அவள் விகடன் : மேரி கோம் – இலட்சியங்கள் வீழ்வதில்லை.

Mary-Kom4

சானியா மிர்சாவைத் தெரியுமா என்று யாராவது கேட்டால் அவரை ஒரு வேற்றுக் கிரக வாசிபோல பார்ப்போம். சரி.. இருக்கட்டும் தப்பில்லை. மேரி கோம் யாரென கேட்டால் ? அது யாருங்க மேரி கோம் ? கேள்விப்பட்ட பெயராய் இல்லையே என இழுக்கிறீர்களா ?

நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஜனாதிபதி கைகளால் போன மாதம் பெற்றவர். நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர். தேசிய அளவில் 10 தங்கப் பதக்கங்களும், சர்வதேச அளவில் 14 தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் பெற்றவர். இத்தனை சாதனைகள் செய்தும் பரபரப்பாகாமல் இருக்கும் இருபத்து ஏழு வயதான குத்துச் சண்டை வீராங்கனை.

வெற்றிக்கான வேட்கை இருந்தால் எதுவுமே தடையாகாது என்பதன் சமகால உதாரணம் தான் மேரி கோம். 1983 மார்ச் ஒன்றாம் தியதி மணிப்பூரின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்தார் மேரி கோம். தந்தை தோன்பு கோம், தாயார் சனீகம் கோம் இருவருமே வறுமைக்கு வாழ்க்கைப்பட்டவர்கள் தான். வறுமையில் உழன்ற மேரியின் ஆரம்ப கால இலட்சியம் பதக்கங்கள் வாங்கிக் குவிப்பதல்ல, விளையாட்டில் பரிசுப் பணம் வாங்கி பெற்றோருக்கு உதவ வேண்டும் என்பது மட்டும் தான். அதற்காக ஓட்டப் பந்தயம், அது இது என எல்லா விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டினார்.

அவளுடைய வாழ்க்கையை பாக்ஸிங் நோக்கி திருப்பி பெருமை தேடிக் கொண்டவர் பாக்ஸிங் வீரர் டிங்கோ சிங். இவரும் மணிப்பூர் காரர் தான். 1998ல் இவர் ஆசிய தங்கக் கோப்பையைப் பெற்று திரும்பிய போதுதான் மேரிக்குள்ளும் பாக்ஸிங் ஆசை படர்ந்தது. நன்றாக யோசித்து 2000ல் பாக்ஸிங் விளையாட்டில் நுழைந்தார். பாவம், கைக்குப் போடும் கிளவுஸ் வாங்க கூட பணமில்லாத சூழல் அவருக்கு. அனைத்தையும் சமாளித்தார். இரண்டே வாரங்கள் தான். விளையாட்டின் அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்! அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு அவரிடம். ஆனால் இவர் பாக்ஸிங் கற்றுக் கொள்வது வீட்டில் யாருக்குமே தெரியாது.

ஒரு நாள் எதேச்சையாய் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்த மேரியின் தந்தையின் கண்களின் தட்டுப்பட்டது ஒரு பெண்ணின். பதக்கத்துடன் சிரிக்கும் படத்தை உற்று உற்றுப் பார்த்தார். அது தன் மகளே தான். மேரி கோம் மாநில அளவில் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்ற செய்தி அது. அப்பாவுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சி. ஆனந்தப் படுவதற்குப் பதிலாக கோபம் முகத்தில் குதித்தது. நீ குத்துச் சண்டை போடறியா ? அப்புறம் யாரு உன்னை கல்யாணம் செய்வான் ? அடிபட்டா என்ன செய்வே ? என தந்தைக்கு பல கவலைகள். ஆனால் தாய் ஆதரவுக் குரல் கொடுத்தார்.

மேரிகோம் கலப்பையில் கை வைத்து விட்டார். உழாமல் திரும்பிச் செல்ல நினைக்கக் கூட இல்லை. அங்கே ஆரம்பித்த அவருடைய விடா முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை, அர்ப்பணம் இவையெல்லாம் இன்று அவரை இந்த இடத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. அர்ஜூனா, பாரத ரத்னா, இந்தியன் ரியல் ஹீரோஸ் விருதுகளைத் தொடர்ந்து, கடந்த மாதம் உயரிய கேல் ரத்னா விருதையும் வழங்கி இந்திய அரசு மேரியை ஊக்கமூட்டியிருக்கிறது.P-420

மணிப்பூரில் அமைதி உருவாகட்டும். அந்த அமைதி இந்தியா முழுதும் பரவி இந்தியாவே அமைதியாய் இருக்கட்டும். என விருதை வாங்கிய கையோடு ஏங்கினார் மேரிகோம். அதற்கு ஒரு பின்னணி உண்டு. 2006ம் ஆண்டு தனது பெரும் பாசத்துக்குரிய மாமனாரை துப்பாக்கிக் குண்டுக்கு பலிகொடுத்த துர்பாக்கியம் அவருக்குள் வலிக்கிறது. எனக்கு உதவி செய்ய வந்த மாமனாரை யாரோ கொன்று விட்டார்கள். ஏன் கொன்றார்கள் எனும் கேள்விக்கு இன்னும் விடையில்லை. மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்று ஒவ்வோர் கணமும் பிரார்த்திக்கிறேன். மேரி கோமின் வார்த்தைகளில் துயரம் கூடு கட்டிக் குடியிருக்கிறது.

இந்திய அரசின் விருது கிடைத்த உற்சாகத்தில் இருக்கிறார் மேரி கோம். கூடவே அடுத்த மாதம் வியட்னாமில் நடைபெறப்போகும் போட்டிக்கான பரபரப்பும் அவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

இதை எல்லாவற்றையும் விட மிக ஆனந்தமான விஷயம் அவர் ஒலிம்பிக்கில் விளையாடப் போகிறார் என்பது தான். 2012ல் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பாக்ஸிங்கில் கலந்து கொள்ள மேரிக்கு அழைப்பு வந்திருக்கிறது. இது என் வாழ்நாள் கனவு. இதில் வெற்றி பெற்று தேசத்தின் மார்பில் தங்கப் பதக்கம் குத்துவேன் என பரவசமாகிறார் மேரி.

ஐ.ஓ.எஸ் (Infinity Optimal Solutions Pvt. Ltd) ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனம் மேரியுடன் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் இட்டுள்ளது. கூடவே ஒலிம்பிக் கோல்ட் குவஸ்ட் அமைப்பும் மேரியை ஸ்பான்சர் செய்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம். ஒலிம்பிக் எனும் கனவை நிஜமாவதை இப்போதே என் கண்களில் காண்கிறேன் என பூரிக்கிறார் மேரி.

மேரி பாக்ஸிங்கில் நுழைந்த பின் திரும்பிச் செல்தல் என்ற கேள்வியே எழவில்லை. அடுத்தகட்டத்தை நோக்கிய தேடல் மட்டுமே எப்போதும் அவரிடம். தினமும் சுமார் ஆறுமணி நேரம் கடுமையான பயிற்சி செய்கிறார். இப்படி முழு மூச்சாக பாக்ஸிங்கில் இருப்பவருக்கு திருமணமாகி இரட்டைக் குழந்தைகள் இருக்கிறார்கள்!

