சன் டிவியில் அதிரடி மாற்றங்கள் !

maran.jpg

தினகரன் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் தமிழகத்தில் இத்தகைய பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. தயாநிதி மாறன் மீது அடுக்கடுக்காய் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை ஊடகங்கள் மௌனம் சாதித்ததே ஒரு ஆச்சரியம் தான்.

சன் தொலைக்காட்சியின் செய்திகளில் தடாலடியாய் பல மாற்றங்கள் தெரிகின்றன. கலைஞரின் பேட்டி என்றால் அதை முதல் செய்தியாகப் போட்டுக் கொண்டிருந்த சன் தொலைக்காட்சியில் இப்போது அது கடைசிச் செய்தியாக மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

திமுக வோடு இணைந்தே பயணித்தாலும் சன் தொலைக்காட்சி கொஞ்சம் நடுநிலைமை வகித்தது எனக் கொள்ளலாம். ஜெயா தொலைக்காட்சியுடன் ஒப்பிடுகையில் சன் தொலைக்காட்சியின் செய்திகள் நகைச்சுவை இல்லாமல் இருந்தது என்பது உண்மை.

வீடு இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது ஜெயா தொலைக்காட்சியைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். எக்ஸ்ரே அது இது என்று அங்கே ஒரே அமர்க்களப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும் கொள்ளை அடிக்கிறார், சமூக அக்கறையின்றி செயல்படுகிறார் என்றெல்லாம் ராமதாஸ் உட்பட கூட்டணிக் கட்சியினரால் விமர்சிக்கப்பட்ட தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டிருப்பது கட்சியில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நம்பச் செய்கிறது.

தொழில் நுட்பம், முன்னேற்றம் எனும் பார்வையில் தயாநிதிமாறனின் அரசியல் வியூகம் தமிழகத்துக்கு நல்ல லாபமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. தனியார்களிடம் நிரம்ப வேண்டிய பணத்தை அரசு நிறுவனங்களுக்குப் பாய்ச்சியதிலும் அவர் பங்கு கணிசமானது. இந்தியா முழுவதும் ரோமிங் இல்லாமல் பேசலாம் எனும் திட்டத்தை அவர் அமுல்படுத்தும் நிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

தினகரன் திமுககரன் ஆக இருப்பதை விட ஒரு நடுநிலை பத்திரிகையாய் இருந்தால் அது தமிழகத்துக்குத் தான் நன்மை பயக்கும்.

திருநீறு விலை ,குறைப்பு என்றும், நாய் பிஸ்கட் விலை குறைப்பு என்று நக்கலடித்தே பிழைப்பை ஓட்டும் நிலையில் இன்று பத்திரிகைத் துறை இருப்பது மக்களுக்கு ஒரு வகையில் சலிப்பே.

திமுக தலைமைக்கு எதிராகச் செயல்படப் போவதில்லை என்று தயாநிதி மாறன் அறிவித்திருக்கிறார். மீண்டும் சமாதானமாகி மந்திரி பதவி தந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். எனினும் விரைவில் குடும்பச் சண்டை, குடுமிப் பிடி சண்டை எல்லாம் ஓய்ந்து தயாநிதி மாறன் போன்ற திறமையானவர்கள் மீண்டும் பணியில் அமர்ந்தால் நலம்.

சன் தொலைக்காட்சி திமுக வை விட்டு விலகும் நிலையில் ராஜ் தொலைக்காட்சியை திமுக வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாக கேள்வி. !! காலையிலேயே சன் தொலைக்காட்சியின் பங்குகளில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.

மடிக்கணினியை மடியில வெக்காதீங்க !

lap.jpg

மடிக்கணிணியை மடியில வைக்காதீர்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்வது சற்று நகைச்சுவை தான். என்ன செய்வது ? அப்படி வைக்கக் கூடாதாம் ! அதிலும் குறிப்பா பசங்க… ம்..ஹூம்… !! வயர்லெஸ் இணைய வசதியுள்ள மடிக்கணினிகளை மடியில் வைத்துப் பயன்படுத்துவது உடல்நலத்திற்குத் தீங்கானது என்று ஆய்வு முடிவுகள் எல்லாம் அடித்துச் சொல்கின்றன.

குறிப்பாக சிறு வயதினர் மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மடிக்கணிணியால் மடி அதிக வெப்பத்துக்கு உள்ளாகும் என்றும் அதனால் உயிரணுப்பிரச்சனை எழும் என்பதும் அவர்களுடைய ஆய்வு முடிவு.

கைப்பேசி, வயர்லெஸ் மடிக்கணினி போன்ற அனைத்துமே புற ஊதாக்கதிர்களை வெளியிடுவதால் அவற்றைப் பயன்படுத்துவதில் சில உடல் பிரச்சனைகள் எழும் வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் ஒட்டுமொத்தமாக தெரிவிக்கின்றனர். எனினும், மடிக்கணிணியைப் பயன்படுத்துவது அதிக ஆபத்தாம். ( மொத்தத்துல அந்த இடத்துல சூடு ரொம்ப ஆகாதாம் )

செல்போனை காதுல வெக்காதீங்க, மடிக்கணினியை மடியில வெக்காதீங்க… ம்ம்.. இனிமே என்னென்ன வரப்போகுதோ.. சரி.. இதுக்குப் பரிகாரமா அவங்க என்ன சொல்றாங்கன்னா, (வயர்லஸ் இணைப்பு கொண்ட) மடிக்கணினிகளை இருபது செண்டீ மீட்டர் தொலைவில் வைத்துப் பயன்படுத்தினா பிரச்சனை இல்லையாம்.