாவைச் சேர்ந்த ஆசிரியர் பென்யாமீன் தற்போது வசிப்பது பெஹ்ரைனில் என்கிறது அவரைப் பற்றியக் குறிப்பு. பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்களில் பாட நூலாகவும் மாறிப் போயிருக்கும் இந்த நூல் இவருக்கு சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுத் தந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

மலையாள நூல் அட்டையில் சொல்லப்பட்டிருக்கும் “நாம் அனுபவிக்காத்த ஜீவிதங்ஙளெல்லாம் நமுக்கு வெறும் கெட்டுக் கதகள் மாத்றமாணு” என்பதோடு ஒத்துப் போகாமல் இருக்க முடியவில்லை.

தமிழில் வந்திருக்கும் மொழிபெயர்ப்பு நூல்களில் மிகவும் முக்கியமான இடத்தை இந்த நூல் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்காக ஆசிரியர் நண்பர் ராமனை எவ்வளவு பாராட்டினாலும் தமிழ் கோபித்துக் கொள்ளப் போவதில்லை ! வாழ்த்துக்கள் சார் !

நாவல் பிரியர்களுக்கும், இலக்கிய ரசிகர்களுக்கும், வாழ்க்கையை நேசிப்பவர்களுக்குமான நூல் ஆடு ஜீவிதம்.

உயிர்மை பதிப்பக வெளியீடு,  விலை 140.

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

பெண்களுக்கான வயாகரா !

பெண்களின் மன அழுத்தத்துக்கு ஒரு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று களத்தில் குதித்தது ஜெர்மெனியிலுள்ள போரிங்கர் இன்கெல்ஹெம் கம்பெனி. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின் ஒரு மருந்தைக் கண்டுபிடித்து அதற்கு பிளிபான்செரின் என்று பெயரும் இட்டார்கள். கண்டுபிடித்த மருந்தை மன அழுத்தத்தில் இருந்த சில பெண்களுக்குக் கொடுத்து சோதனை செய்தார்கள்.

சோதனையின் முடிவு எப்படி இருக்கிறது என்று விசாரித்த போது தான் அவர்களுக்கு அந்த இனிய அதிர்ச்சியே தெரிந்தது. மன அழுத்தமெல்லாம் குறையவில்லை. ஆனால் மருந்தைச் சாப்பிட்டால் ‘அந்த’ ஆர்வம் அதிகமாகுது, என்று பெண்கள் ஏகத்துக்கு வெட்கப்பட்டிருக்கிறார்கள். ஆஹா … அடித்தது ஜாக்பாட் என கம்பெனி சிலிர்த்துப் போய் விட்டது. மன அழுத்தச் சமாச்சாரத்தைத் தூக்கிப் போட்டு விட்டு இந்தப் பக்கமாய் பார்வையைத் திருப்பினார்கள். அடுத்தடுத்த சோதனைகளில் இது பெண்களுக்கான ஒரு வயாகரா என நிரூபணமாயிருக்கிறது. 

ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட வயாகரா உலகெங்கும் பல பில்லியன் டாலர்களை ஆண்டுதோறும் குவிக்கிறது. அது கூட இதய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முயன்றபோது எதேச்சையாய் அகப்பட்டது தான். ஆண்களுக்கு வயாகரா போல  பெண்களுக்கு எந்த மாத்திரையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அந்த குறையை பிளிபான்செரின் போக்கும் என நம்பப்படுகிறது. இந்த மருந்தைத் தொடர்ந்து உட்கொண்டால் பெண்களின் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும். இது நேரடியாக மூளையில் சென்று மூளையின் பரவசப் பகுதிகளைத் தூண்டி விடுகிறது. மூளையில் தேவையான கெமிக்கல்களைச் சுரக்க வைத்தும், அதன் அளவுகளை மட்டுப்படுத்தியும் இந்த ஆர்வம் கிளறப்படுகிறது.

இந்த மருந்தின் விரிவான சோதனையில் 2200 பெண்கள் ஈடுபடுத்தப் பட்டார்கள். இவர்களெல்லாம் “என்னத்த பாலியல்..” என ஆர்வமே இல்லாமல் கிடந்தவர்கள். இந்த மருந்தைச் சாப்பிட ஆரம்பித்தபின் அவர்களுடைய ஆர்வம் படிப்படியாய் அதிகரித்திருக்கிறது. உறவில் ஆர்வத்தையும், உற்சாகத்தையும், திருப்தியையும் கொடுத்திருக்கிறது. ஆராய்ச்சியின் முடிவில் இந்த மருந்து பெண்களின் ஆர்வத்தை 60 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது என்பது தெரியவந்தது.

ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு எவ்வளவு பெரிய சிக்கலோ அதே அளவு சிக்கல் தான் பெண்களின் ஆர்வக் குறைவும். இந்த மருந்து பெண்களுக்கான வரப்பிரசாதம். பெண்களில் தாம்பத்ய ஆர்வத்துக்குத் தூபம் போடுகிறது என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஜாண் தோர்ப்.

ஆண்களின் வயாகராவுக்கும், பெண்களின் பிளிபான்செரினுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. வயாகரா என்பது இன்ஸ்டண்ட் காபி போல, உடனடி எஃபக்ட். தேவைப்படும் போது ஒரு மாத்திரை போட்டுக் கொண்டால் போதும். பிளிபான்செரின் அப்படியல்ல. தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். வயாகராவைச் சாப்பிட உடல் ஹெல்தியாக இருக்க வேண்டும். இதய நோயாளிகள் எட்டிக் கூடப் பார்க்கக் கூடாது. ஆனால் பிபான்செரினுக்கு அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.

இந்த மாத்திரையைச் சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற அசௌகரியங்களும் வந்திருக்கின்றன. அதன் காரணங்கள் இப்போது ஆராயப்பட்டு வருகின்றன. குடும்ப வாழ்க்கைக்கு தாம்பத்ய உறவு மிக மிக முக்கியம். அதில் பெண்களின் பங்களிப்பு மிகவும் தேவையானது. எனவே இந்த மருந்து உலகில் ஒரு புரட்சி என்கின்றனர் தயாரிப்பாளர்கள். 

உலகெங்கும் எதிர்பார்ப்பை எகிற விட்டிருக்கும் இந்த மருந்து கடைக்கு வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகுமாம். 

நன்றி : ஜூவி

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

மிரட்டும் மரபணு பயிர்கள் : பசுமை விகடன் கட்டுரை

இன்றைக்கு உலகின் ஹாட் நியூஸ் மரபணு மாற்று பயிர்கள் தான். இப்போ அப்போ என சொல்லிக் கொண்டிருந்த அலாவுதீன் பூதம் இதோ வாசல் வரை வந்து விட்டது. இனிமேல் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான். இதை வைத்துப் பயிரிட்டால் ஆஹா..ஓஹோ. பருவமழை பொய்த்தாலும் பரவாயில்லை. நிலம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த விதைகளை பயிரிட்டால் களஞ்சியம் நிரம்பும். இப்படியெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி உண்டியலுடன் முன்னே நிற்பது அதே உலகண்ணன் அமெரிக்கா தான்.

2050ல் உலகின் மக்கள் தொகை 9.1 பில்லியன் அளவுக்கு அதிகமாகும். இன்றைக்கு இருப்பதை விட 70 சதவீதம் அதிக உணவுப் பொருள் தேவைப்படும். என்ன செய்வீர்கள் ? விவசாய நிலங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை. ஒரே வழி இது தான். மரபணு மாற்று விதைகள். இல்லையேல் உங்கள் நாடு பட்டினியில் மடியும். என்றெல்லாம் உருட்டியும், மிரட்டியும் காரியத்தைச் சாதிப்பதில் கண்ணாக இருக்கிறது அமெரிக்கா.

சரி அதென்ன மரபணு மாற்று விதைகள். வேறுவேறு தாவரங்களின் டி.என்.ஏக்களில் உள்ள தேவையான மரபணுக்களை வெட்டி எடுத்து புதிய விதை தயாரிப்பது. இதை ரீ காம்பினண்ட் டி.என்.ஏ தொழில் நுட்பம் என்கிறார்கள். கேட்பதற்கு “வாவ்..” எனத் தோன்றும் இதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் இது இயற்கை விதிகளுக்கே முரணானது. இரண்டாவது இந்த தாவரங்களில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கான விஷத் தன்மையும் உண்டு. இவை ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது.

ஒருவகையில் இந்த மரபணு விதைகளில் இருப்பது தடுப்பு மருந்து டெக்னிக் என்று கூட சொல்லலாம். நோய்க்கான கிருமியைக் கொண்டு நோய்த்தடுப்பு செய்வது போல, பூச்சிக்கான மருந்தை விதையில் செலுத்தி பூச்சி தாக்காத விதைகளை உருவாக்குவது. இதன் எதிர்விளைவு என்ன தெரியுமா ? பூச்சிகள் இன்னும் அதிகம் வீரியமாகும். அப்படி வீரியமாகும் போது சாதாரண பயிர்கள் இருப்பதையும் இழக்க வேண்டியது தான்.

உணவுப் பயிர்களைப் பொறுத்தவரையில் பி.டி (Bacillus thuringiensis )  கத்தரி தான் இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட பயிர். இதற்கு மரபணு மாற்று பொறியியல் அங்கீகாரக் குழுவான GEAE அங்கீகாரம் கொடுத்துவிட்டது. அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனம் தயாரிக்கும் இதை இந்தியாவில் குத்தகைக்கு எடுத்திருப்பது மேஹோ எனும் நிறுவனம். எப்படி அரசு பி.டி கத்தரிக்கு அனுமதி வழங்கியது என்பது இன்றைய மில்லியன் டாலர் கேள்வி. “அமெரிக்காவின் கரம் இனிமேல் இந்திய வயல்களிலெல்லாம் விளையாடும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என விவசாய அமைப்புகளும், தன்னார்வ நிறுவனங்களும் களத்தில் குதித்திருக்கின்றன. அதற்கு வலுவான ஒரு காரணமும் இருக்கிறது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதே போல மரபணு மாற்றப்பட்ட பி.டி பருத்தியைக் கொண்டு வந்தார்கள். அதைக் கொண்டு வந்தபோது உட்ட உதாரைப் பார்த்தால் ஏதோ வேட்டியே மரத்தில் காய்க்கும் எனும் ரேஞ்சுக்கு இருந்தது. கடைசியில் என்னவாயிற்று ? கிராமத்துப் பாஷையில் சொன்னால் “நம்பினவன் வாயில மண்ணு”. அவ்வளவு தான். அது மட்டுமா ? பாவம், பட்டுப் பூச்சிகளெல்லாம் பட் பட்டென செத்துப் போயின.  இந்த கில்லர் பருத்தியின் இலைகளைச் சாப்பிட்ட கால்நடைகள் இரத்தம் கக்கி கொத்துக் கொத்தாய் மடிந்து போயின.  இப்போது பருத்தியின் இடத்தில் வந்திருப்பது கத்தரிக்காய். அப்படியானால் ஆடுகளின் இடத்தில் ? வேறு யார் நாம் தான்!

