ஜூ.வி : கற்பு வாங்கலையோ …கற்பு !

EFG103

“பதின்மூன்றே வயதான இளம் பெண்ணின் விர்ஜினிடி விற்பனைக்கு”. அதிக விலைக்குக் கேட்பவர்களுக்கே விற்கப்படும் ! ரஷ்ய இணைய தளம் ஒன்றில் இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்ததும் உஷாரானது மாஸ்கோவின் காவல்துறை. பகிரங்கமாக இந்த விளம்பரத்தைக் கொடுத்தது யார் என சைபர் குழு அதிரடி விசாரணையில் குதித்தது. விசாரணை முடிவோ காவல் துறையையே கதிகலங்க வைத்து விட்டது. காரணம், அந்த விளம்பரத்தைக் கொடுத்தது வேறு யாருமல்ல, அந்தப் பெண்ணின் தாய் !

இதே போல பதினாறு வயதான ஒரு பெண்ணின் கற்பும் ரஷ்ய இணைய தளம் ஒன்றில் ஏலம் போட்டு விற்கப்பட்டது. அங்கும் குற்றவாளி பெண்ணின் சொந்த அம்மாவே தான் ! இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ரஷ்யாவில் பெரும் சலசலப்பை உருவாக்கியிருக்கின்றன.

இப்படி ஒரு படு பாதகச் செயலைச் செய்த தாய்க்கு கொஞ்சமேனும் குற்ற உணர்வு இருக்குமா என பார்த்தாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பதின் மூன்று வயது மகள் அலியோனாவின் தாய் ஸ்வெட்லானா சந்தோசமாகப் பேசுகிறாள். நான்கு இலட்சம் ரூபிள்களுக்கு என் மகள் விலை போயிருக்கிறாள். இத்தனை விலை கிடைக்கும் என நான் நினைக்கவே இல்லை என வியக்கிறார்.

பதினாறு வயது மகள் போலினாவின் கற்பு இலட்சம் ரூபிள்களுக்கு விலைபோயிருக்கிறது ! அவளுடைய தாய் மரியா மகளை கையோடு அழைத்துக் கொண்டு “கஸ்டமரிடம்” ஒப்படைத்திருக்கிறாள் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல்.

எனக்கு நிறைய கடன் இருக்கிறது. கடன்களை அடைக்க இது தான் எளிய வழி. கற்பைப் பாதுகாத்து வைத்து என்ன ஆகப் போகிறது ? இதையெல்லாம் நான் எனக்காகச் செய்யவில்லை. என் மகளுக்காகத் தான் செய்திருக்கிறேன். கடன்களை அடைத்தது போக மிச்சமிருக்கும் பணம் முழுதும் அவளோட கல்யாணச் செலவுக்குத் தான் என்கிறார் மரியா சர்வ சாதாரணமாக. இப்போ எனக்கு இளமையும் இல்லை. வயசும் இல்லை. இல்லேன்னா என்னோட கற்பையே ஒரு நல்ல விலைக்கு விற்றிருப்பேன் என்கிறார் தடாலடியாக ! 

அம்மாக்கள் தான் இப்படி சகஜமாய்ப் பேசுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களோ கண் கலங்குகின்றனர். “இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்குத் தெரியவே தெரியாது. போட்டோ எடுக்கலாம்ன்னு சொல்லித் தான் அம்மா என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. ஆனா கடைசில ஆள் வெச்சு பலாத்காரம் பண்ணிட்டாங்க. என்னோட அம்மா இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை” என விசும்பும் பதின் மூன்று வயது சிறுமி பள்ளிக்கூடம் செல்கிறாள்.Alina Percea

“எனக்கு இந்த சமாச்சாரமே தெரியாது. தெரிஞ்சிருந்தா நிச்சயம் ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன்” என கண் கலங்கும் பதினாறு வயதுப் பெண்ணும் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள்.  

