மதுவும், மாதுவும், பிரச்சினைகளும்.

beer.jpg

வார இறுதிகளில் அதிகமாகக் குடித்துக் கும்மாளமிடும் வழக்கம் மேலை நாடுகளில் அதிகம். இப்படி அதிகமாக ஒரே நாளில் குடித்து உற்சாக வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உட்பட பல புற்று நோய்கள் வரும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

அதிகமாய்க் குடிக்கும் பழக்கம் இளம் வயதினரிடையே அதிகம் இருப்பதாகவும் இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமும் மிகவும் குறைந்த அளவு குடிப்பவர்களை விட ஒரே நாளில் அதிகமாய் குடிப்பவர்களுக்கு, அது பீர் ஆனாலும், வைன் ஆனாலும், அதிலுள்ள ஆல்கஹால் அளவை வைத்து புற்று நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

அதுவும் வார இறுதியில் 22 கோப்பை பானத்தை உள்ளே தள்ளும் பெண்களுக்கு 130 விழுக்காடு புற்று நோய் வரும் வாய்ப்புகள் அதிகரிப்பதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

இங்கிலாந்தில் கால்வாசி இளம் பெண்கள் வார இறுதிகளில் 21 கோப்பைக்கு அதிகமான பானத்தை அருந்துகிறார்கள் என்பது சில ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் மட்டும் இரண்டாயிரம் மார்பகப் புற்றுநோயாளிகள் ஆண்டுதோறும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அங்கே வாரம் 14 கோப்பை பானம் மட்டுமே அருந்துங்கள், அதுவும் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

மது அருந்துவது எந்தவிதத்திலும் உடலுக்கு நன்மை பயப்பதில்லை என்பதும், அதனால் விளையும் பின்விளைவுகள் நாள்தோறும் ஆய்வுகளில் பயமுறுத்தி வந்தாலும் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இந்தியாவில் சமீபத்திய கலாச்சார மாற்றங்களும், மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் தாக்கங்களும் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. மது அருந்துவோர் அதன் தீமைகளைக் கண்டு விலகி இருத்தலே நலம் பயக்கும்.

வழிபாடுகளில் யானை தேவையா ?

ele.jpg

சமீபகாலமாக நூற்றுக்கணக்கான செய்திகள் ‘மதம்’ பிடித்த யானையால் உயிரிழந்த மனிதர்கள் பற்றியும், சேதமடைந்த பொருட்களைப் பற்றியும் ( பெரும்பாலும் கேரளாவிலிருந்து) எனில் இந்த யானைகளை மத விழாக்களில் பயன்படுத்துவது தேவையா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

காட்டில் கம்பீரமாக உலவ வேண்டிய யானைகளைக் கொண்டு வந்து கோயில்களில் கட்டி வைப்பதால், சரியான உடற்பயிற்சி இல்லாமல் அவை அதிக எடை அடைந்து பல நோய்களுக்கு உள்ளாவதாக ஏற்கனவே மருத்துவக் குழுக்கள் எச்சரிக்கை விட்டிருக்கின்றன.

ஒரு அடிமை மனோ நிலையில் இருக்கின்ற இந்த வலிமையின் பிரம்மாண்டங்கள் ஏதேனும் ஒரு வாய்ப்பு வரும்போது எல்லாவற்றையும் துவம்சம் செய்து விடுகின்றன. கேரளாவில் யானைகளால் கொல்லப்பட்ட பாகன்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.

ஒவ்வோர் விலங்குக்கும் தனிப்பட்ட சில இயல்புகள் இருக்கின்றன. அவற்றை அவை இழப்பதில்லை. கோயில் வாசலில் காசு வாங்கும் யானைக்கும் ஒரு நாள் வெறி வரலாம், சும்மா படுத்துக் கிடக்கும் யானைக்கும் வெறி வரலாம். மரணத்தைக் கூடவே கூட்டிச் செல்லும் இந்த சமாச்சாரம் தேவையா என்பதை அறிவார்ந்தவர்கள் சற்று சிந்தித்துப் பார்த்தல் நலம்.

குருவாயூர் கோயிலில் யானையைக் கட்டித் தீனி போடவே சுமார் மூன்று கோடி ரூபாய் ஆண்டு தோறும் செலவிடுகிறார்களாம்.

காடுகளில் இருக்கும் யானைகள் கோயில்களில் இருப்பது மதம் சார்ந்த தேவையெனில் அவற்றை கோயில் வளாகங்களில் பாதுகாப்பாக கட்டி வைத்திருப்பது நல்லது. பொதுவிடங்களிலும், மக்கள் திரளும் விழாக்களிலும் அவை வரும்போது தான் தேவையற்ற அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.

கொதிக்கும் தார்ச்சாலைகளிலும், வெடிச் சத்தங்களின் இடையேயும், கலர் கலரான உடைகளிடையேயும், இரைச்சலிடையேயும் யானைகள் எப்போதும் குழந்தைகளைப் போல பாகனின் கையைப் பிடித்துக் கொண்டே செல்லவேண்டும் என யாரும் எதிர்பார்க்கவும் முடியாது.

யானகள் பாவம் சேட்டா… அதின விட்டேய்க்கு…

பருவம் அடைதலும், பருமன் அடைதலும் !

fat.jpg

பெண்கள் வயதுக்கு வரும் பருவமும் அவர்களுக்குப் பிறக்கபோகும் குழந்தையின் எடைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ஆராய்ச்சியில் தற்போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பதினோரு வயதுக்கு முன்பே பருவம் அடைந்துவிடும் பெண்களின் குழந்தைகள் வேகமான வளர்ச்சியும், மிக அதிகமான உடல் பருமனும் அடைந்து விடுவதாக தெரிய வந்துள்ளது. பதினைந்து வயதிற்குப் பிறகு பருவத்துக்கு வரும் பெண்களின் குழந்தைகள் சாதாரண வளர்ச்சியைக் கொண்டிருப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முதல் இரண்டு வருடங்கள் குழந்தைகள் எத்தகைய வளர்ச்சியுடன் இருப்பார்கள் என்பதை முழுமையாக இதுவே நிர்ணயிக்கிறது என்பது அவர்களின் தீர்க்கமான முடிவு. இத்தகைய குழந்தைகளும் விரைவிலேயே பருவம் அடைந்து விடுவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி எந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்து ஆரோக்கிய உணவு குறித்து கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இத்தகைய எடைஅதிகரிப்பைத் தவிர்க்க தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை கண்டிப்பாகப் பின்பற்றவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.