கமலுக்கு living Legend விருது

kamal1.jpg
பத்தோடு ஒன்றாக வந்து போகும் நடிகர்கள் மத்தியில் ஒன்றில் பத்தாக தசாவதாரம் செய்யும் கமலின் நடிப்பு ஆர்வமும், கலை தாகமும் வியக்க வைப்பவை. நடிகர் கமலஹாசனுக்கு FICCI அமைப்பு இந்த ஆண்டைய வாழும் வரலாறு விருதை வழங்குகிறது. மார்ச் இருபத்து எட்டாம் தியதி இந்த விருதை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி வழங்குகிறார்.

வாழும்போதே தன்னுடைய வாழ்க்கையை வரலாறாய்ப் பதிவு செய்தவர்களுக்கு வழங்கும் இந்த விருது பெரும்பாலும் வடக்கே தான் பொழியப்பட்டு வந்திருக்கிறது. அமிதாப்பச்சன், லதா மங்கேஷ்கர், ஷாமி கபூர், தேவ் ஆனந்த், ஹேமமாலினி, தர்மேந்திரா எனும் இந்த விருதை வாங்கிய பட்டியலைப் பார்த்தாலே இது புரிந்து விடும்.

இந்த விருதுக்கு முழுக்க முழுக்க தகுதியான நடிகர் கமலஹாசன் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வடக்கே மையம் கொண்டிருந்த விருது மழையை தெற்குப் பகுதியில் பொழிய வைத்ததற்காகவும் கமலஹாசனைப் பாராட்டுவது தகும்.

பத்மஸ்ரீ, பதினாறு முறை பிலிம்பேர் விருது ( வாங்கிய ஒரே நடிகர்) , மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது, மாநில, அமைப்பு சார் விருதுகள் என பல விருதுகளை வாங்கியுள்ள கமலுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பதன் மூலம் விருது கொஞ்சம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

அரசியல் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமலும், தனிப்பட்ட குடும்ப சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க இயலாமலும், ஒரு கலைஞனுக்குரிய கர்வத்துடனும், ஒரு மனிதனுக்குரிய உரிமையுடனும் வாழ்பவர் கமல்.

மூடி மறைத்து ஆடுவேஷம் போட்டு அலையாமல் தன் தரப்பு நியாயங்களை தடாலடியாய் போட்டு உடைப்பதில் கமலின் திறமை எனக்கு நிரம்பப் பிடிக்கும். விரைவில் அவருடைய கவிதை நூலும் வெளிவர இருக்கிறது என்பது சிறப்புச் செய்தி.

அமெரிக்காவில் பிறந்திருந்தால் ஆஸ்கர் விருதை பலமுறை பெற்றிருப்பார் என்பது திண்ணம். ரசிகர் மன்றங்கள் தேவையில்லை நற்பணி மன்றங்களே தேவை என்று தைரியமாகச் சொல்லுமளவுக்கு கலையில் நம்பிக்கை வைத்ததற்காகவே கமலை பாராட்டலாம்.

நடிகனாகி விட்டாலே கடவுளாய் நினைத்துக் கொள்ளும் நடிகர்கள் மத்தியில் தன்னை மனிதனாய் அடையாளப்படுத்திக் கொண்டு, தெளிவான பகுத்தறிவு, சிந்தனை, தொழிலில் முழு ஈடுபாடு, கற்றுக் கொள்ளும் ஆர்வம், பல மொழிப் புலமை, என தன்னுடைய தொழிலில் ஆழமாய் நுழைந்து பணியாற்றும் கமலின் வாழ்வு செய்வன திருந்தச் செய் என்று சொல்கிறது !