தண்ணி தராத கேரளா இனி பிச்சையும் இடாது.

கேரளாவிலுள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் இந்த மாதம் முதல் பிச்சை எடுப்பது சட்டவிரோதமாகிறது. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் பிச்சைக்காரர்களின் புகலிடமாக இருந்தது. கேரள அரசின் தற்போதைய சட்டம் திருவனந்தபுரத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக்கும் பாதையில் முன்னேறுகிறது.

ஏழைகள் வாழ்க்கைக்கு வழியில்லாதவர்கள் என்று வர்ணிக்கப்பட்டாலும் பிச்சைக்காரர்களின் பின்னணி அபாயகரமானது. உண்மையிலேயே வாழ வழியின்றி யாசிப்பவர்களுடன் கூடவே இதை ஒரு தொழிலாகவே நடத்தும் கும்பல்கள் எல்லா இடங்களிலும் பரவி வருகின்றன.

சிறுவர்களை வேறு மாநிலங்களிலிருந்தோ, நாட்டிலிருந்தோ கடத்தி வந்து அவர்களை ஊனமாக்கியோ, அச்சுறுத்தியோ பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட நவப்பது எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது. உண்மையான உழைப்பை நாடாமல் யாரையும் ஏய்த்துப் பணம் சம்பாதிக்கும் மனநிலை அதிகரித்து வரும் இன்றைய அபாயகரமான சூழலில் கேரள அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைக்கு கேரளாவில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.

முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுவர்களை பிச்சையெடுக்கப் பழக்கும் கும்பல்களிடமிருந்து மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்த்திருக்கிறது கேரள அரசு. தன்னுடைய இந்த திட்டத்தை பாலக்காடு, எர்ணாகுளம், கோழிக்கோடு போன்ற இடங்களுக்கும் நீட்டிக்கும் திட்டத்தில் இருக்கிறது கேரளா.

பிச்சைக்காரர்களை ஒழிக்கும் அரசின் திட்டத்தை வரவேற்கும் அதே நேரத்தில் அவர்களுடைய மறுவாழ்வுக்கான ஆயத்தங்களையும் கேரள அரசு செய்ய வேண்டும் என கேரளாவிலுள்ள மனித நல அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.

பாம்பும் நிலநடுக்கமும் : சீனா சாதனை

 

மனிதனுடைய ஆறறிவு சாதிக்க முடியாததை ஐந்தறிவு சாதிக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைக் முன்கூட்டியே கண்டறிந்து சொல்லும் திறமை பாம்புகளுக்கு இருப்பதாக சீன ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

நிலநடுக்கம் நிகழப் போகிறது என்பதை பாம்புகள் நிலநடுக்கம் நிகழப் போகும் இடத்திற்கு நூற்று இருபது கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே கண்டுபிடிக்கும் என்றும், அதுவும் நிலநடுக்கம் நிகழப் போவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே அறிந்து கொள்ளும் என்றும் சொல்லி வியக்க வைக்கிறார்கள் சீனாவின் நானிங் என்னுமிடத்தில் அமைந்துள்ள நிலநடுக்க ஆராய்ச்சிக் குழுவினர்.

பாம்புகள் உலகிலுள்ள உயிரினங்களிலேயே அதிக உணர்வு கொண்ட உயிரினம். நிலநடுக்கம் நிகழப் போவதை அறிந்தால் இவற்றின் செயல்பாடுகள் பெருமளவுக்கு மாறிவிடுகின்றன. கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தால் எப்படியேனும் வெளியேற வேண்டுமென்று வன்முறையாய் போராடுகின்றன. தங்கள் இடத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயல்கின்றன என்கிறார் இந்தக் குழுவின் இயக்குனராக உள்ள ஜியாங் வெய்ஷங். பாம்பு வளைகளில் காமராக்கள் பொருத்தி பாம்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து நிலநடுக்கத்தை அறிந்து கொள்வதில் சீன விஞ்ஞானிகள் வல்லவர்களாகி வருகிறார்கள்.

