கலைகிறதா கண்ணாடி (IT) மாளிகை ?

11

கடந்த வருடம் வரை இளைஞர்களின் கனவுக் கூரையாய் இருந்த கணினி மென்பொருள் துறை இன்றைக்கு வீசும் காற்றுக்கே கலைந்து வீழும் மணல் வீடுபோல வலுவிழந்து நிற்கிறது.

அமெரிக்காவில் வீட்டு வசதிக் கடன் சிக்கலில் ஆரம்பித்த இந்த பிரச்சினை இன்று காட்டுத் தீயாய் ஒவ்வோர் துறையாகப் பரவி, வங்கி, தானியங்கி, கடன் அட்டை என எல்லா துறைகளின் அஸ்திவாரத்திலும் நெருப்பைப் பரவ விட்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி இந்தியாவின் கண்ணாடி மாளிகை மேல் பாறாங்கல்லையே எறிந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

எல்லா கணினி நிறுவனங்களும் “காம்பஸ் இண்டர்வியூ” எனப்படும் கல்லூரிக்கே சென்று மாணவர்களை நேர்முகத் தேர்வு மூலம் பணிக்குச் சேர்த்துக் கொள்ளும் முறைக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்திருக்கின்றன. கடந்த ஆண்டு போட்ட பணி நியமன  ஒப்பந்தங்களையும் பெரும்பாலான நிறுவனங்கள் ரத்து செய்து விட்டன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கணினி பயின்றால் நிச்சய வேலை என்றிருந்த நிலை இன்று முற்றிலுமாக மாறி கணினித் துறையில் பயின்று வரும் மாணாக்கர்களின் வயிற்றில் புளியையும், கண்களிலில் கிலியையும் நிரப்பியிருக்கிறது.

போதாக்குறைக்கு சத்யம் நிறுவனத்தின் போலிக் கணக்கு உலகத்தையே உலுக்கியிருக்கிறது. ஒரு இந்திய நிறுவனம் இப்படி தகிடுதத்தம் செய்திருக்கிறது என்றால் இன்னும் எத்தனை நிறுவனங்கள் இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனவோ எனும் சந்தேகப் பார்வை சர்வதேச கண்களுக்குள் நுழைந்திருக்கிறது. நம்பிக்கையற்ற நிலையில் பங்குச் சந்தையும் ஊசலாடுகிறது.

“கணினித் துறையா எத்தனை இலட்சம் கடன் வேண்டும், உடனே தருகிறோம், வீட்டுக்கு வந்தே எல்லா தகவல்களையும் பெற்றுக் கொள்கிறோம்” என கூவிக் கூவி கடன் வழங்கிக் கொண்டிருந்த வங்கிகளெல்லாம் கப்சிப்பாகி அறைகளுக்குள் அடைபட்டு விட்டன.

கடந்த வாரம் ஒரு பிரபல கணினி நிறுவனத்தில் பணிபுரியும் எனது நண்பன் ஒருவன் சென்னையின் மிகப்பெரிய தனியார் வங்கி ஒன்றுக்கு தொலைபேசி கடன் விஷயம் கேட்டபோது “ஐ.டி யா சார்… சாரி… ஐ.டி க்கெல்லாம் இப்போ லோன் தரதில்லை” என்று ஒரு வரிப் பதிலுடன் மறுமுனை மூர்ச்சையாகி விட்டதாம்.

“கணினி மென்பொருள் துறையில் வேலை வாங்கித் தருகிறேன்” என தெருவுக்கு நான்கென முளைத்திருந்த கன்சல்டன்சிகள் பலவும் கடையை மூடிவிட்டன. ஒரு பிரபல கன்சல்ண்டன்சி நிறுவன மேலாளரிடம் உரையாடியபோது, “இந்த வருடமும் நிலமை சீரடையும் வாய்ப்பு இல்லை” என்று அதிச்சித் தகவல் ஒன்றை அளித்தார்.

இன்றைய தேதியில் பல்லாயிரம் கணினி ஊழியர்கள் வேலையிழந்து, வருமானம் நின்று போய், வாங்கிய வங்கிக் கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவதென்று தெரியாமல், கைபிசைந்து நிற்கின்றனர்.

ஒவ்வோர் அலுவலகத்திலிருந்தும் ஐம்பது பேர், நூறு பேர், ஐநூறு பேர் என தினம் தோறும் வெளியேற்றப் பட்டுக்கொண்டிருக்கும் கணினி ஊழியர்களின் கதை பணி செய்யும் மற்றவர்களுக்கும் திகில் கனவாய் உறுத்திக் கொண்டிருக்கிறது. எப்போது அழைப்பு வரும் பொழைப்பு போகும் எனும் புலம்பல்களால் நிரம்பி வழிகின்றன கணினி நிறுவன அறைகள்.

ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தல் இருப்பதாகத் தெரிகிறது, எனவே நிறுவனங்கள் பணிநீக்கத்தை வேறு பல முகமூடிகள் அணிந்து நிறைவேற்றி வருகின்றன.

உதாரணமாக, உன்னுடைய திறமை போதவில்லை என கொஞ்சம் பேரை வீட்டுக்கு அனுப்புவது. டில்லி அலுவலகத்தில் வேலை இருக்கிறது, காஷ்மீரில் வேலை இருக்கிறது போகிறாயா ? எனக் கேட்டு, அவர்கள் மறுத்தால், “நீ நிர்வாகத்தின் விண்ணப்பத்தை நிராகரித்தாய்” என்று சொல்லி சிலரை வீட்டுக்கு அனுப்புவது இப்படி தங்கள் சுருக்குப் பையைத் திறந்து ஓவ்வோர் ஐடியாவாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.

