முட்டைப் பிரியர்களுக்கோர் நற்செய்தி….

Egg3

முட்டை சைவப் பிரியர்களின் முதன்மை உணவாக மாறிப்போயிருக்கும் காலம் இது. முட்டை அசைவம் என்றாலே நம்பத் தயாராய் இல்லை இன்றைய இளம் தலைமுறை. ஆனால் அவர்களைக் கலக்கமுறச் செய்வதெல்லாம் முட்டையைக் குறித்து உலவிக் கொண்டிருக்கும் ஏராளமான கட்டுக் கதைகள் தான்.

“முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது ..” என அடுக்கடுக்காய் வைக்கப்படும் பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.

அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த ஆனந்தத்துக்கு உள்ளாக்குகின்றன சமீப காலமாய் வெளியாகும் முட்டை குறித்த ஆராய்ச்சிகள். அவற்றில் ஒன்று “தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று.

முட்டை தரும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயலையே செய்கின்றன என ஒரு விரிவான ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

முட்டை வயிற்றில் உள்ள என்சைம்களுடன் கலந்து உருவாக்கும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் மருந்துகள் செய்யும் அதே பணியையே அடிபிறழாமல் செய்கின்றன எனும் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர் கனடாவின் ஆல்பர்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.

முட்டையை வேகவைத்து என்றல்ல, பொரித்து ஆம்லேட்களாக உட்கொள்வதும் சிறந்த பயனளிக்கிறது என்று சொல்லி ஆம்லேட் பிரியர்களின் வயிற்றில் முட்டை வார்க்கின்றனர் இவர்கள்.

முட்டை உண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும், இதய நோய்கள் வரும், அது இது என அச்சுறுத்திக் கொண்டிருந்த தகவல்களுக்கு இன்னொரு ஆராய்ச்சி முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வரக் காரணமாகாது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானதல்ல. மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை. இன்னும் சொல்லப்போனால் தினம் இரண்டு முட்டைகளை உண்பது உடலுக்கு நல்லது. உங்கள் எடை கட்டுக்குள் வைத்திருக்கக் கூட இது உதவும் என சிலிர்ப்பூட்டும் தகவல்களைச் சொல்லி முட்டைப் பிரியர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆராய்ச்சிக் குழுவினர்.

வாரத்துக்கு மூன்று முட்டைகளே ஆரோக்கியமானது என இங்கிலாந்து மருத்துவர்கள் நிர்ணயித்திருந்த கட்டுப்பாடுகளின் கட்டுகளையெல்லாம் அவிழ்த்து விட்டு , தினம் இரண்டு சாப்பிடுங்கள் என அறிவுறுத்த ஆரம்பித்திருக்கிறார்களாம்.

பிறகென்ன, நீங்களும் முட்டையை மறுபடியும் நேசியுங்கள் .

புரோகோலி புசியுங்கள்

broccoli 

புரோகோலி தெரியுமா ? பரவலாக பலரும் பயன்படுத்தாத இந்த காய்கறிக்கு வயிற்றில் புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தினமும் இரண்டு கைப்பிடி அளவு தளிர் புரோகோலியைச் சாப்பிட்டு வந்தால் உடலில் என்சைம்கள் அதிகமாய் சுரந்து அவை வயிற்றில் கான்சர் வரும் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கிறது என்பதே இவர்களுடைய புதிய ஆராய்ச்சி முடிவாகும்.

ஜப்பானில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் சுருங்கிய விளக்கம் வேண்டுமெனில் , “புரோகோலியில் உள்ள பயோ கெமிக்கல் பொருளான சல்ஃபோரோபேன் தான் இந்த பாதுகாப்புப் போரைப் புரிகிறது” எனச் சொல்லலாம்.

புரோகோலியை தினமும் உண்பது உடலிலுள்ள வாயு தொல்லைகளுக்கான நிரந்தரத் தீர்வாகி விடுகிறது. கூடவே வயிற்றில் கான்சர் வராமல் தடுக்கும் மாபெரும் பணியையும் செய்கிறது என்கிறார் ஜான் காப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெட் பாகே.

புரோகோலியில் வைட்டமின் A, வைட்டமின் C, ஃபோலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்ற உடலுக்கு மிகவும் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது உடல் நலத்துக்கு மிகவும் பயனளிப்பது. குறிப்பாக உடலின் குருதி அழுத்தத்தை இது கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இதிலுள்ள வைட்டமின் C, தெளிவான கண்பார்வைக்கு உதவுகிறது. கண்ணில் பூவிழுதல் (காட்டராக்) தொல்லையிலிருந்து கண்ணைக் காப்பாற்றவும் இந்த புரோகோலி துணை செய்கிறது.

இதிலுள்ள ஃபோலிக் அமிலம் தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு வரப்பிரசாதம் எனலாம். கூடவே வயதான பெண்களுக்கு வரக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோயிலிருந்தும் புரோகோலி பாதுகாக்கிறது.

அல்ஸீமர், நீரிழிவு, இதய நோய் உட்பட பல்வேறு நோய்களிலிருந்து உடலைக் காப்பாற்றும் சக்தி இந்த புரோகோலிக்கு உண்டு ! இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமை கூட உண்டு என்பது கூடுதல் தகவல்.