சீனாவில்  நிலநடுக்கம் நிகழ அதிக வாய்ப்புள்ள பதிமூன்று நகரங்களில் ஒன்று நானிங். இங்கே நூற்று நாற்பத்து மூன்று நிலநடுக்க கண்காணிப்புப் பிரிவுகள் உள்ளன. கண்டு பிடித்துச் சொல்வது மனிதனோ, அவனுடைய கண்டு பிடிப்புகளோ அல்ல. விலங்குகள் ! சீனா நிலநடுக்கம் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்று. 1976ல் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சுமார் இரண்டரை இலட்சம் பேர் மாண்டு போனார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

அட ! அப்படியா ? – 1

உலகப் புகழ் ஓவியர் பிக்காசோ, தன்னுடைய இளமையில் வறுமையில் வாடினார். அப்போது குளிரிலிருந்து தப்பிக்க தன்னுடைய ஓவியங்களையே எரித்து குளிர் காய்வாராம்.

டைட்டானிக் திரைப்படத்தைத் தயாரிக்க ஆன செலவு, டைட்டானிக் கப்பலை உருவாக்க செலவான பணத்தை விட அதிகம்

ஆப்பிரிக்காவில் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் களிமண்ணை உண்பதன் மூலம் தங்களுக்குத் தேவையான சத்துக்களை பெற்றுக் கொள்கிறார்கள்.

மனிதர்கள் பேசும் இரண்டு விதமான பாஷைகளை பிரித்தறிய எலிகளால் முடியும். எலிகள் ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்தாலும் ஒரு சிறு காயம் கூட படாமல் தப்பிவிடும்.

மிச்சிகனில் கணவனின் அனுமதியில்லாமல் ஒரு பெண் தன்னுடைய தலை முடியை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

சகாரா பாலைவனத்தில் 1979, பிப்ரவரி 18ம் தியதி பனி பொழிந்தது.

91 சதவீதம் மக்கள் அடிக்கடி பொய்பேசும் பழக்கமுடையவர்களாகவே இருக்கிறார்கள்.

அண்டார்டிக்கா ஒரு பாலைவனம்.

அமெரிக்காவில் உள்ள மில்லியனர்களில் பெண்களே ஆண்களை விட அதிகமாக இருக்கிறார்கள்.

வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

அலாரம் கடிகாரம் தயாராக்கிய போது, அது அதிகாலை நான்கு மணிக்கு மட்டுமே சத்தமெழுப்பும் வகையில் தயாராக்கப்பட்டிருந்தது.

அண்டார்டிக்காவில் பதிவான அதிகபட்ச வெப்பம் மூன்று டிகிரி ஃபாரன்கீட்.

1666ல் லண்டனில் மாபெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. லண்டன் மாநகரத்தின் பாதியை அழிந்த அந்த தீவிபத்தில் வெறும் ஆறு பேர் மட்டுமே காயமடைந்தனர்.

நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பை காஃபியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரசாயனங்கள் உள்ளன. அதிலுள்ள இருபத்தாறு வகை இரசாயனங்கள் மட்டுமே சோதிக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் பதிமூன்று இரசாயனங்கள் எலிகளுக்கு புற்று நோய் ஏற்படுத்தியிருக்கின்றன.

ஒரு சராசரி மனிதன் நடக்கும் தூரம் பூமியை மூன்று முறை சுற்றி வரும் தூரம் !

நமது பூமி தினமும் நூறு டன் அளவுக்கு எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காரணம் புமியில் விழும் விண்வெளிப் புழுதி.

நீங்கள் பிறந்தநாள் கொண்டாடும் நாளில், உங்களைத் தவிர குறைந்தபட்சம் தொன்னூறு இலட்சம் பேர் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்.

உங்கள் வாயிலுள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உலக மக்கள் தொகையை விட அதிகம்.

கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.

1916ம் ஆண்டு அமெரிக்காவில் ஒருவர் 40,000 டன் எடையுள்ள வீட்டை அஞ்சல் செய்தான் ! அதற்குப் பின் முழு வீட்டையும் அஞ்சலில் அனுப்பக் கூடாது எனும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டிலுள்ள மோனுமெண்டல் ஆக்சிஸ் உலகிலேயே அகலமான சாலை. இங்கு நூற்று அறுபது கார்கள் பக்கம் பக்கமாகப் பயணிக்க முடியும்.

தன்னுடைய பதினெட்டாவது வயதில் இங்கிலாந்து அரசி ராணுவத்தில் மெக்கானிக்காகப் பணியாற்றினார்.

ஒலிவ மரம் ஆயிரத்து ஐநூறு வருடங்கள் உயிர் வாழும் !

பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாகத் துடிக்கும்.