கடந்த ஆண்டு சீனாவில் நடந்த போட்டியில் பதக்கம் வெல்வார் என அவரைத் தவிர யாருமே நம்பவில்லை. காரணம் சமீபத்தில் தான் இரட்டைக் குழந்தைகளுக்கு அம்மாவாகியிருந்தார். பயிற்சி எடுத்து வருடக்கணக்காகியிருந்தது. ஆனால் மேரி மட்டும் தன்னை நம்பினார். இரண்டு மாதங்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டார். விளைவு கைகளில் தங்கப் பதக்கம் ! இப்படி மேரி வாழ்வின் ஒவ்வோர் பக்கமும் நம்பிக்கைப் பாடங்களால் நிரம்பியிருக்கிறது.

MK1அவரது இரட்டைக் குழந்தைகளுக்கு இப்போது வயது இரண்டு. தனது கேல் ரத்னா விருதை இரட்டைச் செல்வங்களுக்குத் தான் சமர்ப்பித்திருக்கிறார், ஒரு பாசமான அம்மாவாக !. எல்லா ஆண்களின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாகச் சொல்வார்கள். இவருடைய வெற்றிக்குப் பின்னால் இருப்பது இவரது கணவர். குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு மனைவியையும் உற்சாகப் படுத்தும் இரட்டை வேலை அவருக்கு. “அத்தனை சுமைகளையும் சிரித்துக் கொண்டே சுமக்கும் அவர் என்னோட சிறகில்லாத தேவ தூதன் என்று” தழுதழுக்கிறாள் மேரி.

ஏழ்மை இலட்சியங்களை எப்படியெல்லாம் அலைக்கழிக்கும் என்பதை நேரில் பார்த்தவர் மேரி. போட்டிகளில் வெற்றி பெற ஆரம்பித்த பின்பு தான் தனது பெற்றோருக்கு வசிக்க ஒரு இடத்தை வாங்க இவரால் முடிந்திருக்கிறது. வறுமையில் வாடிக்கொண்டிருந்த தனது உடன்பிறப்புகளுக்கு உதவி செய்ய முடிந்திருக்கிறது. ஆனால் பெற்ற பணத்தையெல்லாம் இன்வெஸ்ட் செய்யும் மனநிலை இந்த வெள்ளை மனசுக்காரிக்கு இல்லை.

தனது பரிசுப் பணத்தில் பாதியையாவது ஏழை விளையாட்டு வீரர்களுக்கு செலவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறார். “எம்.சி. மேரி கோம் பாக்ஸிங் அகாடமி “ என அவர் ஆரம்பித்த பயிற்சி நிலையம் அவருடைய உன்னத மனதின் உதாரணம். அங்கே ஏழை விளையாட்டு வீரர்களுக்கு இலவசப் பயிற்சி நடக்கிறது. வெளியூரிலிருந்து வரும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சியுடன் சேர்த்து தங்குமிடம், உணவு எல்லாமே இலவசம் ! எல்லாம் தனது சொந்தப் பணத்திலிருந்து தான் செலவழிக்கிறார். சுமார் 20 பேர் இங்கே பயிற்சி பெற்று வருகிறார்கள். “ இந்தியாவில் கிரிக்கெட்டும், டென்னிசும் தவிர வேறு விளையாட்டுகளே இல்லையா” எனும் இவருடைய கேள்விக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

மேரி விருது வாங்கியதில் இங்குள்ள மாணவர்களுக்கு ஒரே கொண்டாட்டம். மேரியை அவர்கள் ஒரு அன்னையாகப் பார்க்கிறார்கள். “எங்கள் கோச் உயரிய விருதை வாங்கியதில் எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அவர் எங்களுக்கு கோச் அல்ல, வழிகாட்டும் தெய்வம்…” என கண் கலங்குகிறார் இங்கே பயிலும் நாகிசா எனும் மாணவி.

உறுதியான இலட்சியத்துடனும், உயர்ந்த உள்ளத்துடனும் வாழும் மேரியின் ஒலிம்பிக் கனவும் நனவாகட்டும்.

தமிழிஷில் வாக்க(கி)ளிக்க..

ஜூ.வி : கற்பு வாங்கலையோ …கற்பு !

EFG103

“பதின்மூன்றே வயதான இளம் பெண்ணின் விர்ஜினிடி விற்பனைக்கு”. அதிக விலைக்குக் கேட்பவர்களுக்கே விற்கப்படும் ! ரஷ்ய இணைய தளம் ஒன்றில் இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்ததும் உஷாரானது மாஸ்கோவின் காவல்துறை. பகிரங்கமாக இந்த விளம்பரத்தைக் கொடுத்தது யார் என சைபர் குழு அதிரடி விசாரணையில் குதித்தது. விசாரணை முடிவோ காவல் துறையையே கதிகலங்க வைத்து விட்டது. காரணம், அந்த விளம்பரத்தைக் கொடுத்தது வேறு யாருமல்ல, அந்தப் பெண்ணின் தாய் !

இதே போல பதினாறு வயதான ஒரு பெண்ணின் கற்பும் ரஷ்ய இணைய தளம் ஒன்றில் ஏலம் போட்டு விற்கப்பட்டது. அங்கும் குற்றவாளி பெண்ணின் சொந்த அம்மாவே தான் ! இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ரஷ்யாவில் பெரும் சலசலப்பை உருவாக்கியிருக்கின்றன.

இப்படி ஒரு படு பாதகச் செயலைச் செய்த தாய்க்கு கொஞ்சமேனும் குற்ற உணர்வு இருக்குமா என பார்த்தாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பதின் மூன்று வயது மகள் அலியோனாவின் தாய் ஸ்வெட்லானா சந்தோசமாகப் பேசுகிறாள். நான்கு இலட்சம் ரூபிள்களுக்கு என் மகள் விலை போயிருக்கிறாள். இத்தனை விலை கிடைக்கும் என நான் நினைக்கவே இல்லை என வியக்கிறார்.

பதினாறு வயது மகள் போலினாவின் கற்பு இலட்சம் ரூபிள்களுக்கு விலைபோயிருக்கிறது ! அவளுடைய தாய் மரியா மகளை கையோடு அழைத்துக் கொண்டு “கஸ்டமரிடம்” ஒப்படைத்திருக்கிறாள் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல்.

எனக்கு நிறைய கடன் இருக்கிறது. கடன்களை அடைக்க இது தான் எளிய வழி. கற்பைப் பாதுகாத்து வைத்து என்ன ஆகப் போகிறது ? இதையெல்லாம் நான் எனக்காகச் செய்யவில்லை. என் மகளுக்காகத் தான் செய்திருக்கிறேன். கடன்களை அடைத்தது போக மிச்சமிருக்கும் பணம் முழுதும் அவளோட கல்யாணச் செலவுக்குத் தான் என்கிறார் மரியா சர்வ சாதாரணமாக. இப்போ எனக்கு இளமையும் இல்லை. வயசும் இல்லை. இல்லேன்னா என்னோட கற்பையே ஒரு நல்ல விலைக்கு விற்றிருப்பேன் என்கிறார் தடாலடியாக ! 