இன்னும் என்ன தயக்கம், புரோகோலி புசிக்க ஆரம்பிக்கலாமே !

0

இதுக்கு “தம்” பரவாயில்லையேப்பா !

 namitha1

வாழ்நாள் முழுவதும் புகை பிடித்துத் திரிவதும், அளவுக்கு மிக அதிகமான எடையுடன் இருப்பதும் ஒரே மாதிரியான பாதிப்பைத் தரும் என அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர் யூகே ஆராய்ச்சியாளர்கள்.

உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. பல்வேறு நாடுகளும் ஏதேனும் செய்து இந்த சிக்கலிலிருந்து மீண்டு வரவேண்டும் என முயன்று கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று இங்கிலாந்து.

இந்த ஆராய்ச்சி சுமார் 90 ஆயிரம் பேரை வைத்து மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதன் முடிவாக, அளவுக்கு மிக மிக அதிகமாக எடையுடன் இருப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் பத்து ஆண்டுகளை இழக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.

அதாவது சாதாரணமான உடல் எடையை விட 18 கிலோ அதிகமாய் இருப்பவர்களுக்கு வாழ்நாளில் மூன்று ஆண்டுகள் குறையும். சாதாரண உடல் எடையை விட சுமார் 40 கிலோ அதிகமாய் இருந்தாலோ ஆயுளில் 10 ஆண்டுகள் குறையும் என கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

எது சரியான எடை என எப்படிக் கண்டு பிடிப்பது ?

அதற்கு BMI எனும் அளவையை வைத்திருக்கிறார்கள். இத்தனை உயரமெனில் இந்த எடை சரியானது எனும் கணக்கே அது.

சுமார் ஐந்தடி உயரமுள்ள மனிதர் 45 கிலோ எடையுடன் இருப்பது ஆரோக்கியமானது. ஐந்தரை அடி உயரமெனில் 55 கிலோ, ஆறடி உயரமெனில் எழுபது கிலோ என உத்தேசக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். ஆண்கள் பெண்கள் வேறுபாட்டில் இவை சற்றே மாறுபடும்.

(எடை (பவுண்டில்) x 4.88) / (உயரம் – அடி )2 என்னும் சூத்திரத்தை BMI கண்டறிய பயன்படுத்துகின்றனர். ஒரு கிலோ என்பது 2.2 பவுண்ட்

வாழ்நாள் முழுவதும் புகை பிடிப்பதும், உடல் எடை அதிகமாய் இருப்பதும் ஒரே போன்ற அச்சுறுத்தல் என்பது புதிய தகவல் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய ரிச்சர்ட் பீட்டோ என்பவர்.

தேவையற்ற மேலைநாட்டு உணவுப் பழக்கங்களை தவிர்த்து, இயற்கை உணவுக்கும், சுகாதார வாழ்க்கை முறைக்கும் மாறுவதும், உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதுமே இந்தச் சிக்கலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும்.

 

நீங்க சுறுசுறுப்பான பார்ட்டியா ?

 

சுறுசுறுப்பாய் இருப்பவர்களுக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்பவர்களுக்கும் புற்று நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என ஜப்பானில் நிகழ்த்தப்பட்ட மிகவும் விரிவான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த ஆய்வில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 80,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக உடற்பயிற்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் இடையேயான தொடர்பையே  ஆய்வுகள் முன்னிலைப்படுத்தும். இந்த ஆராய்ச்சி வெறும் உடற்பயிற்சியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் ஆய்வு செய்யப்பட்ட நபரின் முழு வாழ்க்கை முறையையும் பரிசீலித்தது.

தினசரி வாழ்க்கையில் எப்படிப்பட்ட நிலையில் இயங்குகிறார் என்பதும், தினமும் உடலுக்கு எப்படிப்பட்ட வேலை தரப்படுகிறது என்பதும் கவனத்தில் இந்த ஆய்வு கவனத்தில் கொண்டது.

ஜப்பான் நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு மக்களின் ஓய்வு, தூக்கம், உடற்பயிற்சி, உடல் உழைப்பு, தினசரி அலுவலின் தன்மை அனைத்தையும் கணக்கில் கொண்டு விரிவாக நடத்தப்பட்டது. இதன் முடிவில் தான் சுறுசுறுப்பான வாழ்க்கை எனில் புற்று நோய் பயத்தைக் குறைக்கலாம் எனும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

பொதுவாக இன்றைய நவீன உலகத்தில் உடலுழைப்புக்கு அதிகம் தேவையற்ற சூழலில் இந்த ஆராய்ச்சி முடிவு நம்மை சற்றே ஓடியாடி உழைக்க உற்சாகப் படுத்துகிறது எனலாம்.

உடலுக்குக் கொடுப்போம் தேவையான இயக்கம் – அதைக்
கொடுப்பதில் மனமே உனக்கென்ன தயக்கம் ?

பாட்டி கேட்டா சிரிப்பாங்க …

நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர். அதாவது நமது வாயிலுள்ள உமிழ் நீருக்குக் காயங்களை ஆற்றும் சக்தி இருக்கிறது என்பதே அது.

