ரொமாண்டிக் ராஸ்கல் வைரமுத்துவும், ராட்சஸன் இளையராஜாவும்

spb.jpg

விஜய் தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நான் பார்ப்பதில்லை என்பதற்கு நிகழ்ச்சிகளின் தரத்தைத் தவிர வேறெந்த காரணமும் இல்லை.

மற்ற சானல்களில் நகைச்சுவைப் பஞ்சம் வரும்போது ஜெயா தொலைக்காட்சி செய்திகளை அவ்வப்போது பார்ப்பது உண்டு. அங்கே தான் பலாப்பழம் சரியாக பழுக்கவில்லை என்றால் கூட திமுக கவுன்சிலர் தான் காரணம் என்பார்கள். வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் இல்லையா 🙂

கடந்தவாரம் இரவு பதினோரு மணிக்கு மேல் சும்மா சானலை திருப்பிக் கொண்டிருந்தபோது தட்டுப்பட்டது எஸ்.பி.பி நடுவராக இருந்த ‘பாட்டு பாடுங்கள்’ நிகழ்ச்சி ஒன்று ஜெயா தொலைக்காட்சியில்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துவதற்கு என்னென்ன திறமைகள் வேண்டும் என்பதை எஸ்பிபியிடமிருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மிக மிகத் தெளிவான தமிழ் உச்சரிப்பும், நிகழ்வுகளோடு இணைந்து போகும் மெல்லிய நகைச்சுவையும், சற்றும் கர்வத்தின் கறை படியாத தாழ்மையுமாக அசத்தினார் எஸ்பிபி.

‘தும்மும் பொழுதிலும் இம்மி அளவிலும் பிரியாதீக’ என்ற வரிகளைப் பாடிய பெண்ணிடம் எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் வைரமுத்து ? அவர் எழுதிய பாடலை ஒரு வார்த்தை, எழுத்து தப்பாகப் பாடினாலும் விட மாட்டார். சரியாகப் பாடும் வரை கூடவே இருப்பார். அவருடைய வார்த்தைகளில் காதல் ரசம் மிளிரும்.. அவன் ஒரு ரொமாண்டிக் ராஸ்கல் என்று செல்லமாய் சொல்ல வியந்து போனேன்.

இளையராஜாவைப் பற்றிக் குறிப்பிடுகையில், அவர் இங்கே இருப்பது நாம் செய்த புண்ணியம்மா.. அவன் ஒரு ராட்சசன் 🙂 என்று சிரித்தார்.

ஒவ்வொரு பாடல் பாடும் போதும் அவருடைய வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை நினைவு கூர்ந்து பார்வையாளர்களைப் பரவசப் படுத்திய எஸ்பிபி கடைசியில் அந்த நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்புக் கொடுத்த இளம் பாடகர்களுக்கு நன்றி செலுத்தியது வசீகரித்தது.

‘ டமில் ஈஸ் சச் அ நைஸ் லாங்குவேஜ் ‘ என்று தமிழைக் கொல்லும் நவ நாகரீக மங்கையர் இல்லை, உச்சஸ்தாயியில் கத்தும் இளைஞர் பட்டாளம் இல்லை.
நிகழ்ச்சியில் பந்தா என்பதே சிறிதும் இல்லை. பாடல் நடத்த மட்டுமல்ல, நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கு பாடம் நடத்தவும் தேவை எஸ்.பி.பி.