இணையத்தில் சமீப காலமாகவே இந்த “விர்ஜினிடி” விற்பனை வெகு ஜோராக நடந்து வருகிறது. படிக்கப் பணமில்லை, ஆடம்பரமாய் செலவழிக்க வசதியில்லை, அம்மாவின் மருத்துவச் செலவுக்குப் பணம் வேண்டும் என ஏதேதோ காரணங்களுக்காக கற்பு விற்கப்படுகிறது. இவர்களை ஏலத்தில் எடுக்கவும் போட்டா போட்டி நிலவுகிறது. எக்கச்சக்கமான பணம் ஒவ்வோர் ஏலத்திலும் கைமாறுகிறது. பெரும்பாலும் வெளி நாடுகளில் வசிக்கும் தொழிலதிபர்கள் தான் இவர்களை ஏலத்தில் எடுக்கின்றனர்.

வேலைக்கு சர்டிபிகேட் சுமந்து திரிவது போல இவர்கள் தங்கள் விர்ஜினிடியை நிரூபிக்கும் மருத்துவ சர்ட்டிபிகேட்டுடன் அலைகிறார்கள்.  சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபின் ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து இவர்கள்  “ஒரு நாள் முதல்வி” யாகிறார்கள்.

ரொமானியாவின் எலீனா, இத்தாலியப் பெண் பிக்கோ, பெருகுவே நாட்டு மாடல் அழகி, மான்செஸ்டர் பல்கலைக்கழக மாணவி கேரிஸ் என கற்பை விற்போரின்  பட்டியல் மிக நீளமானது.

அமெரிக்காவில் வசித்து வரும் பதினெட்டு வயது ரொமாலியப் பெண் எலீனா பெர்சியா. கம்ப்யூட்டர் படிக்க காசில்லை, விற்பதற்கு பாத்திர பண்டம் ஏதும் இல்லை என கற்பை ஏலமிட்டார். 8800 பவுண்ட்களுக்கு ஏலத்தில் எடுத்தவர் இத்தாலியிலிருந்த தொழில் அதிபர் ஒருவர். அவர் எலீனாவை வெனிஸ் நகரத்துக்கு “பஸ்ட் கிளாசில்” பறக்க வைத்து அங்குள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.

“பிசினஸ் நல்லா முடிஞ்சுது !” என எந்தவித சங்கோஜமும் இன்றி கூறும் எலினாவுக்கு வருத்தம் இரண்டே இரண்டு.

ஒன்று, ஐம்பதாயிரம் பவுண்ட் க்கு ஏலம் போகும்ன்னு நினைச்சேன். ஆனா ஜஸ்ட் எட்டாயிரத்து எண்ணூறு தான் கிடச்சுது. இரண்டு, ஒரு யூத் ஹீரோவை எதிர்பார்த்தேன் வந்தவரோ 45 வயசு குள்ள மனுஷன் !

“ஹோவர்ட் ஸ்டர்ன் ஷோ” என்பது ஹேவர்ட் ஸ்டர்ன்  என்பவரால் நடத்தப்படும் அமெரிக்காவிலுள்ள ஒரு ரேடியோ டாக் ஷோ. இந்த டாக் ஷோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேசினாள் நடாலி டைலன் எனும் 22 வயதுப் பெண். அந்த உரையாடலின் போது தனது கற்பை ஏலமிடப் போவதாக பகிரங்கமாக அறிவித்து கேட்டவர்களை திடுக்கிடச் செய்தார்.

சொன்னது போலவே இணையத்தில் கடைவிரித்த அவரது கற்பு சடசடவென ஏலத்தில் போனது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தனது கற்பு விலையேறிக் கொண்டிருப்பதைக் கண்ட நடாலி இன்னும் ஏலத்தை முடித்துக் கொள்ளவில்லை. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விலை பேசியிருக்கிறார்களாம். இன்னும் தினம் தோறும் இவரைக் குறித்த செய்திகள் தினமும் ஹாட்டாக உலவுகின்றன. ஏலத் தொலை மில்லியன் கணக்கில் எகிற நடாலி அதிர்ந்து போயிருக்கிறாராம். வியப்பின் உச்சியில் இருந்து கொண்டு “பெண்ணின் கற்பு விலை மதிப்பானது ! அதை விற்பதே நியாயமானது” என தத்துவம் பேசுகிறார் நடாலி.

