இந்தியாவும், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலும்

child.jpg

இந்தியாவில் குழந்தைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவது மிகவும் அதிகம் என்று அரசு நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு அமைச்சரவை நடத்திய இந்த ஆய்வில் கலந்துகொண்ட குழந்தைகளில் ஐம்பத்து மூன்று சதவீதம் பேர் பாலியல் கொடுமைகளைச் சந்தித்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அரசு சாரா அமைப்புகள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டிருந்தாலும் அரசு நிகழ்த்தும் முதல் விரிவான ஆய்வு இது என்பது குறிப்பிடத் தக்கது.

சுமார் நாற்பத்து நான்கு கோடி குழந்தைகள் (பதினெட்டு வயதிற்குக் கிழே) உள்ள இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு பரவலான வன்முறை நடப்பது இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பெரும்பாலும் வெளியா வருவதில்லை. வழக்குகளாகவும் பதிவு செய்யப்படுவதில்லை. இதற்கு முக்கியக் காரணம் இந்த தவறைச் செய்வதில் பெரும்பாலும் குழந்தைகளின் குடும்ப நண்பர்கள், உறவினர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் போன்றோரே காரணகர்த்தாவாக இருக்கிறார்கள்.

உலக குழந்தைகள் தொகையில் பத்தொன்பது சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களை மையப்படுத்தி இன்னும் பாதுகாப்புகளோ, நலவாழ்வுத் திட்டங்களோ இந்தியாவில் பெருமளவில் இல்லாதது வேதனை.

ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப் பட்டாலும் குடும்பத்தினருடனேயே இருக்க விரும்புகிறார்கள். எழுபது சதவீதம் பேர் பாலியல் துன்புறுத்தல்களை வெளியே சொல்லாமல் தங்களுக்குள்ளேயே புதைத்திருக்கிறார்கள்.

பாலியல் தொல்லை தருபவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று பதினேழு சதம் குழந்தைகள் கண்ணீருடன் தெரிவித்திருப்பது கள்ளம் கபடமற்ற இந்த குழந்தைகள் எந்த அளவுக்கு மன ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு கனத்த சான்றாகும்.

இரண்டு ஆண்டுகளாக பல ஆயிரம் குழந்தைகளை இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுத்து நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் மனித நேயம் கொண்ட அனைவரையும் உலுக்கி எடுக்கும் என்பது மட்டும் உண்மை.

குழந்தைகள் அதிக பட்ச நேசத்துடன் கவனிக்கப்படவேண்டியவர்கள். குழந்தைகள் ஆனந்தத்தின் இருப்பிடங்கள். வாழ்வின் மீதான நம்பிக்கையை அவர்களுக்கு அளிப்பதே பெரியவர்களின் பணியாக இருக்க வேண்டும் அதை விடுத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது என்பது கொடுமையின் உச்சம்.

அரசு இந்த விஷயத்தைக் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வுக்கான சில முடிவுகளை எடுப்பது அவசியம்.

குழந்தைத் தொழிலாளர் நிலையை சட்ட விரோதமாக்கியது போல குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் குறித்த விழிப்புணர்வும், பாதுகாப்பு உணர்வும் அரசு தரவேண்டியது மிகவும் முக்கியம்.