இதெல்லாம் ஒரு பொழப்பா … த்தூ…

man.jpg

எனது நண்பன் ஒருவன் அலுவல் அழுத்தம் காரணமாக குடும்பத்துடன் இரண்டு வார விடுப்பில் டெல்லி பயணமானான் கடந்த வாரம். வீட்டில் அவனுடைய எண்பத்து இரண்டு வயதான தந்தை மட்டுமே இருந்தார்.

நண்பனுக்கு தந்தை மீது அளவு கடந்த பாசம், நல்ல கைப்பேசி, தங்க சங்கிலி என செலவு செய்து பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்.

டெல்லி சென்ற பின்பும் அவ்வப்போது தந்தையுடன் தொலைபேசிக் கொண்டிருந்தான். ஒரு நாள் திடீரென தந்தையைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கைப்பேசி அணைக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வந்து கொண்டிருந்ததால் சற்று பதட்டமாகி தன்னுடைய அண்ணனிடம் தொலை பேசியிருக்கிறார்.

அண்ணன், தந்தையின் வீட்டில் சென்று பார்க்க, வீடு பூட்டப்பட்டிருந்தது. அருகில் எங்கும் விசாரித்துப் பார்த்து, தெரிந்தவர்களிடம் தொலைபேசி, எங்கும் அலைந்து திரிந்து தேடினார்கள். எங்கும் அவர் இல்லை. அதிர்ச்சி !

மறுநாள் காலையில் முதல் வேலையாக காவல் நிலையத்தில் சென்று வழக்குப் பதிவு செய்தார்கள். வழக்கம் போலவே காவல்துறை அலட்சியமாக ‘ முந்தாநேத்து ஒரு ஆக்சிடண்ட் ல ஒரு பாடி கிடந்துது எதுக்கும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று பாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

பதட்டமடைந்த நண்பரின் அண்ணன் உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்று சில பல சிக்கல்களுக்குப் பின் பிணக்கிடங்கைச் சென்று பார்க்க அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ! அவருடைய தந்தை தான் அது !

அதன் பின் நடந்த நிகழ்வுகள் அதிர்ச்சியும், வேதனையும் கலந்தவை. எப்படி விபத்து நடந்தது ? எப்போது ? எங்கே என்றெல்லாம் ஒரு பொறுப்பான பதிலும் வரவில்லை.

கையிலிருந்த கைப்பேசியில் எல்லா தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டிருந்தும் எந்த எண்ணுக்கும் யாரும் தொடர்பு கொள்ளவும் இல்லை. விசாரித்தால், கைப்பேசி கிடைக்கவில்லை என்ற பதில் !

கையில், கழுத்தில் கிடந்த தங்கம் எல்லாம் மாயமாகி விட்டிருக்கிறது. அதுவாவது பரவாயில்லை பணம் தின்னிக் கழுகுகள் எடுத்துக் கொள்ளட்டும், ஆனால் கைப்பேசியிலிருந்த எண்களுக்காவது தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம். பர்சில் இருந்த காகிதங்களிலிருந்தாவது தொடர்பு முகவரி எடுத்திருக்கலாம். ஆனால் எல்லாமே மாயமாகி விட்டிருக்கிறதே !

விபத்து குறித்து விசாரித்தால், படிக்கட்டில் பயணம் செய்து வழுக்கி விழுந்ததாகச் சொல்கிறார்கள். அவர் எப்போதுமே கூட்டமான பேருந்தில் ஏறுவதில்லை. பெரும்பாலும் ஆட்டோவையே பயன்படுத்துகிறார். ஓரமாய் நின்ற அவரை பேருந்து இடித்துத் தள்ளியிருக்க வேண்டும், அதில் அவருக்கு மரணம் நேர்ந்திருக்க வேண்டும் ஆனால் இவையெல்லாம் மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன

வயதானவர் என்றால் அவருடைய உயிருக்கு மரியாதை இல்லையா ? ஒரு விபத்தில் அடிபட்டு மரணமடைந்த மனிதருடைய வீட்டில் தகவல் சொல்லாமல் கைப்பேசியைத் திருடிக் கொள்வது போன்ற மனிதாபிமானமற்ற கொடூரச் செயல்களினால் மனித குலம் சாதிக்கப் போவது என்ன ?

எரியும் வீட்டில் பிடுங்கும் வரை லாபம் என்னும் கணக்கில் சுனாமிப் பிணங்களில் சங்கிலி சுருட்டும் கொடூரம் நிகழ்ந்த நாட்டில் , விபத்தில் உயிரிழந்தவரின் நகைகளை அபகரிப்பதற்கும் அரசு மருத்துவ மனைகளோ, அல்லது எந்த தனிநபரோ காரணமாய் இருப்பதை அறிகையில் மனம் பதறுகிறது.

என்னிடம் கைப்பேசி இருக்கிறது, பர்ஸ் இருக்கிறது வழியில் விபத்து நடந்தால் வீட்டுக்குத் தகவல் தெரியும் எனும் நம்பிக்கையில் இப்போது மண் விழுந்திருக்கிறது. இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு ஓடும் மனிதாபிமானத்தின் துளி வெளிச்சம் கூட இல்லாத மனங்களுடன் அலையும் மனிதர்கள் வாழும் தேசத்தில் வாழ்கிறோம் என்னும் எண்ணமே மனதைப் பிசைகிறது.

முல்லைக்குத் தேர்கொடுத்தான் என்று இலக்கியம் பேசிய கதைகள் எல்லாம் நகைச்சுவைக் கதைகள் போல உருமாற்றம் அடைந்திருக்கின்றன. இத்தகைய ஒரு வாழ்க்கைச் சூழலில் வாழ்வதற்காக வேதனைப்படுவதை விட என்ன செய்வதென்று தெரியவில்லை.

மரணங்கள் வலி மிகுந்தவை,
மரணம் சொல்லும் பாடங்களோ கொடூரமானவை.

அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்.