முகேஷ் அம்பானியின் 400 கோடி மாளிகை !

india_mukesh-ambani-1.jpg

முகேஷ் அம்பானி ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். வீடு கட்ட ஆகும் செலவு அதிகமில்லை ஜெண்டில்மேன் நானூறு கோடி தான்.

நாற்பது மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் எல்லாம் முடிவுற்று 2008ம் ஆண்டு இறுதியில் வீட்டில் குடி போக முடிவெடுத்திருக்கிறாராம் அம்பானி.

ஒவ்வோர் மில்லி மீட்டரிலும் பணக்காரத் தனத்தின் உச்சம் மிளிரும் வண்ணம் இதை வடிவமைக்க அமெரிக்காவைச் சேர்ந்த பெர்கின்ஸ் மற்றும் வில்ஸ் இருவரும் வரைபடமிட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் இருக்கும் கட்டுமானப் பணி நிறுவனம் ஒன்று இந்த பணியை செய்து வருகிறது.

முதல் ஆறு மாடிகள் கார் பார்க்கிங் செய்வதற்காக மட்டும் தானாம். மேல் நான்கு மாடிகள் அம்பானி குடும்பத்தினர் தங்கவும், இடைப்பட்ட மாடிகள் எல்லாம் ஒவ்வொரு தேவைக்காக வடிவமைக்கப் பட்டுள்ளனவாம். அதாவது ஒரு மாடி சமையலறை, ஒரு மாடி லைபிரரி இப்படி…

மும்பையில் கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டிடம் இருக்கும் இடம் ஒரு சதுர அடி இருபதாயிரம் ரூபாயாம் !!!

அம்பானி திரைப்படம் பார்க்க உள்ளேயே தனியே தியேட்டரும், உள்ளேயே சில நீச்சல் குளங்களும், உடற்பயிற்சி நிலையங்களும் என இங்கே இல்லாத எதுவும் இல்லை எனுமளவுக்கு வசதிகளை கரன்சிகள் செய்து கொண்டிருக்கின்றன.

பச்சை நிறத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டிடம் இருக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

அமெரிக்க வரைபடத்துடன், சிங்கப்பூர் நிறுவனத்தால், இந்தியர்களின் பணத்தை வைத்து மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார் இந்தியத் தொழிலதிபர்.

ஐம்பது கோடி மக்கள் உணவுக்காக கையேந்தும் இந்தியாவில் இருந்து கொண்டு இதையெல்லாம் பார்த்து வேதனைப் படுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியாது என்னாலும், உங்களாலும் !