ஆப்பிளை விட நல்லது ஆப்பிள் ஜூஸ் !!!

apple.jpg

நிறைய ஆப்பிள் பழச்சாறு குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று யூ.கே வின் தேசிய இதய மற்றும் நுரையீரல் ஆராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்திருக்கிறது.

ஆப்பிள் உடல் நலத்திற்குப் பலவகைகளிலும் பயன்படும் என்று ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் தெரிவித்திருக்கின்றன. ஆனால் ஆப்பிள் ஜூஸ் குறித்து ஆராய்ச்சிகள் அதிகம் வந்ததில்லை.

இப்போதைய இந்த ஆராய்ச்சி குழந்தைகளுக்கு வரும் இழுப்பு நோயை ஆப்பிளை விட ஆப்பிள் ஜூஸ் அதிக வீரியத்துடன் தடுப்பதாகக் கூறி வியக்க வைத்திருக்கிறது.

தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நிறைய ஆப்பிள் பழம் உட்கொண்டால் அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வரும் வாய்ப்பு இல்லையாம்.

ஆப்பிள் பழத்தை உட்கொள்ளும் முன் அதன் மேல் மெழுகு பூசப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிப்பது மிக மிக அவசியம். பெரும்பாலான ஆப்பிள்கள் பளபளப்பாக இருக்க மெழுகு பூசப்பட்டிருக்கும், அவை உடலுக்கு மிக மிக ஆபத்தானவை. மெழுகை முழுமையாய் அகற்றிய பின்பே உட்கொள்ள வேண்டும்.

அதுபோல ஆப்பிள் பழத்தை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும். வெட்டி விட்டு சிறிது நேரம் பொறுத்து சாப்பிட்டால் ஆப்பிள் ஆரோக்கியக் கேடு வருவிக்கும்

தமிழர்கள் கோழைகளா

ltte.jpg

அமைதிப் பேச்சை மீண்டும் துவங்க இந்தியா இலங்கையை வற்புறுத்த வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் இராணுவத் தாக்குதல்கள் ஆரம்பமானதற்குப் பின் எழுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்து போயிருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஆனால் உண்மையில் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்பதும் அதில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களே என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மையே.

இலங்கைப் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கி இந்தியா உதவாமல் போனால் இலங்கை பாகிஸ்தான் போன்ற நாடுகளை அணுகப்போவதாக இலங்கை அறிவித்திருப்பதில் உள்ள மிரட்டல் தொனியை இந்திய அரசு உணராமல் இருக்க வாய்ப்பு இல்லை.

எனினும் காலம் காலமாக தமிழர்கள் படும் அவஸ்தைக்கு இந்திய அரசு முயற்சி எடுக்காமல் இருப்பதைக் குறை சொல்வதை விட எந்த ஆளும் கட்சியும் அதற்கென முழு முயற்சி எடுக்காதது வருத்தத்துக்குரியது.

தண்ணீர் தரமாட்டேன் என்பதற்குக் கூட பக்கத்து மாநிலங்கள் கட்சி வேறுபாட்டை மறந்து கைகோர்க்கும் போது தன் இனமே ஒடுக்கப்பட்டிருப்பதைக் கண்டும் தமிழக அரசு வாளாவிருப்பது வேதனைக்குரியது.

ஒருவேளை இலங்கைத் தீவில் தமிழர்களுக்குப் பதிலாக கன்னடர்களோ, மலையாளிகளோ இருந்திருந்தால் இந்த பிரச்சனை ஒரு தேசியப் பிரச்சனையாகி இதற்குமுன் எப்போதோ கவனிக்கப்பட்டிருக்கும்.

தமிழகத்தில் இன்னும் ஏதோ மைனாரிட்டிக் குரல்களே எழுந்து கொண்டிருக்கின்றன என்பது கவலைக்குரிய செய்தியில்லையா ?

விரல் கொடுக்கத் தான் கைகள் இல்லை – நமக்கு
குரல் கொடுக்கக் கூடவா திராணி இல்லை ?

