சிலருக்குக் கவிதை எழுதுவது பொழுதுபோக்கு. சிலருக்கு பொழுதெல்லாம் அதிலேயே போக்கு. இன்னும் சிலருக்கு அது ஒரு தவம். ஆழ்மன ஆராய்ச்சி செய்யும் காதல் தவம். புகாரியின் கவிதைகளைக் கூட அப்படியென்பேன் நான்.
ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் அவருடைய கவிதைகள் பரிச்சயமானது எனக்கு. இன்னும் அந்த முதல்க் கவிதையின் குளிர்ச் சாரலிலிருந்து நான் முழுமையாய் வெளியே வரவில்லை. இப்போது அவருடைய சமீபத்தியக் கவிதைத் தொகுப்பு என்னைப் பழைய நினைவுகளுக்குள் இன்னுமொருமுறை சிறை வைத்திருக்கிறது.
கவிதைகள் மீது எனக்கிருப்பதைக் காதல் என்று நான் சொன்னால், அவருக்கிருப்பது உயிர்க்காதல் என்றேனும் சொல்ல வேண்டும்.
சில வேளைகளில் கவிதை நூல்களை வேகமாய் வாசிக்கும் மனநிலை எனக்கும் நேர்வதுண்டு. வேகமாய் வாசிக்க கவிதையொன்றும் தினத்தந்தியல்ல. ஆனாலும் பாதிக் கவிதை வாசித்தபின்னும் பாதிக்காக் கவிதையெனில் அதை வேகமாய்க் கடந்து போகவே மனம் அவசரப்படுத்துகிறது. வேகமாய் வாசிக்க விடாமல் உள்ளிழுத்துக் கொள்ளும் பிளாக்ஹோல் கவிதைகள் கவிஞனை ஒரு தத்துவார்த்தவாதியாக முன்னிறுத்துகின்றன. அந்த தத்துவங்கள் காதலாகிக் கசிந்துருகி வழிகிறது “காதலிக்கிறேன் உன்னை எப்போதும்” நூலில்.
கடல்க் கவிதைப் பயணத்தில், தூரப்பார்வைக்கு உயரம் குறைந்த சின்னப்பாறையாய்த் தோன்றி, உள்ளே டைட்டானிக்கையே உடைத்துச் சிதைக்கும் வீரியம் கொண்ட பனிப்பாறைகள் தான் புகாரியின் கவிதைகள். நமது வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து அவருடைய கவிதைகள் கிளை முளைப்பிக்கின்றன. அவருடைய வாழ்வின் அனுபவங்களிலிருந்து அவை வேர் பெறுகின்றன. அவருடைய தமிழின் வற்றாத் தடாகத்திலிருந்து அவை நீர்பெறுகின்றன.
இந்த தஞ்சைக் கவிஞனிடம் தஞ்சம் கொண்டிருப்பது சந்த மனசு. ஆனால் இந்தத் தொகுப்பில் சந்தக் கவிதைகளைக் கொஞ்சம் சத்தம் காட்டாமல் அடக்கியே வைத்திருக்கிறார். எனினும் சன்னல் திறக்கையில் சிரித்துக் கடக்கும் சின்னப் புன்னகையாய் ஆங்காங்கே அவருடைய சந்த வீச்சுகள் விழாமலில்லை.
காதலில்லாமல் எப்படி
ஒரு நொடி நகர்த்துவது ?
என்கிறார் புகாரி. அவருடைய இந்த வரிகளைப் புரிந்து கொள்ள அவருடைய காதலுக்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதை தனது முன்னுரையிலேயே எழுதி வாசகனை கவிதைக்குள் வழியனுப்பி வைத்திருக்கும் உத்தி சிலாகிக்க வைக்கிறது !
காதலிக்கும் ஒவ்வொரு மனிதனும் இவருடைய கவிதைகளின் வரிகளில் விழுந்து விடாமல் இருக்க முடியாது. காதல் கானகத்தின் வரிக்குதிரைகளாய் கவிதை வரிகள் துள்ளித் திரிகின்றன.
வேகமாய் ஓடிக் கிடந்தவன்
நிதானமாய் நடக்கிறான்,
மூர்க்கமாய் முறுக்கித் திரிந்தவன்
கனிந்து குழைகிறான்
என காதலிக்கும் இளைஞனின் மனநிலையைப் பதிவு செய்கிறார். மறுத்துப் பேச யாரும் இருக்கப் போவதில்லை. நிதானமாய் மட்டுமா நடக்கிறான். ஆட்டோக்காரனின் “சாவுகிராக்கியை”க் கேட்டால் கூட சிரித்துக் கொண்டேயல்லவா நடக்கிறான்.
