காதலின்றி அமையாது உலகு.

imagesCALNHQ4U

காதல் எனும் வார்த்தைக்கு இருக்கும் வசீகரம் வேறெந்த வார்த்தைக்கும் இல்லை. மதங்களின் மதில் சுவர்களோ, சாதிகளின் சதுப்பு நிலங்களோ, இனங்களின் தினவுகளோ, மொழிகளின் வாள்வீச்சுகளோ காதலை வெட்டி எறிய முடிவதில்லை. வெட்டி எறிய காதல் என்பது காய்கறியல்ல, அது காற்று ! காற்றை வெட்டித் துண்டுகளாக்கும் கத்தியை மானுடம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை !

உலகின் எந்த இலக்கியங்களும் தோன்றும் முன் தமிழில் காதல் தோன்றிவிட்டது. பண்டைய இலக்கியங்களில் காதல் ஏக்கங்களாலும், தீண்டல்களாலும், வீரத்தின் சாரல்களாலும் நனைந்து கிடந்தது. அறத்தையும், மறத்தையும் உயிரெனக் கொண்டிருந்த தமிழரின் வாழ்க்கை காதல் எனும் சரட்டினால் கட்டிப் பிணைக்கப்பட்டிருந்தது ! அதைத் தான் அகம் பாடுகிறது.

இன்றைய காதலர்கள் தங்கள் காதலியரின் கண்களை டிஜிடல் ஓவியம் என்கின்றனர். சற்றே முந்தைய காதலர்கள் கண்களில் பூக்களைப் பார்த்தார்கள், மீன்களைப் பார்த்தார்கள். அதற்கும் முந்தைய காலத்தில் வேலைப் பார்த்தார்கள், வில்லைப் பார்த்தார்கள். எப்படியோ காலம் காலமாக பெண்களின் கண்களை அவர்கள் பார்க்கத் தவறவில்லை என்பது மட்டும் நமக்குப் புரிகிறது.

காதலின் கண்கள் புதைகுழிகள். அந்தக் கண்களில் இதயம் புதையுண்டு போகிறது. புதையுண்ட அந்தக் கண்களிலிருந்து நேரடியாக இதயத்தில் இறங்கிக் கொள்கின்றனர் காதலர்கள். சிலருக்கு அந்தக் கண்கள் பனிமலைகளாகின்றன, சிலருக்கு எரிமலைகளாகின்றன, சிலருக்கு ஆழ்கடலாகவும், சிலருக்கு தற்கொலை முனைகளாகவும் காட்சியளிக்கின்றன. எப்படியோ, காலம் காலமாக அந்தக் கண்களில் குதிக்க மட்டும் யாரும் தயங்குவதேயில்லை.

இன்றைக்கு காதல் என்பது ஒரு பொதுப்பெயராகிவிட்டது. அந்தக் காதல் எனும் உன்னதத்தின் மேலும் கீழும் ஒரு அடைமொழியை அமரவைத்து காதலின் அமரத்துவத்தை கேலிக்குரியதாக்கி விட்டது சமூகம். கள்ளக் காதல், போலிக் காதல், திருட்டுக் காதல் என்பதெல்லாம் காதலுக்கான அவமானங்கள். மோகத்தின் முனகல்களையும், மெத்தைத் தாகத்தின் பானங்களையும் காதல் எனும் குடுவைக்குள் அடைப்பதில் நியாயம் இல்லை என்பதை உண்மைக் காதலர்கள் ஒத்துக் கொள்வார்கள்.

உண்மைக் காதலில் காமத்தின் சாரல் உண்டு. ஆனால் அது அடைமழையாக மாறிக் கரைகளைக் கரைத்து விடுவதில்லை. காதல் என்பது கடலைத் தேடும் நதியைப் போன்றது. காமம் என்பது நதியைத் தேடிக் கரைதாண்டி ஓடும் கடலைப் போன்றது. நதி கடலில் கலப்பது இயல்பு, அது இரண்டறக் கலத்தல். கடல் கரைதாண்டுவது அழிவின் அழைப்பு. சுனாமியின் மிரட்டல்.

