ஜூனியர் விகடன் : அதிர வைக்கும் நோய் !

Tanya2

உலகிலேயே இவள் மட்டும் தான் இப்படி என அதிர்ச்சியுடன் ஆரம்பிக்கின்றனர் மருத்துவர்கள். என்ன மருத்துவம் பார்த்தாலும், என்ன ஆபரேஷன் செய்தாலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறாள். இவளுடைய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த இன்றைய தேதியில் உலகில் மருந்தே இல்லை என்கின்றனர்.

அமெரிக்காவிலுள்ள நிவேடாவில் வசிக்கும் ஆன்கஸ் தான்யா வுக்கு வயது வெறும் 30. இளமைத் துள்ளலுடம் உற்சாகமாய் இருக்கவேண்டிய வயதில், அறைகளுக்குள் சோர்ந்து போய் கிடக்கிறாள். காரணம் சட சடவென வளரும் அவளுடைய உடல். இப்போது அவளுடைய உயரம் ஆறரை அடி ! எடை சுமார் 215 கிலோ.

பதினெட்டாவது வயதில் அழகாக ஐந்து அடி எட்டு இன்ச் எனும் வசீகர அளவில் இருந்தவள், சடசடவென வளந்து தனது முப்பதாவது வயதில் ஆறு அடி ஆறு இஞ்ச் எனுமளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். கடந்த பன்னிரண்டு வருடங்களில் மட்டும் இவளுடைய வளர்ச்சி 10 இன்ச்கள் ! இது விபரீத வளர்ச்சி ! உலகிலேயே முப்பது வயதில் இந்த உயரமும் எடையும் கொண்ட ஒரே பெண் இவர் தான் !

இவளுக்கு வந்திருக்கும் நோயின் பெயர் அக்ரோமேக்லியா. அதாவது ஹார்மோன்கள் கன்னா பின்னாவென வளர்வது. என்ன செய்தாலும் இதன் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியாது. சராசரியாய் 250 ஹார்மோன்கள் இருக்க வேண்டிய இடத்தில் தான்யாவுக்கு இருப்பது 3000 !

சிறு வயதில் சாதாரணமாய் தான் இருந்திருக்கிறாள். டீன் ஏஜில் தான் இந்த திடீர் வளர்ச்சி ஆரம்பமாகியிருக்கிறது. செருப்பு Tanya_Beforeவாங்கி வருவாள், அடுத்த மாதமே அது சின்னதாகிவிடும். வாங்கி கொண்டு வரும் ஆடைகள் சில மாதங்களிலேயே பயன்படுத்த முடியாமல் போய்விடும். அதிர்ச்சியும், குழப்பமும், கவலையும் ஒட்டு மொத்தமாக அவளைச் சூழ்ந்து கொண்டது அப்போது தான்.

பதின் வயதில் அழகாய் இருக்க வேண்டும் எனும் எண்ணம் இயல்பாகவே இளம் பெண்களுக்குள் அலைபாயும். அழகாய் இல்லாவிட்டலும் அளவாய் இருந்தேயாக வேண்டும் என நினைக்கும் வயது அது. தான்யாவுக்கு இரண்டும் போய்விட்டது. அதிகப்படியான வளர்ச்சியினால், அழகையும், களையையும், உற்சாகத்தையும் ஒட்டு மொத்தமாக இழந்து விட்டாள்.

இந்த சிக்கல் போதாதென்று உடலும் பெண்மைக்குரிய தன்மைகளை விட்டு முரட்டுத் தனமான ஆண் தோற்றமாய் மாறிவிட்டது. இனிமையாய் இருந்த குரலில் திடீரென ஒரு கரகரப்பும் வந்து சேர்ந்து விட்டது. அடுக்கடுக்காய் வந்த அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவளைப் பார்த்து கிண்டலடித்து விட்டு கழன்று கொண்டான் உயிராய்ப் பழகிய காதலன் !

எப்படியாவது தனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என தான்யாவின் அம்மா கேரன் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்தார். பல டாக்டர்களைப் பார்த்தார்கள். பல சோதனைகளைச் செய்தார்கள். கடைசியில் அவளுடைய மூளையில் திராட்சைப் பழ அளவுக்கு ஒரு கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்தக் கட்டிதான் இவளுடைய வளர்ச்சிக்கான காரணமாய் இருக்கலாம் என அவர்கள் நம்பினர். ஆனால் இவ்வளவு பெரிய கட்டியை மூளையிலிருந்து அறுவை சிகிச்சை செய்வதெல்லாம் சாத்தியமில்லை என பின்வாங்கினர்.