சிலந்தியின் நூல் இரும்பை விட வலிமையானது.

பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட வேகமாக பேசவும், வாக்கியங்களை அமைக்கவும், கற்றுக் கொள்ளவும் ஆரம்பிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மற்ற எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளோடும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையவர்.

கொசுக்களை வசீகரிக்கும் நிறம் நீலம் ! மற்ற நிறங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக நீல நிறம் கொசுக்களை வசீகரிக்கிறது.

ஒரு சாதாரண சாக்லேட்டில் சராசரியாக எட்டு பூச்சிக் கால்கள் இருக்கின்றனவாம் !

தேளின் மீது கொஞ்சமாக சாராயம் ஊற்றினால் அது இறந்து விடும்.

பெரும்பாலான கடிகார விளம்பரங்களில் நேரம் 10:10 என்றே காண்பிக்கின்றன. காரணம் ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்ட நேரம் அது.

காலையில் காஃபி குடிப்பதை விட அதிக சுறுசுறுப்பு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும்.

வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் கால்களால் சுவையறியும் தன்மை படைத்தவை.


 

அமெரிக்காவை மிரள வைத்த சீனா…


விண்ணில் செயல்பட்டுக் கொண்டிருந்த தன்னுடைய செயற்கைக் கோள் ஒன்றை பூமியிலிருந்தே சுட்டு வீழ்த்தி சோதனை செய்திருக்கிறது சீனா. இது உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த சோதனை பற்றிய ரகசியங்கள் எதையும் வெளியிடாமல் சில வாரங்கள் மெளனம் சாதித்த சீனா அமெரிக்காவின் மிரட்டல் கலந்த வற்புறுத்தலுக்குப் பின் இப்போது உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தபின் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக செயற்கைக் கோள்களை யாரும் சேதப்படுத்தும் சோதனைகள் செய்ததில்லை. கடந்த சனவரி 11ம் நாள் சீனாவில் நடந்த இந்த சோதனையில் 865 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்த வானிலை செயற்கைக் கோள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யாவுடன் விண்வெளி செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்திய மூன்றாவது நாடு எனும் பட்டியலில் சீனாவும் இதனால் இணைந்துள்ளது.

ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் இந்த சோதனை குறித்து அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளன. சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு சம்பந்தப்பட்ட செயற்கைக் கோள்கள் விண்ணில் உலவுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. செயற்கைக் கோள்களைச் செயலிழக்கச் செய்வது என்பது மிகப் பெரிய போருக்குச் சமமானதாகக் கருதப்படுகிறது.

ஒரு நாட்டில் தகவல் தொடர்புகளையோ, பாதுகாப்பு ஏற்பாடுகளையோ முற்றிலும் சிதைக்கும் வாய்ப்பு இந்த வான யுத்தத்தில் உண்டு. இந்த சோதனை வானியல் ஆய்வுக்கான ஒன்றே தவிர விண்வெளிப் போருக்கான ஒத்திகை அல்ல என்று சீனா அறுதியிட்டுக் கூறினாலும் மற்ற நாடுகள் அதை ஏற்க மறுக்கின்றன. தைவான் அமைச்சர் ஜோசப் வூ என்பவர் ‘இது உலகிற்குச் சீனா அடித்திருக்கும் எச்சரிக்கை மணி’ என்று வர்ணிக்கிறார்.

சீனாவின் ஆயுத வளர்ச்சி சர்வதேச நாடுகளின் கவலையை சம்பாதித்திருக்கும் இந்த வேளையில் சீனா செய்திருக்கும் இந்த சோதனை சீனாவைச் சுற்றியிருக்கும் நாடுகளையும், அமெரிக்காவையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதன் விளைவாக அமெரிக்கா தன்னுடைய உளவு வேலைகளை சீன எல்லைகளில் அதிகப்படுத்தியிருக்கிறது.