சில நிறுவனங்கள் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் நேரடியாகவே ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகின்றன. அதுவும், மல்டி நேஷனல் கம்பெனீஸ் என பந்தாவாக அழைக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் வேளையில் படு மட்டமாகி விடுகின்றன.

பத்துப் பதினைந்து பேருக்கு திடீரென ஒரு மின்னஞ்சல் வரும், ” ஒரு கலந்துரையாடல் இருக்கிறது. இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் இந்த அறைக்கு வரவும்” . அவ்வளவு தான் செய்தி. அந்த அறையில் போனால், “மன்னிக்கவும் உங்களை வேலையை விட்டு நிறுத்திவிட்டோம். நீங்கள் வீட்டுக்குப் போகலாம். இந்த படிவத்தில் மட்டும் கையெழுத்துப் போடுங்கள்” என ஒருவர் உணர்ச்சியற்ற குரலில் பேசிக்கொண்டே ஒரு படிவத்தை நீட்டுவார்.

“இதென்ன படிவம்” என அப்பாவியாய் கேட்கும் ஊழியரிடம், “இது உனது ரெஸிகினேஷன் கடிதம். இதில் நீ கையெழுத்திட்டால், நீயாக விரும்பி வேலையை விடுகிறாய் என்பது பொருள். இதில் நீ கையெழுத்திடாவிட்டால், உனது திறமை போதவில்லை என சொல்லி நாங்கள் உன்னை அனுப்பவேண்டியிருக்கும். அது உனது எதிர்காலத்தைப் பாதிக்கும்” என மென்மையாய் மிரட்டல் வரும். வேறு வழியில்லை கையெழுத்திட வேண்டியது தான்.

கையெழுத்திட்டுவிட்டு நிமிர்ந்தால்,” அப்படியே உங்கள் அடையாள அட்டை, அனுமதி அட்டை எல்லாம் கொடுத்து விடுங்கள். உங்கள் இருக்கைக்குச் செல்லவும் இனிமேல் அனுமதி இல்லை. வெளியே பணியாளர் ஒருவர் இருப்பார். அவர் உங்களை வாசல்வரை கொண்டு வந்து வழியனுப்பி வைப்பார்” என பழைய திரைப்படங்களில் முதலாளி வேலைக்காரரை  கழுத்தைப் பிடித்து வெளியே போடா என தள்ளும் காட்சி நிகழ்ந்தேறும்.

எப்போது என்ன நடக்குமோ எனும் திகிலில் பணிசெய்யும் அலுவலகங்கள் கடுமையான செலவுக் கட்டுப்பாட்டு விதிகளையும் விதித்திருக்கின்றன.

எதற்கெடுத்தாலும் விமானத்தில் அங்கும் இங்கும் பறப்பதை நிறுவனங்கள் அறவே நிறுத்திவிட்டன. உள்நாடு எனில் பெரும்பாலும் ரயில் பயணம் மட்டுமே. நாற்பது மணி நேரம் செல்லவேண்டிய வடநாடானாலும் நாள்கணக்காய் ரயிலில் பயணிக்க வேண்டியது தான்.

பயணங்கள் இப்படியெனில் அலுவலகப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள். பிரிண்டருக்குத் தேவையான காகிதங்கள் குறிப்பிட்ட அளவில் தான் தரப்படும். ஏன், கழிவறையில் கைதுடைக்கும் காகிதங்களைக்கூட  பெரும்பாலான நிறுவனங்கள் நிறுத்திவிட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பல கணினி நிறுவனங்களின் குளிரூட்டி கொஞ்ச நேரம் தான் இயங்குகின்றன. அதிலும் வார இறுதிகளில் குளிரூட்டியே இயக்கப்படாது. ஆளுக்கு ஒரு சிறு மேஜை மின் விசிறி தரப்படும். அதை வைத்துக் கொண்டு பணியைச் செய்ய வேண்டியது தான்.

அலுவலகம் வெளிச்சமாய் இருப்பதாகவும் கணினி நிறுவனங்கள் நினைக்கத் துவங்கிவிட்டன. தேவையற்ற மின் விளக்குகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு ஆங்காங்கே தேவைக்கு மட்டுமே இப்போது மின் விளக்குகள் எரிய வேண்டும் என கடுமையான அறிவுறுத்தல்கள்.

ஆள்குறைப்பு, அலுவலக பொருட்கள், பயணங்கள் என கடுமையான நடவடிக்கைகளில் சிக்கியிருக்கும் கணினி நிறுவனங்கள் எஞ்சியிருக்கும் பணியாளர்களையும் அதிக வேலை கொடுத்து பிழிகின்றன.

குறைந்த பட்சம் பத்து முதன் பன்னிரண்டு மணி நேர கடுமையான உழைப்பை ஒவ்வோர் பணியாளரும் செய்ய வேண்டிய சூழல்  உருவாகியிருக்கிறது. குறைவான லாபத்தில் நிறுவனங்கள் இயங்க வேண்டியிருப்பதால் குறைந்த நபர்கள் அதிக வேலை எனும் கொள்கை நிறுவனங்களின் இருக்கைகளில் வந்தமர்ந்திருக்கின்றன. வேலையைக் காப்பாற்றவேண்டுமே எனும் நினைப்பில் ஊழியர்களும் மறுப்புச் சொல்லாமல் எந்தப் பொதியையும் சுமக்கும் கழுதைகளாகி விட்டனர்.

