மனிதனின் மூதாதையார் இதோ….

Fossil 

ஆதாம், பிரம்மா என மதங்கள் முதல் மனிதனின் தோற்றம் குறித்து பல்வேறு தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் விஞ்ஞானம் அதையெல்லாம் நம்பத் தயாராய் இல்லை.

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பதையே விஞ்ஞானம் பொதுவாக ஏற்கிறது. எனில் குரங்குகள் எங்கிருந்து வந்தன ? அதன் மூதாதையார் யார் என எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடையாய் இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது இந்த உலர் எலும்புக் கூடு.

இந்த உயிரி வாழ்ந்த காலம் சுமார் 4.7 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது எனும் செய்தி வியப்பூட்டுகிறது.

குரங்குகள், மனிதன் போன்ற அனைத்துக்குமே முன்னோடியாக இருக்கக் கூடும் இந்த உயிரி என்பதே விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

உலகிலுள்ள உயிரிகள் இரண்டு மாபெரும் பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவு குரங்கு, மனிதன் என மாறியது, இன்னொரு பிரிவு லெமூரியர்கள், இதர ராட்சத விலங்குகள் என மாறியது. இந்த உயிரி அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என விஞ்ஞான பாஷை பேசுகின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த எலும்புக் கூடு ஒரு பெண் உயிரியின் எலும்புக் கூடு எனவும், இதற்கு மனிதர்களுடைய இயல்புகள் பல இருந்திருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த எலும்புக் கூடைக் கொண்டு மனிதர்களுக்கும் பிற உயிரிகளுக்கும் இடையேயான தொடர்பை இந்த எலும்புக் கூடு விளக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

சமூகத்துக்குப் பயனளிக்கும் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் நல்லது தான் !

துயரத்தைத் தாண்டலாம் !!! புதிய ஆராய்ச்சி

எதிர்பாரா மரணங்கள் மனிதனை உலுக்கி எடுக்கின்றன. அதுவும் கண்ணுக்கு முன்னாலேயே அன்புக்குரியவர்களைப் பலிகொடுக்கும் துயரம் அளவிட முடியாதது. சுனாமி, நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகள் உடனிருப்பவர்களை பித்துப் பிடித்தவர்களைப் போல ஸ்தம்பிக்க வைத்து செயலிழக்க வைக்கின்றன.

உலக அளவில் இத்தகைய துயரங்கள் ஏற்படுத்தும் மூளை பாதிப்புகளால் பல்லாயிரம் பேர் சுய நினைவு இன்றியும், அதிக பட்ச மன அழுத்தத்திலும் தங்கள் வாழ்க்கையையும் இழந்து விடுகின்றனர்.

இதன் காரணம் என்ன ? இதற்கு ஏதேனும் தீர்வு இருக்க முடியுமா ? என ஒரு அறிவியல் குழு ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. அந்த ஆய்வின் முடிவாக மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஒன்றை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

அதாவது, ஒரு திடீர் மரணமோ, அதிகப்படியான சோகமோ மூளையில் கார்டிகோட்ரோபின் எனும் அமிலத்தை சட்டென சுரக்கவைத்து மூளை முழுவதும் பரப்பி விடுகிறது என்பதே அந்தக் கண்டுபிடிப்பு.

இந்த அமிலமே அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொண்ணா துயரத்தையும் தருவிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

நீண்டகால உறவுகள் துண்டாகும்போது நிகழும் அதிகப்படியான வலியைக் குறைக்கவும், துயரத்தை எதிர்கொள்வோருக்கு விரைவில் மீளும் வழியைக் காட்டவும் இந்த கண்டுபிடிப்பு உதவும் என இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட அட்லாண்டாவின் எமோரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

துயரங்கள் தவிர்க்க இயலாதவை, அவற்றைத் தாங்கும் மனம் எளிதில் அமைந்து விடுவதில்லை என்பது இழப்பைச் சந்தித்தவர்களால் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய துயரங்களின் அழுத்தத்தை மருந்து, மாத்திரைகள் வாயிலாக குறைக்க முடியுமெனில் அந்த ஆராய்ச்சி வரவேற்கப்பட வேண்டியதே !

பாட்டி கேட்டா சிரிப்பாங்க …

நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர். அதாவது நமது வாயிலுள்ள உமிழ் நீருக்குக் காயங்களை ஆற்றும் சக்தி இருக்கிறது என்பதே அது.

