சாதிப்பள்ளிகள்

வடமாநிலங்களில் தாழ்த்தப்பட்டோ ர், பழங்குடியினர் போன்றோருக்கு தனிப்பட்ட பள்ளிகள் கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால் ஒருவகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவு பெறுவதற்கு ஒரு எளிய வழி கிடைத்திருக்கிறது. ஏற்றத்தாழ்வில் ஊறிக்கிடக்கும் வட மாநிலங்களில் தலித் மக்கள் கல்வியறிவு பெறுவது என்பது சமுதாய மாற்றத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றே.

உயர்ஜாதி என்றழைக்கப்படும் மனிதருடைய வயல் வரப்பில் கீரை பிடுங்கிய செயலுக்காக ஒரு சிறுமியின் வலது கை விரல்களை ஈவு இரக்கமின்றி துண்டித்த சாதி வெறிக்கு எதிராய் சற்று ஈனக்குரலேனும் எழுப்ப வேண்டுமெனில் கல்வியறிவு மிகவும் முக்கியம். இதில் எனக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. மகிழ்ச்சி மட்டுமே.

ஆனால், தனியே இப்படி பள்ளிக்கூடங்கள் எழுப்புவது சாதி ரீதியான ஒரு பாகுபாடை அரசே ஊக்குவிக்கும் செயலாய் மாறிவிடக் கூடிய அபாயம் இருக்கிறதோ எனும் அச்சமும் எனக்குண்டு. நாளை தனித்தனி சாதிப் பள்ளிகளும், சாதிக் கல்லூரிகளும் அமைந்து அந்தந்த சாதியினருக்கு இடம் அளித்தால் கல்வியின் முக்கியப் பயனான ஏற்றத்தாழ்வு அகற்றுதல் என்பதே இல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதுமட்டுமன்றி மாணவன் படிக்கும் பள்ளியை வைத்தே அவனுடைய சாதியை அடையாளம் கண்டுகொள்ளவும், அதன் மூலம் அவனுடைய அடையாளம் இழிவுபடுத்தப்படவும் வாய்ப்பு இருக்கிறது. சாதி வெறியினருக்கு தாக்குதல் நடத்த ஒரு புலிக்கேசி மைதானம் போல இந்த பள்ளிக்கூடம் அமைந்துவிடும் அபாயங்களும் இல்லாமல் இல்லை. திறமையின் மூலமாக இனம் காணவேண்டிய மாணவன் சாதி ரீதியாக அடையாளப்படுத்தப்படும் அபாயமும் இருக்கிறது.

பொதுவான கல்லூரியிலோ, பள்ளியிலோ எல்லா சாதியினரும் கலந்து படிக்கும் நிலையே உண்மையான மறுமலர்ச்சிக்கும், மாற்றத்துக்கும் வித்திடும். குழுவாக இருக்கும் வரைக்கும் அடுத்த குழுவினர் மீதான வெறுப்பையே வளர்க்கும். இது எல்லா இனத்தவருக்கும் பொருந்தும்.

எல்லோருக்கும் கல்வி அல்லது காலம் காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்டதாக சொல்லப்படும் மக்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு உண்மையிலேயே மனதை நிறைவடையச் செய்யும் வேளையில், நீ இன்ன சாதிக்காரன் உனக்கு இங்கே தான் இடம் கிடைக்கும் என்பது போன்ற வடுவை மாணவ மனதிலேயே இது விதைக்கிறதே என்னும் வருத்தமும் சமத்துவ சமுதாயத்தை மீண்டெடுக்கும் அனைவருக்கும் எழுவது இயல்பே.

·