ஒட்டக வரலாற்றில் முதன் முறையாக….

one

உயிரிகளைப் பிரதியெடுக்கும் குளோனிங் முறைக்கு உலகெங்கும் எதிர்ப்புகள் எழுந்தாலும் இன்றும் உலகின் பல பாகங்களிலும் அதன் முயற்சிகளும், தொடர்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.

டோலி எனும் ஆட்டுக்குட்டி குளோனிங் முளையைத் துவக்கி வைத்தது. இப்போது உலகிலேயே முதன் முதலாக ஒட்டகம் ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்ஜாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒட்டகம் துபாயிலுள்ள ஒட்டக விருத்தி நிலையத்தில் உலகை வியப்புடன் பார்க்கிறது.

கோடிக்கணக்கான ஒட்டகங்கள் வாழ்ந்த இந்த பூமியில் இந்த ஒட்டகம் ஒரு புதிக சகாப்தத்தின் முதல் சுவடாய் வந்திருக்கும் உண்மையை அறியாமலேயே தாயுடன் விளையாடுவதை விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.

ஒரு பெண் ஒட்டகத்தின் செல்லில் இருந்து பிறவி எடுத்துள்ள இந்த ஒட்டகத்துக்குப் பிறந்த நாள் ஏப்பிரல் 8.

உலகின் மிகச் சிறிய பாம்பு !

யூ.எஸ் குவார்டர் நாணயத்தின் மேல் ஒய்யாரமாகப் போஸ்கொடுத்துக் கொண்டிருப்பது உலகின் மிகச் சிறிய பாம்பு. பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனும் பழமொழி இதனிடம் பலிக்காது போல.

கரீபியன் தீவு பார்படாசில் இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறு மண் புழுவைப் போல கிடந்த இந்த உயிரினம் பாம்பு என கண்டறியப்பட்டதே ஒரு வியப்புக்குரிய செய்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதன் மொத்த நீளமே 10 செண்டீ மீட்டர்கள் தானாம். இது வளர்ந்த ஒரு பாம்பின் நீளம். சின்ன குட்டிப் பாம்புகள் இதில் பாதியளவு தானாம்

லெப்டோடைப்ளோஸ் கார்லே என பெயரிடப்பட்டுள்ள இந்த பாம்பைப் பார்ப்பதற்கு ஒரு நூடுல்ஸ் இழை போலிருக்கிறது என்கிறார் இதைக் கண்டு பிடித்த பிளேர் ஹெட்ஜஸ். இவர் அமெரிக்க உயிரியல் நிபுணர் என்பது குறிப்பிடத் தக்கது.

இத்தனை சின்னதா இருக்கே ! விஷம் இல்லாம இருந்தா சரி, அப்படித் தானே நினைக்கிறீங்க ?

உலகக் கட்டிட வரலாற்றில் முதன் முறையாக….

சுழலும் கட்டிடம்

 

 

 

 

 

 

 

“அசையாம நல்ல ஸ்டாங்கா இருக்கணும்பா கட்டிடம் “ என்பது தான் இதுவரை நாம் கேட்ட வாசகம். இந்த வாசகத்தை அர்த்தமிழக்கச் செய்யப்போகிறது துபாயில் உருவாக இருக்கும் புதிய கட்டிடம் ஒன்று.

எண்பது மாடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தின் ஒவ்வோர் மாடியும் நிலையாக இல்லாமல் சுற்றக் கூடிய வகையில் அமையப் போகிறதாம்.

இந்த சிந்தனையின் பின்னால் இருக்கும் ரொட்டேட்டிங் டவர் டெக்னாலஜி கம்பெனியின் நிறுவனர் டேவிட் ஃபிஷர் , வாழ்க்கையே நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கிறது, கட்டிடம் மட்டும் நிலையாய் இருப்பது ஏன் என தத்துவக் கிச்சுக் கிச்சையும் மூட்டுகிறார்.

வலிமையான காங்கிரீட் மையத்திலிருந்து இந்த மாடிகள் சுழலுமாம். ஒரு மாடியை நீங்கள் வாங்கினால் அந்த மாடியை உங்கள் விருப்பம் போல அசைத்துக் கொள்ளலாமாம்.