இதைத் தெரிந்து கொள்ள நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் வரை போகவேண்டிய அவசியம் இல்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும். காரணம் இயல்பிலேயே மருத்துவத்தில் மகத்துவம் வாய்ந்த நமது பாட்டிகள், தாத்தாக்கள். காயம் பட்ட இடத்தில் சட்டென உமிழ் நீர் தொட்டு வைக்கும் மருத்துவர்கள் அல்லவா அவர்கள்.

சரி, பாட்டி தாத்தத இல்லேன்னா பரவாயில்லை. உங்க வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு சின்ன காயம் பட்டா என்ன செய்யும். அது உமிழ்நீரால் அந்தக் காயத்தை நக்கி ஈரப்படுத்திக் கொண்டே இருக்கும் தானே. அதற்குத் தெரிந்த மருத்துவம் இப்போது தான் நெதர்லாந்து வாசிகளுக்குத் தெரிந்திருக்கிறது.

வாயில் ஏற்படும் புண் விரைவில் ஆறுவதற்கான காரணத்தை நாங்கள் விளக்கியுள்ளோம் என பீற்றிக் கொள்கின்றனர் நமது வைத்திய தேசத்தின் வலிமை அறியாதவர்கள்.

இனி என்ன, உமிழ்நீரில் இருக்கக் கூடிய ஹிஸ்டெயின் எனும் பொருளைப் பிரித்தெடுத்து அதன் தன்மையில் மருந்து தயாரிப்பார்களாம், நாமும் மறக்காமல் வெளிநாட்டிலிருந்து அதை இறக்குமதி செய்து பயன்படுத்துவோம். பேடெண்ட் நெதர்லாந்துக்கு போட்டுக் கொண்டு.

இன்னொன்று நினைவுக்கு வருகிறது, கல்லில் கால் இடித்து காயம் ஏற்பட்டால் அந்தக் காயத்தின் மீது சிறுநீர் கழிக்கும் வழக்கம் இன்னும் கிராமங்களில் உண்டு. அதை எந்த நாட்டுக்காரன் ஆராய்ந்து ஒரு புதிய கண்டுபிடிப்பாக வெளியிடப் போகிறானோ தெரியலையே

பின் குறிப்பு : படத்தைப் பார்த்து ரொம்ப ஜொள்ளு விடாதீங்க, அது மருந்து ! அருமருந்து.

நல்ல வேளை நீங்க டீ குடிக்கிறீங்க !!!

“அடிக்கடி டீ குடிக்கிறது தாங்க என்னோட வீக் பாயிண்ட்”  என்கிறீர்களா ? அது தான் நீங்க பண்ற (ஒரே) நல்ல காரியம் என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

தினமும் மூன்று டம்ளருக்கு மேல் டீ குடித்தால் உங்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு ரொம்பவே குறையுமாம். முன்னரும் இதே போல ஒரு ஆராய்ச்சி வந்திருந்தது, ஆனால் அது பால் கலக்காத டீ மட்டுமே குடிக்க வேண்டுமென வற்புறுத்தியது. ஆனால் இந்த புதிய ஆராய்ச்சியோ பால் கலக்கலாம் தப்பில்லை என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது.

இது மட்டுமா, டீ குடிங்க.. உங்க எலும்பெல்லாம் நல்ல பலமாயிடும். நல்ல உற்சாகம் கிடைக்கும் என்றெல்லாம் உற்சாகமாய் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள்.

வயதான பெண்களுக்கு வரும் எலும்பு சிதைவு நோய்க்குக் கூட தேனீர் கொஞ்சம் கட்டுப்பாடு விதிக்கிறதாம்.

எவ்ளோ தான் குடிக்கறது ஒரு நாள் என்ற கேள்விக்கு, மூன்று முதல் எட்டு டம்ளர்கள் என்கின்றனர்.

இனியென்ன, சுடச்சுட ஒரு டீ குடிச்சிட்டு வந்து படிங்க.

நவீனத்தின் அடுத்த மைல்கல்.

one1.jpg

அட்டகாசமான மெல்லிய பாட்டரி ஒன்றை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாட்டரி பேப்பர் போல மெல்லியதாக இருக்கிறது. இதன் தடிமன் 0.5 மில்லி மீட்டர் மட்டுமே. எல்லாமே வசதியாய் இருக்கிறது, ஆனால் இதை கண்டுபிடித்தவருடைய பெயரான Zhang Xiachang ஐ உச்சரிப்பது மட்டும் கடினமாய் இருக்கிறது :)