ஊதியத்தில் எந்த உயர்வும் இல்லை என பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டன. கூடவே பல நிறுவனங்கள் இருக்கும் சம்பளத்தையும் பெருமளவுக்குக் குறைத்து விட்டன.

ஒரு மிகப்பெரிய கணினி நிறுவனம் ஊழியர்களுக்கு இனிமேல் மாதம் 22 நாட்களுக்கு மட்டுமே சம்பளம். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களுக்கு சம்பளம் இல்லை என ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து மறை முகமாக 30 விழுக்காடு சம்பளத்தைக் குறைத்திருக்கின்றன.

பல நிறுவனங்கள் பதினைந்து நாட்கள் சம்பளமற்ற கட்டாய விடுமுறை எனும் கொள்கையைக் கடைபிடித்து பணத்தைச் சேமிக்கின்றன.

சில நிறுவனங்கள் ஊழியர்களிடம் ஒரு படிவத்தைக் கொடுத்து, “உங்கள் சம்பளத்திலிருந்து எத்தனை விழுக்காடு சம்பளத்தைக் குறைக்க உங்களுக்குச் சம்மதம்” என்பதை இதில் இட்டு நிரப்புங்கள் என கட்டளையிட்டுள்ளன. எத்தனை விழுக்காடு குறைப்பது வேலைக்குப் பாதுகாப்பானது என்பதையே தெரியாத மனநிலையில் ஊழியர்கள் பெருமளவு ஊதியத்தைக் குறைத்து எழுதுகின்றனர்.

அமெரிக்காவுக்கு மெலிதான ஜலதோஷம் வந்தாலே தும்மும் நிலை தான் இந்திய கணினி நிறுவனங்களுக்கு. இப்போது அமெரிக்கப் பொருளாதாரம் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. எனவே தான் இந்திய கணினி நிறுவனங்கள் மூச்சுக் காற்று இன்றி முழி பிதுங்குகின்றன.

உள் நாட்டு வளங்களை மேம்படுத்தி அதன் மூலம் தன்னிறைவை நாடாமல் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை மட்டுமே நம்பி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினால் விளைவு இப்படித் தான் இருக்கும் என சிலர் விளம்பித் திரிய,

கணினி நிறுவனங்கள் இளைஞர்களை உல்லாக வாழ்க்கைக்குப் பழக்கி விட்டு திடீரென இறக்கைகளை வெட்டி எறிந்திருக்கிறது. வாழ்ந்து கெட்ட அரண்மனை வாசி போல செய்வதறியாது விழிக்கின்றனர் இளைஞர் பட்டாளம் என சிலர் அங்கலாய்க்க,

இனிமேல் எப்போது அமெரிக்கா பிழைக்கும், காலியாகக் கிடக்கும் நிறுவனங்கள் மீண்டும் உற்சாகமாய் பணியைத் தொடரும் என கணினி மாணவர்கள் திகிலுடன் பார்த்திருக்க,

கோடிக்கணக்கான வங்கிக் கடன்கள், தாறுமாறாக ஏறிப்போன வீட்டு மனை விலைகள், பளபளப்பாய் நிமிர்ந்த உணவகங்கள், கடைகள், அலுவலகங்கள், கன்சல்டன்சிகள், என வேர்விட்டு கிளைபரப்பியிருக்கும் இந்த சிக்கலின் முடிவு எப்போது எனத் தெரியாமல் இரவைப் போல பெரிதாக விழுந்து கிடக்கிறது இந்த கண்ணாடி மாளிகை.

நன்றி : தமிழ் ஓசை – களஞ்சியம்

வைட்டமின் விலக்கு !

9

வைட்டமின் மாத்திரைகளை எதற்கெடுத்தாலும் உண்பது என்பது மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதியான கலாச்சாரங்களில் ஒன்று. வைட்டமின் சி, இ  என எல்லா வைட்டமின்களும் இப்போது பல்வேறு நிறங்களில், பல்வேறு வடிவங்களில் மாத்திரைகளாகக் கிடைக்கின்றன.

மேலை நாடுகளில் வைட்டமின்களுக்கென தனிக் கடைகளே இருக்கின்றன. அங்கே நிரம்பி வழியும் கூட்டம் வைட்டமின்களை அள்ளிச் சென்று உண்கின்றனர். அவர்களுடைய நம்பிக்கையெல்லாம் இந்த மாத்திரைகளை உண்டால் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும், நோய்களெல்லாம் நீங்கிவிடும் என்பது தான்.

அவர்களை அதிர்ச்சியுறச் செய்திருக்கிறது சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி முடிவு ஒன்று. அதாவது இந்த வைட்டமின் மாத்திரைகள் மக்கள் நினைப்பது போல நோய்களைக் குறைப்பதில்லையாம்.
புற்று நொயைக் குறைக்கும் என நம்பப்படும் வைட்டமின் மாத்திரைகளை பத்தாண்டுகள் தொடர்ந்து உண்டால் கூட எந்த பயனும் இல்லையாம்.

காய்கறிகள் முதலான உணவுப் பொருட்களில் கிடைக்கும் வைட்டமின்களை மாத்திரை வடிவில் சுருக்கி வைக்கும் போது அதன் முழுமையான பயன் கிடைப்பதில்லை எனவும், நேரடியாக வைட்டமின்கள் அடங்கிய உணவுப் பொருட்களை உண்பது மட்டுமே பயனளிக்கும் எனவும் இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

7627 பேரை ஈடுபதித்தி நிகழ்த்தப்பட்ட விரிவான இந்த ஆராய்ச்சி, வைட்டமின் மாத்திரைகள் வாங்குவதை உடனடியாக நிறுத்திவிட்டு அது எந்த காய்கறியில் கிடைக்கிறது என்பதைக் கண்டு அதை உண்ணுங்கள் என அறிவுறுத்துகிறது.