கடந்த இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு சீனாவும், ரஷ்யாவும் விண்வெளி ஆயுதப் போரை தடைசெய்யும் ஒரு ஒப்பந்தம் போடவேண்டுமென அமெரிக்காவை விண்ணப்பித்தன. ஆனால் விண்வெளியின் ஏகோபித்த கட்டுப்பாடு தன்னிடம் இருப்பதாகவும், அதற்கு வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியதில்லை என்றும் அமெரிக்கா கர்ஜித்திருந்தது. தற்போது சீனாவில் நடந்திருக்கும் சோதனை அமெரிக்காவுக்கு வானம் சொந்தமல்ல என்று உரக்கச் சொல்வதற்காக நடத்தப்பட்ட ஒன்றாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

வானிலை, பாதுகாப்பு, பூமியின் மாறுதல்கள் கணித்தல், வழிகாட்டுதல், குறிவைத்தல், உளவு வேலை உட்பட அமெரிக்காவின் அனைத்து செயல்களும் செயற்கைக் கோள் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. எனவே செயற்கைக் கோள் செயலிழப்பு என்பது அமெரிக்காவின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும் விடப்பட்டிருக்கும் செயலாகவே கருதுகிறது அமெரிக்கா. அதை விடவும் தன்னுடைய ஏகாதிபத்யம் தளர்ந்து விடுமோ என்றும் அஞ்சுகிறது.

1967ம் ஆண்டு ஏற்பட்ட உடன்படிக்கை ஒன்றில் செயற்கைக் கோள்கள் எதுவும் அணு ஆயுதங்களையோ, பேரழிவுப் பொருட்களையோ விண்ணில் உலவ விடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டில் விமானப் படை விண்ணில் ஆயுதத் தளங்களை நிறுவி நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.

தற்போது சீனா சுட்டு வீழ்த்தியிருக்கும் செயற்கைக் கோள் கீழ் வட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒன்று. பெரும்பாலான அமெரிக்க செயற்கைக் கோள்கள் பூமியிலிருந்து தாக்க முடியாத மேல்மட்ட சுற்றுப்பாதையில் தான் இயங்கி வருவதாகவும், அதனால் இந்த சோதனை அமெரிக்காவை எந்த விதத்திலும் அச்சுறுத்துவதாகாது என்றும் அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்தாலும் வெள்ளை மாளிகையில் இந்த சோதனை ஒரு மானப் பிரச்சனையாய் வெடித்திருப்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை

சென்னை மக்கள் என்ன பாவம் செய்தார்கள்

சென்னையில் ஆட்டோ  கட்டணம் இந்தியாவின் எந்த இடத்திலும் இல்லாத அளவுக்கு ஆட்டோ வைப் போலவே தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தது நமக்கெல்லாம் தெரியும். சென்னை மக்களுக்கு இது பழகி விட்டது. சமீபத்தில் கேரளா சென்றிருந்தபோது தான் சென்னையின் ஆட்டோ  கட்டண வீரியம் மீண்டும் ஒருமுறை வீரியமாய்த் தாக்கியது.

திருவனந்தபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ வில் சென்றேன்.. சென்றேன்… சென்று கொண்டே இருந்தேன். சென்னை ஆட்டோ  கட்டணத்தை மனதில் வைத்துப் பார்த்தால் நூற்று ஐம்பது வெகு சாதாரணம். சென்று இறங்கிவிட்டு ‘எவ்வளவுங்க’ என்று கேட்டபோது முப்பத்து இரண்டு என்றார்.

நூற்று முப்பத்து இரண்டு ரூபாயாய் இருக்கும் என்னும் சந்தேகத்தில் ‘எவ்வளவு’ என்று மீண்டும் கேட்டேன். கட்டணம் அதிகம் என்று நான் மீண்டும் விசாரிப்பதாக நினைத்துக் கொண்ட அவர் ‘ரேட் கரெக்ட் தன்ன… முப்பத்தி ரண்டு ரூபா’ என்றார். முதல் அதிர்ச்சி.

முப்பத்து ஐந்து ரூபாயைக் கொடுத்து விட்டு பெட்டியைத் தூக்கிக் கொண்டு நடந்தபோது கூப்பிட்டார் அவர் ‘சேட்டா பாக்கி மேடிச்சில்லா’. அவர் கையில் மூன்று ரூபாய் சில்லறை ! இரண்டாவது அதிர்ச்சி. ‘மீட்டருக்கு மேல பத்து ரூபா’ என்று கேட்டே பழக்கப்பட்ட காதுகள் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டது போல கூசின.

கேரளா என்றில்லை சில மாதங்களுக்கு முன் பெங்களூர் சென்றிருந்தபோதும் இதே போன்ற அனுபவம் தான். அப்படியெனில் சென்னை மக்கள் என்ன பாவம் செய்தார்கள் ? அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சுமை. ஏழைகளின் தோழனாக இருக்க வேண்டிய ஆட்டோ க்கள் நடுத்தர வர்க்கத்தைத் தாண்டினால் மட்டுமே பயன்படுத்தக் கூடிய அளவுக்கு மாறிவிட்டது ஏன் ?

