உன்னால் முடியாது தம்பி.


மனித மூளை ஒரே நேரத்தில் இரண்டு செயல்களைச் செய்யும் நிலை வந்தால் தடுமாறும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். முதல் கட்டளைக்கும் இரண்டாவது கட்டளைக்கும் இடையே ஒரு வினாடி நேரம் வரை மூளை தாமதிக்கிறது என்று அவர்களுடைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

விண்டர்பில்ட் பல்கலைக்கழகம் இந்த ஆய்வில் பல மாணவர்களை ஈடுபடுத்தியது. சில எளிதான இரு செயல்களை ஒரே நேரத்தில் மூளையினால் செய்யமுடிந்தாலும் ஒரே நேரத்தில் இரண்டு கட்டளைகளை மூளை ஏற்றுக் கொள்வதில்லை 300 மில்லி செக்கண்ட்களாவது அதற்குக் குறைந்தபட்சத் தேவையாகிறது. அதுவரை கட்டளைகள் வரிசையில் காத்திருக்க நேர்கிறது.

இந்த ஆய்வு வாகனம் ஓட்டுகையில் கைப்பேசி உபயோகிப்பதனால் வரும் விபத்துக்கான சாத்தியக் கூறுகளை உறுதிப்படுத்தியிருக்கிறது. அதிக வேகமாக வாகனம் ஓட்டுகையில் இந்த விபத்து விகிதம் அதிகரிக்கும். பேசுவது, ஓட்டுவது எனும் இரண்டு செயல்களை மூளை செய்யும்போது திடீர் தடைகளோ, எதிர்பாரா சம்பவங்களோ சாலையில் ஏற்படுகையில் வாகனம் விபத்தில் சிக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகரிப்பதாக குறிப்பிடுகின்றனர். எனவே பாதுகாப்பான பயணத்துக்கு வாகனத்தில் ஏறிய உடன் கைப்பேசிகளை அணைத்து விடுங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள்.