அம்மாக்கள் தான் இப்படி சகஜமாய்ப் பேசுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களோ கண் கலங்குகின்றனர். “இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்குத் தெரியவே தெரியாது. போட்டோ எடுக்கலாம்ன்னு சொல்லித் தான் அம்மா என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. ஆனா கடைசில ஆள் வெச்சு பலாத்காரம் பண்ணிட்டாங்க. என்னோட அம்மா இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை” என விசும்பும் பதின் மூன்று வயது சிறுமி பள்ளிக்கூடம் செல்கிறாள்.Alina Percea

“எனக்கு இந்த சமாச்சாரமே தெரியாது. தெரிஞ்சிருந்தா நிச்சயம் ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன்” என கண் கலங்கும் பதினாறு வயதுப் பெண்ணும் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள்.  

இணையத்தில் சமீப காலமாகவே இந்த “விர்ஜினிடி” விற்பனை வெகு ஜோராக நடந்து வருகிறது. படிக்கப் பணமில்லை, ஆடம்பரமாய் செலவழிக்க வசதியில்லை, அம்மாவின் மருத்துவச் செலவுக்குப் பணம் வேண்டும் என ஏதேதோ காரணங்களுக்காக கற்பு விற்கப்படுகிறது. இவர்களை ஏலத்தில் எடுக்கவும் போட்டா போட்டி நிலவுகிறது. எக்கச்சக்கமான பணம் ஒவ்வோர் ஏலத்திலும் கைமாறுகிறது. பெரும்பாலும் வெளி நாடுகளில் வசிக்கும் தொழிலதிபர்கள் தான் இவர்களை ஏலத்தில் எடுக்கின்றனர்.

வேலைக்கு சர்டிபிகேட் சுமந்து திரிவது போல இவர்கள் தங்கள் விர்ஜினிடியை நிரூபிக்கும் மருத்துவ சர்ட்டிபிகேட்டுடன் அலைகிறார்கள்.  சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபின் ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து இவர்கள்  “ஒரு நாள் முதல்வி” யாகிறார்கள்.

ரொமானியாவின் எலீனா, இத்தாலியப் பெண் பிக்கோ, பெருகுவே நாட்டு மாடல் அழகி, மான்செஸ்டர் பல்கலைக்கழக மாணவி கேரிஸ் என கற்பை விற்போரின்  பட்டியல் மிக நீளமானது.

அமெரிக்காவில் வசித்து வரும் பதினெட்டு வயது ரொமாலியப் பெண் எலீனா பெர்சியா. கம்ப்யூட்டர் படிக்க காசில்லை, விற்பதற்கு பாத்திர பண்டம் ஏதும் இல்லை என கற்பை ஏலமிட்டார். 8800 பவுண்ட்களுக்கு ஏலத்தில் எடுத்தவர் இத்தாலியிலிருந்த தொழில் அதிபர் ஒருவர். அவர் எலீனாவை வெனிஸ் நகரத்துக்கு “பஸ்ட் கிளாசில்” பறக்க வைத்து அங்குள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.

“பிசினஸ் நல்லா முடிஞ்சுது !” என எந்தவித சங்கோஜமும் இன்றி கூறும் எலினாவுக்கு வருத்தம் இரண்டே இரண்டு.

ஒன்று, ஐம்பதாயிரம் பவுண்ட் க்கு ஏலம் போகும்ன்னு நினைச்சேன். ஆனா ஜஸ்ட் எட்டாயிரத்து எண்ணூறு தான் கிடச்சுது. இரண்டு, ஒரு யூத் ஹீரோவை எதிர்பார்த்தேன் வந்தவரோ 45 வயசு குள்ள மனுஷன் !

“ஹோவர்ட் ஸ்டர்ன் ஷோ” என்பது ஹேவர்ட் ஸ்டர்ன்  என்பவரால் நடத்தப்படும் அமெரிக்காவிலுள்ள ஒரு ரேடியோ டாக் ஷோ. இந்த டாக் ஷோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேசினாள் நடாலி டைலன் எனும் 22 வயதுப் பெண். அந்த உரையாடலின் போது தனது கற்பை ஏலமிடப் போவதாக பகிரங்கமாக அறிவித்து கேட்டவர்களை திடுக்கிடச் செய்தார்.

சொன்னது போலவே இணையத்தில் கடைவிரித்த அவரது கற்பு சடசடவென ஏலத்தில் போனது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தனது கற்பு விலையேறிக் கொண்டிருப்பதைக் கண்ட நடாலி இன்னும் ஏலத்தை முடித்துக் கொள்ளவில்லை. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விலை பேசியிருக்கிறார்களாம். இன்னும் தினம் தோறும் இவரைக் குறித்த செய்திகள் தினமும் ஹாட்டாக உலவுகின்றன. ஏலத் தொலை மில்லியன் கணக்கில் எகிற நடாலி அதிர்ந்து போயிருக்கிறாராம். வியப்பின் உச்சியில் இருந்து கொண்டு “பெண்ணின் கற்பு விலை மதிப்பானது ! அதை விற்பதே நியாயமானது” என தத்துவம் பேசுகிறார் நடாலி.

Natalie Dylanகற்பு விற்பனையை சட்டம் “பாலியல் தொழில்” எனும் கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் இந்த விற்பனையைத் தடை செய்ய சட்டத்தால் முடியாது. ஒரு விதத்தில் வீட்டிலுள்ள பொருட்களை ஏலம் இடுவதைப் போலத் தான் இதையும் கணக்கில் எடுக்க வேண்டி இருக்கும் என்கிறார் அமெரிக்க வழக்கறிஞர் மார்க் ரண்டாசா.

பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் ஏலம் நடந்தாலோ, ஏலமிடும் நபர் பதினெட்டு வயதைக் கடந்தவர் என்றாலோ சட்டம் சைலண்டாய் தான் இருக்கும் என்கிறார் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ ஏஜெண்ட் டேவிட் ஸ்டாரெட்ஸ்.

ஆனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டு வரும் பணத்துக்கு ஒழுங்காக வரி கட்டவேண்டுமாம் ! சில இடங்களில் வரி சுமார் 70 சதவீதமாம் !!!

இப்படி தங்கள் கற்பை தாங்களே விற்பது பரவலாக நடந்தாலும், அம்மாவே பெண்ணின் கற்பை விற்றிருப்பது இது தான் முதல் முறை.  அந்த அம்மாக்கள்  கஸ்டமர்களுக்கு இட்ட ஒரே கண்டிஷன் “பாதுகாப்பா” உறவு கொள்ளுங்கள் என்பது தானாம்

இப்படி ஒரு கீழ்த்தரமான செயலைச் செய்த இரண்டு அம்மாக்களும் இப்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் செய்த குற்றத்துக்கான பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கவும் சட்டத்தில் இடம் உண்டாம்.