கேரன் சோர்ந்து போகவில்லை. அமெரிக்கா முழுதும் தேடி ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்தார்கள். கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அப்பாடா, ஒரு வழியாக எனது சிக்கல் தீர்ந்தது என மகிழ்ந்தாள் தான்யா. ஆனால் அந்த மகிழ்ச்சி tranya3நீடிக்கவில்லை. அவள் தொடந்து வளர்ந்தாள்.

சரி உடலிலுள்ள கொழுப்பை ஆபரேஷன் மூலம் அகற்றி விடுவோம் என களத்தில் இறங்கினார்கள். பயனில்லை. மருந்துகள் மூலம் உடலிலுள்ள ஹார்மோன்களின் அளவை மூவாயிரத்திலிருந்து ஆயிரமாகக் குறைக்கப் பார்த்தார்கள். வண்டி வண்டியாய் மருந்துகள் சாப்பிட்டும் ஒன்றும் சரியாகவில்லை.

பல டாக்டர்கள் இவளை ஒரு குரங்காகப் பாவித்து பல சோதனை மருந்துகளையும் கொடுத்துப் பார்த்தார்கள். என்ன செய்தும் உடல் மட்டும் பிடிவாதமாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது சரியாக நடக்கவும் முடியாமல் வீட்டுக்குள் வீல் சேரில் அடைபட்டிருக்கிறார்.

தன்னுடைய சொந்த ஊரிலுள்ள மக்களே தன்னை அன்புடன் நடத்தவில்லையே எனும் கவலை அவளுக்குள் நிரம்பியிருக்கிறது. மக்கள் பிறரைப் புரிந்து கொள்ளவேண்டும். நான் இப்படி வளர்ந்ததில் என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்கள் ? நான் என்ன விருப்பப்பட்டா வளர்கிறேன் எனும் அவரது குரலில் ஆதங்கம் வழிகிறது.

“இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் தான் நீ உயிரேடு இருப்பாய்” என ஒரு டாக்டர் சொல்லி எட்டு மாதங்களாகிவிட்டது. இதுவரை மருத்துவத்துக்காகச் செலவிட்ட தொகை மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய். ஒரு பிரயோசனமும் இல்லை. மிச்சமிருப்பது நம்பிக்கை மட்டுமே !

கடந்த மூன்று மாதங்களாக புதிதாக ஒரு டாக்டர் இவளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். பல மருந்துகளை ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்து தான்யாவின் வளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். என்னுடைய வளர்ச்சியை கடவுள் போல வந்திருக்கும் இந்த டாக்டர் தடுத்து நிறுத்துவார். நானும் சாதாரண மனுஷியாக உலவுவேன் என கண்களில் கனவுகளுடனும், கண்ணீருடனும் கூறுகிறாள் தான்யா !

நலம் பெற வாழ்த்துவதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும் நாம் ?

ஃ 

தமிழிஷில் வாக்களிக்க…

இது, மீன் சமாச்சாரம் !

 fish_cartoon08

மீன் அசைவம் என சிலர் ஒதுக்க, அசைவப் பிரியர்களிலும் பலர் மீன் ‘கடல் உணவு’ என கைகழுவ, மீன் உணவு என்பது வெறும் சுவை தொடர்பானது அல்ல, உங்கள் அறிவை விருத்தி செய்யும் வல்லமையும் அதற்கு உண்டு என கூற வந்திருக்கிறது ஆராய்ச்சி முடிவு ஒன்று.

அதாவது வாரம் ஒருமுறைக்கு மேலாக மீன் உணவு உண்பது பதின் வயது பருவத்தினருடைய மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதாம். கவனிக்கவும், ஒருமுறைக்கு மேல் உண்பதே பலனளிக்கிறது.

பதின் வயது பகுதியின் இரண்டாவது பகுதி, மூளையில் பெருமளவு மாற்றங்கள் நிகழும் பகுதி. ஆங்கிலத்தில் இதை பிளாஸ்டிசிடி என அழைக்கிறார்கள்.