உதாரணமாக நெல்லிக்காயில் வைட்டமின் சி கிடைக்குமெனில் நெல்லிக்காய் சாப்பிடுங்கள், கடைக்குச் சென்று வைட்டமின் சி மாத்திரையைச் சாப்பிட்டு பணத்தையும், உடலையும், நேரத்தையும் வீணாக்காதீர்கள் என்கின்றனர்.

நமது சித்த மருத்துவ முறைகள் காலம் காலமாக சொல்லி வருபவை தான் இவையெல்லாம் எனினும், மேலை நாட்டு ஆராய்ச்சிகள் சொன்னால் மட்டுமே உண்மை என நம்பும் மக்களுக்கு இத்தகைய ஆராய்ச்சிகளேனும் மனமாற்றம் தரட்டும் !

சார்… கொஞ்சம் வெளியே வரீங்களா ?

 girlspecs

இன்றைக்கு சிறுவர்கள் பலர் தங்கள் பதின் வயதுகளிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு அலைவதை பார்க்க முடிகிறதல்லவா ? சற்றே பின்னோக்கித் திரும்பிப் பாருங்கள். இருபது வருடங்களுக்கு முன் கண்ணாடி போட்ட மனிதர்களைச் சந்திப்பதே அபூர்வம் அல்லவா ?

அதெப்படி இன்றைக்கு மட்டும் மிக மிக இளம் வயதிலேயே கண்ணாடி தேவைப்படுகிறது ? இப்படி ஒரு சிந்தனையின் விளைவாக நிகழ்ந்தேறியது ஆஸ்திரேலியாவில் ஒரு ஆராய்ச்சி.

4000 பேரை உள்ளடக்கி, அவர்களுடைய பார்வைக் குறைபாட்டுக்கான காரணங்களை மிக விரிவாக ஆராய்ந்ததில் கிடைத்த பதில் வியப்பூட்டுகிறது.

அதாவது, குழந்தைகள் வீட்டுக்கு வெளியே போதுமான நேரத்தைச் செலவிடாததே இந்த பார்வைக் குறைபாடின் காரணம் என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. மருத்துவ மொழியில் சொல்லவேண்டுமெனில், எட்டு வயதிற்கும் பன்னிரண்டு வயதுக்கும் இடைப்பட்ட பருவத்தில் வளர்ச்சியடையும் மயோபியா சரியான அளவில் இல்லாததே இந்த குறைபாட்டுக்குக் காரணம்.

குழந்தைகள் சிறுவயதில் வெளியே ஓடி விளையாடுவதன் அவசியத்தை இந்த ஆராய்ச்சி அதிர்ச்சியுடன் அறிவிக்கிறது. கண்ணின் கருவிழி சரியான அளவில் இருப்பதற்கும், ஒழுங்கான வடிவில் இருப்பதற்கும் இயற்கை வெளிச்சம் மிக மிக அதிகம் என்பது அந்த ஆராய்ச்சி அடித்துச் சொல்லும் செய்தியாகும்.

சிங்கப்பூரில் 30 விழுக்காடு குழந்தைகளுக்கும் இந்த நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு திடுக் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அங்கே குழந்தைகள் வெளியே அலைவது மிகவும் குறைவு என்பதால் வருவதாம் இந்தப் பிரச்சனை.

வீடுகளில் தொலைக்காட்சியிலும், கணினி விளையாட்டுகளிலும் முழு நேரத்தையும் செலவிட்டு இறுக்கிக் கட்டப்பட்ட அடுக்கு மாடிகளில் குடியிருப்போர் அதிக கவனத்துடன் குறித்துக் கொள்ள வேண்டிய செய்தி இது.

ஏற்கனவே வெயிலில் கிடைக்கும் வைட்டமின் டி உடலுக்கு மிகவும் இன்றியமையானது எனும் ஆராய்ச்சிகள் வெளிவந்திருக்கின்றன. இப்போது, வெளியே சரியான நேரம் செலவிடவில்லையேல் பார்வைக்கே பிரச்சினை என்னும் புது ஆராய்ச்சியும் அத்துடன் சேர்ந்து கொண்டிருக்கிறது.

கிராமங்களில் சுதந்திரமாய் ஓடி விளையாடும் சிறுவர்கள் நல்ல ஆரோக்கியமான பார்வையுடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாய் இருக்கக் கூடும்.

குழந்தைகளின் வாழ்க்கை அறைகளுக்கும் ஒரு நாள்காட்டியைப் போல தொங்குவதற்கானதல்ல, ஒரு பட்டத்தைப் போல வானில் பறந்து திரிவதற்கானது. இயற்கையுடன் இணைந்து வாழ்தலே வலிமையானது என்பதை இந்த ஆராய்ச்சியும் வலியுறுத்துகிறது.

புகை : குடும்பத்துக்குப் பகை

smoke

புகைத்தலைப் பற்றி நாளொன்றுக்கு ஒரு ஆராய்ச்சி ஏதேனும் ஓரிடத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றேனும் “புகைத்தல் நல்லது” என குறிப்பிடுமா என ஆவலுடன் நோக்கும் புகை பிரியர்கள் ஏமாற்றம் மட்டுமே அடைகின்றனர்.

தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது.

அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.

ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்குகிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த்திய மருத்துவர் கிம்பர்லி யோல்டன்.

நிகோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.

புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கடந்த ஆண்டு திடுக்கிடும் ஆய்வு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புகைத்தல் என்பது புகைப்பவர்களை மட்டுமன்றி வளரும் இளம் தலைமுறையையே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது எனும் அதிர்ச்சிப் பாடத்தை இந்த புதிய ஆய்வும் உரக்கச் சொல்கிறது.

குறிப்பாக வீடுகளில் புகைக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நலனை கேள்விக்குறியாக்குகின்றனர் என்றால் அது மிகையல்ல. புகைக்கும் பழக்கம் அறவே இல்லாதவர்கள் கூட பிறர் ஊதித் தள்ளும் புகையினால் பாதிப்புக்கு உள்ளாகும் அவலம் களையப்படவேண்டியதே.

புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது என்பதை ஆய்வுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தன்மீதோ, குடும்பத்தின் மீதோ, சமூகத்தின் மீதோ அக்கறை உடையவர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து மீண்டு வருவார்களாக !

களையை, முளையிலேயே….

3

அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தினர் ஒரு வியக்க வைக்கும் சாதனைக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். இதன் மூலம் கான்சர் நோய் முளை விடும்போதே கண்டறிந்து விலக்கும் ஒரு மாபெரும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

புற்று நோயின் மிகப்பெரிய சோகமே அதை துவக்கத்திலேயே கண்டறிய முடியாமல் போவது தான். அதிலும் குறிப்பாக கல்லீரல், நுரையீரல், கருப்பை போன்ற இடங்களில் வரும் புற்று நோய் காலம் கடந்தே பெரும்பாலும் தெரியவருகிறது. அப்படித் தாமதமாகத் தெரிவதால் குணப்படுத்தும் வாய்ப்பும் குறைந்து போய் விடுகிறது.

குருதியைச் சோதனை செய்வதன் மூலம் புற்று நோயை அதன் ஆரம்ப அறிகுறி தெரியும் போதே கண்டறியும் வழியைத் தான் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் புற்று நோய் எனும் உயிர்க்கொல்லி நோயைக் குணப்படுத்தும் வாய்ப்பு பெருமளவு அதிகரித்திருக்கிறது. மேக்னட்டிக் நானோ டெக்னாலஜி என அறிவியல் பெயரிட்டு அழைக்கு நவீன முறை இந்த புதிய சோதனையின் முதுகெலும்பாக இருக்கிறது.

இந்த சோதனை முறை புற்று நோயின் தாக்கம் உடலில் ஆரம்பிக்கும் போதே கண்டுபிடித்துச் சொல்லி விடுகிறது. கூடவே வந்திருக்கும் புற்று நோய் எத்தகையது, எந்த தன்மையுடையதும், எந்தெந்த இடங்களைப் பாதிக்கலாம் என்பனவற்றையும் துல்லியமாய்ச் சொல்லி விடுகிறது.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஷான் வாங் இது குறித்துக் கூறுகையில் “இந்த ஆராய்ச்சி மருத்துவத் துறையில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும், புற்று நோயாளிகளின் அதிர்ச்சி மரணங்களுக்கு ஒரு தடைக்கல்லாக வைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்து உயிரைப் பறிக்கும் புற்று நோய்க்கு எதிராக எழுந்திருக்கும் இந்த ஆய்வு மருத்துவ உலகிற்கு புத்துணர்ச்சியளிக்கும் என்பதில் ஐயமில்லை.

சுடுநீர் அருந்து… அதுவே மருந்து.

drinking-water

இதைச் சொன்னால் இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா என நீங்கள் சிரிக்கக் கூடும் ஆனால் இந்த ஆராய்ச்சியை மிகப் பெரிய ஒன்றாகக் கொண்டாடுகின்றனர் யூகே வின் கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

ஜலதோஷம் மற்றும் அது சார்ந்த உபாதைள் வந்தால் சூடான பானத்தை அருந்துவது நோயின் தன்மையைக் குறைத்து விடுதலை அளிக்கும் என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு.

இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு. பெரும்பாலான மக்களை எரிச்சலுக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கும் பொதுவான நோய் ஒன்றுக்கு இத்தகைய எளிய மருத்துவ வழி இருப்பதும், அது நிரூபிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ உலகின் மகத்துவம் என வியந்து பேசுகிறார் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான ரான் எக்லர்ஸ்.

குளிர் காலங்களில் சூடான பானங்களை அருந்தி வருவதனால் இத்தகை நோய்களின் தாக்கங்களும், அது தரும் விளைவுகளும் மிகவும் குறையும். சூடான பானங்களை இத்தகைய பருவ காலங்களில் அருந்துவதை மக்கள் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்கிறார் அவர்.

மூக்கு ஒழுகுதல், எரிச்சல், தும்மல், தலைக்கனம், சோர்வு, தொண்டை வலி என எதுவானாலும் சூடான தண்ணீரை அடிக்கடி குடியுங்கள் என அவர் அறிவுறுத்துகிறார்.

ஜலதோஷம், தொண்டை வலி என ஏதேனும் வந்தால் சுடச் சுட கருப்பட்டியுடன் ஒரு சுக்கு காப்பி போட்டுத் தரும் நமது பாட்டிகளின் மகத்துவத்தை முழுமையாய் அறிந்து கொள்ள மேலை நாட்டினருக்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ தெரியவில்லை.