“வயசுப் பிள்ளையை வளக்கிறது மடியில நெருப்பைக் கட்டிட்டு அலையற மாதிரி” என பதட்டப்படும் தாய்மார்களைப் பார்த்து தான் நமக்குப் பழக்கம். அதனால் தான் பிள்ளைகளை அசிங்கப்படுத்தும் தாய்மார்களை நினைத்தாலே அதிர்கிறது மனசு !

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்

இறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் !

Sperm2

“ஐயோ… என்னால் அப்பாவாக முடியாதே” என இனிமேல் ஆண்கள் யாருமே புலம்பத் தேவையில்லை என்கிறது பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களின் ஒரு சூப்பர் ஆராய்ச்சி முடிவு.

விந்தணுவும் முட்டையும் இணைந்து கரு உருவாவது தானே இயற்கையின் நியதி. ஒருவேளை நோயினாலோ, வேறு ஏதேனும் காரணத்தினாலோ சரியான விந்தணுக்கள் இல்லாத ஆண்கள் என்ன செய்வது ?

கவலையை விடுங்கள் உங்கள் உடலிலுள்ள ஒரு “ஸ்டெம் செல்” போதும் உங்களுக்குச் சொந்தமான ஒரு விந்தணுவை உருவாக்கி விடலாம் என்பது தான் அந்த ஆராய்ச்சி சொல்லும் ஆச்சரிய சங்கதி. பிரிட்டனின் நியூகாசில் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்தி உலகின் புருவத்தை உயர வைத்திருப்பவர் பேராசிரியர் கரிம் நயிர்னியா.

இன்றைய தேதியில் ஆறு தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கிறது. பழைய காலத்தைப் போல குழந்தையில்லையேல் பழியை பெண்ணின் தலையில் போட்டு விட்டு தப்பிக்கவும் நவீன யுகம் வளர்ச்சி இடம் தருவதில்லை. ஒரு சோதனை போதும் யாருக்குப் பிரச்சினை, என்ன பிரச்சினை போன்ற சர்வ சமாச்சாரங்களையும் புட்டுப் புட்டு வைக்க.

குளோபல் வார்மிங், ஆபீஸ் டென்ஷன், பீட்சா, பர்கர், சீஸ் என கொழுப்பு உணவுகள், நோ எக்சர்சைஸ், மன அழுத்தம் இப்படி ஆயிரத்தெட்டு காரணங்கள் இதைச் சுற்றி. அதனால் இப்போதெல்லாம் ரேஷன் கடை வாசலில் நீளும் கூட்டத்தை விட அதிகமாய் கைனோகாலஜிஸ்ட் களின் வாசலில் கூட்டம் நீள்கிறது என்பது தான் நிஜம்.

உண்மையில், பிரச்சினை இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆண்களிடம் தான். ஜீவனில்லா விந்தணு, வீரியமில்லா விந்தணு, மூவ்மெண்ட் குறைவான விந்தணு, குறைவான எண்ணிக்கை இப்படி எக்கச்சக்கமான பிரச்சினைகள் இந்த உயிரணுவைச் sperm3சுற்றி. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாகக் கூடும் இந்த ஆராய்ச்சி என்பதே இப்போதைக்கு மருத்துவ உலகின் நம்பிக்கை.

உலக மருத்துவ வரலாற்றிலேயே முதன் முறையாக எனும் அடைமொழியுடன், ஒரு ஆண் கருவிலிருந்து ஒரு செல்லைப் பிரித்தெடுத்து, , அதை சோதனைக்கூடத்தில் ஸ்பெர்ம் ஆக வளரச் செய்திருக்கிறார் அவர். கருவிலிருந்து தான் செல்லை எடுக்க வேண்டுமென்றில்லை, ஆண்களின் கைகளிலிருந்தே ஒரு ஸ்டெம் செல்லைப் பிரித்து எடுத்து ஒரு ஸ்பெர்ம் செல்லை உருவாக்க முடியும் என நம்புகிறார் பேராசிரியர் கரிம் நயிர்னியா.

எளிதாய் சொன்னாலும் இதன் பின்னணியில் உள்ள உழைப்பு அசாத்தியமானது. ஸ்டெம் செல் ஒன்றை திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி, அங்கிருந்து சாதாரண வெப்பநிலைக்குக் கொண்டு வந்து வைட்டமின்கள் உதவியுடன் ஸ்பெர்ம் ஆக வளர்த்தெடுக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகிறதாம். இந்த விந்தணுவை IVF முறைப்படி நேரடியாக முட்டையில் செலுத்தினால் கரு தயார். ஆண்மையில்லை, விந்தணு இல்லை எனும் ஆண்களின் குறைபாடுகளுக்கு குட்பை Spermசொல்லிவிடலாம்.

இவர் ஏற்கனவே இந்த ஆராய்ச்சியை எலிகளை வைத்து நடத்தி நிறைய எலிக்குட்டிகளை உருவாக்கினார் என்பது வியப்புச் செய்தி ! ஆனால் மனித விந்தணுவை வைத்து இன்னும் குழந்தையை உருவாக்கவில்லை, காரணம், பிரிட்டனில் அதற்கான அனுமதி இல்லை என்பது தான்.

ஏற்கனவே செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் முறை இருக்கிறது. ஆனால் அதற்கு ஸ்பெர்ம் யாராவது தானமாய் தரவேண்டும், முட்டை யாராவது தானமாய் தரவேண்டும். இரண்டையும் சேர்த்து ஏதோ ஒரு தாயின் கருவறையில் கருவாய் வளர்க்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் “ எனக்குள்ள ஓடற இரத்தம் தான் உனக்குள்ளயும் ஓடுது” என டயலாக் அடிக்க முடியாத உறுத்தல் பெற்றோருக்கு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் இந்த புதிய ஆராய்ச்சி மட்டும் நடைமுறைக்கு வந்தால், அச்சு அசலாக பெற்றோரின் குணாதிசயங்களுடன் இயற்கையாய் பிறக்கும் குழந்தைக்குரிய அத்தனை இயல்புகளோடும் செயற்கையாய் ஒரு குழந்தையை உருவாக்க முடியும் என்கிறார் கரீம்.

இந்த ஆராய்ச்சி ஸ்பெர்ம் தொடர்பான பல ஆராய்ச்சிகளுக்கான கதவுகளை ஒரு சேரத் திறந்திருக்கிறது. உயிரணுக்கள் எப்படி உருவாகின்றன, வளர்கின்றன, என்னென்ன தன்மையில் வலுவடைகின்றன என அனைத்து நுண்ணிய விஷயங்களையும் இனிமேல் விரிவாக அறிய முடியும் என்பது மருத்துவ நம்பிக்கை. அப்படி நடந்தால் “வயாகரா” போல ஒரு மாத்திரை வந்து சர்வ உயிரணுப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த அவசர உலகில் இனிமேல் “அந்த” விஷயங்களெல்லாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்கள் தேவைப்படும் போது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது. “ஏங்க, உங்க கையைக் கொஞ்சம் நீட்டுங்க. ஒரு செல் வேணும், குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறேன்” என மனைவியர் சொல்லும் காலத்தை நினைத்தால் கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கிறது !

