ஷட்டர் ஐலண்ட் மர்மங்கள் நிறைந்த ஒரு தீவு. இந்த தீவில் அமைந்திருக்கும் மன நிலை மருத்துவமனை ஒன்றுக்கு விசாரணைக்காக வருகின்றனர் இரண்டு யு.எஸ் மார்ஷல்கள். ஆண்டு 1954. அது மனநிலை பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவமனை. வருபவர்களில் ஒருவர் ஹீரோ லியானார்டோ டிகாப்ரியோ இன்னொருவர் மார்க் ரஃபல்லோ. அந்தத் தீவிலிருந்து காணாமல் போன ஒரு பெண்ணைத் தேடி வருகிறார்கள் இவர்கள் இருவரும்.
அந்தப் பெண்ணோ தனது மூன்று குழந்தைகளையும் நதியில் மூழ்கடித்துக் கொன்றவர். அந்த மருத்துவமனையின் டாக்டர் பென் கிங்க்ஸ்லி. மர்மப் பார்வையுடனும், செயல்பாடுகளுடனும் இருப்பவர். விசாரணை தொடரத் தொடர கொஞ்சம் கொஞ்சமாக மர்மங்கள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. அந்த மருத்துவமனையில் மூளை சிகிச்சைகள், கொடுமைகள் என ஏதேதோ மர்மங்கள் இருப்பதாக கதை விரிகிறது.
தொடத் தொட விரியும் மர்மங்களையும், கூடவே தன் மனைவியின் சாவுக்குக் காரணமான லாடிஸ் என்பவனையும் கண்டு பிடிக்க ஹீரோ அந்த தீவில் அலைகிறார். அந்த தீவில் மொத்தம் 66 நோயாளிகள். உண்மையில் 67வது நபர் ஒருவர் உண்டு. அவர்தான் லாடிஸ் என்பது ஹீரோவின் கண்டுபிடிப்பு. அந்த மனிதனைத் தேடி அலைகிறார். இடையிடையே அவருடைய இரண்டாம் உலகப் போர் அனுபவங்கள், கனவில் தொடரும் இறந்து போன மனைவி என கதை வலுவடைகிறது.
மர்மத்தின் கடைசி முனையைக் கண்டுபிடித்த திருப்தியுடன் இருக்கும் போது தான் உண்மையான
மர்மமே அவிழ்கிறது. அதாவது ஹீரோ ஒரு மனநோயாளி. இரண்டு வருடங்களாக அங்கே சிகிச்சை பெற்று வருபவன். அவன் தான் அந்த 67வது நோயாளி. தன்னைச் சுற்றி ஒரு மாய உலகத்தை உருவாக்கி வாழ்ந்து கொண்டிருப்பவர். அவருடைய மனைவிதான் தனது மூன்று குழந்தைகளையும் கொன்றவர். அவரை ஹீரோ கொன்று விடுகிறார் என அடுக்கடுக்காய் அதிச்சிப் பக்கங்கள் புரட்டப்படுகின்றன.
டென்னிஸ் லெஹென் எனும் பிரபல எழுத்தாளரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் சலசலப்பை உருவாக்கிய மிஸ்டிக் ரிவர் நாவல் இவர் எழுதியது தான்.
அமானுஷ்ய தீவை மிரட்டும் ஒளிப்பதிவில் அள்ளி எடுத்து வந்து பதட்டத்தை அதிகப்படுத்தியிருப்பதில் ரிச்சட்சனின் ஒளிப்பதிவுக்கு முக்கிய பங்கு உண்டு. கூடவே ராபட்சனின் இசையும் மிரட்டல் ரகமாக திடுக்கிட வைக்கிறது.
பியூட்டிபுல் மைண்ட், சிக்ஸ்த் சென்ஸ், ஹைட் அண்ட் சீக் போன்ற படங்களின் அடி நாதமாக இருக்கும் நாட் தான் இந்தப் படத்திலும். அந்த கனத்தை மிக லாவகமாக கையாண்டு பிரமிப்பூட்டியிருப்பவர் டிகாப்ரியோ. எப்படியாவது ஒரு ஆஸ்கர் விருதையாவது டி காப்ரியோவுக்கு வாங்கிக் கொடுக்கவேண்டுமே என தொடர்ந்து கங்கணம் கட்டி முயன்று வருகிறார் இயக்குனர் மார்ட்டின் கோர்ஸெசி. இருந்தாலும் டிபார்டட், ஏவியேட்டர் மற்றும் குட்ஃபெல்லாஸ் போன்ற படங்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு படி கம்மி தான்.
நைட் ஷாமளனுடைய சிக்ஸ்த் சென்ஸ் போல இரண்டாவது முறை பார்க்கும் போது மிக வித்தியாசமான அனுபவத்தைத் தரும் படம் இது !
சைக்காலஜிக்கல் திரில்லர் வகையில் ஏமாற்றாத படம் !
பிடித்திருந்தால் வாக்களியுங்கள்


