புற்றுநோயும், சர்க்கரை அளவும்

doc1.jpg

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாய் இருக்கும் பெண்களுக்கு புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாய் இருப்பதாக ஐரோப்ப ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

சர்க்கரை நோயோ, அதிகமாக இனிப்பு வகைகளை உண்பதோ இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இப்படி உடலில் சேரும் அதிகப்படியான சர்க்கரையினால் பெண்களுக்கு கருப்பை, தோல் போன்ற பல இடங்களில் புற்று நோய் வரும் என அந்த ஆராய்ச்சி எச்சரித்துள்ளது.

மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு வருவதற்கும் இந்த இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது ஒரு காரணம் என்று உமேயா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. அதுவும் 49 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை அச்சுறுத்துகிறது.

கடந்த பதிமூன்று வருடங்களாக இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும், பல ஆயிரக்கணக்கான புற்று நோயாளிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப் பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இனிப்பான எல்லாமே இனிப்பான செய்தியைத் தராது என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது !

சொல்லி அடிப்பேன் – கதை !

solli.jpg

விவேக் கதாநாயகனாக நடிக்கும் சொல்லி அடிப்பேன் திரைப்படத்தின் கதை ஒரு பிரபலமான மலையாளத் திரைப்படத்தின் கதையாம். அப்படியெனில் அந்தக் கதை இது தான்.

கதாநாயகன் ஒரு கலகல பேர்வழி. அன்பான குடும்பம், அழகான முறைப்பெண் என செல்லும் வாழ்க்கையில் அவனுக்கு இருக்கும் ஒரே சவால் வறுமை. போதுமான வருமானம் இல்லாமல் வருந்தும் கதா நாயகன் ஊர் முழுக்க கடன் வாங்கி வைத்துக் கொண்டு அதைக் கொடுக்க முடியாமல் சமாளித்து, ஒளித்து நடமாடுகிறான்.

ஒரு கட்டத்தில் கடன் தொல்லையினால் இனிமேல் என்ன செய்வதென்றே தெரியாமல் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் கடலில் குதிக்கிறான். ஹீரோ தான் சாக மாட்டாரே, அவர் ஒரு மீனவனின் வலையில் சிக்கி காப்பாற்றப்படுகிறார், வேறு ஒரு இடத்தில் !

ஆனால் இங்கே கதாநாயகனின் உடை கடலில் மிதப்பதால் கதாநாயகன் இறந்துவிட்டதாய் குடும்பம் கலங்கி நிற்க, அவனுடைய முறைப்பெண் விதவைக் கோலத்தில் கதாநாயகனின் வீட்டிலேயே தஞ்சம் ! செண்டிமெண்டல் டச் !

அங்கே, கதாநாயகனைக் காப்பாற்றும் மீனவர் அவனை ஒரு பஞ்சாபியுடைய வீட்டில் வேலைக்குச் சேர்க்கிறார், ஊமை என்று சொல்லி ! இந்தி தெரியாத கதா நாயகனின் சமாளிப்புகளும், ஊமையாய் நடிக்கும் கலகலப்புகளும் அங்கே அரங்கேற, அங்குள்ள ஒரு பஞ்சாபிப் பெண்ணுக்கு கதா நாயகனின் மேல் காதல். அவள் ஒரு ஊமை !

கதாநாயகன் முறைப்பெண்ணின் நினைவினால் ஊமையின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார். ஒரு கட்டத்தின் கதாநாயகன் ஊமை இல்லை என்பதும், அவனுடைய குடும்ப சூழலும் தெரிய வர இந்த ஊமைப் பெண் அவனுக்கு தேவையான பணம் கொடுத்து கண்ணீருடன் வெளியே அனுப்புகிறாள்.

கதாநாயகன் அவனுடைய காதலி வீட்டுக்கு ஒரு நண்பனை அனுப்பி நிலவரம் கேட்கச் சொல்கிறான். நண்பன் முறைப்பெண் வீட்டுக்குச் செல்லும் போது முறைப்பெண்ணின் தந்தை ‘ பெண் அவளுடைய புருஷன் வீட்டில் நிற்கிறாள்’ என்று சொல்ல, நண்பன் அவளுக்குத் திருமணம் ஆகி விட்டது என்று தவறாய் புரிந்து கொள்கிறான்.

இந்த விஷயத்தைக் கேள்விப்படும் கதாநாயகன் சற்று நேரம் வருத்தப்பட்டு ஒரு பாடலைப் பாடி முடித்துவிட்டு ஊமைப் பெண்ணின் காதலை ஏற்கிறான். அவனுக்கு தன் முறைப்பெண் தன்னுடைய வீட்டில் நிற்கும் செய்தியும், தன்னைத் தான் கணவனாக நினைத்து வாழ்கிறாள் என்பதும் தெரியவில்லை !!!

கதாநாயகனுக்கும் ஊமைப் பெண்ணுக்கும் திருமண நாள். கதாநாயகன் உயிருடன் இருக்கும் செய்தி குடும்பத்தினருக்கு அப்போது தெரிய வருகிறது. ( கிளைமேக்ஸ் இல்லையா ? அதான் ). ஆனந்தமாய் ஓடி வரும் முறைப்பெண்ணுக்கு, காதலனின் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சி !

கதாநாயகன் தன் காதலியர் இருவரையும் ஒரே நேரத்தில் சந்திக்கிறார். பயங்கர மியூசிக்.. :), ஷாக், குழப்பம் , இத்யாதி.. இத்யாதி.

இறந்து போன காதலனுக்காக அவனுடைய வீட்டிலேயே விதவைக் கோலத்தில் வாழத் துணியும் உயிருக்கு உயிரான முறைப்பெண்ணா ?

ஊமை என்பதற்காய் வாழ்க்கை இழந்து நிற்கும், தன்னை உயிராய் நேசிக்கும் ஊமைப்பெண்ணா ? யாரைத் திருமணம் செய்து கொள்வதென்று தெரியாமல் உலக மகா உன்னதமான கதாநாயகன் கலங்கி நிற்க,

இந்த கேள்விகளை, முறைப்பெண்ணே முன் வந்து ஊமைப்பெண்ணுக்கு வாழ்க்கைக் கொடுங்கள் என்று விழிகள் வழிய, கரம் கோர்த்து வைத்துச் சொல்வாள் என்பதைச் சொல்ல நான் தேவையில்லை தானே 🙂

இனி இந்த கதையில் விவேக் கைப் பொருத்திப் பாருங்கள்… அதான் சொல்லி அடிப்பேன் !