இப்படியெல்லாம் நடந்தால் ஆண்களுக்கு இங்கே என்ன வேலை என டென்ஷனாகாதீர்கள். இப்போதைக்கு ஒரு விந்தணுவை உருவாக்க ஒரு ஆணின் ஸ்டெம் செல் கட்டாயம் தேவை என்பதே நிலை. பெண்ணின் ஸ்டெம் செல்லைக் கொண்டு விந்தணு உருவாக்க முயன்ற முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. அப்படி பெண்ணின் செல்லில் இருந்தே ஒரு விந்தணுவும் உருவாக்க முடிகின்ற ஒரு காலம் உருவாகும் போது ஒரு குழந்தைக்கு பெண்ணே தாயுமானவளாகவும், தந்தையானவளாகவும் மாறும் வியப்பின் உச்சகட்டம் உருவாகும் !

இந்த ஆராய்ச்சியின் மிகவும் வியக்கத் தக்க விஷயமே இனிமேல் தான் இருக்கிறது. அதாவது இறந்து போன ஒருவருடைய உடலிலிருந்து கூட ஒரு செல்லை எடுத்து அதை வளரவைத்து ஸ்பெர்ம் ஆக மாற்றி அவருடைய சந்ததியை செயற்கையாகவே உருவாக்கிவிடலாம் என்பது தான் அது !

இறந்து பல வருடங்களானால் கூட இந்த செயற்கை ஸ்பெர்ம் உருவாக்குதல் சாத்தியம் எனும் தகவல் ஜுராசிக் பார்க் படம் போல திகிலூட்டுகிறது.

 

தமிழிஷில்  வாக்களிக்க விரும்பினால்

வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் !

technology-how-to-take-great-photos-on-y

செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் !

பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.

இந்தப் படங்களில் இருப்பவர்கள் நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர வைக்கிறது. அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள்.

அதிர்ச்சியூட்டும் இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.

சக பணியாளியையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் “பிளாக் மெயில்” பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது

இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு, நரை வயதுப் பெரியவர்கள் பலரும் இத்தகைய குற்றங்களின் ஊடாக இயங்குகின்றனர். பொது இடங்கள், பூங்காக்கள், இண்டர்நெட் காஃபேக்கள் தொடங்கி படுக்கையறைகளும், கழிவறைகளும் கூட இந்த ரகசியக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

தனியே ரகசியமாய் எடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் யூ டியூப் போன்ற தளங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதும். உலகம் முழுவதிலுமுள்ள மொபைல் பயன்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றன என்பதும் நமது தனிமையின் மீதே ஒரு பயத்தை ஏற்படுத்திவிடுகிறது.

“எல்லோரிடமும் கேமரா போன்கள் இருக்கும் போது, குற்றவாளிகள் பொது இடங்களில் குற்றங்களைச் செய்யத் தயங்குவார்கள், பத்திரிகையாளர்கள் சட்டென கண் முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமெடுத்து விட முடியும்” என ஏகப்பட்ட பில்டப் கதைகளோடும், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடும் சந்தைக்கு வந்த மொபைல் போன்கள் இன்று அந்தரங்கங்களின் வெளிச்ச மேடையாகியிருப்பது கவலைக்குரிய ஒன்று.

போதாக்குறைக்கு மொபைல் நிறுவனங்கள் போன்களின் விலையையும், மெமரி கார்ட்களின் விலையையும் சகட்டு மேனிக்கு குறைத்து வருவது அங்கிங்கெனாதபடி எங்கும் அதி நவீன கேமராக்கள் நிரம்பி வழிய ஒரு காரணமாகிவிடுகிறது.

இன்றைய அதி நவீன மொபைல் போன்கள் பெரும்பாலும் ஒரு சின்ன கம்ப்யூட்டராகவே செயல்படுகின்றன. சில விரல் அசைவுகளினால் இணையத்தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதனால் பிழைகள் பரவும் வேகமும் ஜெட் வேகமாகியிருக்கிறது.

இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் கேமரா மொபைல் போன்களுக்கான அனுமதியை மறுத்து வருகின்றன. உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவிலும் நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கேமரா போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பாலான சாப்ட்வேர் அலுவலகங்களில் கேமரா மொபைல்களை அனுமதிப்பதில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பையோ, ரகசியங்களையோ, படமெடுத்துவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையே இதற்கான காரணம். இதற்காக அலுவலகங்கள் கேமராக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியோ, மொபைல் கேமராக்களை முழுமையாய் தடை செய்தோ சட்டங்களைக் கொண்டு வருகின்றன.

சில சாப்ட்வேர் அலுவலகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேமரா இயங்காதவாறு செய்து விடுகின்றனர். உங்கள் மொபைலில் கேமரா இருந்தாலும் இந்த அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் அவை செயலிழந்து விடுகின்றன.

கம்ப்யூட்டர்களைப் போலன்றி இந்த மொபைல் படங்களை தனிமையான இடங்களிலிருந்து பார்த்து விட முடியும் என்பதனால் இளைய தலைமுறையினரை இந்த மொபைல் வீடியோக்கள் ஒரு அடிமையாகவே மாற்றியிருக்கின்றன.

நவீன ரக போன்கள் ஒரு தொடுதலிலேயே “யூ டியூப் (You Tube)” பாலியல் வீடியோக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், பல பில்லியன் டாலர் பிசினஸ் மொபைல் பாலியல் வீடியோ தொழிலில் மறைந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

x

நம்மைச் சுற்றி உருவமற்ற நிழலாய் எப்போதுமே தொடரும் இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?

1. எத்தனை நம்பிக்கைக்குரிய நண்பராய் இருந்தாலும், உங்களை கவர்ச்சியாகவோ, அந்தரங்கமாகவோ படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆண் தோழர்கள் என்றல்ல உங்கள் பெண் தோழியர்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள். ஏராளம் படங்கள் சக தோழியரால் எடுக்கப்படுபவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2. “உடனே அழித்து விடுவேன்” எனும் வாக்குறுதியுடன் எடுக்கப்படும் இந்தப் படங்களை சில வினாடிகளிலேயே வேறொரு கைப்பேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ உங்களுக்குத் தெரியாமலேயே அனுப்பிவிட்டு உங்கள் முன்னால் சாதுவாக படங்களை அழித்துக் காண்பிப்பது வெகு சுலபம் என்பதை உணருங்கள்.

