என்று ஒழியும் இந்த ஜடேஜா ஜம்பம்

ajay.jpg

கிரிக்கெட் தொடர்பான உரையாடல்களைக் கேட்கும்போது பல வேளைகளில் எரிச்சல் தான் ஏற்படுகிறது. இந்தியா தோற்றுப் போனதனால் அல்ல. தோல்வி என்றைக்குமே முற்றுப்புள்ளி அல்ல என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

கிரிக்கெட்டில் இந்தியா தோற்றுப் போனதற்காக நான் புலம்பியதும் கிடையாது. ஏனெனில் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை விட முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன என்பதே எனது கருத்து.

ஆனால் ஜடேஜா போன்ற சூதாட்டச் சூறாவளியில் சிக்கி இந்தியாவின் மானத்தை வாங்கியவர்களை பிரபலமான ஆங்கில தொலைக்காட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு உட்கார வைத்து பேசுவதும், அதற்கு அவர் கடவுளிடமிருந்து நேரடியாக வந்திறங்கியவர் போல பேசுவதும் எரிச்சலின் உச்சக் கட்டம்!

பங்களாதேஷிடம் தென்னாப்பிரிக்கா தோற்றுப் போனதால் தென்னாப்பிரிக்காவின் மனநிலை எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு ஜடேஜா, “கேப்டனை மாற்றுங்கள், பயிற்சியாளரை மாற்றுங்கள், புதிய மக்களை மாற்றுங்கள் என்றெல்லாம் கோஷம் இடுமளவுக்கு அவர்கள் பக்குவற்றவர்கள் அல்ல” என்று பேச ஆரம்பித்தார். உடனே சானலை மாற்றி விட்டேன்.

இதே ஜடேஜாவிடம் உல்மர் மரணம் குறித்து சில வாரங்களுக்கு முன் ஒரு கேள்வி கேட்டார்கள். ‘எப்படி சூதாட்டக் காரர்கள் விளையாட்டு வீரர்களை அணுகுகிறார்கள் ?’ என்று. ஒரு வினாடி ஜடேஜாவின் முகத்தில் ஈயாடவில்லை. காரணம் நமக்குத் தெரிந்தது தான். அதற்கு நியாயமாக ஜடேஜா செயல்முறை விளக்கம் ஒன்றையே காண்பித்திருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல் அதற்கும் ஒரு பரிசுத்தவானின் பதிலையே கொடுத்தார். சிரிக்காமல் என்ன செய்ய ?

விளையாட்டோ , பணியோ எல்லாவற்றிற்கும் ஒரு கண்ணியமும், ஒரு நேர்மையும் இருக்கிறது. ஊழல் மந்திரியை உட்கார வைத்து ஊழலற்ற சமூகம் குறித்து விவாதிப்பதும், ஜடேஜா போன்றவர்களை வைத்துக் கொண்டு சூதாட்டம் பற்றி விவாதிப்பதும் ஒன்று தான்.

ஊடகங்கள் இத்தகைய மனிதர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு நியாயமாகவும், உண்மையாகவும் இந்திய அணிக்காக விளையாடியவர்களையோ, உண்மையிலேயே விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆர்வலர்களில் ஒருவரையோ விவாதத்தில் கலந்து கொள்ளச் செய்வது தான் விளையாட்டிற்கும், விளையாட்டு ரசிகர்களுக்கும் தரும் மரியாதையாக இருக்க முடியும்.