அதாவது இந்தக் காலகட்டத்தில் தான் பதின் வயதினருடைய திறமை எப்படி இருக்கும், அவர்களுடைய உணர்வு ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் மூளை முடிவு செய்கிறது.

இந்தக் காலகட்டத்தில், அதாவது 15 வயதுக்கு மேல் மீன் உணவை வாரம் ஒரு முறையை விட அதிகமாய் உண்பது அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு பெருமளவில் உதவுகிறதாம்.

ஸ்வீடனின் நிகழ்த்தப்பட்ட விரிவான இந்த ஆய்வு சுமார் 5000 பேரை வைத்து நிகழ்த்தப்பட்டது. இதில் மீன் உணவு உண்டவர்களின் திறன் வெகுவாக உயர்ந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பதின் வயதினருடைய அறிவு, புதிதாய் எதையேனும் கற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் இவையெல்லாம் மீன் உணவினால் மெருகேறுகிறதாம்.

அதிலும் குறிப்பாக ஒமேகா – 3 நிரம்பியுள்ள மீன்களை உண்பது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

 

சார்… கொஞ்சம் வெளியே வரீங்களா ?

 girlspecs

இன்றைக்கு சிறுவர்கள் பலர் தங்கள் பதின் வயதுகளிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு அலைவதை பார்க்க முடிகிறதல்லவா ? சற்றே பின்னோக்கித் திரும்பிப் பாருங்கள். இருபது வருடங்களுக்கு முன் கண்ணாடி போட்ட மனிதர்களைச் சந்திப்பதே அபூர்வம் அல்லவா ?

அதெப்படி இன்றைக்கு மட்டும் மிக மிக இளம் வயதிலேயே கண்ணாடி தேவைப்படுகிறது ? இப்படி ஒரு சிந்தனையின் விளைவாக நிகழ்ந்தேறியது ஆஸ்திரேலியாவில் ஒரு ஆராய்ச்சி.

4000 பேரை உள்ளடக்கி, அவர்களுடைய பார்வைக் குறைபாட்டுக்கான காரணங்களை மிக விரிவாக ஆராய்ந்ததில் கிடைத்த பதில் வியப்பூட்டுகிறது.

அதாவது, குழந்தைகள் வீட்டுக்கு வெளியே போதுமான நேரத்தைச் செலவிடாததே இந்த பார்வைக் குறைபாடின் காரணம் என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. மருத்துவ மொழியில் சொல்லவேண்டுமெனில், எட்டு வயதிற்கும் பன்னிரண்டு வயதுக்கும் இடைப்பட்ட பருவத்தில் வளர்ச்சியடையும் மயோபியா சரியான அளவில் இல்லாததே இந்த குறைபாட்டுக்குக் காரணம்.

குழந்தைகள் சிறுவயதில் வெளியே ஓடி விளையாடுவதன் அவசியத்தை இந்த ஆராய்ச்சி அதிர்ச்சியுடன் அறிவிக்கிறது. கண்ணின் கருவிழி சரியான அளவில் இருப்பதற்கும், ஒழுங்கான வடிவில் இருப்பதற்கும் இயற்கை வெளிச்சம் மிக மிக அதிகம் என்பது அந்த ஆராய்ச்சி அடித்துச் சொல்லும் செய்தியாகும்.

சிங்கப்பூரில் 30 விழுக்காடு குழந்தைகளுக்கும் இந்த நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு திடுக் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அங்கே குழந்தைகள் வெளியே அலைவது மிகவும் குறைவு என்பதால் வருவதாம் இந்தப் பிரச்சனை.

வீடுகளில் தொலைக்காட்சியிலும், கணினி விளையாட்டுகளிலும் முழு நேரத்தையும் செலவிட்டு இறுக்கிக் கட்டப்பட்ட அடுக்கு மாடிகளில் குடியிருப்போர் அதிக கவனத்துடன் குறித்துக் கொள்ள வேண்டிய செய்தி இது.

ஏற்கனவே வெயிலில் கிடைக்கும் வைட்டமின் டி உடலுக்கு மிகவும் இன்றியமையானது எனும் ஆராய்ச்சிகள் வெளிவந்திருக்கின்றன. இப்போது, வெளியே சரியான நேரம் செலவிடவில்லையேல் பார்வைக்கே பிரச்சினை என்னும் புது ஆராய்ச்சியும் அத்துடன் சேர்ந்து கொண்டிருக்கிறது.