வலிக்கும்… ஆனா வலிக்காது !

 child

குழந்தைகள் விளையாடும் போது கவனித்திருக்கிறீர்களா ? கீழே விழுந்து அடிபட்டாலும் அதை வெகு இயல்பாய் எடுத்துக் கொண்டு மீண்டும் விளையாட்டைத் தொடரும். ஆனால் அடிபட்ட இடத்தில் கொஞ்சம் இரத்தம் கொட்டினால் உடனே அழ ஆரம்பித்துவிடும்.

சில வேளைகளில் தலை வலிக்குமோ என நினைத்தால் தலை வலிக்க ஆரம்பிப்பதை நம்மில் சிலரும் உணர்ந்திருக்கக் கூடும். அப்படியானால் வலிக்கும், மனதுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது அல்லவா ?

இதைத் தான் விரிவான ஆராய்ச்சியாக நடத்தியது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம். இதன் முடிவு வியப்பளிக்கிறது.

அதாவது அதிகமாய் வலிப்பதும், குறைவாய் வலிப்பதும் எல்லாமே நமது மனது நினைப்பதைப் பொறுத்து தான் அமைகிறது என்பதே அது.

இந்த ஆராய்ச்சிக்காக கைகளில் அடிபட்டுக் காயமடந்தவர்கள் பலர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுடைய கைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்ணாடி மூலமாக அவர்களுக்குக் காட்டினர். இந்தக் கண்ணாடிகளில் சில கையை வீக்கமடைந்திருப்பது போலக் காட்டின, சில வீக்கமான கையை சாதாரண கையாய் காட்டின.

இந்த காட்சிப் பிழைகள் வலியில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்துடன் பதிவு செய்து கொண்டனர்.

கை வீக்கம் அதிகமாய் இருப்பதைப் பார்த்தவர்களின் வலி நரம்புகள் தூண்டப்பட்டு அதிக வலி அடைந்தனர். கை வீக்கம் குறைவாய் உணர்ந்தவர்களின் வலி பெருமளவு குறைந்து விட்டது.

இந்த ஆராய்ச்சியின் மூலம் மனதுக்கும் வலிக்கும் இடையேயான நுட்பமான இணைப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனதில் உறுதி வேண்டும் என சும்மாவா சொன்னார்கள் ?

ஆதலினால் தூங்குங்கள்…

sleep2 

சிலர் படுத்த உடனே சட்டென தூங்கி விடுவார்கள். சிலருக்கு தூக்கம் என்பது காவேரி ஆறு போல, எப்படிக் கூப்பிட்டாலும் வந்து சேராது.

இப்படி தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களை பல்வேறு நோய்கள் வந்து வாட்டி வதைக்கும் என அதிர்ச்சியூட்டுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதுவும் சின்ன சின்ன நோய்கள் அல்ல ! பார்கின்ஸன், அல்சீமர் என மருத்துவம் திகிலுடன் அணுகும் பெரிய பெரிய நோய்கள்.

இரவில் அமைதியான தூக்கம் இல்லாமல் படுக்கையை உதைப்பது, அழுவது, இடிப்பது, உடலை முறுக்கிப் பிடிப்பது என பல்வேறு வெளிப்பாடுகளால் இந்த சரியான தூக்கமின்மை அறியப்படுகிறது.

இத்தகைய நிலையில் இருப்பவர்கள் போகப் போக நரம்பு வலுவிழக்கும் பல்வேறு நோய்களுக்குள் நுழைந்துவிடுகின்றனர். அதுவே அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய சோகமாய் மாறி விடுகிறது.

அதுவும் ஐந்து வருடங்கள் இத்தகைய சிக்கல் இருந்தால் நோய் பாதிக்கப்படும் அபாயம் 18 விழுக்காடு எனவும், அதுவே பன்னிரண்டு ஆண்டுகள் எனில் 52 விழுக்காடு எனவும் இந்த ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 93 பேரை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு தான் இந்த முடிவைத் தந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ரொனால்ட் போஸ்ட்மா இதைக் குறித்து விளக்குகையில், தூக்கம் மனிதனுடைய வாழ்வின் மிக முக்கியமான செயல் எனவும், இயல்பான நிம்மதியான தூக்கம் இல்லாதவர்கள் மன அளவிலும், உடல் அளவிலும் மாபெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவும் கூறுகிறார்.

நிம்மதியாய் தூங்கினாலே போதும் பல நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பதே ஒரு ஆனந்தமான தூக்கத்துக்கான அழைப்பிதழ் தானே !

கீற்று vs புகழேந்தி : மறைக்கப்பட்ட உண்மைகள்

aao1

கவிஞர் புகழேந்தி குறித்து கீற்று  வலைத்தளத்தில் வெளியான கட்டுரையைப் படிக்க நேர்ந்தது ! கட்டுரை வியப்பளித்தது, காரணம் ஓவியர் புகழேந்தியுடன் பல ஆண்டுகால ஆரோக்கியமான நட்பில் இருப்பவன் நான்.

சில ஆண்டுகளுக்கு முன் உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை இயக்குனர் இராம்மோகன் அவர்களுடன் மலர்ந்த நட்பு, ஓவியர் புகழேந்தி குறித்த அறிமுகத்தையும் ஆரம்பித்து வைத்தது. அவருடைய மொழி, கலை, ஈழம் சார்ந்த சிந்தனைகளின் ஆழத்தையும், அவருடைய படைப்புகளில் ஈழம் ஏற்படுத்திய பாதிப்புகளையும் உண்மை ஆர்வலர்கள் உணர்வார்கள்.

எனது நூல் ஒன்றுக்கு (அன்னை) ஒரு ஓவியம் தரமுடியுமா என தயங்கித் தயங்கிக் கேட்டபோது, என்ன இப்படித் தயங்குகிறீர்கள் என உரிமையுடன் கேட்டு எந்த ஓவியம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என ஓவியக் கடலுக்குள் அமிழ்த்தியவர் அவர்.

