Empty Nest : கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க !

தனிமைக் கூடு… படுத்தும் பாடு…

“இன்னுமா பல்லு தேய்ச்சு முடிக்கல ?…..”

“பால் குடிச்சாச்சா…. ?”

“சீக்கிரம் வா குளிப்பாட்டி உடறேன்..”

“நேரமாச்சும்மா…  சாப்பிடு… ஸ்கூல் வேன் இப்ப வந்துடும்…”

“யூனிபார்ஃம் போடு…. ஷூ போடு..ம்ம்….”

பள்ளிக்கூடம் போகும் சின்னக் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இத்தகைய உரையாடல்களளக் கேட்காமல் இருக்க முடியாது ! அம்மா காலைல எழுந்து குழந்தையை எழுப்பி காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருப்பார்.  குழந்தையோ அம்மாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு போகோ சேனலையோ, டிஸ்கவரி சேனலையோ நைசாக பார்த்துக் கொண்டிருக்கும். அல்லது மம்மி சொன்ன பேச்சைக் கேட்காமல் அங்கும் இங்கும் ஓடியாடி ஒரு குட்டி மானைப் போலத் துள்ளிக் குதித்துத் திரியும்.

ஒரு வழியாக குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி, ஸ்கூல் வேனில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி விட்டு அப்பாடா என அம்மா ஹாயாக அமரும்போது தான் அந்த வெறுமை பளாரென கன்னத்தில் அறையும்.

ஐந்து நிமிடத்துக்கு முன்பு வரை ஏக களேபரமாய் இருந்த வீடு இப்போது மிக மிக வெறுமையாய் பயமுறுத்தும். வெறும் கல்லும் மண்ணும் கொண்டு கட்டிய ஒரு கூடாய்க் தோன்ற ஆரம்பிக்கும். அடடா…. எப்போ ஸ்கூல் முடியும், குழந்தை எப்போ வீட்டுக்கு வரும் என ஏங்க ஆரம்பித்து விடும் அந்த பாசமுள்ள மனசு.

“வீட்டை எத்தனை வாட்டி தான் கிளீன் பன்றது ? கழுதைங்க.. ஒரு பொருளையாவது ஒழுங்கா ஒரு இடத்துல வெச்சிருக்குதா?” அம்மாவின் திட்டு தினமும் குழந்தைகளை துரத்தோ துரத்தென்று துரத்தும். 

ஆண்டு இறுதி விடுமுறை வரும். குழந்தைகள் பாட்டி வீட்டிலோ, தூரத்துச் சொந்தக் காரர்கள் வீட்டிற்கோ போகும். இப்போது வீடு ரொம்ப சுத்தமாய் இருக்கும். வைத்த பொருளெல்லாம் அதே இடத்தில் அப்படியே இருக்கும். அம்மாவுக்கு அந்த சுத்தம் மிகப்பெரிய பாரமாகத் தோன்றும். கலையாமல் இருக்கும் பொருட்களைப் பார்த்தால் கோபம் கோபமாக வரும். அந்த ஏக்கம் கலந்த வெறுமை அவளை நிலை குலைய வைக்கும். எப்படா குழந்தைங்க திரும்பி வீட்டுக்கு வருமோ.. என மனசு துடிக்கும்.

பிள்ளை வளர்ந்து கல்லூரிக்குப் போகும் காலத்தில் இந்த ஏக்கம் அடுத்த நிலையை எட்டும். அதுவும் தூரமான இடத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கச் சென்று விட்டாலோ, வேலைக்காக வெளிநாடு போனாலோ… அவ்வளவு தான் மனசு ரொம்பவே ஏங்க ஆரம்பிக்கும். 

அதன் பிறகு வரும் திருமணம். ! தனிக்குடித்தனம், அல்லது புகுந்த வீடு இப்படி ஏதோ ஒரு பிரிவு பெற்றோருக்குக் காத்திருக்கும்.  அந்த நீளமான வெறுமை அசுரத்தனமாக அவர்களைத் தாக்கும். எந்த அளவுக்கு பெற்றோர் குழந்தையை நேசிக்கிறார்களோ அந்த அளவுக்கு வெறுமை அவர்களை ஆட்டிப் படைக்கும். ஒரு வகையில் நியூட்டனின் மூன்றாவது விதி என வைத்துக் கொள்ளுங்கள்.