நல்லவேளையாக ஆட்டோ க் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும் என்று சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தியது ஒரு திருப்பமாக அமைந்திருக்கிறது. திருத்தப் பட்ட கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாகவே இப்போது ஆட்டோ  டிரைவர்கள் கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்டோ வில் ஏறிவிட்டு, ‘தெரியாமல் ஏறிட்டேங்க’ என்று சொல்லி உடனே இறங்கி விட்டால் கூட இருபது ரூபாய் கேட்கிறார்கள். ஒரு சந்திலிருந்து அடுத்த சந்துக்குச் செல்ல இருபது ரூபாய். நான்கு தெரு தள்ளிச் செல்ல வேண்டுமெனில் ஐம்பது.

சரி ஐந்தோ, பத்தோ அதிகம் வாங்குகிறார்கள் என்று பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் சென்னை வாசிகளுக்கு ஆட்டோ க்காரர்கள் தரும் கைமாறு என்னவென்று பார்த்தால் புல்லரிக்கிறது. மழைக்காலமெனில் பத்து மடங்கு அதிக கட்டணம். பல இடங்களுக்கு ‘அங்கெல்லாம் வராதுங்க’ என்ற மனிதாபிமானமோ, சமூக அக்கறையோ, கடமை மீதான பொறுப்புணர்ச்சியோ சற்றும் இல்லாத பதில்.

வீடுகள் தண்ணீரில் மூழ்கி மிதந்து கொண்டிருக்கும் வீடுகளிலிருந்து தப்பிப் பிழைத்து வருபவர்களைக் கூட ஆட்டோ  டிரைவர்கள் விட்டு வைப்பதில்லை. ‘எரியற வீட்டில புடுங்கற வரைக்கும் லாபம்’ என்னும் பாட்டிகளின் பழ மொழி போல பிழிந்து விடுகிறார்கள்.

முதல் இரண்டு கிலோ மீட்டர்களுக்கு 14 ரூபாயும், அதற்குப் பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 6 ரூபாயும் என்னும் கணக்குப் படி பார்த்தால், வேளச்சேரியிலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்ல சுமார் 92 ரூபாய். அதிக பட்சம் நூறு ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது வசூலிக்கப்படுவதோ குறைந்த பட்சம் 150 !

இந்த புதிய கட்டண நிலவரம் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் குழு மற்றும் நுகர்வோர் அமைப்புகள் இணைந்து நிர்ணயித்திருக்கின்றன. காத்திருப்பு நேரம் கூட ஐந்து நிமிடத்திற்கு நாற்பது காசுகள். அரை மணி நேரம் காத்திருந்தால் இரண்டு ரூபாய் நாற்பது காசுகள், சும்மா இருபது முப்பது என்று பிடுங்க முடியாது. இரவில் பயணமெனில் கட்டணம் 25 சதவீதம் மட்டுமே அதிகமாகச் செலுத்த வேண்டும்.

ஆட்டோ வில் மீட்டர் 90 நாட்களுக்குள் திருத்தப்பட வேண்டும் என்னும் அறிவிப்பும் கூடவே வந்திருக்கிறது. விலையேற்றத்தினால், சுமை குறைவது என்பது சென்னை ஆட்டோ  கட்டண விஷயத்தில் மட்டும் உண்மையாகி விட வாய்ப்பு இருக்கிறது.

ஆட்டோ க்கள் அதிக கட்டணம் வசூலித்தால் தொடர்பு கொள்க என கீழ்க்காணும் தொலை பேசி எண்களையும் தந்திருக்கிறார்கள். 103, 26445511,26333335,26445959, 670993,26732525,26215959, 24894466,24867733,22325555,27264277, 27663333. அல்லது 98418 08123 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்.

கட்டண உயர்வு அறிவிப்புக்குப் பின் சைதாப்பேட்டையிலிருந்து தேனாம்பேட்டைக்குப் பயணிக்கையில் அந்த ஆட்டோ  டிரைவரிடம்

‘ என்னங்க ரேட் அதிகமாயிடுச்சு போல, இனிமே ஆட்டோ  சார்ஜ் எல்லாம் கூடுமா ?’ என்று அப்பாவியாகக் கேட்டேன்.