வெயில் முகத்தில் அடிக்கிறது என்றால் மாடியை கொஞ்சம் அந்தப் பக்கமாகத் திருப்பிக் கொள்ளலாம். ஏதோ சத்தம் கேட்கிறதே என்று நாம் ஓடத் தேவையில்லை, வீட்டை கொஞ்சம் சுற்றவிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த கட்டிடத்துக்குத் தேவையான முழு மின் தேவையையும் அந்தக் கட்டிடமே சூரிய ஒளியிலிருந்து தயாரித்துக் கொள்ளும் வகையில் இந்த கட்டிடம் தயாராகப் போகிறது என்பது சுவாரஸ்யச் செய்தி.

நீச்சல் குளம், தோட்டம் என வசதிகள் இருப்பதுடன் காரையும் தங்கள் மாடிக்குப் பக்கத்திலேயே கொண்டு பார்க் செய்யவும் வசதி செய்யப்படுமாம்.

ஆனால், வீட்டுக்குத் தேவையான தண்ணீர் பைப் களை எப்படி மாட்டுவது என்பதில் தான் பெரிய சிக்கலே இருக்கிறதாம். ஆனாலும் அதற்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன என்கிறார்கள்.

355 மில்லியன் பவுண்ட் செலவில் இந்தக் கட்டிடம் கட்டப்பட இருக்கிறதாம். அமெரிக்காவின் 9/11 புகழ் இரட்டைக் கோபுர தலைமைப் பொறியாளர் லெஸ்லி ராபட்சன் தான் இந்த திட்டத்தின் தொழில்நுட்ப வழிகாட்டியாம்.

கட்டிடம் எல்லா பெரிய கட்டிடங்களையும் போல பாதுகாப்பாய் இருக்கும் !  கவலையே வேண்டாம் என்கிறார் டேவிட் ஃபிஷர். வாங்க விருப்பமுடையோர் அணுகலாமாம். !

நடுங்க வைத்த நிமிடங்கள்.

ஆப்பிரிக்கன் சஃபாரி போயிட்டிருக்கீங்க, திடீர்ன்னு ஒரு பெரிய யானை உங்க காருக்கு முன்னாடி வந்து நின்னா எப்படி இருக்கும். அப்படியே அது ஜூராசிக் பார்க் டைனோசர் மாதிரி உத்துப் பாத்து உறுமினா ?

அப்படி ஒரு அனுபவத்தைச் சந்தித்த அண்ணன் தங்கை தான் இவங்க. ஸ்விஸ் பார்ட்டிங்க இந்த பெல்ட்ரேம் & ஆஞ்சலா. அவ்ளோ தான் இந்த ஓல்ஸ்வேகன் கார் அப்படியே அப்பளமாகப் போகுது, அந்த அப்பளத்துக்குள்ளே நாம இரண்டு பேருமே பர்கர் பன்னாகப் போகிறோம் என்று நடுங்கித் தான் போனார்கள்.

எஞ்சினை ஆஃப் செய்து விட்டு அமைதியாக மரணமா, இல்லை மறு ஜென்மமா என ஆறு நிமிடங்கள் திக் திக் என இருந்தவர்களை விட்டு விட்டு அமைதியாகச் சென்று விட்டதாம் அந்த ஆஜானுபாகுவான யானை. மெதுவாக ஒரு அழுத்து அழுத்தியதோடு சரி.

கேரள யானைங்க மட்டும் தான் போட்டுப் புரட்டிப் புரட்டி எடுக்குமோ ?

செவ்வாயில் மனித உருவம் : நாசா

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே – அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் – உன்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் – அதை
அறியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்

mars.jpg

வைரமுத்து சொன்னது போல, செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று தேடிய விஞ்ஞானம் ஒரு பெண் செவ்வாயில் நிர்வாணமாய் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை விண்கலத்திலிருந்து பெற்றிருக்கிறதாம் நாசா.

இந்த செய்தி தற்போது இணைய தளங்களிலும், மின்னஞ்சல்களிலும் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கின்றன.

இது உண்மையா பொய்யா என்று தீர்மானிக்கப்படவில்லை. பொய்யாய் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம் என கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

http://www.dailymail.co.uk/pages/live/articles/news/news.html?in_article_id=509693

(நாசா இணைய தளத்தில் இது குறித்த செய்திகள் ஏதும் காணப்படவில்லை)