நேற்று வரை எல்லாவற்றுக்கும் அப்பா, அம்மா என்று நின்ற பிள்ளைகள் இன்று அப்பா அம்மாவை சார்ந்து வாழத் தேவையில்லாமல் கிளம்பி விடும்போது பெற்றோரிடம் உருவாகும் இந்த வெறுமை நிலையை எம்ட்டி நெஸ்ட் சிண்ட்ரோம் என்கிறார்கள்.  வெறுமைக் கூடு பாதிப்பு என்று தமிழில் சொல்லாமா ? தவறெனில் தமிழறிஞர்கள் மன்னிப்பார்களாக !

இந்த வெறுமையின் உச்சகட்ட நிகழ்வு என்பது பிள்ளைகள் பெற்றோரைக் கொண்டு காப்பகங்களிலோ, ஏதாவது அனாதை விடுதிகளிலோ சேர்க்கும் போது நேர்ந்து விடுகிறது. அது மிக மிக அரிதான நிகழ்வு என்பதால் அதைக் கொஞ்சம் ஒதுக்கியே வைக்கலாம்.

வயது ஆக ஆக, இந்த வெறுமையின் ஆழமும் அதிகரிக்கும். முதுமை வயது தனது பிள்ளைகளின் அன்பான கரத்தைப் பற்றிக் கொண்டு வீட்டில் அமைதியாய் இருக்க பிரியப்படும். துரதிர்ஷ்ட வசமாக பலருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களை தனியே தவிக்க விடும் பிள்ளைகளையும் வாழ்க்கை ஒரு நாள் அந்த வட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தும் என்பது தான் வாழ்க்கையின் பரமபத விளையாட்டு !

இத்தகைய வெறுமை பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் அதே வீரியத்துடன் தாக்குகிறது. சொல்லப் போனால் ஆண்களை இது கொஞ்சம் அதிகமாகவே தாக்குகிறது. காரணம், குழந்தையுடன் தேவையான அளவு நேரம் செலவிடவில்லையே எனும் ஏக்கம் தந்தைக்கு மிக அதிகம் இருக்கும் என்கிறார் அமெரிக்காவின் வீட்டென் கல்லூரியில் உளவியல் பேராசிரியராக இருக்கும் ஹெலன் எம். டிவிரிஸ் குழந்தைகள் விலகும்போது நிகழும் வெறுமை இயல்பானது தான். அதைக் கண்டு அதிகம் பயப்படத் தேவையில்லை. எப்போது பயப்படவேண்டும் ?

வாரம் பத்து நாள் அழுதுகொண்டு இருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்த அழுகை வாரக்கணக்கில் நீண்டு கொண்டே இருந்தால் அவர்களைக் கவனிக்க வேண்டும். அது இந்தப் பாதிப்பின் அறிகுறி.

ரொம்ப மன அழுத்தமாக உணர்கிறார்களெனில் கவனிக்க வேண்டும். அது மிகப்பெரிய ஆபத்தான அறிகுறி. யாருடனும் பேசாமல், சமூகத்தை விட்டே கொஞ்சம் விலகி  எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களெனில் நிச்சயம் கவனிப்பது அவசியம்.

“இனிமே என்னத்த…” எனும் சிந்தனைக்கு வந்து அதையே பேசிக் கொண்டிருப்பவர்களையும் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்காக வாழ்ந்துட்டோம். அவங்க போயிட்டாங்க, இனிமே நாம என்னத்த பண்ண என தம்பதியராய் சேர்ந்து புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த சிக்கல் இருக்கக் கூடும் !

இந்தச் சிக்கலைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது, இந்தச் சிக்கல் எல்லோருக்கும் வந்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. சில பெற்றோர் குழந்தைகளை தனியே நிற்கப் பழக்குவார்கள். அவர்கள் பழகிவிட்டால் சந்தோசப்படுவார்கள்.

“அப்பாடா பையனை கரையேத்திட்டேன்”, “அப்பாடா… பொண்ணை வழி அனுப்பி வெச்சுட்டேன்.. இனிமே நிம்மதி” என தங்கள் விருப்பமான வேலைகளைப் பார்க்க உற்சாகமாய்க் கிளம்பி விடும் பெற்றோரும் உண்டு. அவர்கள் ஒரு வகையில் பாக்கியவான்கள். அவர்கள் கீழே உள்ளதைப் படிக்காமல் தாவி விடலாம். 

இந்த தனிமைச் சிக்கலில் சிக்கிக் கொண்டவர்களை என்ன செய்வது ? அவர்களுக்குத் தான்  இந்த ஆலோசனைகள்.

1. ஆனந்தம், சோகம், அருகாமை, பிரிவு எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை எனும் உண்மையை மனதில் ஆழமாக எழுதிக் கொள்ளுங்கள். இனிமேல் பிள்ளைகள் நம்மை முழுமையாய் சார்ந்து இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.