3. தனியாக ஆண்களுடன் தங்க நேரிடும் சூழல்களில் இரட்டைக் கவனம் கொண்டிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் மது, போதை போன்றவற்றை விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ உட்கொள்ளாதீர்கள்.

4. உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.

5. வெப் கேம் – மூலமாக காதலர்களுடன் பேசும் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அந்தரங்கங்களை வீடியோவில் அரங்கேற்றாதீர்கள். இவை வழியிலேயே திருடப்பட்டு வக்கிரக் கண்களால் விவகாரமாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

6. இண்டர்னெட் காஃபேக்களில் – யாருமே இல்லை, விரும்பிய தனிமை இருக்கிறது என உங்கள் சில்மிஷங்களை நிகழ்த்தாதீர்கள். பல இண்டர்னெட் கஃபேக்கள் ரகசிய கேமராக்களைப் பொருத்தி நீங்கள் தனிமை என நினைக்கும் அறைக்குள் செய்வதை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

7. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் செல்லும் போதும் ஏதோ ஒரு மூன்றாவது கண் உங்களைக் கவனிக்கிறது எனும் உள்ளுணர்வு கொள்ளுங்கள்.

8. எந்தக் காரணம் கொண்டும் “பிளாக் மெயிலுக்கு” பணிந்து விடாதீர்கள். பிளாக் மெயில் செய்பவர்கள் தங்கள் தேவை முடிந்ததும் உங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சினை முளைக்கும் போதே ரகசியமாய் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

9. யாரேனும் உங்களுக்கு “விவகாரமான” குறுஞ்செய்தியோ, படமோ, வீடியோவோ அனுப்பினால் அதற்கு துவக்கத்திலேயே ஒரு அழுத்தமான முற்றுப் புள்ளி இட்டு விடுங்கள். இவையெல்லாம் உங்களை வலையில் விழவைக்கும் தந்திரங்கள். “ஸ்போர்டிவ்”வாக எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என நீங்களே போய் அந்த மாய வலையில் விழுந்து விடாதீர்கள். அப்படி வரும் தகவல்களை உடனுக்குடன் அழித்தும் விடுங்கள்.

10. உங்கள் மொபைல் எண்ணை இணைய தளங்களிலோ, ஆர்குட் போன்ற இடங்களிலோ கொடுக்காதீர்கள். இவை உங்களுக்கு தேவையற்ற எஸ்.எம்.எஸ்கள் வரவோ, சிக்கல்கள் வரவோ வழிவகுக்கக் கூடும்.

11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ் செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் “குளோனிங்” செய்யப்படக் கூடும் !

12. உங்கள் வீட்டில் குழந்தைகளோ, பதின் வயது சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.

13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் “அழகை” நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்.

14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட “இந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…” எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.

எல்லா வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன. ஒட்டுமொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

 

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களிக்கலாமே…

பார்க்க வேண்டியதை மட்டும் பாருங்க !

Gold

என்னடா இவன் இப்படியெல்லாம் ஒரு சிலுக்கு ஜிப்பான் படத்தைப் போட்டிருக்கிறானேன்னு கடுப்பாயிடாதீங்க, சொல்ல வந்த விஷயத்தைக் கவனியுங்க.

சமாச்சாரம் இவங்க யாரு என்ன பண்றாங்க எப்படி இருக்காங்க இதெல்லாம் இல்லை. போட்டிருக்கிற டிரெஸ்ல தான் இருக்கு. அந்தப் பெண் அணிந்திருக்கும் உள்ளாடை , அவன் கையில் அணிந்திருக்கும் கட்டு, கழுத்தில் அணிந்திருக்கும் டை இதெல்லாம் சுத்தத் தங்கமாம்.

விலை சுமார் இரண்டே முக்கால் கோடி ரூபாயாம். தென்மேற்கு சீனாவில் நடந்த ஒரு “காட்சி” அணிவகுப்பு தான் இந்த போட்டோ.

இப்போ சொல்லுங்க, டை நல்லா இருக்கு தானே ?

(என்னது ? டை எங்கே இருக்குன்ன்னா கேக்கறீங்களா… அது சரி ! )

 

தமிழிஷ் வாக்களிக்க…

குளிர்பானக் குட்டிச் சாத்தான் !

 

genelia-20தாகத்துக்குத் தண்ணீர் மோர், இளநீர் என்ற வளமான காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து இன்றைய இளைஞர்களின் கைகளில் கோக் பாட்டில்களாகவும், பெப்ஸி கேன்களுமாகவும் உருமாறியிருக்கிறது.

போதாக்குறைக்கு ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என பெரிய பெரிய ஜம்போ பாட்டில்களும் குறைந்த விலைக்கே கிடைப்பதனால் எங்கேனும் குடும்பத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் பெரிய பாட்டில்கள் சிலவற்றைத் தூக்கிச் சுமப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

2007ம் ஆண்டைய புள்ளிவிவரத்தின் படி உலக அளவில் 552 பில்லியன் லிட்டர்கள் குளிர்பானங்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதாவது தனிநபர் சராசரி 83. இன்னும் சில வருடங்களில் இந்த தனிநபர் சராசரி 100 லிட்டர்கள் எனுமளவுக்கு உயரும் என்கிறது பதட்டப்பட வைக்கும் புள்ளி விவரம்.

இப்படி எதற்கெடுத்தாலும் கோக், பெப்ஸி போன்ற குளிர்பானங்களை உள்ளே தள்ளுவதால் நம்முடைய எலும்புகள் பலவீனமடையும் எனவும், மிதமிஞ்சிப் போனால் உடல் உறுப்புகள் செயலிழக்கக் கூட வாய்ப்புகள் உண்டு எனவும் சொல்லி அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றனர் கீரீஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு நாம் குளிர்பானங்களை அளவுக்கு மீறி பயன்படுத்துகின்றோம். அதன் விளைவுகள் எல்லா இடங்களிலும் தெரிகின்றன. பல் நோய்கள், எலும்பு நோய்கள், நீரிழிவு போன்ற நோய்கள் குளிர்பானங்களைக் குடிப்பதனால் வருகின்றன என்பது அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர் மோஸஸ் எலிசாப்.

குளுகோஸ், புரூட்கோஸ், காஃபைன் போன்றவையே குளிர் பானங்களில் அதிகமாய் காணப்படும் மூலக்கூறுகள். இவையே பல்வேறு சிக்கல்களுக்கு காரணகர்த்தாக்கள்.

அதிக கோக் உட்கொள்வதனால் உடலிலுள்ள பொட்டாசியம் அளவு குறைந்து போய்விடுகிறது. இதை மருத்துவம் ஹைப்போகலேமியா என பெயரிட்டு அழைக்கிறது. இந்த சூழல் வரும்போது உடலின் தசைகள் வலுவிழந்து போய்விடுகின்றன என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

கோக் போன்ற குளிர்பானங்களில் உள்ள சருக்கரையின் அளவு சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுத்து, சிறுநீரகம் அதிக பொட்டாசியத்தை  வெளியேற்றி, உடல் பொட்டாசியம் குறைவான சூழலுக்குத் தள்ளப்பட்டு என சங்கிலித் தொடர்ச்சியாய் சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

உடல் குண்டாதல், பல் நோய்கள், எலும்புருக்கி நோய் போன்ற பரவலான நோய்களுடன் எலும்புகளையும் வலுவிழக்கச் செய்து விட்டு நமது வீட்டு பிரிட்ஜ்களில் சாதுவாய் அமர்ந்திருக்கிறது இந்த சர்வதேசச் சாத்தான் !

