கிரிக்கெட் தேவையா : வாங்க அலசலாம்.

sachin.jpg

அமெரிக்க நண்பர் ஒருவரிடம் கிரிக்கெட் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன் அப்போது அவர் வியப்புடன் ஒரு போட்டி ஒரு நாள் முழுக்க நடக்குமா ? அதை மக்கள் உட்கார்ந்து பார்ப்பார்களா ? என்று வியந்தார். ஒரு நாள் என்றில்லை டெஸ்ட் போட்டியெனில் ஐந்து நாள் நடக்கும் என்றேன். அவர் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டார்.

நமக்கு ஐந்து நாள் போட்டி ஒன்று நான்கு நாளில் முடிவுக்கு வந்தாலே ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தது போலாகிவிடுகிறது. மழை வந்து ஒரு விளையாட்டு பாதியில் நின்று விட்டால் சாவு விழுந்த வீட்டைப் போல ஒரு மயான அமைதி முகங்களில் தெரிகிறது. பெருமழை வந்து ஊரே மிதந்தால் கூட, அடடா இன்று விளையாட்டு இல்லையா என்று தான் கவலைப்படுகிறார்கள் மக்கள்.

கிரிக்கெட் நட்சத்திரங்களை தங்கள் வாழ்வின் முன்மாதிரிகையாகக் கொண்டு செயல்படுகின்றார்கள் இந்திய ரசிகர்கள். இதனால் சமூகத்தின் மீதான எந்தத் தாக்கத்தையும் இவர்களால் செய்ய முடிகிறது. முக்கியமாக விளம்பரங்களில் இவர்கள் முன்னிலைப்படுத்தும் கோக், பெப்சி போன்ற சர்வதேச பானங்கள் உடலுக்கு மிகவும் கெடுதலானது என்று ஆராய்ச்சிகள் எத்தனையோ முறை அடித்துச் சொல்லியும் இன்னும் விற்பனை நிற்கவேயில்லை.

இந்தியா விளையாட்டில் தோற்றுப் போனதற்காக தற்கொலை செய்து கொண்டவர்களும், இந்தியா தோற்றுப் போவதைப் பார்த்து இதயத் துடிப்பு நின்று போய் இறந்தவர்களைப் பற்றியும் நமது செய்தித் தாள்களில் பலமுறை படித்திருக்கிறோம்.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன என்றால் கேட்கவே வேண்டாம். மக்கள் அலுவலகங்களை காலி செய்து விட்டு வீடுகளில் தவமிருக்கிறார்கள். அலுவலகங்கள், கல்விநிலையங்கள் எங்கும் கடமைகளைக் கழற்றி விட்டுவிட்டு மக்கள் விக்கெட்டுகள் விழுவதையே விழிகளில் வாங்கிக் கொண்டிருக்கும் நிலைக்கு மக்களை அடிமைப்படுத்தியிருக்கிறது கிரிக்கெட்.

ஒரு வகையில் இந்த கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சி, நமது மண் சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த விளையாட்டுகளை முனை தெரியாத அளவுக்கு அழித்துவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். அந்த விளையாட்டு வீரர்களுக்கோ, அல்லது வெற்றிகளுக்கோ தேசம் எந்த மரியாதையையும் செலுத்துவதில்லை என்பது தான் நிஜம்.

குழந்தைகளின் கல்வியையும் இந்த தொடர் விளையாட்டுகள் பெருமளவில் பாதிக்கின்றன. இப்போது கைப்பேசியிலும் இந்த விளையாட்டுத் தகவல்கள் வருவதால் மாணவர்களை வேறெதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் விளையாட்டிலேயே அடிமைகளாக்கி விடுகிறது.

இணைய தளங்களைப் பொறுத்தவரை இன்று கிரிக்கெட் பற்றி வரும் தகவல்களுக்கும், தளங்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு. அலுவலகங்ல்களில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் கிரிக்கெட் விளையாட்டு நடக்கும் நாட்களில் இணையதளத்தில் தான் குடியிருக்கிறார்கள் என்கிறது கணினி நிறுவன ஆய்வு ஒன்று.

நீண்ட நேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பதனால் வரும் கண் நோய்களுக்கும் இந்த விளையாட்டு நம்மை இட்டுச் செல்கிறது நம்மை அறியாமலேயே.

கிரிக்கெட் விளையாட்டு முக்கியமான இடத்தைப் பற்றிக் கொண்டதனால் ஹாக்கி, கபடி, கால்ப்பந்து, கூடைப்பந்து போன்ற பிற விளையாட்டுகள் எல்லாம் ஒளிபரப்பாளர்கள் கிடைக்காமல் மிகவும் திண்டாடுகிறார்கள் என்பது கண்கூடு.

