சினிமாவின் ‘இளிச்சவாயன்’ மாப்பிள்ளைகள்

sh.jpg
எப்போதெல்லாம் இப்படிப்பட்ட ஒரு கிளைமேக்ஸ் காட்சியைப் பார்க்கிறேனோ அப்போதெல்லாம் எனக்கு எரிச்சலும், சிரிப்பும் ஒருசேரக் கிளம்பும். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை அந்த கிளைமேக்ஸ் காட்சி மாறவேயில்லை.

அப்படியென்ன கிளைமேக்ஸ் காமெடிங்கறீங்களா ? அதான் கல்யாண மேடையிலே மாப்பிள்ளை பக்கத்துல நம்ம ஹீரோயின் நகத்தைக் கடிச்சிட்டு மாலையைப் பிடிச்சிட்டு பதட்டமா உக்காந்திருப்பாங்க. தாலி கட்டற நேரத்துல ஹீரோ வருவாரு பொண்ணு ஓடிப்போய் ஹீரோவைக் கட்டிப் பிடிக்க சுபம் !

உண்மையிலே இது சுபம் தானா ? பாவம் மேடையில ஒரு மாப்பிள்ளை இளிச்சவாயனைப் போல இருக்கிறானே ? அவன் கதி ? அவனோடு குடும்பத்தினரின் நிலமை ? அவர்கள் இந்தத் திருமணத்துக்காக எவ்வளவு கனவுகளைக் கண்டிருப்பார்கள், செலவுகளையும் செய்திருப்பார்கள் ?.

ஹீரோ, ஹீரோயின் இரண்டு பேரும் சேர்ந்து சிரிக்க ‘எ பிலிம் பை பஞ்சாங்கம்’ என்று டைட்டில் நிற்கும் பின்ணணியில் அந்த அப்பாவி மாப்பிள்ளை வேட்டி நுனியைக் கையில் பிடித்துக் கொண்டு ‘குடுத்த காசுக்கு நடிச்சாச்சு’ என்னும் திருப்தியோடு வாழை மரத்தடியில் நிற்பார்.

சரி.. உண்மையிலேயே இயக்குனர்கள் முட்டாள்களா ? இல்லை நாம தான் இந்த மாதிரி படத்தையெல்லாம் பார்த்துட்டு ‘செம ஜாலி மச்சி’ என்று கலக்ஷனை ஏத்தறோமா ? இந்தத் ‘திருவிளையாடல்’கள் இப்போ முடியும்ன்னு தோணலை !

என்னத்தைச் சொல்ல, ஹீரோவா மாறலேண்ணா மாப்பிள்ளைக்கும் கல்யாணத்துல மரியாதை இல்லை.

மனித தோல் ஒரு அதிசய காட்சியகம்

அடுத்த முறை மிருக காட்சிசாலைக்குச் செல்ல வேண்டுமெனில் அலைய வேண்டியதில்லை நமது தோலை உற்றுப் பார்த்தாலே போதும் என்று சொல்லி வியக்க வைக்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

மனித தோலில் இருநூறுக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் இருக்கின்றன. மனித தோல் ஒரு மிருக காட்சி சாலை போல இருக்கிறது என்று நியூ யார்க் மருத்துவப் பல்கலைக் கழகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்த பாக்டீரியாக்களில் எட்டு விழுக்காடு பாக்டீரியாக்கள் இது வரை கண்டு பிடிக்கப் படாதவை என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முழங்கைக்கும் மணிக்கட்டிற்கும் இடைப்பட்ட இடத்திலுள்ள தோலில் நிகழ்த்திய தீவிர ஆராய்ச்சியே இந்த முடிவைத் தந்திருக்கிறது. இந்த ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக உடலின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தோல்களையும், பல்வேறு தன்மையுடைய, வேறு வேறு நபர்களின் தோல்களையும் சோதனை செய்யும் முயற்சியில் இருக்கிறார்கள் அவர்கள்.

இந்த கண்டுபிடிப்பைக் கொண்டு தோல் வளர்ச்சிக்கோ, அல்லது தோல் சம்பந்தமான நோய்களின் தீர்வுக்கோ ஏதேனும் வழி பிறக்கிறதா என்றும் அவர்கள் ஆராய்கிறார்கள்.

நவீனப்படுத்தப்பட்ட இன்றைய உலகில் நாம் உபயோகிக்கும் சோப்பு, ஷாம்பு எல்லாமே அமிலங்களின் கலவையாய் இருப்பதனால் தோலுக்கு நமக்குத் தெரியாமலேயே சேதம் நிகழ்வதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பண்டைய ரோமர்கள் ஆலிவ் எண்ணையை உடலில் பூசி அதை பின்னர் சுத்தம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள், இதே போன்ற அணுகுமுறையினால் தோலை நல்ல முறையில் பாதுகாக்க முடியும் என்றும் தேவையற்ற அமிலங்களை ஒதுக்கி விடுங்கள் என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.