கத்தரிக்காய் நமது டிரெடிஷனல் உணவு. இனிமேல் விளைந்து சந்தைக்கு வரும் போது எது எந்தக் கத்தரிக்காய் என்றே தெரியப் போவதில்லை. மரபணு மாற்றப்பட்டதா ? இல்லையா என்பதை கண்டுபிடிக்கவும் முடியாது. மரபணு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சாப்பிட்டால் கேன்சர், அலர்ஜி, பார்கின்ஸன், மலட்டுத் தன்மை என பல நோய்கள் வரும். தாய்மைக் காலத்தில் இருக்கும் பெண்களின் கருவை பாதிக்கும் எனும் அச்சமும் நிலவுகிறது. உலகிலேயே மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயைப் பயன்படுத்தப்போகும் முதல் நாடு இந்தியா தான். அதாவது உலகுக்கே சோதனைச்சாலை எலி போல ஆகப் போவது நாம் தான் !

இந்த கத்தரி பயிரிட்டால் மண் வளம் பாதிக்கப்படும். விதைகளுக்காக மேலை நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க வேண்டிய சிக்கலும் உண்டு. இன்று கத்தரிக்காய், நாளை வெண்டைக்காய் இப்படியே அனுமதித்தால் இயற்கை விவசாயம் என்னவாகும் ? மகரந்தச் சேர்க்கையினால் நல்ல தாவரங்களும் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களும் இணைகையில் என்ன நேரும் என்பதெல்லாம் இன்னும் புதிர் தான். ஆண்டுக்கு சுமார் 90 இலட்சம் டன் எனுமளவில் இருக்கிறது நமது கத்தரி விவசாயம். இதில் எவ்வளவு பெரிய பாதிப்பை இந்த விதைகள் உண்டாக்கப் போகின்றன என்பது திகிலாகவே இருக்கிறது.

மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் நுழைந்தால் தானே காசு அதிகம் பார்க்க முடியும். அதற்காக அமெரிக்கா டார்கெட் செய்துள்ள இரண்டு நாடுகள் இந்தியாவும், சீனாவும். மேலை நாடுகளில் சோயாவைப் பெருமளவு உற்பத்தி செய்து காரியத்தைச் சாதித்துவிடலாம். சோயாவைப் பொறுத்தவரையில் இப்போது மரபணு மாற்றப்படாத சோயாவைக் கண்ணிலேயே பார்க்க முடிவதில்லை. இந்த நிலமை தான் இனி மற்ற தானியங்களுக்கும் வரும் என்பது ஒரு எச்சரிக்கைக் குறியீடு. ஆனால் ஆசிய நாடுகளெனில் சோயா சரிவராது. அரிசி தான் சரியான ஆயுதம். அதனால் இந்தியாவுக்கு அடுத்து வரப்போகிறது மரபணு மாற்றப்பட்ட அரிசி. இதைத் தங்க அரிசி என்கிறார்கள். இதில் புரோ வைட்டமின் சத்து இருக்கிறது என்பது அவர்கள் சொல்லும் வசீகர வார்த்தை.

இந்த அரிசியைச் சாப்பிட்டால் இந்த வைட்டமின் நமது உடலுக்குக் கிடைக்குமாம். நமது உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் கிடைக்க எவ்வளவு அரிசி சாப்பிட வேண்டும் தெரியுமா ? ஒரு நாளைக்கு ஒன்பது கிலோ ! சீனாவில் இப்போதைய அரிசி தயாரிப்பு ஆண்டுக்கு 500 மில்லியன் டன். 220ல் இந்த அளவு 630 மில்லியன் டன் எனுமளவுக்கு அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவின் உள்ளங்கை அரித்துக் கொண்டே இருக்கிறது. சீனா இந்த மரபணு மாற்று புரட்சியை பெரிய அளவில் ஊக்கப்படுத்தவில்லை. ஆனால் சீனாவில் பிடி63 எனும் மரபணு மாற்றப்பட்ட அரிசி உற்பத்தி ஏற்கனவே இருக்கிறது. ஆனால் இந்த அரிசியை எங்களுக்கு ஏற்றுமதி செய்யாதீர்கள் என ஐரோப்பியன் யூனியன் கூறிவிட்டது. 

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அங்கலாய்க்கிறது அமெரிக்கா. எப்படியாவது அகல பாதாளத்தில் கிடக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டும். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத பெரியண்ணனுக்குக் கிடைத்திருப்பது தான் மரபணு விதை எனும் மந்திர வித்தை. அமெரிக்கா சொன்னால் ஆமாம் சாமி போடுவதற்கு இந்தியா போன்ற நாடுகள் இருந்தால் பிரச்சினையே இல்லையே. என்பது தான் எதிர்ப்பவர்களின் ஆவேசக் குரல்.

என்னதான் வானவில் வார்த்தைகளைக் கூறினாலும் அயர்லாந்து மரபணு விதைக்கான கதவை இறுக மூடிவிட்டது. “பேசினது போதும் பொட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பு” என்று சொல்லிவிட்டது அந்த அரசு. மரபணு மாற்றப்பட்ட எந்த விதைகளுக்கும் இந்த மண்ணில் இடமில்லை. விற்கப்படும் எல்லா பொருட்களிலும் மரபணு மாற்றப்படாத விதைகளிலிருந்து உருவானது என லேபலும் ஒட்டப்போகிறார்கள். பால் பொருட்களைக் கூட மரபணு மாற்றப்படாத தாவரங்களை உண்ட பசுவின் பால் என முத்திரை குத்தப் போகிறார்களாம். மரபணு திகில் அயர்லாந்தை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதற்கு இந்த சிறு உதாரணமே போதும்.

அயர்லாந்தின் இந்த முடிவை உலகின் பல்வேறு நாடுகளும் வரவேற்றிருக்கின்றன. தங்களால் செய்ய முடியாததை அயர்லாந்து செய்திருக்கிறதே எனும் வியப்பும் ஒரு காரணம். அயர்லாந்து மட்டுமல்ல உலகின் புத்திசாலி நாடுகள் பலவும் இந்த நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன. ஆஸ்திரியா, இத்தாலி, ஜெர்மனி , பிரான்ஸ், தென்கொரியா போன்ற பல்வேறு நாடுகள் இறக்குமதிப் பொருட்களில் மரபணு மாற்றப்படாதது என சான்றளிக்கப் பட்டதை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றன. 

ஏற்கனவே ஒரு முறை அணுகுண்டு போட்ட நினைவுகளை ஜப்பான் மறக்குமா என்ன. அமெரிக்காவின் அடுத்த மரபணுகுண்டை அதிரடியாக மறுத்துவிட்டது. பெரியண்னன் விடுவாரா ? மீண்டும் மீண்டும் ஜப்பானை வற்புறுத்திக் கொண்டே இருக்கின்றனர். உணவுக்கு வெளி நாடுகளைச் சார்ந்திருக்கும் எகிப்து கூட கொள்கையில் உறுதியாய் இருக்கிறது. எங்களுக்கு எந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளும் வேண்டாம். பயிர்களும் வேண்டாம் என அரசு தீர்மானமே போட்டு விட்டது. எந்த ஏற்றுமதி உணவுப் பொருளோ, இறக்குமதிப் பொருளோ மரபணு மாற்றப்படாதது எனும் சான்றிதழுடன் தான் செல்ல வேண்டும் என்பது அங்குள்ள சட்டம். ஏன் நமது வாலில் கிடக்கும் இலங்கை கூட இன்னும் முழுசாய் பிடிகொடுத்து பேசவில்லை ! 

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான பூட்டு லேசாகப் பழுதடைய ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு நல்ல பிசினஸ் என்றால் நாமே களத்தில் இறங்கலாமே எனும் கனவு அவர்களுக்கு. யூ.கே உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்கும் ஆய்வுகளில் இறங்கும் என அவர்கள் அறிவித்திருக்கின்றனர். அறிவிப்பை வெளியிட்டது 1660 முதல் லண்டனில் இயங்கும் பழம் பெரும் ராயல் சொசைட்டி அமைப்பு. இனிமேல் ஆண்டுக்கு 200 மில்லியன் பவுண்ட்கள் செலவில் ஆராய்ச்சி செய்யப் போகிறார்களாம். அதுவும் தொடர்ச்சியாய் பத்து ஆண்டுகளுக்கு. அதில் மரபணு மாற்று விதைகளுக்கும் ஒரு இடம் உண்டாம்.  மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கோ பயிர்களுக்கோ ஐரோப்ப யூனியன் (இ.யு) எந்த விதமான அதிகாரப் பூர்வ அனுமதியும் வழங்கவில்லை. எனினும் ராயல் சொசைடியின் இந்த அறிவிப்பு சர்வதேசக் குழப்பங்களை அதிகரித்திருக்கிறது.

இந்த அறிவிப்பை யூ.கேவின் ஏ.பி.சி (அக்ரிகல்சரல் பயோடெக்னாலஜி கவுன்சில் )  வரவேற்றிருக்கிறது. உணவுப் பாதுகாப்பு தான் உலகிலேயெ மிக முக்கியமானது என திருவாய் மலர்ந்திருக்கிறார் இதன் தலைவர் ஜூலியன் லிட்டில். உலகெங்கும் ஏற்கனவே 13 மில்லியன் விவசாயிகள் பயன்படுத்தி வரும் இந்த மரபணு மாற்று பயிர்களை இன்னும் தடை செய்வதில் அர்த்தமில்லை என்பது இவர் வாதம்.

