ஆஸ்த்மாவிலிருந்து விடுதலை

ash.jpg
இயற்கை உணவை உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா போன்ற நோய்கள் வராது என்று லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

யூகே, கிரீஸ், ஸ்பெயின் நாடுகளிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக நிகழ்த்திய இந்த ஆய்வின் முடிவில் நகரப்புறங்களில் ஆஸ்த்மா நோய்கள் அதிகம் இருப்பதாகவும், இதற்குக் காரணம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பதும் தான் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

செல்லப்பிராணிகளின் மூலமாகவும் ஆஸ்த்மா நோய்க்கான அலர்ஜி குழந்தைகளைப் பிடிப்பதுண்டு.

ஐம்பது இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஆஸ்த்மா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் வளர்ந்த நாடான யூ.கேயில் பிறக்கும் குழந்தைகளில் பத்து பேருக்கு ஒருவர் ஆஸ்த்மாவினால் பாதிக்கப் படுகிறார்களாம்.

உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றியமைப்பத மூலம் ஆஸ்த்மாவை விரட்டலாம் எனும் இந்த ஆராய்ச்சி அந்த மக்களிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆரஞ்சு, ஆப்பிள், தக்காளி மற்றும் திராட்சை போன்ற பழங்களை தொடர்ந்து உண்டு வரும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா நோயே வருவதில்லையாம். அவர்களுக்கு ஆஸ்த்மா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சத்தி உருவாகிவிடுகிறதாம்.

சிகப்பு திராட்சையை உண்ணும்போது அதன் தோலுடன் சேர்த்து உண்ணவேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

முந்திரி, பாதாம், நிலக்கடலை, பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வரும் வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நோயற்ற வாழ்வுக்கு மருத்துவரை நாடாமல் காய்கறி, பழக் கடைகளை நாட அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

டயட் இருப்பது ஆபத்து !

diet.jpg
உணவுக் கட்டுப்பாடு செய்து உடல் எடையைக் குறைப்பதில் எந்த பயனும் இல்லை ஏனெனில் இழந்த எடையை விட அதிக எடையை விரைவிலேயே அவர்கள் அடைவார்கள் என்று நிரூபித்திருக்கிறது அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று.

மிக விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முதல் ஆறு மாதங்களில் எடை இழந்து விட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இழந்ததை விட அதிகமான எடையையே பெரும்பாலானோர் பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.

அடிக்கடி எடை குறைந்து குறைந்து அதிகரிப்பதால் இதய நோய், வலிப்பு நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இப்படி உணவுக் கட்டுப்பாட்டினால் எடை குறைப்பதை விட எடை குறைக்காமல் இருப்பதே ஒரு வகையில் நல்லது என்று அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உடல் எடையைக் குறைக்க டயட் இருப்பது நல்லதல்ல என்பதை அறிந்து தானோ ‘ஓடி விளையாடு பாப்பா’ என்றான் நம் பாரதி.