‘ஆமாங்க பத்து வருஷமா ரேட்டே கூட்டாம பிரச்சனை பண்ணிட்டிருந்தாங்கோ. இப்போ தான் கூட்டியிருக்காங்க. இனிமே இருபது ரூபா கூடும். தேனாம்பேட்டைக்கு அறுபது ரூபா ஆகும்’ என்றார்.

‘அதெப்டிங்க ? நாலு கிலோ மீட்டர் தான் இருக்கு. புது சார்ஜ் படி பாத்தா 14 + 12 , 28 தானே வருது. இப்போ நாப்பது ரூபா வாங்கறீங்க’ என்றேன்.

‘அதெல்லாம் போடுவாங்க சார். பெட் ரோல் ரேட் கன்னா பின்னான்னு ஏறியிருக்கு.. அவங்க சொல்ற ரேட் எல்லாம் கட்டுப்படியாவாது’ என்றார் சற்று சுருதி குறைத்து.

‘ரேட் அதிகமா வாங்கினா கம்ப்ளெயிண்ட் பண்ண சொல்லி நம்பர் குடுத்திருக்காங்களே’ விடாமல் சீண்டினேன்.

‘அதெல்லாம் ஒண்ணும் ஆவாது சார். நீ வேணும்ன்னா பாரேன்.. ஒரு நாலு மாசம் மீட்டர் வெச்சிட்டு ஓட்ட சொல்வாங்க. அப்புறம் காசு புடுங்கிட்டு விட்டுடுவாங்க. இதெல்லாம் இங்க வொர்க் அவுட் ஆவாது’ என்றார்.

அவர் சென்னதில் தவறேதும் இல்லை. இன்றைய சூழலை அவர் தன்னுடைய மொழியில் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. சட்டங்கள் எத்தனை வந்தாலும் பொதுமக்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வும், தார்மீக கோபமும், சமுதாயம் சகமனிதம் மீதான அக்கறையும் இருந்தால் தான் அவை முழுமையான செயல் வடிவம் பெறும். திருந்தும் மனிதர்களுக்கு அறிவுரை போதும், திருந்த மறுக்கும் மனிதர்களுக்குத் தான் சட்டம் தேவை. அந்த சட்டமும் அதிகாரிகளால், காவல் துறையினரால் சரியான முறையில் செயல்படுத்தப் பட்டால் சென்னையில் ஆட்டோ  பயணம் என்பது விமானப் பயணம் போல பணம் பறிக்காது.

இல்லையேல் சட்டத்தின் ஓட்டைகளை கரன்சிகள் அடைக்கும், சட்டம் மீண்டும் இருட்டுக்குள் தூங்கும்.


 

கேரளாவைக் கலக்கும் சிவாஜி.

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு கேரளாவில் எப்பவுமே கிராக்கி அதிகம். முதன் முதலில் ஒரு நடிகருக்காக கேரளாவில் வைக்கப்பட்ட கட் அவுட் ரஜினிக்கானது என்னும் பெருமையும் இருக்கிறது.

ரஜினியின் சிவாஜி திரைப்படத்தின் கேரள வினியோக உரிமை இதுவரை இல்லாத அளவுக்கு 4.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அன்னியன் திரைப்படம் 1.4 கோடிக்கு விற்கப்பட்டதே சாதனையாக இருந்திருக்கிறது.

இதைப்பற்றி கேரள திரைப்படத் துறையில் பணிபுரியும் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்ன செய்தி வியப்பளித்தது. இதுவரை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து கேரளாவில் படம் எடுத்ததே இல்லையாம் ( நிஜமாவா ? ).

இவ்வளவு அதிக விலைக்கு தமிழ்ப் படங்கள் விற்கப்படுவதால் மற்ற படங்கள் பாதிப்படையும் என்று மலையாள முன்னணி நடிகர்கள் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம். கேரள உரிமையை குறைந்த விலைக்குப் பெற்றுக் கொண்டு அந்த படப்பெட்டியை கேரளக் கரையோரம் உள்ள தமிழ் நாட்டுத் திரையரங்குகளில் திரையிடும் தில்லு முல்லும் நடைபெறுகிறதாம்.

எது எப்படியோ, சிவாஜி பற்றிய பேச்சு கேரளாவிலும் பற்றி எரிகிறது.

