இடது கைப் பழக்கமுடையவரா நீங்கள் ?

  

இடதுகைப் பழக்கம் உடையவர்கள் சற்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளக்கூடிய கண்டுபிடிப்பு ஒன்றை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது கைப் பழக்கம் உள்ளவர்களை விட விரைவாக சிந்திக்கிறார்கள் என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு.

இடது கைப்பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகங்களையும் பயன்படுத்த முடிவதாகவும், விரைவாக தகவல்களை மூளைக்கு அனுப்பிப் பெற முடிவதாகவும் அவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல்களை விரைவில் பரிமாறிக்கொள்ள இடது கைப் பழக்கம் உடையவர்களால் முடிகிறது என்றும் அதனால் நுட்பமான பணிகளையும், விளையாட்டு போன்ற துறைகளையும் அவர்களால் ஆக்கிரமிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.

பார்வைக்குத் தேர்வு வைக்கும் பல விஷயங்களில் இடது கைப்பழக்கம் உடையவர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகளாய் இருப்பதாகவும் இவர்கள் ஆராய்ச்சியில் கூறியிருக்கிறார்கள். காலம் காலமாக இடது கைப் பழக்கமுடையவர்களை வித்தியாசமாகப் பார்த்து வந்த சமூகம் இனிமேல் கொஞ்சம் மரியாதையுடன் பார்க்கும் எனக் கருதலாம் !