அவருடைய ஈழம் சார்ந்த ஈடுபாட்டை உண்மையிலேயே அறிந்து கொள்ளவேண்டுமெனில் கவிஞர் காசி ஆனந்தனிடம் உரையாட நேர்ந்தால் கேளுங்கள். அதை விட மேலான ஒரு கருத்தை நீங்கள் வேறு யாரிடமும் பெறத் தேவையிருக்காது.

ஈழம் குறித்த உரையாடல்களில் கண்ணீர் மல்க கசிந்துருகும் கவிஞரின் மனமும், ஓவியரின் மனமும் நேரில் பழகுபவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய சமாச்சாரங்கள்.

ஓவியம் வரைய போராட்டக் குழுவினர் ஓவியரை அணுகியபோது நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது என தயங்கியிருக்கிறார். ஏகப்பட்ட அலுவல்களுக்கு இடையே முழிபிதுங்கிக் கொண்டிருந்தாலும் ஈழம் சார்ந்த பணி என்பதால் ஒத்துக் கொண்டிருக்கிறார். அப்போதே, என்னிடம் பணம் இல்லை, ஓவியம் வரையத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக 13,500 ரூபாய் தேவைப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

வந்தவர்கள் 10,000 ரூபாயைக் கையளித்ததும், பின் 3,500 ரூபாய் ஓவியர் தனது கையிலிருந்து இந்தப் போராட்டத்தில் தன்னுடைய பங்காக இருக்கட்டும் என கூறியதும் சம்பந்தப் பட்டவர்கள் அறிவார்கள்.

ஒரு நபர் கூடவே இருந்து ஓவியர் படம் வரைவதைப் பார்த்திருக்கிறார், எழுதியவர்களைப் போலன்றி, நள்ளிரவு வரை இமைகளை இழுத்துப் பிடித்து ஓவியம் வரைந்த ஓவியரின் மனதில் ஈழம் இருந்தது கூடவே ஈரமும்.

ஓவியம் என்னிடம் இருக்கட்டும் நான் பத்திரமாய் வைத்துக் கொள்கிறேன், உங்களுக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் நீங்கள் எடுத்துச் சென்று பயன்படுத்துங்கள். கண்காட்சிகள் நடத்தும் போது நானும் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பது தான் ஓவியர் சொன்ன செய்தி.

புகழேந்தி புகழ் பாடுகிறார் என்பதெல்லாம் ஒரு குற்றச் சாட்டாய் வைத்தால், சங்ககாலம் முதல் டிரஸ்ட் புரம் வரை அலச வேண்டியிருக்கும். கலைஞனிடம் திறமை இருக்கும், கர்வமும் இருக்கும் என்பது கவிப்பேரரசுவின் அடிக்கோடிட்ட நம்பிக்கை. அதற்குச் சான்று எழுத்தாளர்கள்.

கவிப்பேரரசுக்கு நாகேஸ்வரராவ் பார்க்கில் அமர்ந்தால் கவிதை வருமெனில், புகழேந்திக்கு அவருடைய ஸ்டூடியோவில் அமர்ந்தால் ஓவியம் வரும். இதெல்லாம் கலைஞனின் தனிப்பட்ட விருப்பங்கள். கூட்டில் அடைத்து முட்டை போடு எனச் சொல்ல அவர்கள் ஒன்றும் கோழிகள் அல்ல. கட்டிப் போட்டுப் பால்கறப்பதெல்லாம் கலையில் சாத்தியமில்லை.

இதற்கெல்லாம் ஆழிப்பேரலைத் திருடர்களுடன் புகழேந்தியை ஒப்பிட்டுப் பேசியிருப்பதற்குப் பின்னணி வேறு இருக்கிறது.

பத்திரிகைத் துறையின் பின்னணியில் இயங்கும் அரசியல் நம்மில் பலருக்கும் தெரிந்ததே. அதைவிட பல மடங்கு அதிகமான அரசியல் வீச்சம் ஓவியத் துறையில் இருக்கிறது என்பதை, ஓவியங்கள் குறித்த தொடர் கட்டுரை ஒன்றை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் வாயிலிருந்து விரிவாகக் கேட்கும் வாய்ப்பு ஒருமுறை வாய்த்தது.

இயக்குனர் மகேந்திரன் அவர்கள் ஆத்மார்த்த நேசத்துடன் புகழேந்தியைப் பற்றி இயக்கிய குறும்படம், புகழேந்தியின் நூல்கள், அவருடைய பேச்சுகள், உலக அளவிலான அங்கீகாரம் இவையெல்லாம் சக ஓவியர்களிடையே புகைச்சலையும், எரிச்சலையும் ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை.

இந்தக் கட்டுரையின் மூலமாக தன்னுடைய எரிச்சலை, அல்லது ஏதோ ஒரு தூரிகையின் எரிச்சலை தணித்துக் கொண்டிருக்கிறார் கட்டுரையாளர்.

ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்,

கீற்று கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் பல பிரசுரிக்கப்படவில்லை, நான் அனுப்பிய பின்னூட்டம் ஒன்று உட்பட ! காரணம் அவை நியாயத்தைப் பேசின.