உண்மையான காதல் எப்போதுமே காதலர்களை வெற்றிகளை நோக்கியே பயணிக்க வைக்கும். வெற்றித் திலகமிட்டு போர்களம் அனுப்பும் சங்கக் காதலியர் அம்புகளுக்குள் தங்கள் அன்பைத் தோய்த்து அனுப்புகிறார்கள். அந்த ஊக்கம் அவர்களுக்கு புறமுதுகிடாத புஜங்களைப் பரிசளிக்கிறது. காதலியருக்காக தீயவற்றை விட்டு விடுவதும், நல்லவற்றைப் பற்றிக் கொள்வதுமாக உண்மைக் காதல் வசீகரிக்கும்.

தமிழரின் வாழ்வோடும், அடையாளத்தோடும், கலாச்சாரத்தோடும் காதல் செம்புலப் பெயல்நீர் போல் கலந்தே இருந்தது என்பதே வரலாறு. காதல் ரசம் சொட்டும் சிலைகளும், இலக்கியங்களும் அதன் சாட்சிகள். வேலன்டைன்ஸ் டே என்பது மேனாட்டு இறக்குமதி, காதல் விழா என்பது போலித்தனம் என கூச்சலிடுபவர்கள் உண்மையில் தமிழரின் வரலாறு அறியாதவர்கள்.

காதல் விழாவை இருபத்து எட்டு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடிய மன்னன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன். காமன் விழா என அவன் அந்த விழாவை காதலர்களுக்காகக் கொண்டாடினான். உலகின் முதல் காதல் விழா இதுவாகத் தான் இருக்க வேண்டும்.

காதல் விழாவை நடத்துவதற்கு மன்னன் கட்டளைகளைப் பிறப்பிப்பதை மணிமேகலையும் கூறுகிறது. மக்கள் காதலில் களித்திருக்கட்டும், பிரிவினைகள் மறந்து ஆனந்தமாய் இருக்கட்டும், நல்ல பூங்காக்களில் அவர்கள் இருக்கட்டும், காதலர்க்கு இடையூறு வராமல் இருக்க காவல் ஏற்பாடுகளையும் செய்யுங்கள் என்கிறார் மன்னன்.

இப்படி காதல் விழாக்களை முதலில் முன்னின்று நடத்தியது தமிழ் இனமே என்பதை காதலுடன் சொல்லும் அத்தனை தகுதியும் நமக்கு உண்டு. ஆனால் அது ஏதோ இறக்குமதி விழா என்பது போல சாயம் பூசுபவர்களையும், அதை வியாபார உத்திக்காகப் பயன்படுத்தும் வணிக மூளைகளையும் காதலர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காதல் என்பது காற்றைப் போன்றது, அது எல்லா நுரையீரல்களின் கதவுகளையும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தட்டுகிறது. சிலர் அந்தச் சத்தத்தைக் கேட்பதில்லை. சிலர் கேட்டாலும் நிராகரித்து விடுகிறார்கள். சிலர் கேட்காத சத்தத்தைக் கூட கேட்டதாய்க் கருதிக் கொள்கிறார்கள். சிலர் அந்த மெல்லிய சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்து காதலை உள்ளிழுக்கிறார்கள். எது எப்படியோ காற்று நுரையீரலையும், காதல் இதயங்களையும் தட்டுவதை நிறுத்துவதே இல்லை.

காதல் என்பது பூவைப் போன்றது. காதலியரை பூவோடு ஒப்பீடு செய்யாத காதலர்கள் இருக்க மாட்டார்கள். மலரினும் மெல்லிய இதழ்கள் காதலியின் உதடுகள் என்பவர்களே காதலில் கரைகிறார்கள். பூக்கள் பூக்காமல் இருப்பதில்லை. சில பூக்கள் பூஜையறைக்குச் செல்கின்றன, சில கூந்தல்களில் குடியேறுகின்றன, சில கவனிக்கப்படாமல் கருகிவிடுகின்றன. எது எப்படியோ பூக்கள் பூப்பதை நிறுத்துவதேயில்லை.

