இன்று…

kid.jpg

( உலக புத்தக தினத்தை ஒட்டி தமிழ் ஓசை நாளிதழில் வெளியான எனது ஒரு குறுந் தகவல் )

உலக புத்தக தினம் ஏப்பிரல் மாதம் இருபத்து மூன்றாம் தியதி உலகின் பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1995ம் ஆண்டு நடந்த யுனெஸ்கோவின் பொதுக்குழுவில் இந்த நாளை உலக புத்தக தினமாகக் கொண்டாடத் தீர்மானம் எடுக்கப்பட்டது. எழுத்தாளர்களையும், புத்தகங்களையும், பதிப்பாளர்களையும் கவுரவிக்கும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டிலுள்ள மிக்குவேல் டி ஸெர்வெண்டஸ் என்னும் எழுத்தாளரைக் கவுரவிக்கும் விதமாக கேட்டலோனியா விலுள்ள புத்தக விற்பனையாளர்கள் அனைவரும் சேர்ந்து அவருடைய மறைவு தினமான ஏப்பிரல் இருபத்து மூன்றாம் நாள் விழா ஒன்றைக் கொண்டாடியதே இந்த புத்தகதினத்தின் பூர்வீகம் எனக் கொள்ளலாம்.

இந்த நாளுக்குரிய இன்னொரு சிறப்பம்சம் வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும் ஏப்பிரல் இருபத்து மூன்று என்பதாகும்.

ஏப்பிரல் இருபத்து மூன்றாம் நாள் தூய ஜார்ஜ் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் மக்கள் தங்கள் நண்பர்களுக்கு பரிசுகள் அளிப்பது வழக்கம் அந்த நாளை புத்தக தினமாகவும் கொண்டாடியதால் பலர் புத்தகங்களைப் பரிசளிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்கள்.

கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிகழும் இந்த விழா நாளினால் கேட்டலோனியாவின் ஆண்டு புத்தக விற்பனையின் பாதி அந்த நாளில் மட்டுமே விற்பனையாகிறதாம்.

யூகே, அயர்லாந்து போன்ற நாடுகளில் இந்த நாளில் மாணவர்களுக்கு இலவச கூப்பன்கள் கொடுத்து புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கின்றனர். ஸ்பெயின் நாட்டில் மாணவர்களுக்கு அன்றைய தினம் இலவசமாய் புத்தகங்களை வழங்குகிறார்கள்.

புத்தகங்கள் தோழர்கள். மனதின் இறுக்கமான சூழலை இலகுவாக்கவோ, தகவல்களை தந்து செல்லவோ, மாலை நேர ஓய்வு நேரத்தை உயர்வாக்கவோ எதற்கும் உதவும் உற்ற நண்பனாக இருக்கும் புத்தகங்களுக்காக ஒரு தினம் இருப்பது ஆனந்தமானது.

புத்தகங்கள் படிக்கும்போது ஒரு உலகம் நமக்கு முன்னால் விரிகிறது. சரியான புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கும் போது ஒரு சரியான உலகத்தை நமக்கு முன்னால் விரிக்கிறோம். புத்தகங்கள் வழிகாட்டிகள். தொலைக்காட்சியில் தவம் கிடக்கும் தலைமுறையினரை இதுபோன்ற நாட்கள் புத்தகங்களின் பக்கம் திருப்பினால் அது ஒரு ஆரோக்கியமான மாறுதல் என்பதில் சந்தேகமில்லை.