வேதாளமாதித்தியனும் சாராயமும் (சிரிக்க மட்டும்)

வேதாளமாதித்தியனும் சாராயமும்.

அதி நவீன கவிஞர் வேதாளமாதித்யன் அவர்கள் முனியன் சாராயக் கடையில் இலக்கியக் கூட்டம் வைக்கப் போவதை அறிந்து நம்முடைய தினம் ஒரு குவாட்டர் ( தி.ஒ.கு ) மின் குழு சார்பாக பேட்டி எடுக்கச் சென்றோம். வாசலிலேயே குடியும் தாடியுமாக இருந்த அவரை கும்பிடு போட்டு ஓரமாக உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்….

நாம் : – வணக்கம் திரு வேதாளம் அவர்களே. உங்களுடைய கவிதை இலக்கியக் கூட்டத்தை சாராயக் கடையில் வைத்ததற்கு ஏதேனும் காரணம் உண்டா ?

வேதாளம் :- சாராயத்தை சாராயமாகப் பார்த்தால் தான் தவறு. சாராயம் உனக்கு என்ன தவறு செய்தது ? சாராயம் ஒரு பானம். அவ்வளவு தான்.

நாம் :- உண்மையிலேயே அது தான் காரணமா ?

வேதாளம் :- உண்மையைச் சொல்லலேன்னா உட மாட்டீங்களே.,ம்….ம்…ம்ம் … நம்ம பசங்க பாதிபேரு சாராயம் வாங்கிக் கொடுத்தால் தான் கவிதை கேப்பேன்னு அடம் புடிக்கறாங்க. என்ன பண்ண சொல்றீங்க ?. அப்படியே குடிச்சாலும் மண்வாசனையோட குடிக்கணுங்கிறதுக்காகத் தான் பட்டை சாராயம் குடிக்கிறோம். குடிச்சுகிட்டே படிக்கிறோம். அப்படியே சைட்ல ஊறுகாயும் கடிக்கிறோம்.

நாம்:- நீங்க தண்ணி அடிச்சுட்டு தான் கவிதை எழுதறீங்கன்னு உங்களைப் பற்றி ஒரு புகார் உலவுது உண்மையா ?

வேதாளம் :- எழுதுறதுக்கு முன்னாடி கொஞ்சம் தண்ணி அடிப்பேனே தவிர, தண்ணி அடிச்சிட்டு எழுதுறதில்லை.

நாம் :- உங்க கவிதைகளை நீங்க எப்படி எழுதறீங்க ?

( இந்தக் கேள்வி கேட்கும்போது ஊறுகாயைக் கடித்துக் கொண்டே கொஞ்சம் போதையோடு பேச ஆரம்பிக்கிறார் வேதாளம் )

வேதாளம் :- என்னோட பையன் இருக்கானே.. அவன் தாங்க எனக்கு எல்லாம். அவனுக்கு இப்போ ஆறு வயசு. பாக்கிறதை எல்லாம் ஒவ்வொரு வார்த்தையா, தனித்தனி துண்டு பேப்பர்ல எழுதி ஒரு பொட்டில போட சொல்லுவேன். கவனமா கேட்டுக்கோங்க, அப்புறம் திரும்ப சொல்ல மாட்டேன். பொட்டில போட்டதுக்கு அப்புறம் எத்தனை வரி கவிதை வேணும்னு பார்ப்பேன். 5 வரி கவிதைன்னா, 5 துண்டு குலுக்கி எடுப்பேன். அதை அப்படியே வரிசை வரிசையா எழுதிடுவேன். கடைசில “எனக் கழியும் ஜீவிதம்” ந்னு போட்டுடுவேன். கவிதை ரெடி.

நாம் :- ஓ.. நல்ல ஐடியாவா இருக்கே ?

வேதாளம் :- ஆமா, கடைசியா நான் குலுக்கின மன்னிக்கணும் எழுதின கவிதை வாசிக்கவா ?

நாம் :- கண்டிப்பா என்றபடி காதைக் கூர்மையாக்குகிறோம் …

வேதாளம் :-

உடைந்த பலப்பம்,

வால் நக்கும் சொறி நாய்,

காணாமல் போன செருப்பு,

கருவாடு,

போஸ்ட் மேன்

எனக் கழியும் ஜீவிதம்.