கிராமங்களில் சுதந்திரமாய் ஓடி விளையாடும் சிறுவர்கள் நல்ல ஆரோக்கியமான பார்வையுடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாய் இருக்கக் கூடும்.

குழந்தைகளின் வாழ்க்கை அறைகளுக்கும் ஒரு நாள்காட்டியைப் போல தொங்குவதற்கானதல்ல, ஒரு பட்டத்தைப் போல வானில் பறந்து திரிவதற்கானது. இயற்கையுடன் இணைந்து வாழ்தலே வலிமையானது என்பதை இந்த ஆராய்ச்சியும் வலியுறுத்துகிறது.

புகை : குடும்பத்துக்குப் பகை

smoke

புகைத்தலைப் பற்றி நாளொன்றுக்கு ஒரு ஆராய்ச்சி ஏதேனும் ஓரிடத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றேனும் “புகைத்தல் நல்லது” என குறிப்பிடுமா என ஆவலுடன் நோக்கும் புகை பிரியர்கள் ஏமாற்றம் மட்டுமே அடைகின்றனர்.

தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது.

அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.

ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்குகிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த்திய மருத்துவர் கிம்பர்லி யோல்டன்.

நிகோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.

புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கடந்த ஆண்டு திடுக்கிடும் ஆய்வு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புகைத்தல் என்பது புகைப்பவர்களை மட்டுமன்றி வளரும் இளம் தலைமுறையையே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது எனும் அதிர்ச்சிப் பாடத்தை இந்த புதிய ஆய்வும் உரக்கச் சொல்கிறது.

குறிப்பாக வீடுகளில் புகைக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நலனை கேள்விக்குறியாக்குகின்றனர் என்றால் அது மிகையல்ல. புகைக்கும் பழக்கம் அறவே இல்லாதவர்கள் கூட பிறர் ஊதித் தள்ளும் புகையினால் பாதிப்புக்கு உள்ளாகும் அவலம் களையப்படவேண்டியதே.

புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது என்பதை ஆய்வுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தன்மீதோ, குடும்பத்தின் மீதோ, சமூகத்தின் மீதோ அக்கறை உடையவர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து மீண்டு வருவார்களாக !

சுடுநீர் அருந்து… அதுவே மருந்து.

drinking-water

இதைச் சொன்னால் இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா என நீங்கள் சிரிக்கக் கூடும் ஆனால் இந்த ஆராய்ச்சியை மிகப் பெரிய ஒன்றாகக் கொண்டாடுகின்றனர் யூகே வின் கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

ஜலதோஷம் மற்றும் அது சார்ந்த உபாதைள் வந்தால் சூடான பானத்தை அருந்துவது நோயின் தன்மையைக் குறைத்து விடுதலை அளிக்கும் என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு.

இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு. பெரும்பாலான மக்களை எரிச்சலுக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கும் பொதுவான நோய் ஒன்றுக்கு இத்தகைய எளிய மருத்துவ வழி இருப்பதும், அது நிரூபிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ உலகின் மகத்துவம் என வியந்து பேசுகிறார் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான ரான் எக்லர்ஸ்.

குளிர் காலங்களில் சூடான பானங்களை அருந்தி வருவதனால் இத்தகை நோய்களின் தாக்கங்களும், அது தரும் விளைவுகளும் மிகவும் குறையும். சூடான பானங்களை இத்தகைய பருவ காலங்களில் அருந்துவதை மக்கள் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்கிறார் அவர்.

மூக்கு ஒழுகுதல், எரிச்சல், தும்மல், தலைக்கனம், சோர்வு, தொண்டை வலி என எதுவானாலும் சூடான தண்ணீரை அடிக்கடி குடியுங்கள் என அவர் அறிவுறுத்துகிறார்.

ஜலதோஷம், தொண்டை வலி என ஏதேனும் வந்தால் சுடச் சுட கருப்பட்டியுடன் ஒரு சுக்கு காப்பி போட்டுத் தரும் நமது பாட்டிகளின் மகத்துவத்தை முழுமையாய் அறிந்து கொள்ள மேலை நாட்டினருக்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ தெரியவில்லை.