Natalie Dylanகற்பு விற்பனையை சட்டம் “பாலியல் தொழில்” எனும் கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் இந்த விற்பனையைத் தடை செய்ய சட்டத்தால் முடியாது. ஒரு விதத்தில் வீட்டிலுள்ள பொருட்களை ஏலம் இடுவதைப் போலத் தான் இதையும் கணக்கில் எடுக்க வேண்டி இருக்கும் என்கிறார் அமெரிக்க வழக்கறிஞர் மார்க் ரண்டாசா.

பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் ஏலம் நடந்தாலோ, ஏலமிடும் நபர் பதினெட்டு வயதைக் கடந்தவர் என்றாலோ சட்டம் சைலண்டாய் தான் இருக்கும் என்கிறார் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ ஏஜெண்ட் டேவிட் ஸ்டாரெட்ஸ்.

ஆனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டு வரும் பணத்துக்கு ஒழுங்காக வரி கட்டவேண்டுமாம் ! சில இடங்களில் வரி சுமார் 70 சதவீதமாம் !!!

இப்படி தங்கள் கற்பை தாங்களே விற்பது பரவலாக நடந்தாலும், அம்மாவே பெண்ணின் கற்பை விற்றிருப்பது இது தான் முதல் முறை.  அந்த அம்மாக்கள்  கஸ்டமர்களுக்கு இட்ட ஒரே கண்டிஷன் “பாதுகாப்பா” உறவு கொள்ளுங்கள் என்பது தானாம்

இப்படி ஒரு கீழ்த்தரமான செயலைச் செய்த இரண்டு அம்மாக்களும் இப்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் செய்த குற்றத்துக்கான பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கவும் சட்டத்தில் இடம் உண்டாம்.

“வயசுப் பிள்ளையை வளக்கிறது மடியில நெருப்பைக் கட்டிட்டு அலையற மாதிரி” என பதட்டப்படும் தாய்மார்களைப் பார்த்து தான் நமக்குப் பழக்கம். அதனால் தான் பிள்ளைகளை அசிங்கப்படுத்தும் தாய்மார்களை நினைத்தாலே அதிர்கிறது மனசு !

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்

படங்கள் : நாலு பேரு பாக்கணும்ன்னா இப்படித்தான் …

எல்லாரையும் போல இருக்கணும்னு ஏன் நினைக்கிறே ? நீ கொஞ்சம் வித்தியாசமா இருக்கலாமே” இந்த வார்த்தையை குத்து மதிப்பா எத்தனை தடவை கேட்டிருப்போம். 

ஒண்ணு மட்டும் வித்தியாசமா இருந்தா எப்படி இருக்கும், சுவாரஸ்யமான இந்த படங்கள் சொல்லக் கூடும்.

நள்ளிரவு மின்னல்

One

ஐந்தில் வளையாதது…

 

Two

மி… த.. பர்ஸ்டு….

 

Six

தூக்கத்துல கொட்டாவி விடற வியாதி உண்டா..

Fine

வெள்ளைப் புறா ஒன்று.. 

Three

அதான்… அதே தான் !

Four

 

தமிழிஷில் வாக்களிக்க…

குளிர்பானக் குட்டிச் சாத்தான் !

 

genelia-20தாகத்துக்குத் தண்ணீர் மோர், இளநீர் என்ற வளமான காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து இன்றைய இளைஞர்களின் கைகளில் கோக் பாட்டில்களாகவும், பெப்ஸி கேன்களுமாகவும் உருமாறியிருக்கிறது.

போதாக்குறைக்கு ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என பெரிய பெரிய ஜம்போ பாட்டில்களும் குறைந்த விலைக்கே கிடைப்பதனால் எங்கேனும் குடும்பத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் பெரிய பாட்டில்கள் சிலவற்றைத் தூக்கிச் சுமப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

2007ம் ஆண்டைய புள்ளிவிவரத்தின் படி உலக அளவில் 552 பில்லியன் லிட்டர்கள் குளிர்பானங்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதாவது தனிநபர் சராசரி 83. இன்னும் சில வருடங்களில் இந்த தனிநபர் சராசரி 100 லிட்டர்கள் எனுமளவுக்கு உயரும் என்கிறது பதட்டப்பட வைக்கும் புள்ளி விவரம்.