இதைத் தெரிந்து கொள்ள நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் வரை போகவேண்டிய அவசியம் இல்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும். காரணம் இயல்பிலேயே மருத்துவத்தில் மகத்துவம் வாய்ந்த நமது பாட்டிகள், தாத்தாக்கள். காயம் பட்ட இடத்தில் சட்டென உமிழ் நீர் தொட்டு வைக்கும் மருத்துவர்கள் அல்லவா அவர்கள்.

சரி, பாட்டி தாத்தத இல்லேன்னா பரவாயில்லை. உங்க வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு சின்ன காயம் பட்டா என்ன செய்யும். அது உமிழ்நீரால் அந்தக் காயத்தை நக்கி ஈரப்படுத்திக் கொண்டே இருக்கும் தானே. அதற்குத் தெரிந்த மருத்துவம் இப்போது தான் நெதர்லாந்து வாசிகளுக்குத் தெரிந்திருக்கிறது.

வாயில் ஏற்படும் புண் விரைவில் ஆறுவதற்கான காரணத்தை நாங்கள் விளக்கியுள்ளோம் என பீற்றிக் கொள்கின்றனர் நமது வைத்திய தேசத்தின் வலிமை அறியாதவர்கள்.

இனி என்ன, உமிழ்நீரில் இருக்கக் கூடிய ஹிஸ்டெயின் எனும் பொருளைப் பிரித்தெடுத்து அதன் தன்மையில் மருந்து தயாரிப்பார்களாம், நாமும் மறக்காமல் வெளிநாட்டிலிருந்து அதை இறக்குமதி செய்து பயன்படுத்துவோம். பேடெண்ட் நெதர்லாந்துக்கு போட்டுக் கொண்டு.

இன்னொன்று நினைவுக்கு வருகிறது, கல்லில் கால் இடித்து காயம் ஏற்பட்டால் அந்தக் காயத்தின் மீது சிறுநீர் கழிக்கும் வழக்கம் இன்னும் கிராமங்களில் உண்டு. அதை எந்த நாட்டுக்காரன் ஆராய்ந்து ஒரு புதிய கண்டுபிடிப்பாக வெளியிடப் போகிறானோ தெரியலையே

பின் குறிப்பு : படத்தைப் பார்த்து ரொம்ப ஜொள்ளு விடாதீங்க, அது மருந்து ! அருமருந்து.

புகைத்தல் என்பது வலிப்பை அழைத்தல்

 புகைத்தலின் தீமை பற்றி இனிமேல் சொல்லித் தான் தெரியவேண்டுமென்பதில்லை. ஆனாலும் இந்த புதிய ஆராய்ச்சி முடிவு புகைத்தல் சார்ந்த ஒரு புதிய கோணத்தைக் காட்டுகிறது.

வாழ்நாளில் புகையே பிடிக்காத ஒரு நபர் புகைப் பழக்கமுடைய ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புகை பிடிக்காத ஒரு நபர் புகை பிடிக்காத ஒருவரைத் திருமணம் செய்வதை விட 42 விழுக்காடு இந்த  வாய்ப்பு அதிகரிக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

புகை பிடிக்காதவர்களும் காற்றில் பரவும் நிகோட்டினால் பாதிக்கப்படுவதை பல ஆராய்ச்சிகள் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளன. இப்போது தான் முதன் முறையாக புகைப் பழக்கமுடைய வாழ்க்கைத் துணையினால் வலிப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது எனும் புதிய ஆராய்ச்சி முடிவு கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சியில் 16225 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மரியா கிளைமோர், புகையினால் புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனேகம் அவற்றில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டார்.

குறிப்பாக பழைய ஆராய்ச்சிகள் கூட இருப்பவர்களின் புகைப்பழக்கம் புகைக்காதவர்களுக்கும் ஆஸ்த்மா, கான்சர், இதய நோய் உட்பட பல நோய்களைத் தரும் வாய்ப்பு உண்டு என நிரூபித்திருந்தன. காற்றில் பரவும் விஷத்தன்மையே இதன் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும்.

இந்த புதிய ஆராய்ச்சியின் பயனாக ஆரோக்கியமான உடலுக்கு புகைப் பழக்கத்தை அறவே ஒழிக்கவேண்டும் என்பதுடன், குடும்பத்திலுள்ளவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும் புகையை ஒழிப்பது இன்றியமையாயது எனும் கருத்தும் வலுப்பெற்றிருக்கிறது.

வாழ்க்கையை விடப் பெரியதா வெண்புகை – அதை
விட்டொழித்தால் தவழுமே புன்னகை

ஒயிலான மயில்களின் ஓவிய ஆடை.

ரஷ்யாவிலுள்ள Krasnoyarsk என்னுமிடத்தில் நடந்த 2008ம் ஆண்டுக்கான உடல் ஓவியப் போட்டியில்
Elena Mityanina வடிவமைத்த ஓவிய ஆடையுடன் ஒயிலாய் வந்த மயில்கள்

உடலோவியம் கலையானது – இது மாஸ்கோ உடல் ஓவிய விழா