வலிக்கும்… ஆனா வலிக்காது !

 child

குழந்தைகள் விளையாடும் போது கவனித்திருக்கிறீர்களா ? கீழே விழுந்து அடிபட்டாலும் அதை வெகு இயல்பாய் எடுத்துக் கொண்டு மீண்டும் விளையாட்டைத் தொடரும். ஆனால் அடிபட்ட இடத்தில் கொஞ்சம் இரத்தம் கொட்டினால் உடனே அழ ஆரம்பித்துவிடும்.

சில வேளைகளில் தலை வலிக்குமோ என நினைத்தால் தலை வலிக்க ஆரம்பிப்பதை நம்மில் சிலரும் உணர்ந்திருக்கக் கூடும். அப்படியானால் வலிக்கும், மனதுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது அல்லவா ?

இதைத் தான் விரிவான ஆராய்ச்சியாக நடத்தியது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம். இதன் முடிவு வியப்பளிக்கிறது.

அதாவது அதிகமாய் வலிப்பதும், குறைவாய் வலிப்பதும் எல்லாமே நமது மனது நினைப்பதைப் பொறுத்து தான் அமைகிறது என்பதே அது.

இந்த ஆராய்ச்சிக்காக கைகளில் அடிபட்டுக் காயமடந்தவர்கள் பலர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுடைய கைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்ணாடி மூலமாக அவர்களுக்குக் காட்டினர். இந்தக் கண்ணாடிகளில் சில கையை வீக்கமடைந்திருப்பது போலக் காட்டின, சில வீக்கமான கையை சாதாரண கையாய் காட்டின.

இந்த காட்சிப் பிழைகள் வலியில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்துடன் பதிவு செய்து கொண்டனர்.

கை வீக்கம் அதிகமாய் இருப்பதைப் பார்த்தவர்களின் வலி நரம்புகள் தூண்டப்பட்டு அதிக வலி அடைந்தனர். கை வீக்கம் குறைவாய் உணர்ந்தவர்களின் வலி பெருமளவு குறைந்து விட்டது.

இந்த ஆராய்ச்சியின் மூலம் மனதுக்கும் வலிக்கும் இடையேயான நுட்பமான இணைப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனதில் உறுதி வேண்டும் என சும்மாவா சொன்னார்கள் ?

ஆதலினால் தூங்குங்கள்…

sleep2 

சிலர் படுத்த உடனே சட்டென தூங்கி விடுவார்கள். சிலருக்கு தூக்கம் என்பது காவேரி ஆறு போல, எப்படிக் கூப்பிட்டாலும் வந்து சேராது.

இப்படி தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களை பல்வேறு நோய்கள் வந்து வாட்டி வதைக்கும் என அதிர்ச்சியூட்டுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதுவும் சின்ன சின்ன நோய்கள் அல்ல ! பார்கின்ஸன், அல்சீமர் என மருத்துவம் திகிலுடன் அணுகும் பெரிய பெரிய நோய்கள்.

இரவில் அமைதியான தூக்கம் இல்லாமல் படுக்கையை உதைப்பது, அழுவது, இடிப்பது, உடலை முறுக்கிப் பிடிப்பது என பல்வேறு வெளிப்பாடுகளால் இந்த சரியான தூக்கமின்மை அறியப்படுகிறது.

இத்தகைய நிலையில் இருப்பவர்கள் போகப் போக நரம்பு வலுவிழக்கும் பல்வேறு நோய்களுக்குள் நுழைந்துவிடுகின்றனர். அதுவே அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய சோகமாய் மாறி விடுகிறது.

அதுவும் ஐந்து வருடங்கள் இத்தகைய சிக்கல் இருந்தால் நோய் பாதிக்கப்படும் அபாயம் 18 விழுக்காடு எனவும், அதுவே பன்னிரண்டு ஆண்டுகள் எனில் 52 விழுக்காடு எனவும் இந்த ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 93 பேரை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு தான் இந்த முடிவைத் தந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ரொனால்ட் போஸ்ட்மா இதைக் குறித்து விளக்குகையில், தூக்கம் மனிதனுடைய வாழ்வின் மிக முக்கியமான செயல் எனவும், இயல்பான நிம்மதியான தூக்கம் இல்லாதவர்கள் மன அளவிலும், உடல் அளவிலும் மாபெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவும் கூறுகிறார்.

