ஹாரி பாட்டர் – கடைசி பாகம்

Harry
ஜே.கே ரெளலிங் என்னும் பெயரைத் தெரியாதவர்கள் உலகில் மிக சொற்பம் என்னுமளவுக்கு தன்னுடைய ஹாரிபாட்டர் கதை மூலம் உலகை வசீகரித்திருக்கிறார் இந்த எழுத்தாளர். இவருடைய ஆரம்ப கால வாழ்க்கை சோகங்கள் நிறைந்தது.

வறுமையில் உழன்று காபி கடைகளின் ஓரமான பெஞ்சில் ஒரே ஒரு காப்பி வாங்கி வைத்துக் கொண்டு, குழந்தையையும் அருகே வைத்துக் கொண்டு மணிக்கணக்காய் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தவர் அவர். காரணம் காபி ஷாப்பை விட்டு வெளியே வந்தால் நடுங்கும் குளிர். எங்கே அமர்ந்து எழுதுவதென்று திசையற்ற வாழ்க்கை.

பேருந்துகளில் பயணம் செய்கையில் பயணச் சீட்டுகளின் பின்புறமும், கிடைக்கும் சிறு சிறு காகிதங்களிலும் எழுதும் பழக்கமுடையவராய் இருந்திருக்கிறார் அவர்.

இதெல்லாம் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு. இப்போது சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியாகி, பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் ஆனந்தமாய் விழிக்கும் நிலமை. காபி கடையில் ஒரு காபிக்கு மேல் வாங்க பணமில்லாமல் இருந்தவர் தன்னுடைய ஹாரி பாட்டர் நாவலின் கடைசி பாகத்தை ஸ்காட்லாந்து நாட்டின் மிகப் பிரபலமான சொகுசு ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து எழுதியிருக்கிறார்.

‘ஹாரிபாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோஸ்’ என்னும் தன்னுடைய ஏழாவது மற்றும் கடைசி பாகத்தை எழுதி முடித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த பாகம் ஜூலை மாதம் 21ம் தியதி உலக அளவில் வெளியாகப் போகிறது. இப்போதே அந்த நாவலைப் படிக்கும் எதிர்பார்ப்பு உலக அளவில் வியாபித்திருக்கிறது.

ஹாரி பாட்டர் நாவல் எப்போதுமே பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் விற்பனையாகும். இந்தியாவிலும் அந்த நாவல் மிகவும் அதிகமாய் விற்பனையாகியிருக்கிறது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் புத்தகத்தை வாங்க கடைகளில் விடியும் முன்பே கூட்டம் அலை மோதிவிடும். இலட்சக் கணக்கான பிரதிகள் ஒரே நாளில் விற்றுத் தீரும். பதிப்பகத்தாருக்கும், ஆசிரியருக்கும் சொத்துக் கணக்கில் சில மில்லியன் டாலர்கள் அதிகரிக்கும்.

ஒரு காலத்தில் அவர் உட்கார்ந்து எழுதிய காபி கடை இப்போது ஒரு அருங்காட்சியகம் போல, சுற்றுலாப் பயணிகள் மொய்க்கும் இடமாக மாறியிருக்கிறது என்பது வியப்பு !.

யாரென்று தெரியாமலேயே சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர் நிலமை இப்போது சொகுசு ஹோட்டலில் 652ம் அறையிலிருந்து தான் கதை எழுதி முடித்தார் எனுமளவுக்கு பிரபலத்துக்குள்ளாகியிருக்கிறது. அந்த அறையை சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்கலாமா என்றும் பரிசீலனைகள் நடக்கின்றனவாம்.

கடைசி பாகத்தை எழுதி முடித்து விட்டு கண்ணீரோடும் விசும்பலோடும் நீண்ட நேரம் அமர்ந்திருந்தாராம் ரோலிங். பின் அதைக் குறித்துப் பேசுகையில், ஹாரி பாட்டர் ஏழாவது பாகத்துடன் முடிவடையும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். பல ஆண்டுகாலமாக நான் நினைத்திருந்த முடிவை எழுதியதில் இருக்கும் ஆனந்தம் அளவிட முடியாதது.

அதே வேளையில் ஹாரி பாட்டர் நாவல் கடைசி பாகம் எழுதி முடித்ததும் துக்கம் தாங்காமல் அழுதுவிட்டேன். சோகமாவேன் என்று கருதியிருந்தேன், ஆனால் இப்படி உடைந்து அழுவேன் என்று நினைத்திருக்கவில்லை என்றார் அவர். இதெல்லாம் உண்மையிலேயே உணர்ந்தாரா இல்லை தன்னுடைய ஹாரி பாட்டர் நூலின் விற்பனையை மனதில் கொண்டு பரபரப்பை ஏற்படுத்துகிறாரா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இணையத்தில் அந்த நூலை வெளியிட மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து விட்டன. இணையத்தில் இப்போதைக்கு நூலை போடப் போவதில்லை என்று ஆசிரியர் அறிவித்திருக்கிறார்.

இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு வெளியான ஹாரிபாட்டர் நாவல் ஒரே நாளில் எழுபது இலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. அதாவது சுமார் தொள்ளாயிரத்து ஐம்பது கோடி ரூபாய்க்கு ஒரே நாளில் விற்பனை நடந்திருக்கிறது. உலக அளவில் ஹாரி பாட்டர் நாவல் முப்பத்து ஐந்து கோடி எனுமளவில் அச்சில் உள்ளது.

முதல் பதிப்பாகப் போட்ட ஆயிரம் காப்பி நான்கு ஆண்டுகளிலேனும் விற்று விடுவது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும் நமது தமிழ் இலக்கிய சூழலில் இருந்து கொண்டு ஹாரி பாட்டர் நிலையை நினைத்தால் பொறாமை கலந்த பெருமூச்சு தான் வெளிவருகிறது.