2. இனிமேல் வரும் வாழ்க்கை வித்தியாசமானது என்பது மட்டும் தான் உண்மை. ஆனால் அது அழகானது அல்ல என்பது நீங்களாக உருவாக்கிக் கொள்ளும் கற்பனை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை எப்போதுமே அழகானது தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கே உரிய சுவாரஸ்யங்கள் நிரம்பியிருக்கும்.

3. பிள்ளைகளுடன் சேர்ந்து வாழும் போதே, ஒரு நாள் இவர்களெல்லாம் தனியே வாழக் கிளம்பி விடுவார்கள் எனும் எண்ணம் மனதில் இருக்கட்டும். அது தான் வாழ்க்கையின் நியதி என்பதை உங்கள் கடந்த கால வாழ்க்கையே சொல்லியிருக்கக் கூடும். 

4. இன்றைய உலகம் ஹை டெக் உலகம். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் நீங்கள் உங்கள் பிரியத்துக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். எனவே இ-மெயில், 3G, வெப் கேம் இப்படி எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் உங்கள் தனிமைக்குத் துணையாய் அழையுங்கள்.

5. உங்கள் பழைய ஹாபி ஏதேனும் ஒன்றைத் தூசு தட்டி எடுங்கள். சிலருக்கு எழுதுவது, சிலருக்கு இசை கேட்பது, சிலருக்கு வாசிப்பது, தோட்டம் வைப்பது இப்படி ஏதோ ஒன்று சிந்தனைகளின் பரணில் இருக்கும். அதைத் திரும்ப எடுங்கள். உங்கள் சுவாரஸ்யமான செயல்களைச் செய்யத் தான் இந்த தனிமை தரப்பட்டிருக்கிறது என பாசிடிவ் ஆக நினையுங்கள்.

6. உங்கள் உதவி இல்லாமலேயே உங்கள் பிள்ளையால் தனியே வாழமுடியும், சமாளிக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நிலைக்கு உங்கள் பிள்ளைகளை திறமை சாலிகளாக வளர்த்ததில் பெருமிதமும் கொள்ளுங்கள்.

7. உங்களைப் பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கும் வருத்தம் இருக்கக் கூடும். அவர்களை உங்கள் கவலை நிம்மதியிழக்கச் செய்யலாம். எனவே முதலில் உங்கள் கவலைகளைத் தூர எறியுங்கள்.

8. சேர்ந்து வாழும் காலத்திலேயே உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் எவ்வளவு தூரம் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள். அது உங்களுடைய குற்ற உணர்வுகள் பலவற்றைத் துடைத்து விடக் கூடும்.

9. இண்டர்நெட்டில் விருப்பம் இருப்பவர்கள் ஒரு பிளாக் ஆரம்பித்து தங்கள் அனுபவங்களை எழுதுங்கள். உலகத் தொடர்பும் கிட்டும், தனிமை வாட்டுதலும் நிற்கும்.

10. உங்கள் பழங்கால நண்பர்கள், உங்கள் நலம் விரும்பிகள், உறவினர்கள் இப்படி யாருடனாவது உங்கள் உரையாடல் வாழ்க்கையை ஆரம்பியுங்கள். ஆத்மார்த்தமான நட்பும், பேச்சும் கிடைத்தால் வெற்றிடம் நிரம்பிவிடும்.

11. மன அழுத்தமாக உணர்கிறீர்கள். வெளியே வர எவ்வளவு முயன்றும் முடியவில்லை எனில் ஒரு கவுன்சிலிங் நபரைப் பாருங்கள். அதில் வெட்கப்பட ஏதும் இல்லை.

12. விளையாட்டில் ஈடுபாடு உண்டென்றால் ரொம்ப நல்லது. உங்கள் விருப்பத்துக்குரிய விளையாட்டை ஆரம்பிக்கலாம். பலர் கேரம் போன்ற விளையாட்டுகளில் மூழ்கி விட்டால் அவர்களுடைய வெறுமை எல்லாம் பசுமை ஆகிவிடும்.

13. சில திட்டங்கள் வைத்திருங்கள். அடுத்த மாதம் அவரைச் சந்திக்க வேண்டும். அதற்கு அடுத்த மாதம் அங்கே போகவேண்டும் .. இப்படி. இவையெல்லாம் உங்களை அந்த முடிவுகளை நோக்கி சிந்திக்க வைக்கும். உங்கள் வெறுமையை நிரப்பி விடும்.

14. பிரியமான பார்ட் டைம், ஃபுல் டைம் வேலைகள் ஏதேனும் இருந்தால் தேர்ந்தெடுங்கள். பேபி சிட்டிங் போன்ற வேலைகள் இப்போது நம்பிக்கையான, அன்பான நபர்களுக்காய் காத்திருக்கின்றன.

