திருமணமான ஆண் திருமணமாகாத இன்னொரு பெண்ணிடம் …

uganda.jpg

திருமணமான ஆண் திருமணமாகாத இன்னொரு பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொள்ளலாம், ஆனால் திருமணமான பெண் வேறு எந்த ஆண்களுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. இப்படி ஒரு சட்டம் அமலில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா ? நம்பித்தான் ஆகவேண்டும். ஆனால் இந்தச் சட்டம் இந்தியாவில் அல்ல, உகாண்டாவில். ஆனால் இப்படி சமத்துவமற்ற முறையில் அமலில் இருந்த ஆண்களுக்கும், பெண்களுக்குமான சில சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

குழந்தையின் தந்தை இறக்கும் போது இன்னொருவரை தன் குழந்தையின் பாதுகாவலராக நியமித்தால் அந்தக் குழந்தையின் மீதான உரிமையை தாய் இழக்கிறாள்.

மனைவி இறந்தால் அவளுடைய சொத்து முழுதும் கணவனைச் சேர்கிறது. கணவன் இறந்தால் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு சொத்து மட்டுமே மனைவியைச் சேர்கிறது.

இவையெல்லாம் உகாண்டாவில் அமலில் இருக்கும் சட்டங்கள் என்பது சற்று வியப்புக்குரியவையே. மிகப்பெரிய போராட்டத்திற்கும், விவாதத்திற்கும் பிறகு தற்போது இந்த சட்டங்கள் எல்லாம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

குடும்ப வாழ்க்கையின் உன்னதம் புரிதலிலும் சமத்துவ உணர்விலும், ஆத்மார்த்த அன்பிலும் தான் அடங்கியிருக்கிறது. சமத்துவ சமுதாய சிந்தனையுடன் செயல்படும் அனைவருக்கும் இந்த தீர்ப்பு திருப்தியளித்திருக்கிறது.