பச்சைக் கொடி கும்பலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பது ஆஸ்திரேலியாவின் விவசாயத்துறை அமைச்சர் டோனி பர்க். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் 70 சதவீதம் அதிக உணவை எப்படி உற்பத்தி செய்வது ? அறிவியலின் கரம் இல்லாமல் அதெல்லாம் சாத்தியமே இல்லை என்கிறார் அவர்.

உலகின் வறுமைக்கு ஒரே தீர்வு மரபணு மாற்று விதைகள் தான் என அமெரிக்கா கிழிந்த டேப் மாதிரி சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அது மட்டுமே தீர்வு என்பதில் நாடுகள் ஒன்றுபடவில்லை. கடந்த ஆண்டு யூஎன் நடத்திய ஆய்வில் 60 நாடுகள் பங்கேற்றன. மரபணு மாற்றம் உலக வறுமைக்குத் தீர்வல்ல என்பது தான் அவர்களுடைய முடிவு !

இந்தியா போன்ற நாடுகளில் பருவமழை பொய்க்கிறது. விவசாய நிலங்கள் அழிகின்றன. எனவே இருக்கும் கொஞ்ச நிலத்தில் அதிகம் விளைய வேண்டும். மழை இல்லாவிட்டாலும் விளைய வேண்டும். உரம் இல்லாவிட்டாலும் விளைய வேண்டும், பூச்சி தாக்காமல் வளர வேண்டும். அதற்கு ஒரே தீர்வு எனது மரபணு விதைகள் தான். என “வாலிப வயோதிக அன்பர்களே “ ரேஞ்சுக்கு அமெரிக்கா திரும்பத் திரும்ப பல்லவி பாடுகிறது. உண்மையில் இந்த விதைகளின் விலைகளைக் கேட்டால் நமது வறுமையை ஒழிக்க வந்ததாய் தெரியவில்லை. அமெரிக்க வறுமையை ஒழிக்க வந்ததாய் தான் இருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் அமெரிக்க நிறுவனமான மோன்சேண்டோவின் பணம் கறக்கும் வித்தை. அதற்குப் பலியாகி விடக் கூடாது. நமது ஊரில் 10 ரூபாய்க்குக் கிடைக்கும் கத்தரி விதையை 150க்கு விற்கும் வியாபார தந்திரம். என்கிறார் தமிழ்நாட்டிலுள்ள இந்திய விவசாயிகள் சங்க ஜெனரல் செக்ரிடரி ஆர்.வி கிரி

உணவைப் பொறுத்தவரை உலகெங்கும் அதற்கு ஒரே விளைவு தான். அமெரிக்கன் தின்று சாகாத மரபணு பயிர் இந்தியனை அழிக்கும் என்று சொல்ல முடியாது. ஆப்பிரிக்கர் உண்டால் விஷம், உகாண்டா உண்டால் அமிர்தம் என ஒரே பயிர் இரண்டு முகம் காட்ட வாய்ப்பில்லை. அமெரிக்காவில் சுமார் 500 டன் சோயாவை ஆண்டு தோறும் உண்கின்றனர். அவர்களுக்கு எதுவும் ஆகிவிடவில்லை. உலகில் 26 நாடுகள் ஏற்கனவே மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்திருக்கின்றன. அவர்களெல்லாம் அழிந்து விடவில்லை என கணக்குகளைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர் ஆதரவாளர்கள்.

உண்மையில் மரபணு சோளத்துக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு எழத்தான் செய்கிறது. ஸ்டார்லிங்க் எனும் சோளம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது என அமெரிக்கர்களே போர்கொடி தூக்குகின்றனர். 

இந்த மரபணு மாற்றுப் பயிர் சர்ச்சை இன்று நேற்று துவங்கியதல்ல. பிரிட்டனிலுள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தில் இந்த ஐடியா ரொம்ப மோசம் என 2002லேயே ஆய்வு முடிவு வந்தது. இந்த உணவுகளை உட்கொண்டால் மனிதனுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதைச் சாப்பிடுபவர்களுடைய உடலில் ஆண்டிபயாடிக்ஸ் வேலை செய்யாது. சின்னச் சின்ன நோய்கள் வந்தால் கூட பெரிய பெரிய சிக்கலில் கொண்டு விடும் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர்.

லண்டனிலுள்ள கிங்க்ஸ் மருத்துவக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் மைக்கேல் ஆண்டானியோ. இவர் பல ஆண்டுகளாக இந்த மரபணு எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து வருபவர். இந்த மரபணு மாற்றப்பட்ட உணவு உடலுக்கு மிகவும் தீங்கானது என்பதில் உறுதியாய் ஒலிக்கிறது அவரது குரல். இந்த கான்சப்டே தவறு. இயற்கையோடு ரொம்பவே விளையாடக் கூடாது. இந்த மரபணு ஒட்டி வெட்டும் சமாச்சாரங்களெல்லாம் வேலைக்காகாது என்கிறார் அவர். மரபணு மாற்றுப் பயிர்களால் அலர்ஜி, மலட்டுத்தன்மை போன்ற விரும்பத் தகாத விளைவுகளும் ஏற்படும் எனும் எக்ஸிடர் பல்கலைக்கழக ஆய்வையும் தனது துணைக்கு அழைக்கிறார். 

உணவுப் பற்றாக்குறையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் அதற்குக் காரணம் என்ன ? நிச்சயமாய் உலகில் ஏற்பட்டுள்ள விதைப் பற்றாக்குறை அல்ல. உலகிலுள்ள அனைத்து விளைநிலங்களுக்கும் தேவையான விதைகள் உலகில் உண்டு. அப்படி இருக்க எதற்கு இந்த செயற்கை விதைகள் என்பது ஓங்கி ஒலிக்கும் ஒரு கேள்வி. வறுமையையும், ஊட்டச்சத்து குறைவையும் ஒழிப்பேன் என களத்தில் குதிக்கின்றன விதைகள். உண்மையில் இயற்கையை விட்டு விலகிச் செல்லச் செல்லத் தான் வறுமையிலும், நோயிலும் தான் விழுகிறோம்.

மரபணு மாற்று ஆலோசனைக்குழு (RDAC), மரபணு நுட்ப அங்கீகாரக் குழு (GEAC), மரபணு நுட்ப சீராய்வுக் குழு(RCGM) என சகட்டு மேனிக்கு குழுக்களை வைத்திருக்கிறது இந்திய அரசு. ஆனால் இவையெல்லாம் அரசின் கண்துடைப்புக் குழுக்களாகி விடுமோ எனும் கவலை தான் மக்களுக்கு.

இத்தகைய மாபெரும் மாற்றத்தை விவசாய நாடான இந்தியாவில் புகுத்தும் முன் இந்த குழுக்கள் செய்தது என்ன என்பது மிகப்பெரிய கேள்வி. விரிவான ஆய்வுகள் ஏதும் இதற்காக நடத்தப்படவில்லை. இதன் விளைவுகள் பாதிப்பற்றவை என்பதற்கு எந்தவிதமான ஆதாரபூர்வ ஆய்வுகளும் இல்லை. இவற்றால் மற்ற விவசாயப் பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் நேரும் சிக்கல்கள் குறித்தும் தெளிவில்லை. இதை நம்பிச் சாப்பிடலாம் என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவசர அவசரமாக எதற்கு இந்த அங்கீகாரங்கள் ?

உண்பது என்ன உணவு என்பதை அறியும் உரிமை உண்ணும் ஒவ்வொருவருக்கும் உண்டு. விளைவிப்பது என்ன என்பதை அறியும் உரிமை ஒவ்வொரு விவசாயிக்கும் உண்டு. அந்த அடிப்படை விஷயங்களைத் தெளிவுபடுத்தும் கடமை அரசுக்கு உண்டு. மாற்றங்கள் தேவையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவை நல்ல மாற்றங்களாய் இருக்க வேண்டும் எனும் கவலை தான் ஒவ்வொருவருக்கும்.

நன்றி : பசுமை விகடன்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா ?

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. வெகு சகஜமாக அம்மாக்கள் சலித்துக் கொள்வது இது. குழந்தைகளுக்கு எதையாவது கற்றுக் கொடுப்பது ஒரு மாபெரும் கலை. சில அம்மாக்கள் அதில் வெகு கெட்டிக்காரர்கள். பல அம்மாக்களுக்கு அந்த சூட்சுமம் பிடிபடுவதில்லை.  குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல சுவாரஸ்யம் வேறு எதிலும் இல்லை. “அம்மா..” என குழந்தை மழலை வாயால் அழைக்கும் போது சிலிர்க்காத அம்மாக்கள் இருக்கவே முடியாது. 

சில பிள்ளைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள். சிலர் ரொம்ப லேட்டா தான் பேசவே ஆரம்பிப்பார்கள். தாத்தா பாட்டி இருக்கும் வீடுகளில் பிள்ளைகள் சீக்கிரம் பேசுவார்கள். காரணம் பாட்டிகள் குழந்தைகளுக்கு எதையாச்சும் சொல்லித் தந்து கொண்டே இருப்பது தான். குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் கலையைப் பற்றி அமெரிக்காவின் என்.ஐ.எஃப்.எல் (National Institute for Literacy ) சுவாரஸ்யமான பல விஷயங்களை விளக்குகிறது.

ஒரு இடத்தில் உட்கார்ந்து படிப்பதெல்லாம் குழந்தைகள் விஷயத்தில் ஒத்து வராது. அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நாமும் குழந்தைகளாக மாற வேண்டும். தாத்தா. பாட்டி, மாமா என உறவுகளில் ஆரம்பித்து, பார்க்கின்ற பொருட்களின் பெயர்களையெல்லாம் முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தையின் கண்ணுக்குத் தட்டுப் படும் பொருட்கள் பற்றியெல்லாம் சொல்வது தான் கல்வியின் முதல் நிலை.

