ஜூ.வி : அமெரிக்க அதிர்ச்சி !

k1கல்லறைப் பயணத்துக்கும் காசில்லை

“சொல்லவே மனசுக்கு கஷ்டமா இருக்கு. உங்க அண்ணன் தற்கொலை பண்ணிகிட்டார். ஏதோ பணக் கஷ்டத்துல இருந்திருக்கார் போல. தலையில துப்பாக்கியை வெச்சு சுட்டிருக்கார். உயிர் போயிடுச்சு. அவரோட அறையில இருந்து உங்க அட்ரஸ் கிடச்சுது. இப்போ அவரோட உடல் இங்கே மார்ச்சுவரில தாஇருக்கு வந்து வாங்கிக்கறீங்களா ?” மெதுவாய் பேசுகிறது குரல்.

“ஐயோ..என் அண்ணனா ? இறந்துட்டாரா ?” மறுமுனையில் பெண்ணின் குரல் பதறுகிறது.

“ஆமாம்மா. உடம்பு இங்கே தான் இருக்கு வந்து வாங்கிக்கறீங்களா ?” குரல் மறுபடியும் அமைதியாய் ஒலிக்கிறது.

மறுமுனையில் கொஞ்ச நேரம் மௌனம். பின் இறுகிய குரல் விசும்பலுடன் பேசத் துவங்குகிறது

“என் கிட்டே பணமே இல்லை. அவரோட இறுதிச் சடங்கை செய்ய எனக்கு வசதியும் இல்லை. அவரோட இறுதிச் சடங்கை நீங்களே செஞ்சுடுங்க. கொஞ்சம் அன்போட செய்யுங்க பிளீஸ்…” அழுகையுடன் மறுமுனை போன் வைக்கப்படுகிறது.

இது ஏதோ ஒரு அவார்ட் திரைப்படத்தில் வரும் சோகக் காட்சியல்ல. ஆப்பிரிக்கா, சோமாலியா போன்ற நாடுகளின் குடிசைகளிலிருந்து ஒலிக்கும் குரலுமல்ல. இந்த குரல் ஒலிப்பது சாட்சாத் அமெரிக்காவிலிருந்து ! இது ஒரு அபூர்வ நிகழ்வும் அல்ல. இப்படிப் பட்டப் பேச்சைத் தினமும் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது என்கிறார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் எவர்கிரீன் கல்லறைத் தோட்ட நிர்வாகி ஆல்பர்ட் காஸ்கின்

உலகின் வல்லரசு. பெரிய அண்ணன். நிலவுக்கே கூட சட்டென போய்வரக் கூடிய வசதி. நினைத்த நேரத்தில் வேண்டாத நாட்டின் தலையில் குண்டு போடக் கூடிய கர்வம். வரிசை வரிசையாய் கண்ணாடி மாளிகைகள். டாலர் கட்டுகள். கோட் சூட்டுகள். இப்படிப் பார்த்துப் பார்த்தே பழகிப் போன அமெரிக்கா இப்போது நொடிந்து கிடக்கிறது.

அமெரிக்காவுக்கு இப்படி ஒரு நிலை வரும் என சில ஆண்டுகளுக்கு முன் யாரேனும் சொல்லியிருந்தால் அது முதல் பரிசு பெறக் கூடிய நகைச்சுவையாய் இருந்திருக்கும். ஆனால் இன்றைக்கோ அது கசப்பான உண்மையாகியிருக்கிறது.

வீட்டுக் கடன் வழங்கிக் கொண்டிருந்த வங்கிகளுக்குத் தான் ஆரம்பித்தது முதல் சிக்கல். யாருமே பணம் திருப்பிக் கட்டாமல் வங்கிகள் திவாலாயின. காட்டுத் தீயாய் பரவிய இந்த அழிவு, பிற வங்கிகள், ஆட்டோ மொபைல், கிரெடிட் கார்ட் என எதையும் விட்டு வைக்கவில்லை. இந்த டிராகனின் தீப்பிழம்புகளிலிருந்து தப்பிப் பிழைத்தவை வெகு சொற்பமே. காய்ந்து போன இலைகளைப் போல வேலைகளிலிருந்து மக்கள் உதிர ஆரம்பித்தார்கள். இன்றைய தேதியில் வேலையில்லாமல் பரிதவிக்கும் அமெரிக்கர்கள் சுமார் 10 சதவீதம் பேர் !