இப்படி எதற்கெடுத்தாலும் கோக், பெப்ஸி போன்ற குளிர்பானங்களை உள்ளே தள்ளுவதால் நம்முடைய எலும்புகள் பலவீனமடையும் எனவும், மிதமிஞ்சிப் போனால் உடல் உறுப்புகள் செயலிழக்கக் கூட வாய்ப்புகள் உண்டு எனவும் சொல்லி அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றனர் கீரீஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு நாம் குளிர்பானங்களை அளவுக்கு மீறி பயன்படுத்துகின்றோம். அதன் விளைவுகள் எல்லா இடங்களிலும் தெரிகின்றன. பல் நோய்கள், எலும்பு நோய்கள், நீரிழிவு போன்ற நோய்கள் குளிர்பானங்களைக் குடிப்பதனால் வருகின்றன என்பது அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர் மோஸஸ் எலிசாப்.

குளுகோஸ், புரூட்கோஸ், காஃபைன் போன்றவையே குளிர் பானங்களில் அதிகமாய் காணப்படும் மூலக்கூறுகள். இவையே பல்வேறு சிக்கல்களுக்கு காரணகர்த்தாக்கள்.

அதிக கோக் உட்கொள்வதனால் உடலிலுள்ள பொட்டாசியம் அளவு குறைந்து போய்விடுகிறது. இதை மருத்துவம் ஹைப்போகலேமியா என பெயரிட்டு அழைக்கிறது. இந்த சூழல் வரும்போது உடலின் தசைகள் வலுவிழந்து போய்விடுகின்றன என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

கோக் போன்ற குளிர்பானங்களில் உள்ள சருக்கரையின் அளவு சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுத்து, சிறுநீரகம் அதிக பொட்டாசியத்தை  வெளியேற்றி, உடல் பொட்டாசியம் குறைவான சூழலுக்குத் தள்ளப்பட்டு என சங்கிலித் தொடர்ச்சியாய் சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

உடல் குண்டாதல், பல் நோய்கள், எலும்புருக்கி நோய் போன்ற பரவலான நோய்களுடன் எலும்புகளையும் வலுவிழக்கச் செய்து விட்டு நமது வீட்டு பிரிட்ஜ்களில் சாதுவாய் அமர்ந்திருக்கிறது இந்த சர்வதேசச் சாத்தான் !

புகைத்தலை விடுதல் நல்லது, ஆனால்…

 smoke1நீண்டகாலமாக புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு அந்த பழக்கத்தை மாற்றுவது என்பது மிகவும் கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்தப் பழக்கத்தை விட்டு வெளியே வர விரும்புபவர்களை திசைதிருப்பி வேறு பழக்கத்துக்குள் அமிழ்த்த வியாபார உலகம் கண்விழித்துக் காத்துக் கிடக்கிறது.

அந்த மாற்று வழிகளில் சில எலக்ட்ரானிக் சிகரெட், நிக்கோட்டின் சூயிங்கம் போன்றவை. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கலந்த இந்த பொருட்கள் புகைத்தலின் இன்பத்தைத் தரும். ஆனால் சிகரெட்டில் உள்ள பல நூற்றுக் கணக்கான தார் போன்ற விஷத்தன்மையுடைய பொருட்கள் இவற்றில் இருப்பதில்லை.

எனவே இத்தகைய பொருட்கள் சற்றும் ஆபத்தற்றவை என பொதுப்படையாய் விளம்பரம் செய்யப்படுகின்றன. அதிலும் கணினி நிறுவனங்களின் வாசல்களில் எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கான விளம்பரங்கள் அதிக அளவில் செய்யப்படுகின்றன.

ஆனால் இத்தகைய விளம்பரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்புவதுடன், இத்தகைய புகைக்கான மாற்றுப் பொருட்களின் சிக்கலையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது தற்போதைய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

புகைக்குப் பதிலாக நிக்கோட்டின் சூயிங்கம் பயன்படுத்தினால் அவர்களுக்கு வாய்ப்  புற்று நோய் வரும் வாய்ப்பு வெகுவாக அதிகரிக்கிறது என எச்சரிக்கை செய்கிறது இந்த ஆராய்ச்சி.