சில குழந்தைகள் தெளிவாகப் பேசுவார்கள். சிலருக்கு வார்த்தைகள் தெளிவாய் வராது. சிலருக்குத் தொடர்ச்சியாய் பேச வராது. எந்தக் குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொள்வது பெற்றோரின் சாமர்த்தியம். அதற்குத் தக்கபடி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க எக்கச் சக்கப் பொருட்கள் எல்லார் வீட்டிலும் உண்டு. டிவி முதல் மிதியடி வரை எல்லாம் சொல்லிக் கொடுங்க. அவர்களுக்கு நிறைய விஷயங்கள் மனதில் தங்கி விடும்..

வார்த்தைகள் பழக்கியாச்சா ? இப்போது குழந்தைகளே வீட்டுக்குள் உள்ள பொருட்களின் பெயரை சொல்லிச் சொல்லி சந்தோசப்படும். இப்போது அவர்களுக்கு கதைகள் சொல்லிக் கொடுங்கள். கதை பேசுவது கற்காலக் கலை. பலர் இதில் நடிகையர் திலகங்கள் தான். ஏற்ற இறக்கமாய், ஆக் ஷனுடன், தாள லயத்துடன் கதை சொல்வார்கள். கணவர்களே குழந்தைகளாய் மாறி ரசிப்பார்கள். குழந்தைகளுக்கோ சுவாரஸ்யம் தாங்காது. திரும்பத் திரும்ப கதைகளைக் கேட்பார்கள். குழந்தைக் கல்வியின் மிக முக்கியமான சங்கதி குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டுவது தான் !

கதையை சொல்லிக் கொடுத்தாச்சா. இப்போ அவர்களிடம் கதைகளைத் திரும்பச் சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் அப்படியே உங்களை இமிடேட் பண்ணுவார்கள். ரசியுங்கள். தடுமாறும் இடத்தில் சொல்லிக் கொடுங்கள். கதை சொல்லி முடித்து விட்டு எதையோ சாதித்ததாய் குழந்தைகள் கர்வத்துடன் பார்ப்பார்கள். அவர்களைப் பாராட்ட மறந்து விடாதீர்கள், அது ரொம்ப முக்கியம்.

குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்லுங்கள். அப்படிப் போகும்போது அவர்களுடைய மூளைக்கு சுவாரஸ்யமான வேலை கொடுங்கள். அதாவது தோட்டத்துக்குப் போகிறீர்கள் என்றால், இங்கே என்னென்ன பச்சை கலர் பொருட்கள் இருக்கிறது ? சதுர வடிவில் என்னென்ன இருக்கின்றன ? இப்படி கொஞ்சம் கேள்விகளைக் கேளுங்கள். இங்கே என்னென்ன பொருட்கள் “A” எனும் எழுத்தில் ஆரம்பிக்கின்றன என ஒரு புதிர் போடுங்கள். அவர்களுக்குத் தெரியவில்லையெனில் நீங்கள் துவங்கி வையுங்கள். எறும்பு என்றால் Ant – A யில் தான் ஆரம்பிக்கும் என எறும்பு தேடுங்கள்.  

குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து விட்டார்களா ? இப்போது அடுத்த நிலைக்குத் தாவி விடுங்கள். பள்ளியில் என்னென்ன நடந்தது என கேளுங்கள். அவர்கள் உற்சாகமாய் கதை பேசுவார்கள். நீங்களும் அதே உற்சாகத்தில் கேளுங்கள். இங்கே நீங்கள் வாக்கியங்களைக் கவனியுங்கள். குழந்தைகளுக்கு “இது தப்பு” என்று சொல்வதை விட சரியானதை நீங்கள் பேசிக் காட்ட வேண்டும். அது தான் சரியான வழிமுறை என்கிறார் ஷானன் எம் கேனன் (Shannon M. Cannon) எனும் எழுத்தாளர்.

பள்ளிக்குப் போக ஆரம்பிச்சாச்சு. இனிமேல் வீட்டுப் பாடம் தான் தலையாய கடமை என முடிவு கட்டி விடாதீர்கள். குழந்தைகள் வந்ததும் வராததுமாக வீட்டுப் பாடம் கொடுத்து மிரட்டாதீர்கள். அவர்களுக்கு அது வெறுப்பைத் தந்து விடக் கூடும். இன்னும் சொல்லப் போனால், நீங்கள் கூப்பிடும்போதெல்லாம் குழந்தை வந்து படிக்க வேண்டும் என நினைக்கவே கூடாது. குழந்தைகளுக்குப் படிக்க வேண்டும் என தோன்றும் போதெல்லாம் நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். அதனால் தான் கல்வியை அவர்கள் விரும்பும் வகையில் நீங்கள் தரவேண்டிய அவசியம் வருகிறது.

சில குழந்தைகள் சாப்பிடாமல் அடம் பிடிக்கும். உடனே அம்மா ஓடிப்போய் ஒரு புது பிளேட் எடுத்து வருவார். அதில் மிக்கியின் படம் போடப்பட்டிருக்கும். இதோ பாரு மிக்கி பிளேட், சாப்பிடலாமா என அழைத்தால் குழந்தை ஓடி வரும். அடுத்த நாள் “மம்மி மிக்கி பிளேட்ல சாப்பாடு கொடு” என குழந்தையே கேட்கும். கல்வியும் அப்படித் தான். அவர்களுக்குப் பிடித்த வகையில் சொல்லிக் கொடுத்தால் விரும்பிக் கற்பார்கள். 

இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்லிக் கொடுப்பது ஒரு வகை. தோட்டத்தில் போய் நான்கு கற்கள் எடுத்து வா என்பது இன்னொரு வகை. முடிவு ஒன்று தான் வழிகள் தான் வேறு வேறு. பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டியது குழந்தைகளின் ரசனையை !. டிவிடி பிளேயரில் சினிமா பாடல்களைக் கட் பண்ணிவிட்டு. ரைம்ஸ் போடுங்கள். ஆடியோ நூல்கள் வாங்கிப் போடுங்கள்.  புத்தகத்தைக் கொடுத்து படம் வரையச் சொல்லுங்கள். இவையெல்லாம் சில எளிய வழிகள் என்கிறார் கேரி டிரன்பெல் (Gary Direnfeld) எனும் குழந்தைகள் நல நிபுணர்.

ஒருவேளை குழந்தை ஏதாவது கிறுக்கிக் கொண்டு உங்களிடம் வரும். உங்களுக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது. “என்னடா வரஞ்சிருக்கே.. ஒண்ணுமே புரியலையே..” என்று சொன்னால் எல்லாமே அவுட். “அழகா இருக்கே. என்ன வரைஞ்சிருக்கே சொல்லு” என ஆரம்பிக்க வேண்டும். குழந்தை தனது படைப்பை விவரிப்பதன் வழியாகப் படத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் ! 

குழந்தைகளுக்கு ஈகோ உண்டு. அவர்களுடைய முயற்சிகளை கிண்டலடிக்கவே செய்யாதீர்கள். கிண்டல், கேலி, விமர்சனம் எல்லாம் குழந்தைகளுடைய சிந்தனையை மழுங்கடிக்கும். உதாரணமா, ஒரு படத்தில் எப்படி கலர் அடிக்க வேண்டும் என்பதைச் சொல்வது தான் உங்கள் வேலை. அப்புறம் தன்க்கு விருப்பமான கலரை அடிப்பது குழந்தையோட சாய்ஸ். அதுல போய் “மூக்குக்கு நீலக் கலர் அடிக்கிறியே சேச்சே… “ என்று நக்கலடிக்காதீர்கள். மம்மி… ஒரு எட்டுத் தலை பூனை வந்து, சைக்கிளைக் கடிச்சுக் கடிச்சு தின்னுச்சு” என குழந்தை கதை சொன்னால் ரசித்துக் கேளுங்கள். லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க.

இசையை ரசிக்காத குழந்தைகளே இருக்காது. அவர்களுக்கு நல்ல பாட்டுகள் மூலம் கல்வியைச் சொல்லிக் கொடுங்கள். ஒரு பாட்டு சொல்லிக் குடுங்க. அப்புறம் அந்த பாட்டிலுள்ள வார்த்தைகளையெல்லாம் மாற்றி வேறு வார்த்தைகள் போட்டு பாடுங்க. குழந்தைகளையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அவர்கள் தங்களுக்குப் பிடித்த வார்த்தைகளைப் போட்டுப் பாட ஆரம்பிப்பார்கள்.

குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியது ரொம்பவே அவசியம். அது கொஞ்சம் கஷ்டமான வேலை. காரணம் ஹால்ல சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் டி.வி. ! அதனால வாசிப்பதற்கு குழந்தைகளுக்கு தனியா, அமைதியா, காற்றோட்டமா ஒரு அறை இருப்பது ரொம்பவே அவசியம்.

குழந்தைகள் வாசிக்கும் போது சிறு சிறு பகுதிகளாக வாசிக்கச் சொல்லுங்கள் அவர்கள் சுவாரஸ்யமாக வாசிப்பார்கள். ஏனோ தானோன்னு இருக்காம ரொம்பக் கவனமாய் கேளுங்கள். அவர்கள் தடுமாறும் இடங்களை திரும்பத் திரும்ப வாசிக்கச் சொல்லுங்கள். அதிகமாக வாசிக்கும் போது அவர்களுடைய உச்சரிப்பும் அழகாகும். பொருளும் தெளிவாகும். வாசித்த கதையிலிருந்து ஏதாச்சும் கேள்விகள் கேளுங்கள். கதையை மீண்டும் சொல்லச் சொல்லுங்கள். கதையின் வரிசை, கதாபாத்திரங்களின் வரிசையைச் சொல்லச் சொல்லுங்கள். இவையெல்லாம் குழந்தைகளின் அறிவை ஷார்ப்பாக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம், கதை சொல்லும் போதே கதாபாத்திரங்கள் வழியாக குழந்தைகளுக்கு மனித மதிப்பீடுகளையும் சொல்லிக் கொடுப்பது. “அந்த குருவி தன்னோட குஞ்சுக்கு தீனி கொடுத்துச்சு. ஏன்னா குஞ்சுங்க மேல அம்மாக்கு ரொம்ப அன்பு. அன்புன்னா என்னான்னு தெரியுமா ?” என அன்பைப் பற்றிச் சொல்ல ஆரம்பியுங்கள். கல்வி வார்த்தைகளைப் படிப்பதல்ல, வாழ்க்கையைப் படிப்பது தான் என்கிறார் கரோலின் வார்னிமுன்டே (Carolyn Warnemuende ) எனும் குழந்தைகள் நல நிபுணர்.