ஐந்து நாள் வேலை, இரண்டு நாள் கொண்டாட்டம் என இருந்த அமெரிக்கர்களுக்கு வேலையில்லையேல் என்ன செய்வதென புரியவில்லை. அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக் கூட கையில் பணமில்லாமல் புலம்ப வேண்டிய நிலமை. வேலை இருந்த வரைக்கும் கம்பெனி மருத்துவக் காப்பீடு கொடுத்து வந்தது. வேலையில்லையேல் கைக்காசை வைத்துக் கொண்டுதான் அதையும் வாங்க வேண்டும். சாப்பாட்டுக்கே வழியில்லையேல் எப்படி மருத்துவக் காப்பீட்டுக்கு மாதா மாதம் பிரீமியம் கட்டுவது ?

மருத்துவக் காப்பீடு இல்லாமல் மருத்துவ மனைக்குப் போனால் அவ்வளவு தான். தீட்டித் தள்ளி விடுவார்கள். இன்றைய தேதியில் சுமார் 57 சதவீதம் அமெரிக்கர்கள் தேவையான் மருத்துவக் காப்பீடு வாங்கப் பணமில்லாமல் இருக்கிறார்கள் என்கிறது “காமன்வெல்த் ஃபண்ட்” நடத்திய ஆய்வு.

மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களுக்கு விபத்தோ, பெரிய நோயோ வந்துவிட்டால் சாவு ஒன்று தான் முடிவு. அமெரிக்காவில் சமீப காலமாக நடக்கும் பெரும்பாலான தற்கொலைகளுக்கும் காரணம் இந்த திடீர் ஏழ்மையே. தற்கொலைகளுடனும் எல்லாம் முடிந்து போவதில்லை. அவற்றைத் தொடர்கின்றன அடக்கம் செய்யக் கூட முடியாத துயரக் கதைகள். விபத்திலோ, நோயிலோ பலியான சகோதரர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் என பல உடல்களால் நிரம்பி வழிகின்றன மார்ச்சுவரிகள்.

“பணமில்லை, நீங்களே இறுதிச் சடங்கைச் செய்யுங்களேன் பிளீஸ்” என கண்ணீருடன் கெஞ்சுபவர்களின் எண்ணிக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டுமே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 36 சதவீதம் அதிகம். இறுதிச் சடங்கு செய்யவேண்டுமென்றால் செலவு அப்படி இப்படி சுமார் 10,000 டாலர்கள் ஆகிவிடும். அதை அரசாங்கம் செய்துவிட்டால் சாம்பலை மட்டும் ஒரு மாதம் கழிந்து சென்று வாங்கிக் கொள்ளலாம். அதற்கான செலவு சுமார் 350 டாலர்கள் மட்டுமே.

“என்னிடம் அப்பாவை எரிக்கக் கூட பணம் இல்லை என மகன் சொல்கிறான். மகனை எரிக்கப் பணம் இல்லை என்று அம்மா சொல்கிறார். இப்படி ஒரு கொடூரமான துயரத்தை நான் சந்தித்ததேயில்லை என நிலைகுலைந்து போய் பேசுகிறார் டேவிட் ஸ்மித் எனும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர இன்வெஸ்டிகேட்டர்.

“பன்னிரண்டு வருடங்களாக “இறுதிச் சடங்குகளை நடத்தும் குழு”வின் இயக்குனராக இருக்கிறேன். இதுவரை இப்படி அதிக எண்ணிக்கையில் பிணங்கள் கேட்பாரற்றுக் கிடந்ததே இல்லை. இறுதிச் சடங்குகளை நடத்த எல்லோருமே விரும்புகிறார்கள், ஆனால் பாவம் வசதியின்றித் தவிக்கிறார்கள்” என பதறுகிறார் பாப் ஆச்சர்மான்

இப்படி அடுக்கடுக்காய், திகில் நிரம்பிய, பரபரப்புத் தகவல்களை வெளியிட்டிருப்பது கலிபோர்னியாவின் முன்னணி நாளிதழான லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ். கையில் பணமில்லை. வாழ வழியில்லை. அப்படியே செத்துப் போனால் கூட இறுதிச் சடங்கு செய்யவும் பணமில்லை. இப்படி அடுக்கடுக்கான துயரங்களுடன் தான் நகர்கிறது இன்றைய அமெரிக்கர்களின் வாழ்க்கை.

தமிழிஷில் வாக்களிக்க…

உலகம் : கொடுமையிலும், கொடுமை…

3தனது படுக்கையறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயதான குழந்தையை மலைப்பாம்பு ஒன்று இறுக்கிக் கொன்ற படு பயங்கர துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சம்பவம் நடந்தது இங்கல்ல, அமெரிக்காவில், புளோரிடா மாகாணத்தில்.