15. கணவன் மனைவி தனியாய் இருந்தால் ரொம்ப நல்லது. முதுமையின் தனிமையை காதலுடன் அனுபவியுங்கள். காலார வாக்கிங் போவது முதல், காதல் வாழ்க்கையை அசை போடுவது வரை இது உங்களுக்கான வாய்ப்பு என்பதை உணருங்கள்.

16. உங்கள் வாழ்நாள் சாதனைகளை நினைத்து மகிழுங்கள். உங்கள் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுத்தது ஒரு வாழ்நாள் சாதனை என்பது நினைவில் இருக்கட்டும் 

17. அவ்வப்போது தனிமையை நினைத்து சோகமாய் இருப்பதோ, அழுவதோ தப்பில்லை. உணர்வுகள் வெளிப்படுத்துவதற்கானவையே. எனவே நீங்கள் உங்கள் மனசைத் திறப்பதைத் தவறு என கருத வேண்டாம்.

18. தியானம், பயணம், ஆன்மீக ஈடுபாடு போன்றவற்றில் விருப்பம் உள்ளவர்களுக்கு தனிமை வரப்பிரசாதம். இந்தத் தனிமையை நீங்கள் கொண்டாடலாம்.

19. பிள்ளைகளுடன் போனில் பேசுங்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இருவருக்கும் உடன்பாடான இடைவெளியில் பேசுங்கள். உங்கள் பிள்ளை தினமும் பேச விரும்பினால் தினமும் பேசுங்கள், வாரம் ஒரு முறையெனில் அதையே பின்பற்றுங்கள்.

20. ஓய்வு எடுங்கள். வாழ்க்கையில் ஓடியாடி உழைத்தாகி விட்டது. ஓய்வாய் அமர்ந்து ஒரு படம் பார்ப்பது, இசை கேட்பது, டின்னர் சாப்பிடுவது என வாழ்க்கையை அனுபவியுங்கள்.

21. உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி உடலில் எண்டோர்பின்களைச் சுரக்கச் செய்யும். அது மனதை ஆனந்தமாக வைத்திருக்கும். ஆரோக்கியத்தையும் கூட்டி வரும். எனவே உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

22. மாற்றங்களுக்கு எப்போதும் தயாராக இருங்கள். இறுக்கமான மனநிலை இல்லாமல் இயல்பாய் இருங்கள்.

23. குற்ற உணர்ச்சிகளை விட்டு விடுங்கள். ஐயோ, குழந்தையை நல்லா கொஞ்சலையே, நிறைய நேரம் செலவிடலையே என்றெல்லாம் புலம்பித் திரியாதீர்கள். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, என மனதை இயல்பாக்குங்கள்.

24. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்பிய, ஆனால் செய்ய முடியாமல் போல விஷயங்களை, விருப்பங்களைப் பட்டியலிடுங்கள். இப்போது அதில் எதையாவது செய்ய முடியுமா என யோசியுங்கள்.

25. ரொம்ப பிஸியா இருக்க என்னென்ன செய்யலாம் என யோசியுங்கள். கணவன் மனைவியாக இருந்தால் இதை எதிர்கொண்டு வெளியே வருவது ரொம்பவே சுலபம். இல்லாவிட்டாலும் கவலையில்லை, வெளியே வருவது எளிது தான்.

இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டால் தனிமையின் வெறுமை என்பது சாபமல்ல, வரம் என்பதை உணர்வீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே ! வாழுங்கள், வாழ்த்துக்கள்.

சேவியர்

நன்றி : பெண்ணே நீ…

தமிழிஷில் வாக்களிக்க……

பெண்களை விருந்துக்கு அழைத்து…பின்….

டேட் ரேப் :  ஒரு பகீர் பயங்கரம்.

 

“ஹேப்பி பர்த் டே”

சிரித்துக் கொண்டே கையிலிருந்த மலர்க்கொத்தை நீட்டினான் விக்னேஷ். தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த வசந்திக்கு ஆச்சரியம் ஒரு கண்ணிலும், வெட்கம் மறு கண்ணிலும் வழிந்தது. சூரியன் கூட இன்னும் முழுசாய் விழித்திருக்கவில்லை.

“தேங்க்யூ ..”

“அப்போ, இன்னியோட உங்களுக்கு பதினாறு வயசு முடிஞ்சிடுச்சா  ?” விக்னேஷ் வசீகரமாய்ச் சிரித்தான்.