குழந்தைகளுக்குப் பரிசு கொடுக்கறேன் பேர்வழின்னு குர்குரே, சிப்ஸ், சாக்லேட் என அடுக்கித் தள்ளாதீங்க. ரொம்பத் தப்பு. அதற்குப் பதிலாக குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசாகக் கொடுங்கள். டிராயிங், கலரிங், ஸ்டோரி என எதுவானாலும் பரவாயில்லை. குழந்தைகளின் கல்வி ஆர்வம் அதிகமாகும். குழந்தைகளின் விருப்பம் வீடியோ கேம்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அவர்கள் காமிக் புத்தகத்தை விரும்பிப் படிப்பார்கள். ஸ்போர்ட்ஸ் ஆர்வம் அதிகமாய் இருந்தால் ஸ்போர்ட்ஸ் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். அனிமல்ஸ் பிடிக்குமெனில் அப்படிப்பட்ட புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். 

வீக் எண்ட் வந்தாச்சுன்னாலே தியேட்டருக்கு ஓடாதீங்க. அப்பப்போ லைப்ரரிக்குப் போங்க. பிள்ளைங்க லைப்ரரியில் நேரம் செலவிடட்டும். குழந்தைகளுக்கு வெரைட்டியாய் புத்தகங்களும் கிடைக்கும். அப்பார்ட்மெண்ட் வாசிகளென்றால் ரொம்ப வசதி. பக்கத்திலுள்ள பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஒரு புக் கிளப் ஆரம்பிக்கலாம். பெற்றோர்கள் அதற்கு வகை செய்தால், நட்பும் அறிவும் விரிவடையும். 

குழந்தைகளை மார்க் வாங்கும் மிஷினான பார்க்கவே பார்க்காதீர்கள். அது கல்வியின் மீது குழந்தைக்கு வெறுப்போ பயமோ வரக் காரணமாகி விடும். “குழந்தைகளை கட்டாயப்படுத்தி எதையும் கற்க வைக்காதீர்கள். அவர்கள் போக்கில் அவர்களைக் கற்க நீங்கள் வழிகாட்டுங்கள். அது தான் அவர்களுக்குள்ளே உள்ள அறிஞரை வெளிக்கொணரும்”. இதைச் சொன்னவர் வேறு யாருமல்ல, உலகையே வசப்படுத்திய பிளாட்டோ தான்.

கடைசியாய் ஒன்றே ஒன்று. கல்வி என்பது ஒரு சீசன் கிடையாது. அது எப்போதும் தொடரும் சமாச்சாரம். அதனால் முதலில் காட்டும் உற்சாகம் கடைசி வரை இருக்கட்டும்.

*

எனது “குழந்தைகளால் பெருமையடைய வேண்டுமா ?” நூலிலிருந்து

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

தினத் தந்தியில் எனது தொடர் : சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்.

 

தினத்தந்தி இளைஞர் மலரில் “சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்” எனும் ஒரு தன்னம்பிக்கைத் தொடர் எழுதி வருகிறேன். பல பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தாலும் தன்னம்பிக்கை தொடர்பாக “தொடர் கட்டுரை” எழுதுவது இது தான் முதல் தடவை. அதுவும் தினத்தந்தி போன்ற விரிவான வாசகர்களைக் கொண்டுள்ள பத்திரிகையில் எழுதுவதில் மகிழ்ச்சி அதிகம்.

சனிக்கிழமை தோறும் வெளியாகும் தினத்தந்தியின் இலவச இணைப்பான “இளைஞர் மலர்” இதழில் இது வருகிறது, வாய்ப்பிருந்தால் படியுங்கள். !

1. 

திட்டமிடு, வெற்றி வானில் வட்டமிடு.

வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என விரும்பாத மனிதர்கள் இருக்க முடியாது. விரும்புவதால் மட்டுமே ஒருவர் வெற்றிகளைப் பெற்றுவிடவும் முடியாது. வெற்றிக் கதவைத் திறப்பதற்கான சாவிகள் கையில் இருக்க வேண்டியது அவசியம். அந்தச் சாவிகளில் முக்கியமானது “தயாராதல்” எனும் சாவி. ஒரு சூழலை எதிர்கொள்வதற்கு நம்மை எந்த அளவுக்குத் தயார்படுத்திக் கொள்கிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது நம்முடைய வெற்றியும் தோல்வியும். 

ஆபிரகாம் லிங்கனை அறிந்திருப்பீர்கள். அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதி. மேடைப்பேச்சிலும், விவாதங்களிலும் உலகப் புகழ் பெற்றவர். மிகத் திறமையான ஜனாதிபதி, தலை சிறந்த தலைவர் என உலகின் மூலை முடுக்கெல்லாம் தன்னுடைய பெயரை எழுதியவர். ஒரு முறை அவர் வழக்கம் போல அசத்தலான ஒரு மேடைப்பேச்சை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் பிரமித்துப் போனார்கள். அதில் முன் வரிசையில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் ரொம்பவே வசீகரிக்கப்பட்டான். பேச்சு முடிந்தபின் அவன் அவரிடம் கேட்டான்

“சார். ரொம்ப ரொம்ப பிரமாதமா பேசறீங்க. இதன் ரகசியத்தைச் சொல்ல முடியுமா ?”. ஆபிரகாம் லிங்கன் சிரித்துக் கொண்டே சொன்னார்

“நான் மேடையில் அரை மணி நேரம் பேசினதைத் தான் கேட்டாய். அதற்காக அரை நாள் நான் தயாரானதைப் பார்க்கவில்லையே” !

அவருடைய அந்தப் பதிலில் அடங்கியிருந்தது அவருடைய வெற்றிக்கான ரகசியம் !. “தயாராதல் ! “

ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய ஒவ்வோர் மேடைப்பேச்சுக்கும் முன்பும் தன்னை மிகச் சிறப்பாகத் தன்னைத் தயாரித்துக் கொள்பவர். எல்லாரும் எல்லா விஷயங்களிலும் கில்லாடிகளாய் இருக்க முடிவதில்லை. எனவே ஆபிரகாம் லிங்கனுக்கே தயாரிப்பு தேவைப்படுகிறது. அந்தத் தயாரிப்பு தான் அவருடைய உரையை வசீகரிக்கும் விதமாக மாற்றியமைக்கிறது. அந்த தயாரிப்பு தான் அவரை மேடைப் பயமின்றி பேச வைக்கிறது. அந்தத் தயாரிப்பு தான் அவரை உலகத் தலைவருக்குரிய குணாதிசயத்தோடு பணியாற்ற வைக்கிறது.

அவர் மட்டுமல்ல, உலகின் புகழ் பெற்ற எல்லா பேச்சாளர்களுடைய வாழ்க்கையிலும் சுவாரஸ்யமான தயாராகும் வழிகள் அடங்கியிருக்கின்றன. கண்ணாடியின் முன் நின்று பேசுவது, வீட்டில் உள்ள நபர்களை கூட்டமாய் நினைத்து அவர்கள் முன் உரையாற்றுவது, டேப் ரிகார்டரில் ரெக்கார்ட் பண்ணிப் பழகுவது என ஒவ்வொருவருடைய வாழ்க்கை அனுபவமும் சொல்லும் பாடம் ஒன்று தான். தயாராதல் மிக முக்கியம் !

 “வெற்றிக்கு மிக மிக முக்கியமான தேவை தன்னம்பிக்கை. தன்னம்பிக்கைக்கு முக்கியத் தேவை தயாராதல் !” என்கிறார் பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரரான ஆர்தர் ஆஷே. வெற்றிக் கோப்பைகளுடன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவருடைய தன்னம்பிக்கையின் ரகசியம் என்ன என்ற வினாவுக்கு அவர் சொன்ன பதில் தான் இது ! தயாரிப்பு இல்லாத மனிதர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்க முடியாது. தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் வெற்றியாளர்களாய் ஜொலிக்க முடியாது.

விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில் சில நிமிட விளையாட்டுக்காக ஆண்டுக் கணக்கில் தங்களைத் தயாரித்துக் கொள்வார்கள். அந்தத் தயாரிப்பு தான் அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னம்பிக்கை அவர்களுடைய கையைப் பிடித்து உள்ளங்கைக்குள் வெற்றிக் கோப்பையைத் திணிக்கிறது.

தன்னம்பிக்கைக்கும் அதீத நம்பிக்கைக்கும் வேறுபாடு உண்டு. இரண்டு பேர் மலையேறச் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் மலையேற்றத்துக்குரிய உபகரணங்களோடு மலையேறச் செல்கிறார். இன்னொருவர் எந்த ஒரு உபகரணமும் எடுக்காமல் மலையேறச் செல்கிறார். இது தான் தன்னம்பிக்கைக்கும், அதீத நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம்.

ஒரு செயலைச் செய்யும் முன் அந்தச் செயலுக்கான அனைத்து தயாரிப்புகளையும் செய்வது தன்னம்பிக்கையாளரின் வழக்கம். அதீத நம்பிக்கை உடையவர்களோ சரியான தயாரிப்புகள் இல்லாமல் களமிறங்குவார்கள். தயாரிப்புகள் இல்லாமல் இறங்கும் மனிதர்கள் கடைசியில் அதிர்ஷ்டத்தைத் தான் துணைக்கு அழைக்க வேண்டும். தன்னம்பிக்கைக்காரருடைய வெற்றியோ முழுக்க முழுக்க அவரைச் சார்ந்தே இருக்கிறது.  !

குடும்ப வாழ்க்கையிலும் இந்த அதீத நம்பிக்கை சிக்கலைக் கொண்டு வந்து சேர்க்கிறது. உதாரணமாக, காதலிக்கும் போது தங்கள் வாழ்க்கையில் காதலிக்கும் நபரை எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம், வசீகரிக்கலாம் என திட்டமிடுகிறார்கள். ஒரு காதல் கடிதத்தை எழுதவே இராத்திரி முழுதும் விழித்திருந்து பேப்பர் கிழிக்கிறார்கள். அந்தத் தயாரிப்புகள் அவர்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது. காதல் வாழ்க்கை தென்றலாய் வீசுகிறது.