நிக்கோட்டின் புற்றுநோயை வருவிக்கலாம் என ஏற்கனவே ஒரு ஆராய்ச்சி வெளியாகியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

புகை பிடிப்பதிலிருந்து விடுபட விரும்புபவர்கள் அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப நிக்கோட்டின் சார்ந்த பிற பொருட்களை நாடாமல் இருப்பதே ஆரோக்கியமானது!

அலசல் : எனது புதிய நூல்

எண்ணிக்கைக் கணக்கில் இது எனது பதினோராவது புத்தகம் எனினும், இதுவே எனது முதல் கட்டுரைத் தொகுப்பு என்பதில் மனதில் சிறப்பிடம் பெறுகிறது.

வாய்ப்பு இருந்தால் வாசித்துப் பாருங்கள்.
வாசித்தால் விமர்சனம் தாருங்கள்

அன்புடன்
சேவியர்

அருவி வெளியீடு
9444302967
பக்கங்கள் 128
விலை  : 70/-
  

 

சுந்தரபுத்தன் அவர்கள் இந்த நூலுக்காக அளித்த பின்னுரை

சேவியரின் வார்த்தைகளுக்குச் சிறகுகள் முளைத்து விடுகின்றன. சில நேரங்களில் அந்தச் சிறகுகள் நம்மை பறவைகளாக்கி விடுகின்றன.

ஏற்கனவே கவிஞராய் அறியப்பட்ட சேவியர், ஒரு தேர்ந்த கட்டுரையாளராய் வெற்றி கண்டிருக்கிறார். தற்கால தமிழ் உரைநடை எழுத்தில் நட்சத்திரமென மின்னுகிறார் அவர்.

போதை, குழந்தைகள், மீடியா, மன அழுத்தம், கணினி என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற விஷயங்களை அதன் ஆழம் கண்டு எழுதியிருக்கிறார்.

ஒற்றை முத்தெடுக்க முக்கடலிலும் மூழ்க சம்மதம் கொண்ட சேவியரின் இந்நூல் ஒரு கட்டுரைத் தொகுப்பு தான். ஆனால், அதனுள்ளே உண்மையின் சல்லி வேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன.

இவை கற்பனையின் விளைச்சல்கள் அல்ல. கருத்துருக்கள். எதுகுறித்தும் மெய்ப்பொருள் காண விழையும் இவர் ஒரு மென்பொருள் பொறியாளர். எளிமையான இவரது எழுத்து உங்கள் சிந்தனைத் தளத்தை ஒரு படி உயரே வைக்கும்.

அருவியின் பெருமை மிகு வெளியீடுகளில் இதுவும் ஒன்று. இங்கே அவர் உழவுக்கு வைத்திருந்த விதை நெல்லை உண்ணக் கொடுத்திருக்கிறார்.

- சுந்தரபுத்தன்.

இந்த நூலுக்கு நான் எழுதிய முன்னுரை

வேர்களைத் தேடி
 

‘உன் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா ? ‘ என்னும் வினாவோடு ஒருமுறை என்னை அணுகினார் நண்பர் ஒருவர். தாத்தாவின் தந்தை பெயரைத் தாண்டி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதே அப்போது தான் எனக்கு உறைத்தது   . நன்றாகத் தெரியும் என்று நாம் நினைக்கும் பல விஷயங்களில் போதிய அறிவு நமக்கு இருப்பதில்லை என்பதை உணர்த்துவதாக இருந்தது அது.

நாம் பணிசெய்யும் துறை சார்ந்த விஷயங்களோ, நாம் வசிக்கும் இடம் சார்ந்த விஷயங்களோ, நாம் பயன்படுத்தும் பொருள் சார்ந்த விஷயங்களோ அல்லது நாம் கலந்து கொள்ளும் விழா சார்ந்த விஷயங்களோ எதை எடுத்துக் கொண்டாலும் நமக்குத் தெரியாத வரலாற்று வேர்கள் அவற்றுக்குள் மறைந்து கிடக்கின்றன.

அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் தகவல்களின் சிலிர்ப்பு போல பல பொருட்களின் பூர்வீகம் சிலிர்க்க வைக்கிறது. எல்லைகள் வகுத்துக் கொள்ளாமல் ஒரு சர்வதேசக் கண்ணோட்டத்தில் அணுகுகையில் இந்த சிலிர்ப்பு இன்னும் விரிவடைகிறது.

அந்த சிலிர்ப்பின் அனுபவத்தைக் கொண்டு அறிவின் வெளிச்சத்தை விரிவுபடுத்தும் கட்டுரைகளை இந்த நூலில் நீங்கள் காண முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உணடு.

தெரிந்த பொருட்கள் தெரியாத தகவல்கள் என்னும் கண்ணோட்டத்தில் அணுகி எழுதப்பட்ட கட்டுரைகளே இதில் பெரும்பாலானவை. தமிழ் ஓசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான  களஞ்சியம் இதழில் தொடர்ந்து வெளியான கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பே இந்த நூல்.

கவிதை, கதை எனும் இலக்கிய வடிவங்களைத் தாண்டி கட்டுரைகள் எனும் வடிவத்தில் வெளியாகும் என்னுடைய முதல் நூல் இது என்பது நெஞ்சுக்கு சற்றே நெருக்கமாய் இடம் பிடித்துக் கொள்கிறது.

பாசாங்கில்லாத புன்னகையுடனும் தணியாத சமூக வேட்கையுடனும் பத்திரிகைத் துறையில் இயங்கி வரும் நண்பர் யாணன் அவர்கள் தமிழோசை களஞ்சியம் இதழுக்காக கணினி துறை சார்ந்த கட்டுரைகள் சில வேண்டும் என்று கேட்டார். அந்த கட்டுரைகளுக்குக் கிடைத்த வாசகர் கடிதங்களே தொடர்ந்து பல விஷயங்களைக் குறித்து வாரம் தோறும் எழுத வைத்தது. அதற்காக தமிழோசைக்கும், நண்பர் யாணன் அவர்களுக்கும் என்னுடைய முதல் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

உற்சாகமாய் சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவியின் பரபரப்புடன் பதிப்பகத் துறையில் இயங்கி வரும் நண்பர் பூபதி அவர்களுக்கும், இந்த கட்டுரைகளை நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் எனும் அவருடைய வேட்கைக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய எழுத்துப் பயணத்தின் கூடவே நடந்து  தொடர் உற்சாகம் வழங்கி வரும் நண்பர் என்.சொக்கன் அவர்களுக்கும்,  தோழர் சுந்தரபுத்தன், எழுத்தாளர் இந்திரன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

கட்டுரைகளின் நேர்த்திக்கான தகவல் சேமிப்புகளில் பெருமளவுக்கு உதவி செய்த எனது துணைவியார் ஸ்டெல்லா அவர்களுக்கும், நண்பர் பென்கிருபா , மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

.

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்…

har_sa.jpg
கடந்த இரண்டு மூன்று நாட்களாக எந்த ஆங்கில நியூஸ் சானலை திருப்பினாலும் இந்திய இளைஞர்களின் கோபமான பேச்சுகளும், பேட்டிகளும், நேர்காணல்களும் என அல்லோலகல்லோலப் பட்டுப் போனது கிரிக்கெட் விவகாரம்.

ஸ்டீவ் பக்னர் இந்தியர்கள் விளையாடும் போது தவறான தீர்ப்புகளையே வழங்குகிறார், ஹர்பஜன் மீதான தடை நீடிக்கப் பட்டே ஆகவேண்டும் என்றெல்லாம் மின்னஞ்சலிலும், எஸ்.எம்.எஸ் களிலும் இந்தியர்கள் ஒரு சுதந்திரப் போராட்ட வேகத்தில் உரை நிகழ்த்தினார்கள்.

கிரிக்கெட், இந்தியர்களுக்கு உணவு, உடை, உறைவிடத்தை விட முக்கியமாகிப் போய் விட்டது என்பதையே கொடும்பாவி எரிப்புகளும், கோப ஆர்பாட்டங்களும் வெளிப்படுத்தின.