கிரிக்கெட் விளையாட்டு என்பது அந்தஸ்தின் அடையாளம் போலவும் இன்று சித்தரிக்கப் படுகிறது. இதனால் கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்காதவர்கள் இளக்காரமாகப் பார்க்கப் படும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

நாட்டின் பிரதான தேவைகளையும், முன்னுரிமைகளையும் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டு சட்ட சபைகளும், நாடாளு மன்றங்களும் விளையாட்டைப் பற்றி விவாதிப்பது கூட பல வேளைகளில் வியப்பூட்டுகிறது. ஒரு விளையாட்டு வீரரை அணியை விட்டு நீக்கினாலே ஒரு மாநிலமே கொதிக்குமளவுக்கு இந்த விளையாட்டு மக்களை ஆட்டி வைத்திருக்கிறது.

ஒருவகையில் பல்வேறு மொழி, கலாச்சாரம், இனம் அடிப்படையில் பிளவு பட்டிருக்கும் இந்தியர்கள் ஒருமித்து நிற்கும் ஓரிடம் கிரிக்கெட் என்று கொள்ளலாம், எனினும் அந்த உணர்வு ஆக்கப்பூர்வமான விஷயங்களில் சண்டை போட்டுக் கொள்வதிலேயே முடிவதால் அர்த்தமிழந்து விடுகிறது. தண்ணீருக்காக தர்க்கம் செய்து கொண்டே நாங்கள் ஒற்றுமையாய் கிரிக்கெட் பார்க்கிறோம் என்று சொல்வது போலித்தனமானதாகவே இருக்க முடியும்.

கிரிக்கெட் விளையாட்டு மக்களை முட்டாள்களாக்கிவிட்டு சூதாட்டத்தை கோடிக்கணக்கில் நடத்துகிறது. பல விளையாட்டு வீரர்கள் இதற்கு உடந்தையாய் இருப்பது பல வேளைகளில் நிரூபிக்கப் பட்டுவிட்டது. கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க, அப்பாவி ரசிகன் ஏதுமறியாமல் வாழ்க்கையை தொலைக்காட்சிக்கு முன் விற்றுக் கொண்டிருக்கிறான்.

என்னுடைய கிட்னியை விற்றாவது மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட்டு பார்ப்பேன் என்று ஒரு கிரிக்கெட் ரசிகர் சொல்லியிருப்பது வியப்புக்குரியதல்ல வேதனைக்குரியது. சமுதாயத்தின் மிக முக்கியமான தேவை கிரிக்கெட் என்பது போலவும், அதற்காக தன்னுடைய உடல் உறுப்பை இழப்பதும் பிழையில்லை என்று ஒருவன் சொல்வது எவ்வளவு இழுக்கானது. எத்தனையோ தேவைகள் இளைஞர்களின் வருகைக்காய் காத்திருக்க அவனுடைய சமூகத்தின் மீதான அலட்சியம் கிரிக்கெட் மீது மட்டுமே கவலை கொள்ள வைக்கிறது.

ஒரு நிமிட நேரத்திற்கு சச்சின் டெண்டுல்கள் 1200 ரூபாய் சம்பாதிக்கிறார். கவனிக்கவும், ஒரு நிமிட நேரத்துக்கு!. இத்தகைய ஒரு உன்னத நிலைக்கு அவரைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் சமூகத்திற்கு அவரால் நிகழ்த்தப்படும் பங்களிப்பு என்ன?

உலகக் கோப்பை கிரிக்கெட் வருகிறது என்பதற்காக தொலைக்காட்சி விற்பனை அதிகரிக்கிறது, திரைப்பட வெளியீடுகள் ஒத்தி வைக்கப் படுகின்றன இன்னும் பல தொழில்கள் தொழிலாளர்களின் விடுப்புகளினால் பாதிப்படைகின்றன. விவசாயிகள் இறந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு நாம் எப்படித் தான் நிம்மதியாய் சிக்சர்களுக்கு விழா கொண்டாட முடியும் ? நமது முன்னுரிமை எங்கே இருக்கிறது ?

கிரிக்கெட்டில் இந்தியா தோற்று விட்டால் நாடாளுமன்றத்திலேயே விவாதங்கள் நடத்துவது நாட்டின் பொருளாதாரத்தை எந்த அளவுக்குப் பாதிப்படைய வைக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

எந்த ஒரு செயலையும் கண்மூடித் தனமாக ஆதரிக்காமல் அதன் விளைவுகளை தீர ஆய்ந்தறிவதே மிகவும் பயனளிக்கும். இந்தியா விளையாட்டை முதன்மையாய்ப் பார்த்ததால், முதன்மையான விஷயங்கள் எல்லாம் விளையாட்டாய் போய்விட்டன !