காற்றின் வெற்றி அதன் இருப்பில் தான் இருக்கிறது. அதை நாம் பார்க்கவில்லை என்பதாலோ, சுவாசிக்கவில்லை என்பதாலோ அது தோல்வியடைந்ததாய் அர்த்தமில்லை. பூவின் வெற்றி பூப்பதில் இருக்கிறது. பறிக்கவில்லை என்பதாலோ, சூடவில்லை என்பதாலோ பூ தோற்று விட்டதாய் அர்த்தமில்லை ! அது தான் காதலின் சிறப்பு ! காதல் தோன்றுவதே காதலின் வெற்றி !

காற்றின் அலைகளில் இசையாய்த் திரியும் ஒலி இழைகளை வானொலியின் சரியான அலைவரிசை இழுத்து எடுப்பது போல, காதலின் வாசனையை சரியான நாசிகள் நுகர்ந்து கொண்கின்றன. அவை பின்னர் கரம் கோத்து, உயிர்கோத்துக் கொள்கின்றன.

காதலியுங்கள் ! காதல் என்பது ஒரு நந்தவனம் போன்றது. காதலில் நடப்பவர்கள் நந்தவனத்தில் நடக்கிறார்கள். ஒரு முறை நடந்த திருப்தி இதயத்தின் தாழ்வாரங்களில் எப்போதும் சிறகடித்துக் கொண்டே இருக்கும். அது வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி.

காதலியுங்கள் ! காதல் என்பது வழியில் தென்படும் பூக்களையெல்லாம் முட்டிச் செல்லும் வண்டு அல்ல. ஒற்றைப் பூவை மட்டுமே தாங்கிப் பிடிக்கும் தண்டு. நீயின்றி நானில்லை எனும் நிலமையில் இணைந்திருக்கும் நிலை.

காதலியுங்கள் ! காதல் உங்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும். உங்கள் உயிர் உங்கள் உடலை விட்டு வெளியேறி உங்களை இன்னோர் உயிராய் மாற்றி வைக்கும். கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை இந்தக் காதலில் மட்டுமே சாத்தியம். நீங்கள் யார் என்பதையும் உங்கள் பலங்கள், பலவீனங்கள் அனைத்தையும் அதுதான் உங்களுக்குக் கற்றுத் தரும்.

காதலியுங்கள் ! காதல் வாழ்க்கையை அழகாக்கும். வாழ்க்கையை அர்த்தப்படுத்தும். வாழ்க்கையை வலுவாக்கும். அது பாதங்களுக்குக் கீழே பனித்துளியாக உங்கள் பயணங்களை கவிதையாக்கும். வெட்கத்தின் மூச்சுகளுடன் கனவுகளை காவியமாக்கும்.

காதலியுங்கள். காதல் என்றால் என்ன என்பதை அறிந்தபின் காதலியுங்கள். சீண்டலின் சிற்றின்பங்களும், மோகத்தின் முனகல்களும், மெத்தைத் தேடலின் முனைப்புகளும், விலக்கப்பட்ட கனிகளின் சுவைகளும் காதல் என கற்பித்துக் கொள்ளாதீர்கள்.

அரளிப்பூவுக்கு மல்லி என பெயர்சூட்டிக் கொள்ளலாம். ஆனால், அரளிப்பூவில் மல்லியின் வாசத்தை நுகர்வது இயலாது.

காதலிப்போருக்கும், காதலிக்கப் படுவோருக்கும், இனிய காதல் வாழ்த்துகள்.

சேவியர்
வெற்றிமணி, ஜெர்மனி