நிம்மதியாய் தூங்கினாலே போதும் பல நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பதே ஒரு ஆனந்தமான தூக்கத்துக்கான அழைப்பிதழ் தானே !

ஷுகர்: கண்ணைப் பார்த்தே கண்டறியலாம் !!!

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல குடும்பங்கள் தற்போது வீட்டுக்கு ஓரிரு நீரிழிவு நோயாளிகளை வளர்த்து வருகிறது என்பது உலகையே கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

வெகு சாதாரணமாக எனக்கு ஷுகர் இருக்கு என்று சொல்லித் திரியும் மக்களுக்கு அந்த நோய் குறித்த முழுமையான புரிதல் இருப்பதில்லை. உடலிலுள்ள எல்லா உறுப்புகளையும் சென்று தாக்கி பலமிழக்கச் செய்து, செயலிழக்க வைத்து ஒட்டு மொத்த உடலையே அழிக்கும் கொடிய நோய் தான் சர்க்கரை நோய் என்றால் பலர் பயப்படக் கூடும். ஆனால் அது தான் உண்மை.

உடலிலுள்ள இன்சுலின் அளவு தான் இந்த குளறுபடிகளுக்கெல்லாம் காரணம் என மேலோட்டமாகச் சொல்லிவிடலாம். அதாவது கணையத்திலிருந்து சுரக்கும் இந்த இன்சுலின் அளவுக்கு அதிகமாகச் சுரந்தாலும், சாதாரண அளவை விடக் குறைவாகச் சுரந்தாலும் பிரச்சனை தான்.

சரி இந்த இன்சுலின் என்ன தான் செய்கிறது ? என்று கேட்பவர்களுக்கு சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், இது தான் நாம் உண்ணும் உணவிலுள்ள குளுகோஸை கிரகித்து   உடலின் உறுப்புகளுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றுகிறது. இந்த இன்சுலில் குறைவாக இருந்தால் குளுகோஸ் சத்து முழுவதும் உறிஞ்சப்படாமல் போய்விடுகிறது, அதிகமாகச் சுரந்தால் அளவுக்கு அதிகமாக குளுகோஸ் சத்து உறிஞ்சப்பட்டு சட்டென உடலில் குளுகோஸ் அளவு குறைந்துவிடும்.

இதனால்தான் சிலர் சர்க்கரை நோய்க்காக பையில் எப்போதும் மாத்திரைகள் அல்லது ஊசி வைத்திருப்பார்கள். சிலர் சர்க்கரை நோய்க்கு மருந்தாக இனிப்பை வைத்திருப்பார்கள். அதன் காரணம் இது தான்.

இந்த நோயாளிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை மருத்துவப் பரிசோதனைகள் தான். அடிக்கடி கையில் ஊசி குத்தி இரத்தம் எடுத்து எடுத்தே அவர்கள் கைகள் புண்ணாகிப் போய்விடுவதுண்டு. இந்த அவஸ்தையை காலம் முழுவதும் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தாக வேண்டுமே எனும் கவலைதான் அவர்களை ஆட்டிப் படைக்கும்.

அப்படிப்பட்டவர்களுக்கு சற்றே ஆறுதலளிக்கும் செய்தியைப் பற்றியதே நான் சொல்ல வந்த விஷயம். அதாவது, தற்போது ஒரு புதிய கருவி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கருவி என்றவுடன் பெரிய பெரிய இயந்திரங்களைக் கற்பனை செய்தீர்கள் என்றால் அந்த கற்பனையை தூரமாய் ஒதுக்கி விடுங்கள். இது ஒரு அரிசியின் பாதியளவே உள்ள கருவி.

இந்தக் கருவியை கண்ணின் ஓரத்தில் வைத்துவிட வேண்டும். இந்த கருவி புற ஊதாக் கதிர்களை வெளியிடக் கூடிய கருவி. அதாவது உடலில் சருக்கரை அளவு அதிகரித்தால் இந்த கருவியிலிருந்து வெளிவரும் கதிர்கள் அதிகமாக இருக்கும். உடனே மறுபடியும் கற்பனைக் குதிரையைத் தட்டி விடாதீர்கள். இந்த வெளிச்சத்தை சாதாரண கண்களால் பார்க்க முடியாது. அதன் அளவை அறிய ஒரு சிறு தீப்பெட்டி அளவே உள்ள ஒரு சிறு கருவியை (புளூரோ போட்டோ மீட்டர்) கண்ணின் முன்னால் ஒரு இருபது வினாடிகள் காட்ட வேண்டும்.