நாம் :- ஆஹா அற்புதம்.. அற்புதம். இதுக்கு என்னங்க விளக்கம் கொடுக்கறீங்க ?

வேதாளம் :- அது குடிச்சிட்டு தான் யோசிக்கணும். சில நேரம் விமர்சனம் எழுதற நண்பர்கள் ஏதாவது பெரிய பெரிய விளக்கம் சொல்லுவாங்க, அதையெல்லாம் நோட் பண்ணிக்குவேன். அதுல எது நல்லா இருக்கோ, அது தான் கவிஞனோட சிந்தனைன்னு சொல்லிடுவேன்.

நாம் :- உங்களுக்கு கடந்த மாதம் கொடுக்க இருந்த விருதை வேண்டாம் ந்னு சொல்லிட்டீங்களாமே ?

வேதாளம் :- அதையேன் கேட்கறீங்க, அந்த சமயத்துல நான் எழுதின கவிதைக்கு அப்படி ஒரு விளக்கம் கொடுத்து விருது வர விடாம தடுத்துட்டாங்க விமர்சகர்கள்.

டிவி ஓடவில்லை

காலிலே கல்லு இடிச்சுடுச்சு

பல்லு ஆடுது

யாருக்கு வேணும் இது

எனக் கழியும் ஜீவிதம்…

இதுதான் அந்தக் கவிதை. இந்தக் கவிதைல விருதெல்லாம் எனக்கு வேண்டாம்ன்னு சொல்லியிருக்கேனாம். சத்தியமா நான் அப்படியெல்லாம் சொல்லலீங்க. குலுக்கி எடுத்தப்போ இப்படி வந்துச்சு அவ்ளோ தான்.

நாம் :- ஆமா உங்க கவிதைகளுக்கும் சூரியமுத்து கவிதைகளுக்கும் கருத்தளவுல சில ஒற்றுமைகள் இருக்கு. ஆனா நீங்க வேற வேற விதமா எழுதறீங்க சரிதானே ?

வேதாளம் :- எதை வெச்சு சொல்றீங்க ?

நாம் :- உதாரணமா

எதிர்பாராத

ஆச்சரியங்கள் பூச்சொரியும்

என்று தான்

வாழ்க்கைச் சுவடுகள்

வாசலைத் தாண்டுகின்றன…

என்னும் சூரியமுத்துவின் கவிதையும்,

நிச்சயமற்ற சஞ்சாரங்களால்

முனகித் தொடர்கிறது

எனது ஜீவிதம்

என்னும் உங்களுடைய கவிதையும், அடிப்படையில் ஒன்றே. பிறகெப்படி உங்கள் கவிதைகளை புதியவை என நியாயப் படுத்துகிறீர்கள்.

வேதாளம் :- மண்ணின் மணத்தை மண்டியிட்டு நாசியால் நுகர்ந்து பார்த்து, அந்த மண்ணின் பாஷையை சப்திக்காத நாக்குகளின் குரல்களுக்கு என் செவிகள் செவி கொடுக்காது.

நாம் :- புத்தகத்துல உங்க ஊர் நாகர்கோவில் ந்னு போட்டிருக்கிறீங்க. ஆனா நீங்க திருச்சிக்காரர் தானே ?

வேதாளம் :- என்னோட பூர்வீகம் தெலுங்கு. நான் கடலை வியாபாரத்துக்கு தான் தமிழ் நாடு வந்தேன். கோர்வையா நாலு வார்த்தை எழுதத் தெரியாததனால தான் நான் நவீன கவிதை எழுதறேன்னு யாராவது சொன்னா நம்பிடாதீங்க.

நாம் :- ஐயையோ…. என்னங்க, கவிதை புக்கை கிழித்து கை துடைக்கிறீங்க ?

வேதாளம் :- என் புத்தகத்தால சமுதாயத்துக்கு பயனில்லை என்பதை மாற்றிக் காட்டணும் இல்லையா அதான்.

நாம் :- சரிங்க மிக்க நன்றி. நீங்க இன்னும் நிறைய குடிக்கணும்… சாரி.. படைக்கணும்ன்னு வாழ்த்தறோம். இப்போ கிளம்பறோம்.

வேதாளம் :- போயிட்டு வாங்க. போகும்போ அப்படியே சாராயத்துக்கும் ஊறுகாய்க்கும் காசு கொடுத்துட்டு போயிடுங்க.

நாம் :- ஆங்……….