ஆஸ்பிரின் புதிய தகவல்கள்

asprin.jpg

ஆஸ்பிரின் மாத்திரையை தாய்மைக் காலத்தில் தொடர்ந்து உட்கொண்டு வருவது பலவிதமான தாய்மைக்கால பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

கருவளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச் சத்துகள், ஆக்சிஜன் போன்றவை கிடைக்காமல் செய்யும் குருதி அடைப்புகளை இந்த ஆஸ்பிரின் மாத்திரை சரிசெய்து விடுவதாகவும் அவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

ஆஸ்பிரின் மாத்திரை குறைப்பிரசவம், பிரசவத்தில் ஏற்படும் சிக்கல் போன்ற பலவற்றுக்கும் தீர்வாக இருக்க முடியும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக முந்தைய பிரசவங்களில் பிரச்சனைகளைச் சந்தித்தவர்களுக்கும், வயது அதிகமானபின் கருவுற்றிருப்பவர்களுக்கு இந்த மாத்திரை அதிக பலன் தருமாம்.

ஆஸ்பிரின் மாத்திரையைப் பற்றி இத்தனை நல்ல செய்திகளை அவர்கள் சொன்னாலும் எக்காரணம் கொண்டும் மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் தாய்மைக் காலத்தில் எந்த மருந்தையும் உபயோகப்படுத்தக் கூடாது எனும் எச்சரிக்கையையும் அவர்கள் தருகிறார்கள்.

சிவாஜி டிரைலர் !!! பாருங்க

சிவாஜி மேட்டர் படிச்சாச்சு, புகைப்படங்கள் பார்த்தாச்சு, இதோ இப்போ சிவாஜி படத்தின் டிரைலரும் வெளியாகியுள்ளது ! பாருங்கள். .. படம் தியேட்டருக்கு வருமோ பர்மா பஜாருக்கு வருமோ !

http://www.behindwoods.com/tamil-movie-news/may-07-05/30-05-07-sivaji-trailer.html

சிவாஜி : The Boss , இது புதுசு !

விவேக் :- ஊத்திக் கொடுப்பவன் தான் உண்மையான நண்பன்
மணி வண்ணன் :- அப்போ ஊறுகா கொடுக்கிறவன் உருப்படாதவனா ?
ரஜினி :- அப்டி கேளுங்க…

sivaji01.jpg

விவேக் :- ஹே..ஹே.. அந்த பொண்ணு என்னைப் பாக்குதா உங்களப் பாக்குதா ?
ரஜினி :- ஊருக்கே தெரிஞ்ச கேள்வியை என்கிட்டே கேக்கறே !! அது பிரசோதகம்பா.. !

rajinikanthvivek01.jpg

ரஜினி :- நீ சமச்சதை ஒரு நாள் நீயே தின்னு.. அப்போ தான் தெரியும் நான் பண்ற தியாகம். என்ன..என்னா ?
ஸ்ரேயா :- கொஞ்சம் தள்ளி நில்லுங்க. இவ்ளோ குளோசப்ல உங்கள பாக்கறதே ஒரு தியாகம் தான்.

rajinikanthshreya02_4.jpg

ஸ்ரேயா :- நான் எப்படி இருக்கேன் சொல்லுங்களேன்..
சிவாஜி :- ஹா..ஹா.. ஒரு லாரி பெயிண்ட் அடிச்சா கிழவன் கூட அழகாயிடுவான். உனக்கென்னாஆஆ ?

rajinikanthshreya01_5.jpg

ரஜினி :- ஷங்கர்.. இது ஓ.கே வா ?

rajinikanth05_4.jpg

ரஜினி :- இன்னாம்மா கண்ணு. போன்ல பேசினா சத்தம் வரும். நான் வந்து நேர்லே பேசினா ரத்தம் வரும், புரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ போனை விட்டு ஒதுங்கிக்கோ !

rajinikanth03_4.jpg

ரஜினி :- அப்போ நான் வெச்ச கருப்பே. இப்போ நான் போட்டுருக்கிறது மட்டும் கருப்பே..

rajinikanth02_5.jpg

ரஜினி :- உனக்கின்னா சம்பளம். உன் சம்பளத்துக்கு நீ நடிச்சது போதும் கிளம்பு !

rajinikanth01_5.jpg

திருமண மண்டபங்களின் விதி மீறல்

plastic.jpg

நமது நாட்டில் விதி மீறல்களுக்குப் பஞ்சமே இல்லை. பெரும்பாலான விதி மீறல்கள் அரசு அதிகாரிகளின் ஆசீர்வாதத்தினாலேயே நடக்கிறது என்பதால் அவை ‘விதி’ என்று ஒத்துக் கொள்கின்றனர் மக்கள்.