“ஹே… இருபத்து நாலு ஆகுதுப்பா…. வாழ்த்துக்கள் வாங்கும்போ சந்தோசமா இருக்கு, ஆனா வயசாகுதேன்னு கவலையாவும் இருக்கு” வசந்தியும் சிரித்தாள்.

“டுவண்டி ஃபோர் !!! வாவ்.. என்னால நம்பவே முடியல.. ஒ.கே..ஒ.கே… இன்னிக்கு ஈவ்னிங் டின்னர் என்னோட செலவு… மறுக்கக் கூடாது.. ஓகே… ?”

சொல்லி விட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் சட சடவென்று காரில் ஏறிப் போய் விட்டான் விக்னேஷ்.

விக்னேஷ் வசந்தியோடு வேலை பார்ப்பவன். கடந்த ஒரு ஆண்டாக இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு. வசந்திக்கு விக்னேஷை ரொம்பப் பிடிக்கும். ரொம்பவே கண்ணியமாய் நடந்து கொள்வான். என்ன தேவையென்றாலும் வந்து உதவுவான். அறிவுரைகள் சொல்வான். போதாக்குறைக்கு அவ்வப்போது அவளை சில்லென மாற்றும் ஐஸ் கட்டிகளையும் வைத்துப் போவான் !

அதிகாலையிலேயே உற்சாகம் வந்து தொற்றிக் கொண்டது வசந்திக்கு. புத்தம் புதிய ஆடையை உடுத்திக் கொண்டு அலுவலகம் சென்றாள். எல்லோரிடமும் வாழ்த்துக்களை வாங்கி வாங்கி அவளுடைய பொழுது ரொம்ப சுவாரஸ்யமாகக் கழிந்தது.

மாலை நேரம் !

“போலாமா ?” கார் சாவியைக் கையில் வைத்து சுழற்றிக் கொண்டே கேட்டான் விக்னேஷ்.

“எங்கே ?” வசந்தி விளையாடினாள்.

“எங்கேயா ?…. ஹேய்… காலைலயே சொன்னேன்..  டின்னர் எல்லாமே ரெடி.. கமான்…” விக்னேஷ் குரலில் இருந்த கெஞ்சலை ரசித்துக் கொண்டே வசந்தி சொன்னாள், 

“சரி..சரி.. நான் ரெடி… பட்… கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் ஓகேவா ?”

“யா…”

இருவரும் காரில் கிளம்பினார்கள். கார் நேராக விக்னேஷின் வீட்டு வாசலில் வந்து நின்றது. 

“என்ன.. உங்க வீட்டுக்கு வரீங்க ? ஹோட்டல் போவோம்ன்னு நினைச்சேன்… ”

“ஸ்பெஷல் டின்னரெல்லாம் ஹோட்டல்ல குடுக்க முடியுமா என்ன ? நானே ஸ்பெஷலா பண்ணியிருக்கேன் வாங்க…”

விக்னேஷின் வித்தியாசமான அணுகுமுறை வசந்திக்குச் சிலிர்ப்பாய் இருந்தது.

மிக அழகான வீடு. வெகு சுத்தமாக இருந்தது. ஒரு பேச்சிலர் தங்கும் வீடு என்பதை சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது ! “ஒருவேளை நான் வருவேன் என்று சொன்னதால் எல்லாவற்றையும் சுத்தமாய் வைத்திருக்கிறானோ ?” வசந்தியின் மனதில் கேள்விகள் ஓடின.

விக்னேஷ் வசந்தியை அழைத்துக் கொண்டு டைனிங் டேபிள் சென்றான்.

“வாவ் !!! ..” வசந்தி விழிகளை விரித்து ஆச்சரியப் பட்டாள்.

டேபிளின் நடுவே ஒரு கேக். அருகே இரண்டு மெழுகுவர்த்திகள். சுற்றிலும் உணவு வகைகள் மூடப்பட்ட பாத்திரங்களில்.

“என்ன விக்னேஷ்.. கலக்கறீங்க. என் லைஃப்ல நான் இப்படி ஒரு டிரீட் வாங்கினதே இல்லை” வசந்தி நெகிழ்ந்தாள்.

“நானும் இப்படி ஒரு டிரீட்டை யாருக்கும் குடுத்ததில்லை. இதான் முதல் தடவை”

டின்னர் சாப்பாடு ரொம்பவே மகிழ்வாய் சென்று கொண்டிருந்தது.

விக்னேஷ் ஒரு கப்பில் கொஞ்சமாய் வைன் ஊற்றி வசந்தியிடம் நீட்டினான்.

“என்னது இது ?”

“இது ஷேர்டோனே…”

“நான் பெயரைக் கேக்கலை… இது வைனா ?”

