ஆளில்லாமல் மெதுவாக ஓட ஆரம்பிக்கும் ஒரு இரயில் வண்டி மெல்ல மெல்ல வேகமெடுத்து தறிகெட்டு ஓடுகிறது. அதை நிறுத்துவது எப்படி என வழி தெரியாமல் விழிக்கிறது நிர்வாகம். சின்ன ரயிலெனில் பரவாயில்லை. இது பத்து டன் எடையுள்ள வண்டி. போதாக்குறைக்கு அதில் இருப்பது ஊரையே கபளீகரம் செய்துவிடக் கூடிய ரசாயனங்கள், எரிபொருள்கள், நச்சுப் பொருள் இத்யாதி இத்யாதி. சட்டென ஊரே பதட்டத்துக்குள் தள்ளப்பட்டு விடுகிறது.
இதை எப்படியாவது நிறுத்தியே ஆகவேண்டும் என நினைக்கும் நிர்வாகத்துக்கு தோல்வி. எதேச்சையாக அதே டிராக்கில் பயணிக்கும் ஹீரோ டென்ஸல் வாஷிங்டனும், கிரிஸ் பைனும் இதை நிறுத்த முயல்கிறார்கள். ரயிலை நிறுத்திக் காட்டுவோம் என அவர்கள் தங்கள் வீர தீர பராக்கிரமங்களை டிராக்கில் நிகழ்த்துவதே அன்ஸ்டாப்பபிள் படத்தின் கதை.
இந்த கடுகு விதைக் கதையை வைத்துக் கொண்டு வித்தை காட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர் டோனி ஸ்காட். கடந்த ஆண்டு டேக்கிங் ஆஃப் பெல்ம் படத்தில் ஏகக் கடுப்படித்த இந்த இயக்குனர் அதற்கு நஷ்ட ஈடாக இந்தப் படத்தை பரபரப்பின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார். ரயிலில் விட்ட இமேஜை ரயிலிலேயே பிடித்திருப்பதில் அவருடைய திறமை தெரிகிறது !
நகம் கடித்து, பரபரத்து, திக் திக் நிமிடங்களுடன் என பொதுவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளுக்கும் இந்தப் படம் பொருந்தும். வயசாச்சு என வீட்டுக்கு அனுப்பப்படப் போகிறவர் டென்ஸல். பாதி பென்ஷனோடு கிளம்ப வேண்டிய அவருக்கு மிச்சமிருக்கும் வேலை நாட்கள் சில வாரங்கள் தான். இருந்தாலும் தனது கடைசி நிமிடம் வரை உண்மையாய் உழைப்பது எனும் “ஹீரோ இலக்கணத்தை” மீறாமல் இருக்கிறார் !
ஏற்கனவே ஆயிரத்து ஓரு படங்களில் பார்த்த அதே ஹாலிவுட் ஆக்ஷன் பட காட்சிகள் இதிலும் அப்படியே உண்டு. பரபரக்கும் தொலைக்காட்சித் தலைப்புச் செய்தி. நகம் கடித்தபடி நிகழ்ச்சியைப் பார்க்கும் குடும்பத்தினர். ஹீரோவுடையை ஐடியா சரியில்லை எனச் சொல்லும் மேலதிகாரி. ஹீரோவை நம்பும் ஒரு அதிகாரி. அங்கும் இங்கும் பரபரத்துக் கொண்டிருக்கும் அலுவலகம். சிணுங்கும் தொலைபேசி, வட்டமிடும் ஹெலிகாப்டர் இப்படி எல்லா படங்களிலும் பார்க்கக் கூடிய அதே அக்மார்க் காட்சிகள் ஆனாலும் அதை மிகச் சரியாக மீண்டும் ஒரு முறை அரைத்ததில் கமர்ஷியல் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
டென்ஸல் எந்த கெட்டப்பில் வந்தாலும் ஜொலிக்கிறார். த போர்ன் கலக்டர் படத்தில் படுக்கையில் படுத்துக் கொண்டே நடித்து பின்னிப் பெடலெடுத்தது போல, இந்தப் படத்தில் பெரும்பாலும் டிரெயின் டிரைவர் சீட்டில் இருந்து கொண்டே கலக்கியிருக்கிறார் ! அதனால் தான் இயக்குனரும் டென்ஸலை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை !
எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிய, மீண்டும் அசுர வேகமெடுத்து ஓடுகிறது ரயில். ரயிலின் மீது ஓடி டிரைவர் இருக்கைக்கு வர முயல்கிறார் ஹீரோ அதுவும் முடியவில்லை. கடைசியில் ரயிலுக்குப் பக்கவாட்டில் வேகமாய் ஒரு காரில் கிரிஸ் பைன் பயணித்து அங்கிருந்து அப்படியே டிரைவர் சீட்டுக்கு அலேக்காக விஜயகாந்த் போலத் தாவி ரயிலை நிறுத்துகிறார்.
இது தான் அல்டிமேட் கிளைமாக்ஸ் எனில் எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் ? முதலிலேயே ரயிலுக்குப் பக்கத்தில் ஒருவர் வண்டியை ஓட்டி ஒருவர் குதித்து ரயிலை நிறுத்தியிருக்கலாமே எனும் மில்லியன் டாலர் கேள்வியும் எழாமலில்லை.
எப்படியோ ஒன்றரை மணி நேரம் பரபரப்பில் ரசிகர்களைக் கட்டிப் போட்ட வகையில் வெற்றி பெற்றிருக்கிறது அன்ஸ்டாப்பபிள் திரைப்படம்.



Geetha சொன்னது,
December 22, 2010 இல் 1:46 மு.பகல்
Edhukunga kadhai Muzukka solringa ..
Naangalum unga vimarsanam
1. Nallarndha padam parkkanum
2. Nalla irundhum kadhai therinjadhunaala paarkaama irukkanum
Idhula edhu ok sollunga
ரிசாத் சொன்னது,
December 25, 2010 இல் 6:36 பிற்பகல்
இன்னும் எத்துன படம் இதே மாதிரி வெளிவரும் ?
Speed தொடங்கி இன்னும் முடியல..
அதுலயும் UNSTOPPABLEனு கடைசில நிறுத்திடான்களே
என்ன கொடும சேவியர் ??
கிருத்திகன். சொன்னது,
December 29, 2010 இல் 5:23 பிற்பகல்
நல்ல படத்துக்கு நல்ல விமர்சனம் சார்…
பாத்திட்டு மிச்சம் சொல்றேன்…
கிருத்திகன்.
http://tamilpp.blogspot.com/
சேவியர் சொன்னது,
ஜனவரி 2, 2011 இல் 9:22 பிற்பகல்
நன்றி கிருத்திகன்.
சேவியர் சொன்னது,
ஜனவரி 2, 2011 இல் 9:25 பிற்பகல்
அதுலயும் UNSTOPPABLEனு கடைசில நிறுத்திடான்களே
என்ன கொடும சேவியர் ??
1
//
சூப்பர்
சேவியர் சொன்னது,
ஜனவரி 2, 2011 இல் 9:49 பிற்பகல்
Geetha… 1 is best