“கன்னிமை” விற்பனைக்கு !: இளம் பெண்களின் புது டிரெண்ட்.

 

EFG103

 

பாத்திரம் பண்டத்தை அடகு வைத்து பள்ளிக்குப் போனதெல்லாம் பழைய கதை. இப்போது அடகு வைக்கத் துவங்கியிருப்பது கன்னித் தன்மையை.

மேலை நாடுகளில் இப்போதெல்லாம் பரவலாக அடிபடும் பேச்சு “கன்னித் தன்மை விற்பனைக்கு” விளம்பரங்கள் தான்.

படிப்பதற்குப் பணமில்லை எனவே எனது கன்னித் தன்மையை நல்ல விலைக்கு விற்கலாம் என இருக்கிறேன். ஏலத்தில் அதிக தொகைக்குக் கேட்பவர்களுடன் நான் “ஒரு நாள் முதல்வி” யாக உல்லாசமாய் இருக்க சம்மதிக்கிறேன் என சமீபத்தில் ஒரு இளம்பெண் இணையத்தில் தனது கற்பை ஏலமிட்டிருக்கிறாள்.

போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டு தோற்றுப் போனவர்களைத் தாண்டி சுமார் 6.4 இலட்சம் ரூபாய்களுக்கு ஒரு தொழிலதிபர் அவளை ஏலமெடுத்து அவளுக்கு “உதவி”யிருக்கிறார்.

பதினெட்டு வயதான எலீனா பெர்சியா எனும் இந்த ரொமானியன் பெண் தற்போது வசிப்பது ஜெர்மனியில்.

இவளை ஏலமெடுத்தவர் இவளை விமானத்தில் வெனிஸ் நகருக்கு வரவைத்து, கன்னித் தன்மை குறித்த மருத்துவ 12சான்றிதழ்களைச் சரிபார்த்து, விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பொழுதைக் கழித்திருக்கிறார்

 

 

 

ஒரு முப்பத்தைந்து இலட்சம் ரூபாய்க்கு என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் வெறும் ஆறு இலட்ச ரூபாய்க்கு ஏலம் போனதில் வருத்தம் தான் (!!??) என்கிறார் இந்த மாணவி. எனினும் இந்தப் பணத்தை வைத்து படிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருக்கிறது என்கிறார் நல்ல பிள்ளையாட்டம்.

 

சினிமாவில் வரும் கதாநாயகன் போல ஒருவரை எதிர்பார்த்தேன் ஆனால் கிடைத்த நபர் 46 வயதான குள்ளமான ஒரு தொழிலதிபர். என்ன செய்வது இருந்தாலும் …  என விவரிக்கிறார் தனது அனுபவங்களை.

கல்வி என்பது ஒழுக்கத்தையும், அறிவையும் போதிப்பது. அதை அடையவே இப்படிப்பட்ட ஒழுங்கற்ற வழிகளை நாடவேண்டியிருக்கிறதே எனும் அதிர்ச்சி ஒருபுறம் எழ, மேலை நாடுகளின் வால் பிடிப்பதை பெருமையாய் கருதும் நம் நாட்டு மக்கள் இதை ஒரு முன்னுதாரணமாய் கொண்டு விடுவார்களோ எனும் பயம் இன்னொரு பக்கம் எழுகிறது !

 

இவளுடைய பெற்றோருக்கு விஷயம் தெரியுமா ? சட்டத்தில் இதற்கெல்லாம் இடமுண்டா ? இப்படி உலகுக்கெல்லாம் மேடை போட்டுச் சொல்கிறாளே இதனால் எதிர்காலம் பாதிக்காதா ? போன்ற உங்களுடைய கேள்விகளை எலீனா பெர்சியாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளவும் ( அதற்குரிய கட்டணம் எத்தனை என்பது உட்பட )

 

 

தாய்க்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் : குழந்தைக்கு ரொம்ப நல்லது !

Pablo-Picasso-Mother-And-Child-25656காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை, ஒரே தலை சுற்றல் வாந்தி மயக்கம் என “மார்னிங் சிக்னெஸ்” குறித்துப் புலம்பும் தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு உற்சாக டானிக்காக வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

தாய்மைக் காலத்தின் முதல் பாகத்தில் இத்தகைய அசௌகரியங்களைச் சந்திக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என அறிவிக்கிறது இந்த ஆராய்ச்சி.

தலை சுற்றல், வாந்தி , மயக்கம் எல்லாமே ஆரோக்கியமான தாய்மையின் அடையாளங்கள் எனவும், இத்தகைய அறிகுறிகள் காணப்படும் பெண்களின் குழந்தைகள் இதயம் தொடர்பான நோய்கள் வருவதிலிருந்து தப்புகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கூடவே இப்படிப்பட்ட சிக்கல்கள் அன்னைக்கு இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பும் பெருமளவில் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

121 தாய்மார்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு குழந்தைகளுடைய மூன்றாவது வயது மற்றும் ஏழாவது வயதில் சோதனைகளை நடத்தியது. இதில் தாய்மைக்காலத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்த தாய்மார்களின் குழந்தைகளை விட தாய்மைக்காலத்தில் கஷ்டப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் படு சுட்டிகளாக இருந்தார்களாம்.

சரளமாகப் பேசுவது, சிறு சிறு கணிதங்களைச் செய்வது என நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தாய்மைக் காலத்தில் நிகழும் ஹார்மோன் வெளியேற்றமே இந்த “மார்னிங் சிக்னெஸ்” எனப்படும் சிக்கல்களுக்குக் காரணம் எனவும், இது கருவையும், கருப்பையையும் பாதுகாக்கும் நிகழ்வு எனவும் மருத்துவ விளக்கம் அளிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தாய்மைக் காலத்தில் சிக்கல்களைத் தாங்க வேண்டிய தாய்மார்களுக்கு இந்த தகவல் மிகவும் உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.

வாந்தி, மயக்கம் வரும்போதெல்லாம் தன் குழந்தையின் அறிவாற்றல் விருத்தியடைகிறது என நினைத்து அன்னையர்  இனிமேல் மகிழ்ச்சி அடைவார்களாக.

ATM = Any Time “Matter” ?

Mogudu

சென்னையின் முன்னணி கணினி நிறுவனங்களில் ஒன்றான அந்த அலுவலகத்தின் வளாகத்துக்குள்ளேயே இருக்கிறது ஒரு ஏ.டி.எம் அறை.

