தீர்க்கத்தரிசி கமல்

kamal.jpg

வாழும் வரலாறு கமல்ஹாசனின் திரைப்படங்கள் தீர்க்கத் தரிசி போல செயல்படுகின்றன என்று கூறி விளக்கமளிப்பது போல வந்த மின்னஞ்சல் மிகவும் சுவாரஸ்யமானது… படியுங்கள்

1978ல் சிவப்பு ரோஜாக்கள் வெளியானது. மனநிலை பாதிக்கப்பட்ட சில்மிஷக் கொலைகாரர் போல அவருடைய கதாபாத்திரம் அமைந்திருந்தது, அடுத்த ஆண்டு சைக்கோ ராமன் பெண்கள் பலரைக் கொலை செய்ததற்காய் கைது செய்யப்பட்டான்

1988ல் சத்யா படத்தில் வேலையில்லாத இளைஞராக நடித்தார், அடுத்த இரு ஆண்டுகள் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது ( அப்போ மட்டும் தானா ? )

1992ல் தேவர் மகன் வெளியானது அடுத்த ஆண்டு தென்மாவட்டங்களின் சமூகத்தினரிடையே பிரச்சனையும் தலைவிரித்தாடியது.

1994ல் கமல் மகாநதி படத்தில் பைனான்சியர் ஏமாற்றும் பிரச்சனையைச் சொன்னார். 1996ல் பல பைனான்ஸ் நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி விட்டு ஓடின,

ஹேராம் படம் 2000 ல் வெளியானது. இந்து முஸ்லீம் பிரச்சனை கோத்ரா வடிவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடந்தது.

அன்பே சிவம் படத்தில் சுனாமி என்னும் வார்த்தை பயன்படுத்தினார் 2003ம் ஆண்டு. அடுத்த ஆண்டு சுனாமி வந்து பேரழிவைத் தந்தது,

வேட்டையாடு விளையாடு 2006 ல் வெளியானது சீரியல் கில்லர்ஸ் வில்லன்கள் பற்றி, படம் வெளியாகி மூன்று மாதத்திற்குப் பின் நோய்டா கொலைகாரன் சிக்கினான்.

அடுத்த படத்துல என்ன வேஷம் கமல்ஜி ?

எகிப்தில் எகிறும் மக்கள் தொகை

egypt.jpg
எகிப்தில் மக்கள் தொகை மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறதாம். கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை இருபது விழுக்காடு அதிகரித்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் இந்த மக்கள் தொகை இரண்டு மடங்காகியிருக்கிறது !!!

இருபத்து மூன்று வினாடிகளுக்கு ஒரு குழந்தை என்னும் விகிதத்தில் எகிப்தில் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக அரசு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

1882ம் ஆண்டு சுமார் ஏழு மில்லியனாக இருந்த மக்கள் தொகை இப்போது எழுபத்து ஏழு மில்லியன் !

மூன்றில் ஒருபாகம் மக்கள் பதினைந்து வயதுக்குக் கீழே உள்ளவர்கள். தற்போது குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வும் செயல்பாடும் எகிப்தில் பரவலாக இருக்கின்றன. இதன் மூலம் குடும்ப சராசரி நபர்களின் எண்ணிக்கை 4.65 லிருந்து 4.18 ஆக குறைந்திருக்கிறது.

வருடத்திற்கு ஐந்து இலட்சம் திருமணங்களும், அறுபதாயிரம் மணமுறிவுகளும் இங்கே நிகழ்கின்றன.

எகிப்தை அச்சுறுத்தும் ஒரு பிரச்சனை கல்வியறிவின்மை. பத்தாண்டுக்கு முன்பு முப்பத்து ஒன்பது சதவீதமாக இருந்த கற்றோரின் எண்ணிக்கை, தற்போது இருபத்து ஒன்பது எனுமளவுக்கு மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

மாமிச உணவும், புற்று நோயும்

one3.jpg

பெண்களுக்கு வரும் மார்பகப் புற்று நோய்க்கும் மாமிச உணவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பிரிட்டன் ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

குறிப்பாக சிவப்பு நிற மாமிச உணவுகளான பன்றி, மாடு போன்ற மாமிச உணவுகளை தினமும் ஐம்பது கிராம் உண்பவர்களுக்கு அறுபத்து நான்கு விழுக்காடு புற்றுநோய் ஆபத்து இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கிறது.

இத்தகைய மாமிச உணவுகளில் காணப்படும் அதிகப்படியான கொழுப்பே இதற்குக் காரணம் என்றும், இத்தகைய உணவுகளை தொடர்ந்து உண்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை அறிவுறுத்துகிறது.

இளம் பெண்கள் அதிகப்படியான சிவப்பு மாமிச உணவுகளை உட்கொள்வது அவர்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பை இரட்டிப்பாக்குவதாகவும் அந்த அறிக்கை அச்சுறுத்துகிறது.

பெண்கள் சரியான உணவுப் பழக்கமும், உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதும் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என லண்டனின் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் ஹென்றி தெரிவிக்கிறார்