அந்த மலைப்பாம்பு காடு மலை தாண்டியெல்லாம் வரவில்லை சார்லஸ் ஜேசன் டார்னெல் என்பவர் வளர்த்தது. அவர் குழந்தையின் தாயின் பாய்பிரண்டாம்.

இரவில் எதேச்சையாக எழுந்தவர் கூண்டில் பாம்பைக் காணாமல் அங்கும் இங்கும் தேடினால், பாம்பு படுக்கையில் படுத்திருந்த குழந்தையை முறுக்கிப் பிடித்து கடித்துக் கொண்டிருந்ததாம். அலறியடித்துப் போய் பாம்பை அடித்து இழுத்து மாற்றியும், குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது மிகப்பெரிய சோகம்.

காட்டு விலங்குகளை வீட்டில் வளர்க்க சிறப்பு அனுமதி பெறவேண்டும். ஆனால் அந்த பாம்பு அனுமதி வாங்காமல் 2வளர்க்கப்பட்டதாம். ஆதாம் காலத்திலிருந்தே பாம்புக்கும், மனுஷனுக்கும் ஒத்து வருவதில்லை. அப்புறமும் எதுக்கு இந்த விபரீத ஆசையோ ?

மலைப்பாம்பை சின்னதாக இருக்கும் போது ஆசைப்பட்டு வாங்கி விடுகிறார்கள். அது வளர்ந்தபின் புலி வாலைப் பிடித்த கதையாகி விடுகிறது, வெளியே விடவும் முடியாமல், தொடர்ந்து வளர்க்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறார்கள். இது போன்ற சம்பவம் அமெரிக்காவில் நிகழ்வது இது பன்னிரண்டாவது முறையாம்.

காட்டில் இருக்க வேண்டியவை காட்டிலும், நாட்டில் இருக்க வேண்டியவை நாட்டிலும் இருப்பதே இயற்கையோடு இணைந்த வாழ்வு. அதை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க ஒரு இரண்டு வயது குழந்தையைப் பலிகொடுக்க வேண்டியிருந்ததே உலக மகா துயரம்.

பிடித்திருந்தால் தமிழிஷ் வாக்களிக்கலாம்..

வரும் வழியில் : சென்னையைக் கலக்கும் வை.கோ

இன்று வரும் வழியில் சுவாரஸ்யமான ஒரு போஸ்டரைப் பார்க்க நேர்ந்தது.

ஒபாமா சிரித்துக் கொண்டிருக்கும் போஸ்டர் தான் அது. இதென்னடா சென்னைக்கு வந்த சோதனை ? ஒபாமா தன்னுடைய கட்சி அலுவலகத்தை சென்னையில் துவங்கியிருக்கிறாரா ? இல்லை ஓட்டு கேட்க (கவனிக்க, ஒட்டுக் கேட்க அல்ல ) சென்னை வந்திருக்கிறாரா ? என்று குழம்பியபடியே உற்றுப் பார்த்தால் இன்னொரு ஆச்சரியம்.

அருகிலேயே கோட் சூட்டுடன் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு முகம். கூர்மையாய் பார்த்தேன் அட !!! நம்ம வை.கோ ? கையில் ஒரு புக், பேனா வைத்துக் கொண்டு ஆட்டோகிராப் வாங்குவதற்கு நிற்பவரைப் போல நிற்கிறாரே !

என்ன நடக்குது ? ஒருவேளை ம.தி.மு.க வுடன் ஒபாமா கூட்டு சேர்ந்துவிட்டாரா ? இல்லை
அவருக்கு இவர் தமிழ் கத்துக் கொடுக்கிறாரா ? இது உண்மையா இல்லை குரோம்பேட்டை கிராபிக்ஸ் வேலையா ?  என்று யோசித்துக் கொண்டே காரோட்டினேன்.

அடுத்த போஸ்டரில் தான் என்ன எழுதியிருந்தது என்பதை வாசிக்க முடிந்தது.
“ஒபாமாவைச் சந்தித்து வந்த மக்கள் தலைவன் வைகோவை வரவேற்கிறோம்”  !!
ஆஹா… ஆஹா… சுவாரஸ்யமாய் இருக்கிறதே என நினைத்துக் கொண்டே பார்த்தால்,

காஞ்சி புர மதிமுக இன்னும் ஒரு படி மேலே போய்
“அமெரிக்காவின் அதிசயம் ஒபாமாவைச் சந்தித்து வந்த
முதல் இந்தியன் வை.கோ
இந்தியாவின் அதிசயம் “ என்று ஒரு அட்டகாச போஸ்டர்.