குளுரூட்டப்பட்ட, வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே நடப்பது எதுவும் தெரியாத வகையில் கன கட்சிதமாய், பாதுகாப்பாய் இருக்கிறது அந்த ஏ.டி.எம்.

இரவில் வெகுநேரம் பணிசெய்யும் வரமோ, சாபமோ ஏதோ ஒன்று என்னைப் பீடித்திருக்கிறது. ஒரு நாள் இப்படித் தான் நள்ளிரவைத் தொட்ட ஒரு பொழுதில் அலுவலகத்திலிருந்து வெளியேறி நீளமான நடைபாதையில் நடந்து என் காரை நோக்கி வந்து கொண்டிருந்தேன்.

எனது அலுவலகமும், அந்த ஏ.டி.எம் அறையும் கொஞ்சம் பக்கம் பக்கம் தான். பர்ஸ் காலியாக இருக்கிறதே ! கொஞ்சம் காசு எடுத்து வைத்துக் கொள்ளலாம் என அந்த ஏடிஎம் அறையை நெருங்கினேன். எனது கஷ்ட காலம் !

ஏடிஎம் அறைக் கதவில் கை வைத்ததும் பதட்டமாய் ஓடி வந்து கையைத் தட்டினார் செக்கியூரிடி.

“சார்… ஆள் உள்ளே பணம் லோட் பண்ணிட்டு இருக்காரு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க”

“ஓ.. சாரி” என கையை சட்டென எடுத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி நின்று கொண்டேன். பாவம் என்னைப் போல் இந்த அப்பாவியும் இந்த நள்ளிரவு நேரத்திலும் வேலை செய்ய வேண்டி இருக்கிறதே” என நினைத்துக் கொண்டேன்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது..

முழுதாய் பத்து நிமிடம் கடந்தபின் இன்னும் காத்திருக்கப் பொறுமை இல்லாமல் செக்யூரிடியிடம் கேட்டேன்

“என்னங்க.. அவரு பணத்தை வைக்கிறாரா ? இல்லை புதுசா பணம் ஏதாச்சும் அடிக்கிறாரா ?” 

அவர் உலக மகா வெறுப்பில் என்னைப் பார்த்து விட்டு, ஏடிஎம் கதவில் மூன்று முறை தட்டினார்.  (இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்த சிக்னலோ)
அடுத்த இரண்டாவது நிமிடம் ஒருவர் வந்தார் வெளியே அரக்கப் பரக்க. கூடவே ஒரு பெண் !

அவசர அவசரமாக தலையைக் குனிந்து கொண்டும், மூக்கைச் சொறிந்து கொண்டும் ஆடையைத் திருத்திக் கொண்டும் அவர்கள் போன வேகத்தைப் பார்த்தபோது புரிந்து விட்டது அவர்கள் உள்ளே என்ன செய்து கொண்டுந்தார்கள் என்பது.

திடுக் என்றாகிவிட்டது !

“என்னங்க… என்ன நடக்குது இங்கே… ?” என்று சற்று எரிச்சலாகக் கேட்டேன் செக்யூரிட்டியிடம்.

“பணம் எடுக்க வந்தா எடுத்துகினு  போ சார்… தேவையில்லாததெல்லாம் ஏன் பேசறே” என வெகு அலட்சியமாகப் பதிலளித்துக் கொண்டு ஓரமாய் போய் அமர்ந்து கொண்டார் அவர்.
அவருக்கு வருமானம் நூறோ, இருநூறோ ? யாருக்குத் தெரியும்.

போலீஸ் கெடுபிடி இல்லாமல், ஹோட்டலுக்கு ஆயிரக்கணக்கில் செலவழிக்காமல், யாருக்காவது தெரிந்து விடுமோ எனும் பயமில்லாமல் ஏசி அறையில் நடக்கும் இந்த அவசர கலவிக் கலாச்சாரம்  எங்கெல்லாம் நடக்குதோ ?

அதுசரி… ஏ.டி.எம் ரூமில் கேமரா வைத்திருப்பதாகச் சொல்வார்களே ? அதுல இதெல்லாம் பதிவாகாதா ?

சீரியஸா ஒரு சிரிப்பு சமாச்சாரம் !

 

தினமும் கொஞ்ச நேரம் குழந்தைகள் மனம் விட்டுச் சிரித்தால் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வார்கள் என்கிறது ஆனந்தமூட்டும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

சிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் எனும் செய்தியுடன் கூடவே, சிரிப்பு குழந்தைகளுக்கு தரும் “டானிக்” போன்றது எனவும் இந்த ஆராய்ச்சி சிரிப்பைக் குறித்து விவரித்து வியக்க வைக்கிறது.hero__3_1

தினமும் அரை மணி நேரம் மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களும், அதன் மூலக்கூறுகளும் பெருமளவு குறைகின்றனவாம், இதனால் உடல் ஆரோக்கியமடைகிறது என்கின்றனர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள்.

அரைமணி நேரம் சிரிப்பது எப்படி என யோசிப்பவர்களுக்கு, அரைமணி நேரம் சிரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஏதேனும் ஒரு நகைச்சுவைப் படத்தை அரைமணி நேரம் பார்த்தாலே போதும் என வழிமுறையையும் அவர்கள் சொல்லித் தருகின்றனர்.

மன அழுத்தம், நீரிழிவு நோய், உயர் குருதி அழுத்தம் போன்ற சிக்கல்கள் உள்ள பலருக்கு “தினம் அரை மணி நேரம் சிரிப்பு” என சோதனை நடத்தியதில் அவர்களுடைய உடலில் இருந்த அழுத்தம் தரக்கூடிய மூலக்கூறுகள் படிப்படியாகக் குறைந்து உடல் மிகவும் ஆரோக்கியமானதாக மாறிவிட்டதாம்.

சிரிக்கும் போதும், ஆனந்தமாய் உணரும் போதும் உடலில் நிகழும் வேதியல் மாற்றங்களே இந்த மாற்றத்துக்கான விதைகளைத் தூவுகின்றன. குறிப்பாக மகிழ்ச்சியளிக்கும் எண்டோர்பின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் பெர்க்.

மனம் விட்டுச் சத்தமாய் சிரிப்பது உடலிலுள்ள இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியையும் தருகிறது என்பது சிறப்பம்சமாகும். இதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் அதிகரிக்கின்றனவாம்.

அதே நேரத்தில் மிக அழுத்தமான அழுகாச்சிப் படங்களைப் பார்க்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் உடலுக்குத் தீமைகளை விளைவிக்கின்றனவாம். அப்படிப் பட்ட படங்களைப் பார்க்கும் போது இதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பெருமளவு குறைவது இதன் ஒரு காரணம் என்கின்றார் மருத்துவர் பெர்க்.

நல்ல ஆரோக்கியம் வேண்டுமா, தினம் ஒரு நல்ல நகைச்சுவைப் படம் பாருங்கள் என்கிறார் மெரிலண்ட் ஆராய்ச்சிக் கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் மில்லர்.

« பழைய வரவுகள்