மருத்துவச் சாதனை !

amilia.JPG

உலகிலேயே மிகவும் சிறிய, குறைமாதக் குழந்தை ஒன்றை பத்திரமாகப் பராமரித்து சகஜ நிலைக்குக் கொண்டு வந்திருக்கும் சிலிர்ப்பூட்டும் சாதனையை அமெரிக்காவின் மயாமி மருத்துவர்கள் புரிந்திருக்கிறார்கள்.

அமிலியா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை தாயின் வயிற்றில் இருந்தது வெறும் 22 வாரங்கள் மட்டுமே. சுமார் ஐந்து மாதங்கள் ! வெறும் இருபத்து இரண்டு வாரங்கள் மட்டுமே தாயின் வயிற்றில் இருந்து பிழைத்துக் கொண்ட முதல் குழந்தை எனும் பெயரை அமிலியா பெற்றிருக்கிறாள்.

பிறக்கும்போது வெறும் கால்கிலோ எடையும், ஒரு பேனாவின் நீளமும் கொண்ட இந்த குழந்தை பிழைக்கும் என்று மருத்துவர்கள் உட்பட யாருமே நம்பவில்லையாம்.

மருத்துவர் வில்லியம் ஸ்மாலிங் இந்த நிகழ்ச்சியை உணர்ச்சிப் பெருக்குடன், இது ஒரு ஆச்சரியம் என்பதைத் தவிர வேறெதுவும் சொல்வதற்கு இல்லை என்கிறார்.

அமிலியா என்பதற்கு தாக்குப் பிடிப்பவர், போராளி என்னும் பொருள் உண்டு என்று சிறு புன்னகையுடன் பேசுகின்றனர் பெற்றோர். சுமார் நான்குமாத காலம் குழந்தையைத் தொடுவதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டு முழு மருத்துவப் பாதுகாப்பிலேயே இருந்த குழந்தை இப்போது முதன் முதலாக தாய்வீட்டிற்குள் நுழைகிறது.

பிறக்கும்போது பிழைத்துக் கொள்வாள் என்னும் நம்பிக்கையே இல்லை. இப்போது சுமார் 1.8 கிலோ அளவுக்கு வளர்ந்திருக்கிறார். மிகவும் ஆனந்தமாக இருக்கிறது என்று கண்ணீர் மல்க பேசுகின்றனர் பெற்றோர்.

புதிய மொழி பிரான்ஆங்கிலேஷிஸ் !

நைஜீரியாவிற்கும், மத்திய ஆப்பிரிக்காவிற்கும் இடையே உள்ள கேமரூன் நாட்டில் பிரான்ஆங்கிலேஷிஸ் என்னும் புதிய மொழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தையும், பிரஞ்ச் மொழியையும் சிரியோல் எனும் மொழியையும் கலந்து இந்த புதிய மொழி உருவாக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் பிரஞ்ச் என இந்த மொழி வசீகரிக்கிறது.

காமரூன் நாட்டின் இரண்டு முக்கிய மொழிகளாக விளங்கும் பிரஞ்ச் மற்றும் ஆங்கில மொழிகளை மக்கள் அனைவரும் விரைவில் புரிந்து கொள்வதற்காகவே இந்த மொழி உருவாக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை வெகுவாக இந்த மொழி கவர்ந்துள்ளதாகவும், இந்த புதிய மொழியில் இசை ஆல்பங்கள் வெளியிடப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

டு அஸ் ஸ்லீப் ஆ ஹயர் ? – பயப்படாதீங்க… நல்லா தூங்கினீங்களான்னு பிரான்ஆங்கிலேஷிஸ் மொழியில கேட்டேன். அவ்வளவு தான்

விளம்பரமும், கடவுளும்

விளம்பரங்களில் கடவுளர்கள் புதிய விஷயமில்லைதான் எனினும் இது ரொம்ப சுவாரஸ்யமான விளம்பரம் ! தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைக்கிறது என்பதற்காக எல்லா கடவுளர்களும் ஓடி விட்டார்களாம் !

(படத்தை பதட்டப்படாம கிளிக்குங்க )

image001-small.jpg