அவ்வளவு தான் சோதனை முடிந்தது. அந்த சிறு கருவி சொல்லிவிடும் உங்கள் உடலிலுள்ள சருக்கரையின் அளவை. அதாவது கண்ணில் ஒரு சிறு கருவி, அதிலிருந்து வெளிவரும் கதிர்களை ஆராய ஒரு சிறு கருவி அவ்வளவு தான். எத்தனை முறை வேண்டுமானாலும் உடலிலுள்ள சருக்கரை அளவைச் சோதித்துக் கொள்ளலாம். வரிசையில் காத்திருக்க வேண்டியதும் இல்லை ஊசி குத்தும் அவஸ்தையும் இல்லை.

உடலிலுள்ள இண்டர்ஸ்டிஷியல் எனும் திரவத்தைக் கொண்டே இந்த கருவி இயங்குகிறது. இந்த கருவியின் வரவு பல்வேறு நாடுகளிலுமுள்ள மருத்துவர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. ஐசென்ஸ் எனும் ஜெர்மன் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான இந்த கருவி மருத்துவ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

யூ.கேவின் ஜெம்மா எட்வர்ட்ஸ் எனும் மருத்துவர் இதைக் குறித்து விளக்குகையில், யூகேவிலுள்ள சுமார் இருபத்தைந்து இலட்சம் சருக்கரை நோயாளிகளுக்கும் இது ஒரு நல்ல வரப்பிரசாதம் என்றார்.

சரி இந்தக் கருவியைக் கண்ணில் பொருத்துவது எப்படி என வினவினால், கண்ணின் ஓரமான ஒரு துளி மருந்தை விடுவோம். கண்ணின் அந்தப் பகுதி மரத்துப் போய்விடும் மெல்லிய ஒரு ஊசியால் இந்தக் கருவியை அங்கே வைத்து விட வேண்டிது தான். அதிகபட்சம் மூன்று நிமிட வேலை என புன்னகைக்கின்றனர். ஒரு வருடத்துக்கு ஒருமுறை இந்தக் கருவியை மாற்றி புதிதாய் வைத்து விடவேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கவர்ந்திழுக்கும் இந்த கண்டுபிடிப்பு இன்னும் பல சோதனை ஆய்வுகளைக் கடந்து விரைவில் சந்தைக்கு வரவேண்டும் என்பதே நோயாளிகளின் விருப்பமாக இருக்கக் கூடும்.

 ஃ

ஆண்களை அச்சுறுத்தும் ஆராய்ச்சி !

( பெண் குறிப்பு :  பசங்களா நீங்க சாக்லேட் சாப்பிட்டு குண்டாயிடாதீங்க )

அதிக எடையுடன் இருப்பது பல்வேறு சிக்கல்களைத் தரும் என்பது பல ஆராய்ச்சிகளின் மூலமாக ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது இன்னொன்று. அதிக எடையுள்ள ஆண்களின் விந்தணு பாதிப்புக்கு உள்ளாகும் என்பதே அது.

அதிக எடையுள்ள பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் என்று மருத்துவர்கள் முன்னமே தெரிவித்திருந்தனர். இப்போது ஆண்கள் அதிக எடையுடனும், கொழுப்புச் சத்துடனும் இருப்பது அவர்களுடைய உயிரணுக்களைப் பாதிக்கும் எனும் ஆராய்ச்சியும் வெளியிடப்பட்டுள்ளது.

உடலின் உயரத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான எடை இல்லாமல் இருப்பது இதயம் தொடர்பான நோய்கள், உயர் குருதி அழுத்தம், தூக்கமின்மை, சோர்வு உட்பட பல்வேறு சிக்கல்களைத் தருகிறது. இப்போது விந்தணுக்களும் இதனால் பாதிக்கப்படுகிறது எனும் ஆய்வு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இன்னும் அழுத்தமாய் சொல்கிறது.

எத்தனை அவசர வாழ்க்கையெனினும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை இந்த ஆராய்ச்சி மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கிறது.