“ஏன் வைன்னு சொல்றீங்க, பதப்படுத்தப்பட்ட திராட்சைப் பழரசம் ன்னு தமிழ்ல்ல சொல்லுங்க” விக்னேஷ் சிரித்துக் கொண்டே வசந்தியின் கைகளில் அதைத் திணித்தான். “இது டாஸ்மாக் சரக்கு கிடையாதுங்க, உடம்புக்கு ரொம்ப நல்லது !”

வசந்தி தயக்கத்துடன் வாங்கி அருந்தினாள்.

கொஞ்ச நேரத்தில் ஒரு வித மயக்க நிலைக்குப் போனாள்.

“விக்னேஷ்…. வாட்ஸ் ஹே…ப்பனிங்யா…. “ வசந்தியின் குரல் குழறியது.

விக்னேஷ் இதற்காகவே காத்திருந்தவன் போல அவளைக் கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த படுக்கையறைக்குப் போனான். ஒரு வெறிப் புன்னகை அவனுடைய இதழ்களில் கோரமாய் உறைந்தது !

மறு நாள் காலையில் விக்னேஷின் படுக்கையறையில் கண் விழித்த வசந்திக்கு படு பயங்கர ஷாக்…. என்ன நடந்தது என்பது கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தது.

விக்னேஷ் எதுவும் தெரியாதது போல ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தான்.

“விக்னேஷ்.. நேற்று என்ன ஆச்சு ?” வசந்தியின் குரலில் பதட்டம்.

“நத்திங்… வைன் குடிச்சே… தூக்கம் வருதுன்னு சொன்னே… பெட்ல படுக்க வெச்சேன்.. தட்ஸ் ஆல்” விக்னேஷ் சொன்னான்.

“பொய் சொல்லாதே விக்னேஷ்.. எனக்குத் தெரியும்… வாட் ஹேப்பண்ட் ?”

“நான் ஏதும் பண்ணல, நீதான் என்னைக் கம்பல் பண்ணி.…” வின்கேஷ் சொல்லிவிட்டு டீவியில் பார்வையை ஓட்டினான்…

வசந்தி உடைந்து போய் உட்கார்ந்தாள்.

சில நாட்களுக்குப் பின், நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தனது தோழியிடன் கண்ணீருடன் பேசிக்கொண்டிருக்கையில் தான் அவளுக்கு “டேட் ரேப்” எனும் விஷயமே தெரிய வந்தது.

அதென்ன டேட் ரேப் ? மயக்க நிலையில் பாலியல் வன்முறை செய்வதைத் தான் “டேட் ரேப்” என்கிறார்கள்.

தெரிந்த பெண்களை வசீகரமாய்ப் பேசி ஹோட்டலுக்கோ, தனிமையான இடங்களுக்கோ அழைத்துச் செல்ல வேண்டியது. அவர்கள் குடிக்கும் பானத்தில் டேட் ரேப் ஸ்பெஷல் மருந்தைக் கலக்க வேண்டியது. அவர்கள் மயங்கிச் சாயும் நேரத்தில் அவர்களை பலாத்காரம் செய்ய வேண்டியது. இது தான் டேட் ரேப்பின் அடிப்படை.

மது அருந்தும் பெண்களென்றால் ஆண்களுக்கு வேலை சுலபமாகி விடுகிறது. பெண்களைக் கட்டாயப்படுத்தியோ, வசீகரமாய்ப் பேசியோ அதிகம் மதுவை அருந்த வைத்து அவர்களை மயக்க நிலைக்குக் கொண்டு சென்று தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விடுவார்கள். 

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், என்ன நடந்தது என்பது மறு நாள் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு எதுவும் நினைவில் இருக்காது. “நீதான் என்னைக் கட்டாயப்படுத்தி உறவு கொள்ளச் சொன்னே !” என ஆண் குற்றம் சாட்டினால் மறுத்துப் பேசவும் முடியாது. “ஒருவேளை அப்படி இருந்திருக்கலாமோ ? “ என்று தான் நினைக்கத் தோன்றும்.

“என்னால தான் இப்படியெல்லாம் நடந்திருக்கு. இது என்னோட தப்பு… இதுல பேச என்ன இருக்கு” என அமைதியுடனும், வலியுடனும் பெண்கள் முடங்கிவிடுவார்கள். !

பதினேழு வயதுக்கும் முப்பது வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் தான் இதில் ரொம்பவே பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது இங்கிலாந்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று. பெரும்பாலான டேட் ரேப் கள், காதலன், பழைய காதலன், நண்பன், உடன் வேலை செய்பவர், கொஞ்சம் அறிமுகமானவர் இப்படிப் பட்டவர்களால் தான் நடக்கிறதாம்.