“நேரம் போவதெங்கே தெரிகிறது ?
உயிர் போவதல்லவா தெரிகிறது ! ?
எனைக் கேட்டுப் போனேன்
மரணம் வந்து சேர்ந்தது.
எதைக் கேட்டுப் போனால்
நீ வந்து சேர்வாய் ?
நண்பரின் கவிதைகளிலுள்ள வரிகளில் மனம் தொட்ட வரிகளைப் பட்டியலிட்டால் எல்லா கவிதைகளிலும் வசீகரிக்கும் ஏதேனும் வரிகள் விழுந்து கொண்டேயிருக்கின்றன.
இந்தத் தொகுப்பு காதலை மட்டுமே பாடினாலும், புகாரியின் கவிதை மனசு காதலைத் தாண்டிய பல பரிமாணங்களையும் கண்டது. அவருடைய பஞ்ச பூதக் கவிதைகள் பரவலான கவனத்தையும், கவனித்த அனைவரின் பாராட்டையும் பெற்றக் கவிதைகள்.
புகாரி ஒரு சிற்பி என்று சொல்ல மாட்டேன். சிற்பியின் சிற்பங்கள் குடிசைகளில் புரள்வதில்லை. சிற்பங்கள் ஏழைத் தோழனின் முகமாய் பெரும்பாலும் இருப்பதில்லை. அவரை ஓவியன் என்று சொல்லவும் ஒப்புக் கொள்ள மாட்டேன். இப்போது ஓவியங்களெல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் பணிப்பெண்கள் போல ஒய்யாரச் சுவர்களுக்கே சொந்தமாய்க் கிடக்கின்றன.
அவரைக் கவிதைக் குயவன் என்பேன்.
குயவன் தனது பாண்டத்துக்காக நேர்த்தியான மண்ணைத் தேடும் கவனம் அவருடைய வார்த்தைத் தேர்வில் இருக்கிறது. விரல்களின் லாவகம் மண்பாண்டத்தை கைகளை விட்டுக் காகிதத்தில் இறக்கி வைக்கின்றன. உடைந்து விடக் கூடாதே எனும் பதை பதைப்புடன் அடுக்கி வைக்கிறார். பானையில் எத்தனை கொள்ளளவு தேவையோ அதை குயவனே முடிவு செய்கிறார். கடைசியில் பாகுபாடில்லாமல் அதைப் பாருக்குப் பந்தி வைக்கிறார்.
புகாரி. தமிழை உயிரின் ஆழம் வரை நேசிப்பவர். மனிதனை தமிழின் ஆன்மாவாய் நேசிப்பவர். அவருடைய இந்தத் தொகுப்பு தோளை விட்டு இறங்க மறுக்கும் சின்னக் குழந்தையாய் என் நெஞ்சம் பற்றிக் கிடக்கிறது.
இன்னும் பல தொகுப்புகளைக் காண அந்த மென் மனசை வாழ்த்துகிறது என் மனசு.
ஃ



சீனா (Cheena ) சொன்னது,
நவம்பர் 25, 2010 இல் 3:14 மு.பகல்
அன்பின் சேவியர்
அருமையான விமர்சனம் / அறிமுகம் – ஒரு கவிஞனுக்குத்தான் மற்றொரு கவிஞனை இரசிக்கத் தெரியும். நல்ல முறையில் எழுதப்பட்ட இடுகை – வாழ்க ! நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
சேவியர் சொன்னது,
நவம்பர் 25, 2010 இல் 5:29 பிற்பகல்
மிக்க நன்றி ஐயா…
அன்புடன் புகாரி சொன்னது,
December 5, 2010 இல் 11:23 பிற்பகல்
நன்றி சேவியர் – என் வலைப்பூவிலும் இதனை ஓர் இதழாக்கிவிட்டேன்
Xavier சொன்னது,
December 6, 2010 இல் 12:25 மு.பகல்
Brother, Reading your “Arithalillaa Arithal”…. Wow…. Its one of your Best works… Will write about that in a week’s time.
சேவியர் சொன்னது,
December 19, 2010 இல் 9:36 பிற்பகல்
நன்றி புகாரி
balu சொன்னது,
ஜனவரி 7, 2011 இல் 9:30 பிற்பகல்
very nice sir thank you very much
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 4:59 பிற்பகல்
நன்றி பாலு…