மதிமுகவின் போஸ்டர்கள்… மன்னிக்கவும், வை.கோ ரசிகர் மன்றத்தின் போஸ்டர்கள் விஜய் ரசிகர்களின் குருவி போஸ்டரை விட விர்ரென்று பறக்கிறது. சென்னை முழுவதும்.

அதிலும், அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா எனும் வாசகங்கள் வேறு :!!! ஒபாமாவைச் சந்தித்து வந்த நூறாவது நாள் – என்று கூட போஸ்டர் ஒட்டப்படலாம்.. சொல்ல முடியாது.

உங்களால புஷ்ஷை தான் பார்க்க முடியும், எங்கள் தலைவர் ஒபாமாவையே சந்திப்பார் என நாளை மதிமுக தெருமுனை கூட்டங்கள் புகழ் பாக்கள் பாடலாம்.

ஒபாமாவைச் சந்தித்த முதல் இந்தியப் பெண் என்னும் பெருமையை நீங்கள் பெறவேண்டும் என அதிமுகவின்  ஓ போடும் செல்வங்கள் அம்மாவை தூண்டி விடக் கூடும்.

கடல் கடந்து சென்றாயே, கள்ளத் தோணியிலா ? ஒபாமா என்ன புறநானூற்றுப் பாடல் கூறும் வீரத்திருமகனா ? திராவிடக் கருமகனா ? என எதிர் கட்சி அறிக்கை வெளியிடக் கூடும்.

எப்படியோ, காடுவெட்டி குருவை விடுவித்தால் மத்திய அரசுக்கு ஆதரவு என பா.ம.க பரபரப்பைக் கிளப்புகிறது. அரசு கவிழும் என பா.ஜ.க பட்டையைக் கிளப்புகிறது, பா.ஜ.கவின் எம்.பிக்களே எங்கள் பக்கம் என காங்கிரஸ் கலக்குகிறது. இந்தப் பரபரப்பில் காணாமல் போன வர்கள் இரண்டு பேர் ஒன்று அம்மா.. இன்னொன்று வை.கோ..

வை.கோ முந்திக் கொண்டு ஒபாமாவைப் பார்த்துவிட்டு வந்து விட்டார்.

மிச்சமிருக்கும் நபர் சார்பாக, அடுத்த போஸ்டர் விரைவில் ஒட்டப்படலாம்.

அமெரிக்கா : மனிதநேயம் ன்னா என்ன ?

 

அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள கிங்க்ஸ் கவுண்டி மருத்துவ மனையில் பணியாளர்களின் உதாசீனத்தால், மருத்துவமனை தரையிலேயே கிடந்து, உதவி கிடைக்காமல் இறந்து போயிருக்கிறார் நாற்பத்தொன்பது வயதான எஸ்மின் கிரீன்.

 

மனித நேயம் மிச்சமிருப்பதாய் கருதப்படும் மருத்துவமனைகளில் ஊழியர்களின் அலட்சியமும், பாராமுகமுமே மிச்சமிருப்பதாய் பறைசாற்றுகிறது இந்த நிகழ்வு.

 

முதலில் மூடி மறைக்கப்பட்டாலும், நவீனத்தின் பயனாக மருத்துவமனை காமராக்கள் எஸ்மின் கிரீன் சுமார் ஒரு மணி நேரம் தரையில் விழுந்து மரணத்தோடு போராடி, உதவிக் கரங்கள் ஏதும் இல்லாமல் கடைசியில் சாவின் கரங்களின் தன்னை ஒப்புவித்த நிகழ்வுகளை படமாகியிருக்கின்றன.

 

மருத்துவமனை காவலர், மற்றும் செவிலியர் தரையில் மரணத்தோடு மல்லிட்டுக் கொண்டிருந்த எஸ்மின் கிரீனை கண்டும் காணாமல் சென்றிருக்கின்றனர். இதன் உச்சமாக ஒரு செவிலி காலால் அந்த அம்மாவை உதைத்து தூங்கிக்கொண்டிருக்கிறாரா என சோதித்திருக்கிறார். சலனமே இல்லாமல் கிடந்த கிரீனை நிராகரித்து நகர்ந்திருக்கிறார்.