“அவளோட ஆடையே ரொம்ப செக்ஸியா இருந்துச்சு, என்னை வா, வா ன்னு வலியக் கூப்பிடுவது போல இருந்தது” என்பன போன்ற சால்ஜாப்புகள் அடிக்கடி ஆண்களிடமிருந்து எழும். ஒருவருடைய விருப்பம் இல்லாமலும், முழு உணர்வு இல்லாமலும் நடக்கும் எந்த உறவும் பலாத்காரம் தான். செக்ஸி ஆடை அணிவது அவரவர் விருப்பம். அது பாலியலுக்கான அழைப்பு என ஆண்கள் தவறாக அர்த்தம் கற்பிப்பது அவர்களுடைய அறியாமை மட்டுமே.

டேட் ரேப் குற்றத்தில் பயன்படும் எக்கச் சக்க மாத்திரைகள் உள்ளன. இந்த மாத்திரைகளில் சுவையோ, மணமோ, நிறமோ எதுவும் இருக்காது. ஆனால் வீரியமாய்ச் செயல்படும். அத்தகைய மருந்துகளில் மிக மிக முக்கியமானவை இவை.

ரோஹினால், ஃபுலண்ட்ரீஸிபம் எனும் வகையைச் சேர்ந்த மருந்து இது. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட இந்த மருந்து இங்கிலாந்து, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் தாராளமாய்க் கிடைக்கிறது. இன்னொரு மருந்து ஜி.ஹை.பி என சுருக்கமாய் அழைக்கப்படும் காமா ஹைட்ராக்ஸி பட்ரிக் அமிலம் கலந்த மருந்துகள். மூன்றாவது ஜி பி எல் என அழைக்கப்படும் காமா புடிரெலக்டோன் !

இந்த மருந்துகள் பல வடிவங்களில், பல பெயர்களில் இந்தியாவில் வெகு சாதாரணமாகக் கிடைக்கின்றன என்பது திகிலூட்டும் உண்மையாகும். மாத்திரைகளைப் போலவே எக்ஸ்டஸி போன்ற சில பானங்களும் உள்ளன. இவையும் குடித்தால் குடிப்பவரை அப்படியே அலேக்காக மயக்க நிலைக்குக் கொண்டு செல்லும்.

மயக்கத்துடன் கொஞ்சம் செக்ஸ் உணர்வையும் இந்த மருந்துகள் தூண்டி விடுகின்றன. அதனால் மதுவிலோ, குளிர்பானத்திலோ, ஏன் தண்ணீரிலோ கூட இதைக் கலந்து கொடுத்தால் விஷயம் முடிந்து விட்டது !. குடிப்பவருக்கு முடிவெடுக்கும் திறமை முழுமையாய் போய் விடும். ஒருவித பரவச மயக்கத்துக்குள் செல்வார்கள். எதிராளியின் விருப்பத்துக்கு ஏற்ப வளைந்து கொடுப்பதும், ஒத்துழைப்பதும் ஒரு அடிமை நிலையில் நடந்தேறும்.

பெரும்பாலும் இத்தகைய மருந்துகள் பார்களிலும், இரவு விடுதிகளிலும் எக்கச் சக்கமாய்ப் புழங்குகின்றன என்கிறது காவல் துறை.  இந்த மருந்தின் வீரியம் உடலில் இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. சிறு நீர்ப்பரிசோதனை, இரத்தப் பரிசோதனை இவையெல்லாம் கூட இத்தகைய போதை உடலில் இருப்பதைக் காட்டிக் கொடுக்காது. எழுபத்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே உடல் இதன் பாதிப்பிலிருந்து முழுமையான விடுதலையைப் பெறும் ! அளவுக்கு அதிகமாகக் கொடுத்தால் உயிரே போய்விடும் எனும் அதிக பட்ச ஆபத்தும் இத்தகைய மருந்துகளில் உண்டு.

“இத்தகைய மருந்துகளைத் தான் ரயிலில் பயணிகளுக்கு பிஸ்கட்டில் கலந்து கொடுத்து பொருட்களை லவட்டிக் கொண்டு போகிறார்கள்” என்கின்றனர் இந்திய காவல் துறை அதிகாரிகள்.

உலகெங்கும் சமீபகாலமாக இந்த டேட் ரேப் மருந்துகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளன என ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு சுமார் எழுபது இலட்சம் பேர் இத்தகைய மருந்துகளை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இத்தகைய மருந்துகள் மருத்துவத் துறைக்கு மிக மிக முக்கியமானவை. பல நோய்களுக்கும் அறுவை சிகிச்சைக்கும் இவை தேவை என்பதால் இதைத் தயாரிக்காமல் இருக்க முடியாது. அதனால் உலக நாடுகளெல்லாம் ஒன்றிணைந்து இந்த டேட் ரேப் மாத்திரைகளின் பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஐ.நா விண்ணப்பம் வைத்துள்ளது.