அதே நேரம், அவர்கள் திருமணத்தில் இணைந்தபின் “இனிமேல் இவர் நமக்கே” எனும் அதீத நம்பிக்கை எதையும் தயாரிக்காத ஏனோ தானோ எனும் சூழலுக்குத் தம்பதியரைத் தள்ளி விடுகிறது. வாழ்க்கை தன்னுடைய சுவாரஸ்யத்தையும், பிடிமானத்தையும் இழந்து தத்தளிக்கத் துவங்குகிறது.

எனக்கு இதெல்லாம் தெரியும் என தம்பட்டம் அடிப்பதை தன்னம்பிக்கை என பலர் நினைக்கிறார்கள். அது தன்னம்பிக்கையல்ல. தன்னம்பிக்கை வார்த்தைகளில் மிளிர்வதல்ல, அது செயல்களில் ஒளிர்வது.

சரியாய் தயாரானவன் தேர்வுக்கு எந்த விதமான பதட்டமும் இல்லாமல் செல்வான். அவனுடைய கண்களில் தன்னம்பிக்கை நட்சத்திரங்கள் சுடர்விடும். தயாராகாமல் ஏனோ தானோ என்று செல்பவனோ அதிர்ஷ்டத்தையும், அடுத்தவனையும் நம்பியே தேர்வு எழுதச் செல்வான். வெற்றி எப்போதுமே தயாராய் இருப்பவனுக்காய் தயாராய் இருக்கிறது !

ஒரு வெற்றிக்கு என்னென்ன தேவையோ அவற்றை அனைத்தையும் தயாராய் வைத்திருக்கும் போது நமக்கு முன்னால் இருக்கும் பணி எளிதாக முடிந்து விடுகிறது. உதாரணமாக ஒரு சாலையைக் கடக்க வேண்டுமென வைத்துக் கொள்ளுங்கள். அது ரொம்பவே எளிதான வேலை. அதே நேரம் ஒரு கால் ஊனமாய் உள்ள மனிதன் என்று வைத்துக் கொள்ளுங்கள் ! அந்த வேலை மிகக் கடினமானதாகி விடுகிறதல்லவா ? இந்த ஊனம் தன்னம்பிக்கைக்கு ஒரு வேகத் தடையையும் தந்து விடக் கூடுமல்லவா ? எனவே தயாராதல் என்பது ஒவ்வோர் சூழலுக்கும் ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டது !

ஐந்து மணி ரயிலைப் பிடிக்க நான்கு மணிக்கே கிளம்புவது ரொம்ப எளிதான வேலை. ஆனால் அதே ரயிலைப் பிடிக்க ரொம்பவே தாமதமாய்க் கிளம்பும் சூழலை நினைத்துப் பாருங்கள். எத்தனை பரபரப்பு, எவ்வளவு கஷ்டம் ! சரியாய்த் திட்டமிடுதல், சரியாகத் தயாராதல் இவை இல்லாவிடில் தேவையற்ற மன அழுத்தம் நம் முதுகில் ஏறி அமர்ந்து விடுகிறது. அதுவே நமக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்து விடுகிறது.

சிலர் வேலையில் நுழைந்த சில ஆண்டுகளிலேயே வெற்றி வானில் வட்டமிடுவார்கள். அதற்குக் காரணம் சிறப்பான திட்டமிடுதலும், அதற்காகத் தயாராவதும் தான். வந்தோமா, போனோமா என்று இருப்பவர்கள் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் செல்வதில்லை. அவர்கள் காற்றில் பறக்கும் பட்டத்தைப் போன்றவர்கள். எப்போதும் நிலத்திலுள்ள கயிறோடு கட்டப்பட்டு இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஓடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு  இலக்கு இருப்பதில்லை. எனவே அவர்களால் எந்தத் திசையில் பறக்க வேண்டுமென முடிவு செய்ய முடிவதில்லை. அவர்களுக்குச் சொந்தமாகச் சிறகுகள் இருப்பதில்லை. எனவே சுயமாக செயல்பட முடிவதில்லை. அவர்கள் எப்போதும் இன்னொருவரைச் சார்ந்தே இருப்பார்கள்.

திட்டமிட்டுப் பறப்பவர்கள் கழுகைப் போன்றவர்கள். அவர்களுடைய சிறகுகள் அவர்களுக்கு வலுவூட்டும். அவர்களுடைய பார்வை அவர்களுக்குத் திசைகளைக் காட்டும். அவர்களுடைய பயணம் அவர்கள் திட்டமிட்ட திசையில் நடக்கும். அவர்களுடைய வெற்றியையோ, தோல்வியையோ இன்னொருவர் நிர்ணயிக்க முடியாது. அவர்களுடைய வாழ்க்கை மொத்தத்தில் அவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது.

வெற்றியின் ரகசியங்களில் ஒன்று இது தான். வெற்றி என்பதைப் பெற ஏதேதோ வேண்டுமென நாமாகவே கருதிக் கொள்கிறோம். ஆனால் சில வேளைகளில் வெற்றிக்காக சரியான திட்டமிடுதலும், தயாரித்தலுமே போதுமானதாக இருக்கிறது.

உட்கார்ந்து எழுதவே ஒரு இடம் இல்லாமல் கஷ்டப்பட்டார் ஒரு எழுத்தாளர். வெளியே உறைய வைக்கும் குளிர். கையில் போதுமான அளவு பணம் இல்லை. ஒரே ஒரு காபி வாங்கிக் கொண்டு அந்த காபி ஷாப்பில் பல மணிநேரம் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஒரு நாவலுக்கான முயற்சியில் தன்னைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தத் தயாரிப்பு தான் அந்த எழுத்தாளரை உலகப் புகழ் பெற்ற எழுத்தாளராக்கியது. இன்று அவருடைய நாவலுக்காய் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடியற்காலையிலேயே கடைகளில் நிரம்பி விடுகிறது கூட்டம். அவர்தான் ஹாரிபாட்டர் நாவலை எழுதிய ஜே.ஜே ரௌலிங்கர்.

வெற்றியை நோக்கிய பயணத்தில் இந்த தயாரிப்பு ரொம்பவே அவசியம். இன்றைக்கு வெற்றியாளர்களுடைய வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்கும்போது புலப்படும் விஷயம் ஒன்று தான். அவர்கள் தங்கள் இலட்சியத்துக்காக தங்களைத் தயாரித்துக் கொண்டார்கள்.

அலெக்சாண்டர் கிரகாம்பெல்லிடம் ஒருமுறை கேட்டார்கள் “உங்கள் வெற்றிக்கான ரகசியம் என்ன ?”

“வேறொன்றுமில்லை, சிறப்பாகத் தயாராவதே எனது வெற்றியின் ரகசியம்” என்று பளிச் எனப் பதிலளித்தார் அவர்.

தயாராதல் வெற்றியின் ரகசியம்

தயாராவோம் வெற்றிகள் அவசியம்.

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

குழந்தைகளுக்கான செல்போன் !!! 2G அல்ல 2LKG !

“மம்மி எனக்கு நாலு வயசாயிடுச்சு.. ஒரு செல்போன் வாங்கிக் குடுங்க” என உங்கள் குழந்தை கேட்டால் என்ன நினைப்பீர்கள் ?. கடையின் முன்னால் ஏதோ கலர் கலராய் தொங்கும் பொம்மை செல்போனைத் தான் கேட்கிறது என்று தானே நினைப்பீர்கள் ? இந்த நினைப்பெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தான்.

“பொம்மை செல்போனை நீயே வெச்சுக்கோ எனக்கு ஒரு உண்மையான செல்போன் வாங்கிக் கொடு” என உங்கள் குழந்தை கேட்கப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என சொல்லாமல் சொல்கின்றன மேலை நாடுகளில் நடக்கும் சமாச்சாரங்கள்.

நம்பினால் நம்புங்கள். நாலு வயசுக் குழந்தைகளுக்கான பிரத்யேக செல்போன்கள் ரெடி !

நாலுவயசுக் குழந்தைக்கா ? தனியே பாத்ரூம் போகவே பழகியிருக்காதே, அந்த வயசுல செல்போனா என ஆச்சரியப்படாதீர்கள். குழந்தைகளைக் குறிவைத்திருக்கும் இந்த செல்போன்கள் தான் மேலை நாடுகளில் இப்போதைய ஹாட் டாப்பிக்.

எதை எப்படி விற்று எவ்வளவு லாபம் பார்க்கலாம் என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி தேடிக்கொண்டிருந்த வியாபாரிகளுக்குக் கிடைத்த சூப்பர் ஐடியா தான் இந்த குழந்தைகளுக்கான இந்த குட்டி செல்போன்கள். பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என பளிச் பளிச் நிறங்களில், அச்சு அசலாய் விளையாட்டுப் பொருள் போலவே சின்னச் சின்ன அனிமேஷன் படங்களுடன் தயாராகின்றன குழந்தைகளுக்கான இந்த செல்போன்கள்.

பெரியவர்கள் செல்போன் பயன்படுத்துவது ஆபத்தா இல்லையா எனும் சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை, அதற்குள் குழந்தைகளின் கைகளிலும் செல்போனா என பதட்டப்படுவது உங்களையும் என்னையும் போல வெகு சிலர் தான். மற்றவர்கள் எல்லோரும் ஏற்கனவே கடைகளுக்குச் சென்று ஒன்றுக்கு இரண்டாய் முன்பதிவு செய்து விட்டு எப்போது கடைக்கு சரக்கு எப்போ வரும் என போன் பண்ணி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

செல்போன் உபயோகிப்பது குழந்தைகளுக்கு ரொம்பவே கெடுதலாச்சே. செல்போன் உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மூளைப் புற்று நோய் வரும் வாய்ப்பு மற்ற குழந்தைகளை விட ஐந்து மடங்கு அதிகம் என கடந்த ஆண்டு ஸ்வீடன் நாட்டில் ஒரு ஆராய்ச்சி முடிவு வந்திருந்ததே எனக் கேட்டால்,  இந்த குழந்தைகளுக்கான செல்போன் ரொம்பவே ஸ்பெஷலானது. இது குழந்தைகளுடைய பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு விசேஷமாய் தயாரானது. இதனால் எந்த சிக்கலும் வராது என சால்ஜாப்பு சொல்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

அப்படி என்னதான் ஸ்பெஷல் இந்த செல்போனில் ?. முதலில் இந்த போனில் இருப்பது ஐந்தே ஐந்து பட்டன்கள். ஒரு பட்டனில் ஒரு ஆணின் படம். இதில் அப்பாவின் எண்ணை சேமித்துக் கொள்ளலாம். இன்னொரு பட்டனில் பெண்ணின் படம். இது அம்மாவின் எண்ணைச் சேமித்து வைப்பதற்கு. இன்னொரு பட்டன் போன் புக்கைப் புரட்ட. இதில் இருபது எண்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அப்புறம் ஒரு பட்டன் பேச, இன்னொரு பட்டன் நிறுத்த. இதெல்லாமே குழந்தைகளின் வசதிக்காக ரொம்ப கஷ்டப்பட்டு வடிவமைத்தது என சொல்லி பெருமையடிக்கின்றனர் இந்த செல்போனை வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டு வரும் பயர் பிளை நிறுவனத்தினர்.