சரி… இந்த நிகழ்வில் தொடர்புடையவர்கள் மூன்று பேர் ! அவர்கள் என்ன சொல்கிறார்கள் இந்த நிகழ்வைக் குறித்தும், கட்டுரை குறித்தும் …

இதோ…

 

ஓவியர் புகழேந்தி குறித்த கட்டுரையை மறுத்து சம்பந்தப்பட்டவர்களின் பதில்

ஐ.டி ஊழியர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓவிய வெளியீட்டிற்காக ஓவியர் புகழேந்தியை தொடர்பு கொண்டவர்கள் செந்தில், ஸ்ரீராம், பாலமுருகன் மட்டுமே. இந்த மூவரும் சேர்ந்து உண்மையை சுருக்கமாக எழுதுகிறோம்.

ஒவியர் புகழேந்தியை 9 ம் தேதியில் சந்தித்து நாங்கள் நடத்தவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில், ஓவியம் கொண்டு நிகழ்ச்சி ஒன்று நடத்த
வேண்டும் என்று கேட்டோம். என்ன விதமாக எல்லாம் செய்யலாம் என்று ஓவியரிடம் பேசினோம்.

அ. அவர் மட்டும் வந்து உண்ணாவிரத இடத்திலே ஓவியம் வரைதல்
ஆ. 3 அல்லது 4 ஓவியர்கள் இணைந்து உண்ணாவிரத இடத்திலே ஓவியம் வரைதல்
இ. ஸ்டியோவில் வரைந்து ஓவிய வெளியீடு செய்தல்.
ஈ. ஓவிய கண்காட்சியாக பழைய ஓவியங்களை வைத்தல்.

உண்ணாவிரத தளம், இருக்கும் கால அவகாசம், பொருளாதார சக்தி இவற்றை கருத்தில் கொண்டு, “ஸ்டுடியோவில் ஓவியம் வரைந்து 14 அன்று ஓவியம்
வெளியிடலாம்” என்று நாங்கள் தான் முடிவு செய்தோம்.ஓவியம் வரைவதற்குதேவையான பொருட்களை வாங்குவதற்கு 10000 ரூ தந்தோம்.

ஓவியத்தை 14 ம் தேதி அன்று வெளியிட்டு கையெழுத்து பிரசாரத்திற்கு உபயோகப்படுத்துவோம் என்றும், ஓவியத்தின் மென் பிரதியை அடுத்து செய்யவிருக்கும் “மின்னஞ்சல் பிரச்சாரத்திற்கு” பயன்படுத்துவோம் என்றும் ஒப்புகொண்டோம்.

10 x 5 அளவிலான ஒவியம் ஒன்று வரைந்து, காயாத நிலையில் 14 ம் தேதி அன்று காலை எங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஒரு மென் பிரதியை ஓவியர் எங்களுக்கு வழங்கினார்.

மாலையில் ஓவியத்தை ஒவியர் எடுத்து சென்றார். இது குறித்து சுருக்கமாக சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறோம்.

1.      ஒவியம் வரையப்படுவதன் நோக்கமே, அது மொழியைத் தாண்டி, ஈழப் போராட்டத்தை உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் பேச வேண்டும் என்பதே ஆகும்.

2.      ஓவியம் வரைய தேவையான பொருட்களை தந்ததாலேயே அதை உரிமைக் கொண்டாடக் கூடாது. கலையை விலை பேசும் உரிமை நமக்கு இல்லை.

3.      மேலே கூறப்பட்ட இந்த நிகழ்வைக் கொண்டு ஓவியர் புகழேந்தி குறித்த இந்த குற்றச்சாட்டுகள் நியாயமற்றது. ஓவிய வெளியீட்டில் முழுக்க முழுக்க சம்பந்தப்பட்டவர்கள் என்ற முறையில் இந்த கட்டுரையை நாங்கள் முழுவதுமாக நிராகரிக்கிறோம். ஓவிய வெளியீட்டின் அத்தனை விசயங்களும் எங்கள் மூவரின் முழு சம்மதத்துடன் நடந்தவை.

4.      எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தமிழகத்தில் ஆதரவு பெருகி வரும் சூழலில் , தமிழ அரசும், இந்திய அரசும் நம்மை வஞ்சித்து வரும் நிலையில், நாம் கையாலாகாமல் வாய் மூடி இருக்கும் நிலையில் இது போன்ற நியாயமற்ற கட்டுரைகள் மொத்த சூழலையும் திசை திருப்புவதும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு பலியாவதும் ஆகும்.

ஓவியர் புகழேந்திக்கு வேண்டுகோள்:

இந்த நிகழ்வுக்கு எங்களை மன்னிக்கவும். ஈழ விடுதலை போராட்டத்தில் தங்கள் பணி தொடர வேண்டும்.

வாசகர்களுக்கு வேண்டுகோள்:
மேலே குறிப்பிட்ட 3 வது கருத்தை மனதில் கொண்டு இது குறித்து வலைதளத்தில் விவாதிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
தொடர்புக்கு:

ஸ்ரீராம்: 9940084921
செந்தில்: 9941931499
பாலா: 99404 95549

ஆசிரியருக்கு:
வலைதளத்தில் இருக்கும் கருத்து சுதந்திரம் ஆரோக்கியமாக இல்லை என்பது இக்கட்டுரை மூலம் உணர
முடிகிறது. விமர்சனக் கட்டுரைகள் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும், நாகரிகமானதாகவும்  இருக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வு.

உண்மையுடன்,
செந்தில், ஸ்ரீராம்,
பாலமுருகன்

ஒன்று தான் சட்டென தோன்றியது…
கீற்று கூட ஒரே குட்டையில் ஊறிய மட்டை தானா ? நான் வேறுவிதமாக அல்லவா நினைத்தேன் !!!!

Follow

Get every new post delivered to your Inbox.

Join 127 other followers