நேற்று ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அந்த மண்டப வாசலில் அரசு உத்தரவு என்று பல செய்திகளைக் குறிப்பிட்டிருந்தார்கள். அதில் ஒன்று அரசு உத்தரவுப்படி இந்த மண்டபத்தில் பிளாஸ்டிக் கப், விரிப்பு எதுவுமே உபயோகப்படுத்தப்பட மாட்டாது.

ஆஹா என வியந்து கொண்டே கீழே பார்த்தால் நான் ஒரு பிளாஸ்டிக் காட்டுக்குள் தான் நிற்கிறேன்.

உள்ளே பந்தியில் எங்கும் பிளாஸ்டிக் மயம். இத்தனைக்கும் அந்த திருமண மண்டபம் சென்னையில் முக்கியமான இடத்தில் தான் இருக்கிறது.

மண்டப அலுவலகத்தில் இருந்த ஒருவரிடம் இது குறித்துக் கேட்டேன். ‘அரசு ஆணைன்னு எழுதி வெச்சிருக்கீங்க ஆனா எங்கும் பிளாஸ்டிக் மயமா இருக்கே’ என்று.

‘நாங்க வாடகைக்கு விட்டிடுவோம். மத்ததெல்லாம் வாடகைக்கு எடுக்கிறவங்களோட பொறுப்பு. ‘ என்று ஒரு பொறுப்பற்ற பதில் தான் வந்தது. அட.. பதிலாவது வந்ததே என்று சந்தோசத்தில் வெளியே வந்து திருமணம் நடத்துபவர்களில் ஒருவரிடம் சொன்னேன்.

‘பிளாஸ்டிக் பயன்படுத்தறது சட்டப்படி குற்றம். நீங்க ஏன் கவலைப்படாம பயன்படுத்தறீங்க ?’

‘என்ன ? பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாதா ?’ என்று அவர் ஆச்சரியமும், வியப்பும் கலந்த குரலில் சொல்லியபோது அவருடைய தலைக்கு மேல் பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருந்தது அறிவுப்புப் பலகை.

வாடகைக்கு விடுபவர்கள், வாடகைக்கு எடுப்பவர்கள், அரசு என ஒட்டுமொத்த பொறுப்பின்மையினால் சென்னை தினம் தோறும் மாசு அடைந்து கொண்டே இருக்கிறது !!

கலைஞர் டிவி, சிவாஜி மற்றும் சரத்குமார் !

ra.jpg

கலைஞர் தொலைக்காட்சி ஏதும் புதுமையாய் இருக்க வாய்ப்பில்லை என்பதை சிவாஜி படத்தின் உரிமையை இமாலய விலை கொடுத்து அவர்கள் வாங்கியிருப்பதிலிருந்தே தெரிகிறது.

ஏற்கனவே 2500 படங்களின் உரிமையை வாங்கி வைத்துக் கொண்டு வாரம் தோறும் ‘உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக’ என்று வெத்துப் படங்களை காட்டிக்கொண்டிருக்கும் சன் தொலைக்காட்சிக்குப் போட்டியாக இனிமேல் கலைஞரும் ‘பிரபஞ்சத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக’ என்று அறிவிக்கும்.

இத்தனை ஆயிரம் படங்களுக்கான உரிமையை வாங்கி வைத்திருக்கும் சன் டிவியுடன் கலைஞர் டி.வி போட்டியிட முடியுமா ? கலைஞர் தொலைக்காட்சி தனித்து இயங்குமா ? இல்லை மற்ற தொலைக்காட்சிகளிலிருந்து பிரபலமாய் இருக்கும் நிகழ்ச்சிகளைக் காப்பியடிக்குமா ?