இப்போதெல்லாம் பெரும்பாலான குடும்பங்களில் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போகிறார்கள். குழந்தைகள் தனியாகவோ,அல்லது யாருடைய பாதுகாப்பிலோ தான் வளர வேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலில் குழந்தைகளுக்கு பெற்றோரின் நினைப்பும், பெற்றோருக்கு குழந்தையின் நினைப்பும் அடிக்கடி வரத் தான் செய்யும். அப்படி தனித் தனியே இருக்கும் நேரங்களில் இந்த செல்போன் ரொம்பவே முக்கியம். எப்போதெல்லாம் குழந்தைக்கு மம்மியுடன் பேசத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் ஒரு பட்டனை அமுக்கி அம்மாவிடம் பேசலாம். இதனால் குழந்தை எப்போதும் தன் பாதுகாப்பிலேயே இருப்பது போல அம்மா உணர முடியும், என பெண்களுக்கு ஆசை காட்டுகின்றனர் விற்பனையாளர்கள்.

அது மட்டுமல்லாமல், இந்த புதிய செல்பொனில் மொத்தம் 20 எண்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாமாம். உறவினர்கள், நண்பர்கள், அவசர எண்கள் என எந்தெந்த எண்கள் தேவையோ அவற்றைச் சேமிக்கலாம். எது தேவையில்லையோ அதை பெற்றோரே அழித்து விடலாம் என்கின்றனர் செல்போன் நிறுவனத்தினர். நாலு வயசுக் குழந்தைக்கு என்னென்ன எண் தேவைப்படப் போகிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

நம்ம ஊரிலேயே இப்போதெல்லாம் குழந்தைகள் செல்போனுடன் தான் பாதி நேரத்தைச் செலவிடுகின்றனர். ஒருவகையில் அதுக்குக் காரணம் நாம் தான். குழந்தைக்குச் சோறூட்ட வேண்டுமானால் செல்போன், அழுகையை நிறுத்த செல்போன், சத்தம் போடாமல் இருக்க செல்போன் என எதற்கெடுத்தாலும் கையில் ஒரு செல்போனைக் கொடுத்து காரியத்தை சாதித்து விடுகிறோம்.

போதாக்குறைக்கு,  “ஊர்லயிருந்து மாமா பேசறாரு ஒரு ரைம்ஸ் சொல்லும்மா, … மாமா ன்னு சொல்லு… மம்மி சொல்லு.. தாத்தா சொல்லு…. ” என குழந்தைகளை செல்போனில் பேசப் பழக்குவதில் பெற்றோரின் பங்கு கணிசமானது.

மேலை நாடுகள் இன்னும் சில படிகள் முன்னே இருக்கின்றன. அவர்கள் குழந்தைகளின் கைகளில் சொந்தமாகவே செல்போன் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். பிரிட்டனிலுள்ள ஐந்து வயதுக்கும், ஒன்பது வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் சொந்தமாக செல்போன் வைத்திருக்கிறார்களாம்.

“மம்மி.. ஸ்கூல்ல எல்லோரும் செல்போன் வெச்சிருக்காங்க, எனக்கும் ஒண்ணு வாங்கி கொடுங்க” என நச்சரிக்கும் மேலை நாட்டுக் குழந்தைக்கு ஜஸ்ட் எல்கேஜி வயசு ! குழந்தை கேட்டால் எப்படி மறுப்பது என நினைக்கும் பெற்றோர்களே மேலை நாடுகளிலும் அனேகம். அதனால் ஐந்து வயதுக் குழந்தையின் பிறந்த நாளுக்குப் பரிசாக செல்போன் கொடுப்பது என்பது சாதாரண விஷயமாகியிருக்கிறதாம் !

இதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரம் நம்ம ஊரில் இதெல்லாம் செல்லுபடியாகாது என நினைக்கிறீர்களா ? கொஞ்சம் வாழ்க்கையை ரிவைண்ட் பண்ணிப் பாருங்களேன்.

வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ், ஹை ஹீல்ஸ் செருப்பு, லிப்ஸ்டிக், உச்சி முதல் பாதம் வரை வளையங்கள் போடுவது, உடலில் படம் வரைவது, கிழிந்து போன பேண்ட் போடுவது எல்லாமே மேலை நாட்டுச் சமாச்சாரங்களாய் இருந்தவை தானே. இன்றைக்கு இவையெல்லாம் சர்வ சாதாரணமாகி விடவில்லையா ? இவ்வளவு ஏன் ? டைவர்ஸ் என்னும் வார்த்தையை 25 வருஷத்துக்கு முன்னாடி இத்தனை சர்வ சாதாரணமாய் கேட்க முடிந்திருக்கிறதா ?

உண்மையைச் சொல்வதென்றால், இன்றைக்கு மேலை நாடு கீழை நாடு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. இந்த இண்டர்நெட் உலகில் அமெரிக்காவில் விதை போட்டால் ஆப்பிரிக்காவில் கிளை வரும். லண்டனில் புயலடித்தால் சென்னைக்கு சேதம் வரும். பன்றிக்காய்ச்சலை விட வேகமாக பாஷன் பல்வேறு நாடுகளுக்குப் பரவிவிடும் இது தான் நிஜம். காரணம் உலக மயமாதல் எனும் சர்வதேச சந்தை இணைப்பு !

அதற்கு இந்த செல்போனும் விதிவிலக்காய் இருக்கப் போவதில்லை. கொஞ்ச நாட்களிலேயே “மம்மி பசிக்குது, ரெண்டு பிஸ்கட் குடு” என்று தோட்டத்தில் விளையாடும் பிள்ளை சமையலறையில் இருக்கும் அம்மாவிடம் பேசக் கூடும்.

முளைச்சு மூணு இலை விடறதுக்கு முன்னாடியே செல்போனைக் கையில் கொண்டு திரியும் குழந்தை டீன் ஏஜ் பருவத்தை அடையும்போ எப்படி இருக்கும் ? என்னென்ன உடல் நோய்கள் வரும் ? என்னென்ன மன நோய்கள் வரும் ? எத்தனை வேண்டாத கால்கள் வரும் என்றெல்லாம் யோசித்துப் பார்க்க தாய்மார்கள் தயாராய் இல்லை.

விட்டால் “பிரீ கிரெடிட் கார்ட் குடுக்கறோம், வேணுமாம்மா ? “ என ஏதேனும் வங்கியிலிருந்து குழந்தைகளின் செல்போனுக்கு மார்க்கெட்டிங் கால்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஏற்கனவே செல்போன் பயன்படுத்தும் பிரிட்டனிலுள்ள குழந்தைகளுக்கு எக்கச்சக்கமான பிரச்சினைகள் வருகிறதாம். தூக்கமின்மை, பசியின்மை, கவனக் குறைவு என அந்தப் பட்டியல் நீள்கிறது. இதனால் பெற்றோருக்குக் கவலை இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள மருத்துவர்கள் பலருக்கும் கவலை இருக்கிறது.

ஒரு, பன்னிரண்டு வயதாவது ஆவதற்கு முன் குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கவே கொடுக்காதீர்கள் என்கிறார் இங்கிலாந்து அரசின் செல்போன் ஆராய்ச்சிகளை நடத்தும் பேராசிரியர் லாரே சாலிஸ். அதற்கு அப்புறம் கூட போனில் பேசுவதை விட தேவைக்கு எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பிக் கொள்வதே நல்லது என்கிறார் அவர்.

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடல் அமைப்பிலும், தாங்கும் சக்தியிலும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. பெரியவர்கள் ஊரெல்லாம் வெயிலில் அலைந்து திரிந்தாலும்  பெரிதாக ஒன்றும் ஆகிவிடுவதில்லை. ஆனால் ஒரு குழந்தையை கொஞ்ச நேரம் வெயிலில் விட்டு விட்டீர்களென்றால் அதற்கு தோல் கான்சர் உட்பட பல்வேறு விதமான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. அதுபோல தான் இந்த செல்போன் சமாச்சாரமும், செல்போனிலிருந்து வருகின்ற ரேடியேஷன் சிக்கல்கள்  பெரியவர்களையே பயமுறுத்தும் சூழலில் குழந்தைகளைப் பாதிக்காது என சொல்லவே முடியாது என அடித்துச் சொல்கிறார் அவர்.

குழந்தைகள் குழந்தைகள் தான். அவர்களை பெரியவர்களின் “மினியேச்சர்” வடிவமாகப் பார்க்கும் போது தான் ஆபத்துகள் வளரத் துவங்குகின்றன. மிகவும் தேவையானவை என நாம் கருதுபவற்றைத் தவிர மற்ற பொருட்களை விருப்பத்துக்காகவோ, பேஷனுக்காகவோ, அந்தஸ்துக்காகவோ குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. நம் குழந்தையைக் காக்கும் கடமை நமக்கு உண்டல்லவா.

 

நன்றி : அவள் விகடன்

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

கருக்கலைப்பு : சரியான சில தவறுகள் !

“உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. இது பதினேழாவது வாரம்” சொன்ன டாக்டரைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள் தாய் லாக்ராமியோ. “உங்களுக்கென்ன பைத்தியமா, அவ பத்து வயசு குழந்தை”

“ஏம்மா… நான் பைத்தியமில்லை. உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. ஆகவேண்டியதைப் பாருங்க” ஏக கடுப்பில் சொல்லிவிட்டுக் கிளம்பினார் டாக்டர்.

லாக்ராமியோரா நிலை குலைந்து போய் தரையில் அமர்ந்தாள். அருகில் மகள் புளோரினா. துருதுரு பார்வை, கொழு கொழு கன்னம். கொஞ்சமும் மாறாத தெய்வீக மழலைச் சிரிப்பு. வயிற்று வலி என மருத்துவமனை வந்தவர்கள் இப்படி ஒரு அதிர்ச்சியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 

விசாரித்த போது தான் விஷயம் தெரியவந்தது சிறுமியைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் மாமன்காரன் வில்லனாகிப் போன கொடுமை. தன் சகோதரனே கொடுமைக்காரனாகி விட்டானே எனும் அதிர்ச்சி ஒருபுறம். மகளின் துயரம் மறுபுறம் என கலங்கிப் போனாள் தாய். எப்படியாவது உடனடியாக கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என முயன்ற போது தான் வந்தது அடுத்த அதிர்ச்சி.

அவர்கள் வசித்து வந்த ரொமானியா வில் 14 வாரங்கள் தாண்டிவிட்டால் கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதம்! என்ன செய்வது ? எப்படியாவது கருவைக் கலைத்தேயாக வேண்டும் என்பதில் தாய்க்கும் மகளுக்கும் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. கடைசியில் விஷயம் பத்திரிகைக்கு வர, உதவிக்கு வந்தாள் ரோக்சானா எனும் பெண்மணி.

சில பல இன்னல்களுக்குப் பின், ரொமானியாவிலிருந்து லண்டனுக்குப் பறந்து, லண்டனிலுள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிறுமியின் கரு கலைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பல்வேறுவிதமான விவாதங்களை உருவாக்கியது. கருக்கலைப்பு சரியா தவறா ? ஒட்டு மொத்தமாக இதைத் தடுப்பது நியாயமா ? எனும் விவாதங்களுக்கு எண்ணை ஊற்றியது இந்த நிகழ்ச்சி.

கருக்கலைப்பு என்றாலே ஏதோ தகாத உறவினால் உருவான குழந்தையைக் கலைக்கிறார்கள் எனும் எண்ணம் தான் பெருமாலானோருக்கு. உண்மையில் கருக்கலைப்புக்கு எக்கச்சக்க காரணங்கள் இருக்கின்றன. முதலில் வருவது மருத்துவக் காரணங்கள். கருவிலிருக்கும் குழந்தைக்கு உடல் ஊனம் ஏதேனும் இருக்கிறதா என்பதை மூன்றாவது மாதத்தில் எடுக்கும் ஸ்கேனே புட்டுப் புட்டு வைத்து விடுகிறது. குழந்தை பிறந்த பின் நிரந்தர ஊனமாய் இருந்தால் எந்த அன்னையால் தான் தாங்கிக் கொள்ள முடியும். இத்தகைய சிக்கல்களைக் கண்டறிவது தானே ஸ்கேனின் முக்கிய நோக்கமே !

சிலருக்கு பிரசவம் நடந்தால் உயிருக்கே ஆபத்து எனும் மருத்துவ நிலை இருக்கும்.  சிலர் பாலியல் பலாத்காரத்தின் விளைவாகக் கர்ப்பமடைந்திருப்பார்கள். இவர்களின் நிலைதான் என்ன ? இவையெல்லாம் எழுப்பப்படும் கேள்விகளில் சில.

பல நாடுகள் இத்தகைய பிரச்சினைகளை ஆழமாய் அலசி ஆராய்ந்து கருக்கலைப்புக்கான சட்டங்களை வகுத்திருக்கின்றன. பிரேசில் நாட்டில் கருக்கலைப்பு சட்டவிரோதம். ஆனால் பாலியல் வன்முறையினாலோ, பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருந்தாலோ கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.

பெரும்பாலும் மதங்களின் அடிப்படையிலான அரசுகளே கருக்கலைப்புகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நிலையில் இருக்கின்றன. மத நம்பிக்கைகளை மறுதலிக்காமல் இருப்பதில் தவறில்லை. அதே நேரம் அரசுகள் மக்களைக் காப்பதிலும் கவனம் செலுத்தியாக வேண்டுமல்லவா ?

பொதுமக்களைப் பொறுத்தவரை கருக்கலைப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே இருக்கிறது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்வதை பெரும்பாலான மக்கள் ஆதரிக்கின்றனர்.

2005ம் ஆண்டு பத்து ஐரோப்பிய நாடுகளில் விரிவான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. “பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கலாமா” என்பது தான் கேள்வி. அதிகபட்ச மாக கிரீச் ரிப்பப்ளிக் பிரதேசத்தில் 81 சதவீதமும், குறைந்த பட்சமாக போலந்து நாட்டில் 47 சதவீதம் மக்களும் வாக்களித்தனர்.

அமெரிக்காவில் வாழும் கனடா மக்களிடையே டிசம்பர் 2001ல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 86 சதவீதம் பேர் தகுந்த காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யும் முடிவெடுக்கும் உரிமையை பெண்களிடம் விட்டு விடவேண்டும் என கருத்து சொன்னார்கள். சமீபத்தில் வெளியான இன்னொரு கருத்துக் கணிப்பும் கருக்கலைப்புக்கு ஆதரவாகவே இருந்தது. பெண்கள் கருக்கலைப்பு செய்யவே கூடாது என குரல் கொடுத்தவர்கள் வெறும் 16 விழுக்காடு மட்டுமே.

வட அமெரிக்கா மட்டுமன்றி, தென் அமெரிக்காவில் அர்ஜெண்டீனாவில் 2003ல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் 77 சதவீதம் பேர் கருக்கலைப்பை எதிர்க்கவில்லை. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய உரிமை வழங்கப்படவேண்டும் என்றே வலியுறுத்தினர்.

இப்படி கருத்துக் கணிப்புகள் ஆதரவு நிலைப்பாடைக் காட்டினாலும் பல நாடுகள் அதையெல்லாம் சட்டை செய்வதில்லை. அபார்ஷனை மருந்துக்குக் கூட ஒத்துக் கொள்ளாத நாடுகள் பல இருக்கின்றன . சிலி, எல்சால்வடார், மெல்ட்டா, வாடிகன் சிட்டி மற்றும் நிக்குராக்வா போன்றவையே அவற்றில் சில.

நிக்குராக்வா நாட்டின் நிலமை படு மோசம். மருத்துவக் காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் எனும் சட்டம் 2006 வரை இருந்தது. மூன்று டாக்டர்கள் சான்றளிக்க வேண்டும் என்பது மட்டுமே சொல்லப்பட்டிருந்த நிபந்தனை. 2006 நவம்பர் மாதம் அதைத் திருத்தி, கருக்கலைப்பு கூடவே கூடாது என எழுதினார்கள். 

இதன் விளைவு மகா கொடுமையானது. 11 மாதங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்கள் பிரசவத்தில் இறந்து போனார்கள். அதிர்ந்து போன மனித உரிமைகள் சங்கம் இப்போது இந்தப் பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு களத்தில் குதித்திருக்கிறது.

எகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான், குவைத், சவுதி அரேபியா, துருக்கி, எமிரேட்ஸ் உட்பட பல நாடுகளில் கருக்கலைப்புக்குத் தடையில்லை. ஆனால் கருக்கலைப்பு கணவனின் அனுமதியுடன் தான் நடக்க வேண்டும் என்கிறது சட்டம். இதைப் பெரும்பாலான பெண்கள் அமைப்புகள் எதிர்க்கின்றன. 

கொலம்பியாவிலும் கருக்கலைப்பு சட்ட விரோதம். அங்கே ஊறியிருக்கும் மத நம்பிக்கைகளின் காரணமாக மக்களிடையேயும் அதே சிந்தனையே. எக்காரணம் கொண்டும் கருக்கலைப்பு செய்யக் கூடாது எனும் சட்டத்தை 66 சதவீதம் பேர் ஆதரிக்கின்றனர்.

அயர்லாந்து நாட்டிலுள்ள கருக்கலைப்பு சட்டம் ஒரே ஒரு நிபந்தனையைக் கொண்டிருக்கிறது. அதாவது பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே கருக்கலைப்பு. இல்லையேல் கூடாது. குழந்தை ஊனமாய்ப் பிறக்கும், பலாத்காரம் செய்யப்பட்டேன், தவறு செய்துவிட்டேன் என்றெல்லாம் காரணம் சொல்ல முடியாது.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் அதிக சிக்கல் இல்லை. 1971 முதல் கருக்கலைப்பு சட்டரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இது சட்டமாக்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாய் பதினோரு மில்லியன் கருக்கலைப்புகள் நடக்கின்றனவாம் ! 4 மில்லியன் கருக்கலைப்புகள் மறைமுகமாகச் செய்யப்படுகிறதாம். என்.சி.எம்.ஏ (National Consensus for Medical Abortion in India) சொல்கிறது.

கருக்கலைப்பை ஒத்துக் கொள்ளாத நாடுகள், இது மக்களை ஒழுங்கு படுத்தும் முயற்சி என்கின்றன. திருமணமாகாத பெண்களுக்குத் தான் 60 சதவீதம் கருக்கலைப்பு நடக்கிறது என புள்ளி விவரங்களையும் நீட்டுகின்றன. கருக்கலைப்பை அனுமதிக்கும் நாடுகளோ இது பெண்களின் உரிமை, மருத்துவத் தேவை, சமூக கடமை என எதிர் விவாதங்களை முன் வைக்கின்றன. 

கருக்கலைப்பு என்பது விளையாட்டுச் சமாச்சாரமல்ல. இது தவறுகளுக்கான அனுமதிச் சீட்டும் அல்ல. ஆனால் தவிர்க்க இயலா சூழலில் கூட அது மறுக்கப்படுவது சரியா என்பது தான் நம்மிடையே எழும் கேள்வி.

நன்றி : பெண்ணே நீ

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 127 other followers