எங்கேயாவது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தற்கொலை செய்து கொண்டார்களா தெரியவில்லை. தினத்தந்தி படித்தால் தான் அந்த விஷயம் தெரியும்.

நிறவெறிக்கு எதிராக கடுமையாகப் போராடும் இந்தியா இதை அனுமதிக்காது என ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தனர் எல்லா சானல்களிலும், யாரோ ஒருவர்.

இத்தனை ஆவேசப்படக் கூடிய அளவுக்கு இந்த நிகழ்வு விஸ்வரூபமெடுத்ததற்கு இந்தியா இரண்டாவது டெஸ்டில் தோற்று விட்டது என்பதே முக்கியமான காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆஸ்திரேலியர்களின் சுப்பீரியாரிடி காம்ப்ளஸ், மற்றும் கிரிக்கெட்டில் காலம் ககலமாய் நிகழ்ந்து வரும் பிரிவினை பேதங்களும் யாரும் அறியாததல்ல.

என்னதான் இருந்தாலும், ஒரு விளையாட்டில் நிகழ்ந்த இந்த சம்பவம் இவ்வளவு முக்கியத்துவப் படுத்தப்பட வேண்டியது தானா ?

நிறவெறிக்கு எதிரானவர்கள் என்று பிரகடனப் படுத்திக் கொள்வதற்காக இத்தனை பிரயர்த்தனம் செய்ய நமக்கு உண்மையிலேயே அருகதை இருக்கிறதா ?

பல்லாயிரம் மக்களை மதரீதியாகப் பழிவாங்கும் நோக்கில் கொன்று குவித்த நிகழ்வுகள் நம் கண்முன்னே நிகழ்ந்த போதோ, அதற்குக் காரணமானவர்களை பத்திரிகை ஒன்று ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியபோதோ ஊடகங்கள் இத்தனை ஆவேசப்பட்டனவா ?

பழங்குடியினருக்கு எதிராகவோ, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவே நடக்கும் வர்க்கபேத போராட்டங்களை முழுக்க முழுக்க ஓர் சமூக அக்கறையுடன் ஊடகங்கள் முழங்கியிருக்கின்றனவா ?

இன்றும் கூட நிகழும் ஆலய எரிப்புப் போராட்டங்களையும், அதை நியாயப்படுத்தும் அறிக்கைகளையும் இந்த ஊடகங்கள் நடுநிலையோடு விமர்சிக்கின்றனவா ? அல்லது அலசுகின்றனவா ?

ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்கோ, ஷில்பா ஷெட்டிக்கோ அல்லது ஐஸ்வர்யா ராயின் குடும்பத்துக்கோ மட்டுமே முக்கியத்துவம் தருவது தான் ஊடகங்களின் பணியா ?

கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்ந்ததால் பெரிது படுத்தப்படும் இந்த சம்பவம் வேறு விளையாட்டுகளில் நிகழ்ந்திருந்தால் ஒரு சிறு பெட்டிச் செய்தியோடு தானே முடிந்து போயிருக்கும்.

வர்த்தகத்தைத் தாண்டி எதையும் சிந்திக்காத ஊடகங்கள் இருக்கும் வரை இந்த நிலை மாறும் என்று சொல்ல முடியாது.

போராட்டங்களின் மூலமாக இந்தியா புனிதமான கைகளைக் கொண்டிருக்கிறது என்று உலகிற்குச் சொல்வதாக ஊடகங்கள் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் இப்படிச் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா?. ஊடகங்கள் மேல் நோக்கியே பார்க்காமல் சற்று கீழ்நோக்கியும் பார்த்தல் நலம்.

கடைசியில் கிரிக்கெட் விளையாட்டிலும் பணம் தான் விளையாடப் போகிறது. இந்தியா விளையாடாது என்று அறிவித்தால் அந்த நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

எனவே இந்தியா விளையாடும், ஐசிசியோ, பிசிசியோ எதுவாய் இருந்தாலும் கடைசியில் எடுக்கும் முடிவு விளையாட்டைத் தொடர்வதாகவே இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. காரணம் விளையாட்டின் மீது நீங்களோ நானோ கொண்டிருக்கும் ஆர்வமல்ல.

பணம் ! வியாபாரம். அவ்வளவே !!!