ராஜ் டிவி நிர்வாக இயக்குனர் திமுகவுக்கு தாவியதிலிருந்து ராஜ் தொலைக்காட்சி திமுக(டைக்கண்) பார்வை பட்ட அதிகார பூர்வ தொலைக்காட்சியாகி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

எது எப்படியோ, சிவாஜி பட உரிமையை அவர்கள் வாங்கியிருப்பதனால் கலைஞர் தொலைக்காட்சிக்கு ஒரு நல்ல விளம்பரம் கிடைக்கும். ( நாமளும் வேற வேலை வெட்டி இல்லாம அதைப்பற்றியே எழுதிட்டு இருக்கோமே )

கடைசியா கிடைச்ச தகவல் படி… ராதிகா கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு மிகப்பெரிய பதவியை வகிக்கப் போகிறாராம். சரத் குமாரும் மாறன் குடும்பத்தினரை விட்டு கலைஞர் விலகினால் கலைஞரிடம் சரணடைய விரும்புகிறாராம்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !

சன் டிவி, கலைஞர் டிவி, அண்ணா அறிவாலயம் !

tv3.jpg

எல்லோரும் கணித்தபடி திமுக வின் கொள்கைப் பரப்புச் சானல் கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பமாகிறது. அதற்காக அண்ணா அறிவாலயத்திலேயே கலைஞர் தொலைக்காட்சிக்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இனிமேல் சன் தொலைக்காட்சி அறிவாலயத்தை விட்டு வெளியேறும் என எதிர்பார்க்கப் படுகிறது. சரத் ரெட்டி என்பவரை நிர்வாக இயக்குனராகக் கொண்டு கலைஞர் டி வி செயல்படும் என்கிறார்கள். ( தமிழ்த் தலைவருக்கு தமிழகத்தில் யாரும் கிடைக்கவில்லையோ ? இல்லை நம்பிக்கையில்லையா ? )

சன் தொலைக்காட்சியிலிருந்து பல நிகழ்ச்சிகள் கலைஞர் தொலைக்காட்சிக்கு இடம் பெயரும் வாய்ப்பு உண்டு. எனினும் சன் தொலைக்காட்சிக்கு பெருமளவில் பாதிப்பு ஏதும் வர வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

சன் டிவியே புதுமை ஏதும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காப்பியடிக்கும் அவலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது எனில் இங்கிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு என்ன இறக்குமதியாகப் போகிறதோ.

எப்படியோ தனிநபர் துதிபாடும் தொலைக்காட்சியாக கலைஞர் டிவி இல்லாமல் பா.ம.க வின் மக்கள் தொலைக்காட்சி போல புதுமையாய் இருக்கும் பட்சத்தில் வரவேற்போம். இல்லையேல் ஜெயா தொலைக்காட்சி போல நகைச்சுவைக்குப் பஞ்சம் வரும்போது செய்திகள் பார்ப்போம் 🙂

முதுமையும் இளமையாகலாம் ! புதிய தகவல்

26.jpg

உடற்பயிற்சி உடலை வலுவாக்குவது மட்டுமல்ல இளமையாகவும் மாற்றும் என்னும் புதிய கண்டுபிடிப்பை கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் நிகழ்ந்தியுள்ளனர்.

உடற்பயிற்சி உடலை வலுவாக்கும் என்பதும் நோயற்ற வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் என்பதும் மருத்துவ உலகம் ஏற்கனவே ஏற்றுக் கொண்ட உண்மைகள். ஆனால் முதுமை நிலைக்கு வந்தபின் உடற்பயிற்சிகள் உடலின் திசுக்களை இளமையாக்கும் எனும் தகவல் அவர்களுக்கே உற்சாகமூட்டுவதாக கனடா மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த சோதனையின் பாகமாக இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கு வாரம் இரண்டு முறை உடற்பயிற்சி நிலையத்தில் வைத்து ஒரு மணி நேர உடற்பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக் காலத்தின் முடிவில் முதியவர்களின் தோல் திசுக்களைப் பரிசோதித்துப் பார்த்தபோது அவை இளைஞர்களின் திசுக்களுக்குரிய குணாதிசயங்களுக்கு மாறியிருந்தது தெரிய வந்தது.

