சென்னையில் மான் வலம் !

வீட்டுக்கு முன்னால் மான்கள் குதித்து விளையாடிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? வேளச்சேரி பகுதி மக்களுக்கு ஆச்சரியமாய் இருக்காது. காரணம் இது தினசரி நிகழ்வு தான்.

img_3125-small.jpg

விலங்குகள் காட்சியகத்துக்குச் சென்று பரிதாபமாக நிற்கும் மான்களைப் பார்ப்பதை விட குதூகலமாய் ஓடி விளையாடித் திரியும் மான் கூட்டத்தை அருகில் சென்று ரசிப்பது அலாதி இன்பமானது. அதுவும் குழந்தைகளுக்கு இது இரட்டைக் கொண்டாட்டம் ! மான்களைப் பொறுத்தவரை இது மனித காட்சியகம் !

img_3126-small.jpg

அழகான ஏரி, துள்ளி விளையாடும் மான்கள், ரம்மியமான மாலைப் பொழுது என்று சங்ககால வர்ணனைகள் போல வேளச்சேரி ஏரியை ஒட்டிய பகுதிகள் இருந்தாலும் சென்னைக்கே உரிய கொசுக்களின் வன்முறைத்தாக்குதலும், சாக்கடையின் சரித்திரப் புகழ் நாற்றமும் அவற்றையெல்லாம் ரசிக்க விடாமல் செய்து விடுகிறது.

img_3132-small.jpg

எனினும், இறுகிப் போன இயந்திரத் தனமான வாழ்க்கையை சற்றே இளக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவற்றின் பட்டியலில் மான்களையும் சேர்த்துக் கொள்ளலாம். கவர்னர் மாளிகை பகுதி ஐஐடி காம்பஸ் இவற்றிலிருந்து இவை வெளியேறி நகர் வலம் வருவதாக காவல்துறையைச் சேர்ந்த உறவினர் கூறினார்.

img_3134-small.jpg

எல்லாம் இருக்கட்டும், வேளச்சேரி பகுதியில் மான்கள் உலவும் விஷயத்தை யாரும் சல்மானிடம் மட்டும் சொல்லாதிருங்கள்.

தமிழை இழிவுபடுத்தும் மலையாளத் திரைப்படங்கள்.

ravanaprabhu1.jpg

மலையாளத் திரைப்படங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. யதார்த்தத்தின் பின்னணியில் அல்லது முன்னணியில் தான் அவர்களுடைய திரைப்படங்கள் விரியும்.

மிகைப்படுத்தப் படாத நடிப்பையும், இயல்புடன் கூடிய காதாபாத்திரங்களின் ஒப்பனையும் எப்போதுமே என்னைக் கவர்ந்திருக்கின்றன. ( சமீப காலமாக வருகின்ற திரைப்படங்கள் இந்த கலாச்சார பழக்கத்தை உடைத்திருக்கின்றன என்பது வேறு விஷயம். நான் அதைப் பற்றிச் சொல்ல வரவில்லை.)

மலையாளத் திரைப்படங்களில் கொச்சைப்படுத்தப்படும் தமிழும், தமிழ்க் கலாச்சாரமும் பற்றிய தார்மீகக் கோபம் எனக்கு எப்போதுமே உண்டு.

வில்லனின் பெயரை ஆண்டணி என்றோ ஜோசப் என்றோ போட்டு இன்பம் காணும் சில இயக்குனர்களைப் போல, மலையாளிகள் வில்லன் என்று வந்து விட்டால் தமிழர்களை அதுவும் அவர்களை இழிவு படுத்தும் பல வசனங்களோடு தான் அரங்கேற்றுகிறார்கள்.

பாண்டி, அறிவில்லாதவன், விவரம் இல்லாதவன் என்னும் முத்திரையோடுதான் தமிழர்கள் அங்கே முன்னிலைப்படுத்தப் படுகின்றார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். வில்லன் அல்லது காமெடியன் அல்லாத ஒரு தமிழ் கதாபாத்திரம் அங்கே வெகு அபூர்வம் !

சட்டென்று நினைவுகளிலிருந்து எடுத்தால் பாண்டிப்பட, ராவணப்ரபு போன்ற சூப்பர் டூப்பர் மலையாள ஹிட் படங்கள் எல்லாம் தமிழர்களின் மீது சாணி அடித்து சம்பாதித்துக் கொட்டியவையே.

தமிழகத்தின் சந்து பொந்துகளில் சாயா கடைகள் போட்டிருக்கும் மலையாண சகோதரர்களை அண்ணே என்று அன்போடு அழைத்தே கெளரவிக்கும் தமிழர் கலாச்சாரத்தை மலையாள இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ வெறுப்புடனே அணுகுவதன் காரணம் என்னவென்பது புரியாத புதிரே.

ஒருவேளை தமிழ்ப்படங்கள் கேரளாவில் பெறும் மாபெரும் வெற்றிகளைச் சகித்துக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாய் இருக்கலாம்.

அல்லது தாங்கள் நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள் தமிழர்கள் இன்னும் கல்வியறிவில் பின் தங்கியவர்கள் தானே என்னும் எள்ளலாக இருக்கலாம்.

அல்லது தமிழர்களிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டும், தமிழகம் முழுவதும் தொழில்களை நடத்திக் கொண்டும் தண்ணீர் கூட தராமல் சுயநலமாய் இருக்கும் அவர்களுடைய இரத்தத்துடன் கலந்த குணமாக இருக்கலாம்.

அல்லது தமிழகத்தைப் போல வளர்ச்சியடைய முடியாத நிலையில் இருக்கின்ற கையாலாகாத தனத்தின் கொப்பளிப்பாக இருக்கலாம்.

எது எப்படியோ முக்கால் வாசி மலையாளத் திரைப்படங்களில் தமிழ் கதாபாத்திரம் ஒன்று வந்து அவமானப் படுகிறது. அதை கேரளா முழுவதும் கை கொட்டிச் சிரிக்கிறது.

நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்று என்ன பயன் ? சக மனிதனை மதிக்கத் தெரியாத மலையாள படித்த இயக்குனர்களை விட, யாரையும் கபடமின்றி அன்பு செய்யும் எனது தமிழக கிராமத்துத் தோழன் எத்தனையோ மடங்கு உயர்ந்தவன்.

மலையாள இயக்குனர்களே. மனதளவில் அவன் அளவுக்கு நீங்கள் உயரும் வரை தமிழனை பாண்டி என்றோ, கையாலாகாதவன் என்றோ அறிவில்லாதவன் என்றோ திட்டிக் கொண்டே இருங்கள். தமிழன் மன்னிப்பான்.