வருமுன் காப்பது தான் டேட் ரேப் விஷயத்தில் ஒரே வழி !

  • பலாத்காரம் செய்பவர் சினிமாவில் வரும் வில்லனைப் போல பரட்டைத் தலை, குளிக்காத உடலுடன் வருவார் என நினைக்காதீர்கள். ரொம்ப டீசண்டான  பார்ட்டியாக இருப்பார்.
  • 80 முதல் 90 விழுக்காடு டேட் ரேப்கள் மிகவும் தெரிந்த நபர்களால், அவர்களுடைய அல்லது பெண்களின் வீடுகளில் வைத்தே நடக்கின்றன. எனவே தெரிந்த ஆள் தானே என அசால்ட்டாக இருக்க வேண்டாம்.
  • பாதி குடித்த மதுவையோ, குளிர் பானத்தையோ வைத்து விட்டு தூரமாய் போகாதீர்கள். குறிப்பாக பாத்ரூம் போகும் நேரத்தில் கூட யாராவது ஒரு சின்ன மாத்திரை போட்டு உங்களை வீழ்த்தி விடலாம் ! எனவே எச்சரிக்கை தேவை.
  • இத்தகைய இடங்களுக்கு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாகச் செல்லுங்கள். ஒருவரை ஒருவர் கண்காணித்துக் கொள்ளுங்கள். 
  • உங்களுக்கு முழு நம்பிக்கை இல்லாத இடங்களுக்குப் போகாதீர்கள். பொதுவாக இரவு விடுதி, நடன அரங்கு போன்ற இடங்களுக்கு சரியான பாதுகாவலோ, தோழியரோ இல்லாமல் போகவே போகாதீர்கள்.
  • பார்களுக்கோ, மது அருந்தும் இடங்களுக்கோ சென்றால், மதுவையே தொடாத ஒரு நண்பரையும் கூடவே கூட்டிப் போங்கள். 
  • எப்போதும் அலர்ட்டாக இருங்கள். ஏதேனும் தவறு நடக்கலாம் என உள்ளுணர்வு எச்சரித்தால் தாமதிக்காமல் வெளியேறிவிடுங்கள்.
  • ரொம்ப அன்பான பெண்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், அல்லது ரொம்ப அமைதியான பெண்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்றெல்லாம் வீண் கற்பனை வளர்க்க வேண்டாம். பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் நேரிடலாம். எப்போது வேண்டுமானாலும் நேரிடலாம்.
  • தெரியாத நபர் உங்களுக்கு ஏதேனும் பானத்தை வலியத் தந்தால் வேண்டாம் என நேரடியாகவே மறுத்து விடுங்கள்.
  • இணையத்தின் மூலம் கண்டெடுத்த நண்பர்களுடன் தனியே சந்திப்பதைத் தவிருங்கள். குறிப்பாக அவர்களுடன் மதுவெல்லாம் அருந்தவே அருந்தாதீர்கள்.
  • ஆண்களுடன் தனியே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், பாலியல் சார்ந்த உரையாடல்களை தவிர்த்து விடுங்கள். போதை விஷயங்களையும் தொடாதீர்கள்.
  • உங்கள் டின்னருக்காக ஆண் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், செலவு செய்தாலும் அதற்காக பாலியல் பரிகாரம் செய்ய வேண்டியதே இல்லை. எந்த நிலையிலும் உங்கள் உறுதியில் இருந்து சறுக்காதீர்கள். கொஞ்சம் இடம் கொடுத்தால் சிக்கல் பெரிதாகும் என்பது உறுதி.
  • ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் முதலில் உங்கள் குற்ற உணர்விலிருந்து வெளியே வாருங்கள். “ஐயோ என்னால் தான் இப்படி நடந்தது…”, “ நான் இப்படி செய்திருக்கக் கூடாது”, “ நான் நோ சொல்லியிருக்கணும்…” , “நான் சொல்றதை இனிமே யாரும் நம்ப மாட்டாங்க”, “என்னை ரொம்ப மோசமான பொண்ணுன்னு நினைப்பாங்க” என்றெல்லாம் புலம்பாதீர்கள். தைரியமாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்.

விழிப்பாய் இருந்தால், விழாமல் இருக்கலாம்.

Thanks : Pennae Nee

தமிழிஷில் வாக்களிக்கலாமே…

Follow

Get every new post delivered to your Inbox.

Join 127 other followers