முதுமையில் திசுக்கள் தளர்ந்தபின் அவை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாது எனும் சிந்தனையையே இந்த சோதனை மாற்றியிருக்கிறது. சரியான உடற்பயிற்சியைச் செய்து வந்தால் உடலின் இளைமையைப் பாதுகாக்கலாம் எனும் நம்பிக்கையையும் இந்த சோதனை தந்திருக்கிறது. இந்தச் சோதனையில் ஈடுபட்ட முதியவர்கள் 65 வயதிற்கு மேற்பட்டோர் என்பது குறிப்பிடத் தக்கது.

வயதாகிவிட்டது இனிமேல் உடற்பயிற்சி எதற்கு என்று இனிமேல் முதியவர்கள் நினைக்கத் தேவையில்லை. எந்த வயதிலும் உடற்பயிற்சி செய்து இளமையாகலாம். உடற்பயிற்சிக்காக அலையவும் தேவையில்லை வீட்டிலேயே செய்யலாம் என்றெல்லாம் அறிவுரை வழங்குகின்றனர் கனடியன் ஆராய்ச்சியாளர்கள்

எதை எப்படிச் செய்ய வேண்டும் ?

mind.jpg

உடலிலுள்ள தசைகளெல்லாம் எப்படி செயல்படுகின்றன என்பதைக் கவனித்துக் கொண்டே உடற்பயிற்சி செய்தால் உடல் அதிக பலனை அடையும் என்னும் ஆராய்ச்சியை இலண்டன் ஹல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஏதேனும் ஒரு பணியைச் செய்யும் போது நம்முடைய கவனம் எதில் இருக்கிறது என்பதற்கேற்ப உடலில் மாற்றங்கள் நிகழ்கின்றன என்று மனம் குறித்த ஒரு ஆச்சரியத் தகவலை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதாவது பளுதூக்கும்போது ஒருவர் தன்னுடைய உடலின் மீதும், தசைகளின் மீதும் கவனம் வைத்துத் தூக்கினால் உடலில் அதிக வலு சேர்வதாகவும், தசைகள் மீது கவனம் செலுத்தாமல் பளுவைத் தூக்குவதாக மனதை ஒருமுகப்படுத்தி பளுவைத் தூக்கும் போது தசைகள் குறைந்த அளவே வலு பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்த சோதனையின் இன்னொரு பார்வை தான் சுவாரஸ்யமானது. அதாவது பளுதூக்குகையில் மனதை ஒருமுகப்படுத்தித் தூக்கும்போது உடல் உழைப்பு அதிகம் இல்லாமலேயே அந்த வேலை சாத்தியப்படுகிறது என்பது தான் அந்த உண்மை.

இதன்மூலம் அதிக பலம் இல்லாதவர்கள் கூட மன திடம் இருந்தால் பெரிய செயல்களை மனதின் மூலமே செய்ய முடியும் என்னும் கருத்து வலுவடைந்திருக்கிறது.

ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்கள் இலக்கு கோட்டை மட்டுமே மனதில் நிறுத்தி அதை நோக்கி ஓடும்போது வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும், தங்கள் கால்களில் கவனம் செலுத்தி ஓடும்போது முந்தைய உடலுழைப்பும் முயற்சியும் இருந்தால் கூட தாமதமாய் சென்று சேர்வதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உடற்பயிற்சி செய்யும் போது உடலில் கவனத்தை வைக்கவேண்டும் என்றும், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடும்போது இலக்கை கவனத்தில் வைக்கவேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மனதை ஒருமுகப்படுத்தி செயல்களைச் செய்வது இந்திய இலக்கியங்கள் பலவற்றிலும் காணப்படுகின்றன என்றாலும் அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படிருப்பது புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என நம்பச் செய்கிறது. மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று சும்மாவா சொன்னார்கள் ?