 

அந்த அறையில் காத்திருந்த மேலும் சிலர் கூட அவரை நிராகரித்து இருக்கைகளில் ஏதுவுமே நடவாதது போல அமர்ந்திருந்தது மனிதத்தின் மீது மிகப்பெரிய கேள்விக்குறியை நாட்டியிருக்கிறது.

 

முதலில் மருத்துவ அறிக்கை எஸ்மினை பணியாளர்கள் நன்றாகக் கவனித்துக் கொண்டதாகவும் அவர் நலமுடன் இருந்ததாகவும் தெரிவித்தது. தற்போது காமராக்கள் இதை வேறுவிதமாய் சொல்லவே, வேறு வழியில்லாமல் பணியாளர்கள் சிலரை பணி நீக்கம் செய்து நியாயத்தின் பக்கம் நிற்பதாகக் காட்டிக் கொண்டிருக்கிறது மருத்துவமனை.

 

எஸ்மின் கிரீன் சுமார் 24 மணி நேரம் அவசர சிகிச்சை காத்திருப்பு அறையிலேயே படுக்கை ஏதும் கிடைக்காமலும், உதவி கிடைக்காமலும் அமர்ந்திருந்தார் என்கிறது தகவல். அவர் கருப்பு இனத்தைச் சேர்ந்தவராக இருந்ததாலேயே நிராகரிப்புக்கு உள்ளானார் என குரல் கொடுக்கின்றனர் பலர்.  

உலகின் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, உலகுக்கெல்லாம் நீதி சொல்ல ஆயுதங்களோடு புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. வீட்டுக்குள்ளே நிற வெறியும், இனவெறியும் மரித்துப் போன மனிதாபிமானமுமாக வீ ச்சமடிக்கிறது

வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… !!!

எப்படா ஒரு வாய்ப்பு வரும் ஏதாவது செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று கண்ணில் ஏதாவது ஒரு எண்ணையை ஊற்றிக் கொண்டு காத்திருப்பார்கள் போலிருக்கிறது.

மெனகாட்டனிலுள்ள பெஞ்சமின் ஷெர்மனுக்குக் கிடைத்தது ஆணுறைகள். அதை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுடன் நிற்பவர்களுடன் இணைத்துப் பார்த்தார். அடித்தது ஜாக்பாட்…
ஒபாமா – மெக்கெனின்  ஆணுறைகளுக்கு கடந்த சில வாரங்களாக படு கிராக்கியாம் உலகெங்கும்.  விலை 10 டாலராம்.

தயாரித்தது எல்லாம் விற்றுப் போக இப்போது அடுத்த கட்டத் தயாரிப்பில் பிஸியாக இருக்கிறாராம் புள்ளி.

இதிலுள்ள கவர்ச்சிகரமான வாசகம் தான் இந்த ஈர்ப்புக்குக் காரணம் என்கின்றார் இவர்.

ஒபாமா காண்டம் சொல்கிறது : Use With Good Judgment

மெக்கெயின் காண்டம் சொல்கிறது : Old but not expired 

நம்ம ஊர் தலைவர்கள் தலையைப் போட்டுப் பார்த்தா எப்படி இருக்கும்ன்னு நினைச்சுப் பார்த்தா சுவாரஸ்யமா இருக்கு. ஏதாச்சும் தோணினா.. சொல்லுங்க :)

ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா..

ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா கணக்கா, அமெரிக்காவிலுள்ள பயிற்சியாளர் ஒருவர் ஓணான்களை வளர்க்கிறார்.

பல்லி, பாம்பு, பூச்சி என விதவிதமாய் வளர்ப்பது மேலை நாட்டவர்களின் வழக்கம் எனினும், இந்த ஓணான்கள் சற்று வித்தியாசமானவை.

11.jpg

மனிதர்களைப் போல பல வித்தைகளைச் செய்து காட்டுகின்றன, விளையாட்டு சோபாவில் அமர்ந்து ஒய்யாரமாய் போஸ் கொடுக்கின்றன, விளையாட்டு இசைக்கருவிகளை வைத்து படம் காட்டுகின்றன.

21.jpg

எல்லாம் நல்லது தான் ஆபீசர், இந்தியாவுல இதுகளையெல்லாம் கொண்டு வந்துடாதீங்க. வைத்தியசாலைகளில் எண்ணை தயாரிக்கவும், பசங்களுக்கு ஈக்கில் வைத்து பிடிக்கவும், குறிபார்த்துக் கல்லெறியவும் தான் ஓணான்கள் பயன்படுகின்றன இங்கே.