எனக்கு மட்டும் ஏன் இப்படி ?

pray.jpg

ஆர்தர் ஆஷேக்கு இருதய அறுவை சிகிச்சை ! டென்னிஸ் உலகின் சூப்பர் ஸ்டார். ஏராளமான போட்டிகளில் வெற்றிக் கோப்பைகளைத் தட்டிச் சென்றவர். விம்பில்டன் வெற்றிக் கோப்பையை முத்தமிட்டவர். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது அவருடைய ரசிகர்களெல்லாம் பரபரப்புடனும், துடிக்கும் மனதுடனும் காத்திருந்தார்கள். சிறந்த மருத்துவக் குழு அறுவை சிகிச்சையை நடத்தியது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. ஆஷே ஆனந்தமடைந்தார். அவருடைய ரசிகர்கள் உற்சாகக் கூக்குரல் எழுப்பினார்கள். ஆனால் அவர்கள் அறிந்திருக்கவில்லை அவருடைய அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட இரத்தத்தில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் இருந்தன என்பதை !

நாட்கள் நகர்ந்தன. ஆஷேயின் உடலில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. இரத்தப் பரிசோதனை செய்த ஆஷே அதிர்ச்சியின் உச்சத்துக்கு எறியப்பட்டார். அவருக்கு எயிட்ஸ் நோய். உயிர்காப்பதற்காகச் செய்த அறுவை சிகிச்சை அவருக்கு வழங்கியதோ உயிர் கொல்லி நோய்.

மரணத்தின் வாசல் கதவுகள் தனக்கு முன்பாக அகலத் திறந்து கிடப்பதை ஆஷே கண்டார். அவருடைய மனதுக்குள் கண்ணீர் அணை உடைத்துப் பாய்ந்தது. இதய நோயாளியாய் இறந்தால் சமூகம் வித்தியாசமாய்ப் பார்க்காது. ஆனால் எயிட்ஸ் நோயினால் இறந்தாலோ தன்னுடைய வாழ்க்கையை அல்லவா வேடிக்கை பார்க்கும் ? பத்திரிகைகள் ஆஷேயின் நோயைக் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பின. ஆஷே ஆத்திரப்படவில்லை. நம்பியவர்கள் பலர் அருவருத்தார்கள் ஆஷே தற்கொலை செய்து கொள்ளவில்லை.

டென்னிஸ் விளையாட்டில் எத்தனையோ இளைய தலைமுறை வீரர்களுக்கு வழிகாட்டியாகவும், உந்துதலாகவும் இருந்த வீரருக்கு எயிட்ஸ் நோய் என்றதும் அவருக்கு முன்னால் விரிந்து கிடந்த பூஞ்சோலை திடீரென தீப்பிடித்தத் தோட்டம் போல கருகிப் போய்விட்டது. ஆனாலும் அவர் தன்னுடைய நேர் சிந்தனைகளையும், மன தைரியத்தையும், மகிழ்ச்சியையும் இழந்து விடவில்லை.

உண்மை அறிந்த பத்திரிகை நண்பர் ஒருவர் ஆஷேயிடம் கேட்டார்.

‘உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி ?’

ஆஷே புன்னகையுடன் சொன்னார்.

‘எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று நான் இப்போது கேட்க மாட்டேன். அப்படிக் கேட்டால் நான் மேலும் பல எனக்கு மட்டும் ஏன் இப்படி ?களைக் கேட்க வேண்டும்..’

‘நீங்கள் சொல்ல வருவது எனக்குப் புரியவில்லை’ பத்திரிகை நண்பர் நெற்றி சுருக்கினார்.

‘சோகமான செய்திகள் வரும்போது எனக்கு ஏன் இப்படி ? என்று கேட்பது நியாயம் என்றால் மகிழ்ச்சியான தருணங்கள் வரும்போதும் அதே கேள்வியை எழுப்பவேண்டும் அல்லவா ? ஆனால் நான் எழுப்பவில்லையே ! என்னுடன் விளையாடிய எத்தனையோ பேரை வெற்றி கொண்டேன். அப்போது -எனக்கு மட்டும் ஏன் இப்படி ? -என்று நான் கேள்வி எழுப்பவில்லை ! எனக்கு அழகான மனைவி வாய்த்த போது நான் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. அழகான குழந்தை பிறந்த போது இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. இன்னும் எத்தனையோ நல்ல வரங்கள் எனக்கு வழங்கப்பட்டபோது நான் கேட்காத எனக்கு மட்டும் ஏன் இப்படி என்னும் கேள்வியை நான் இப்போதும் கேட்க மாட்டேன்’ ஆஷே சொல்ல பத்திரிகை நண்பர் ஆச்சரியப்பட்டுப் போனார்.

இந்த வார்த்தைகள் நம் ஒவ்வொருவர் மனதிலும் கல்வெட்டாய் பொறித்து வைக்க வேண்டிய வார்த்தைகள். நம்முடைய வாழ்க்கையில் நாம் எத்தனையோ நல்ல வரங்களைப் பெற்றிருக்கிறோம். எத்தனையோ நல்ல வளங்களைப் பெற்றிருக்கிறோம். நல்ல நண்பர்கள், நல்ல உணவு, நல்ல உடை, நல்ல பெற்றோர், நல்ல உறைவிடம் இவையனைத்துமோ, இவற்றில பலவோ நாம் பெற்றிருக்கிறோம்.

உலக செல்வங்களை விடப் பெரிய ஒரு வரம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது அல்லவா ?.

சோதனைகள், வருத்தங்கள் வருகையில், இறைவனோடு ஒன்றித்திருக்கிறோம் என்பதை நினைப்போம். நிலைவாழ்வுக்கான ஆயத்தங்களை நில வாழ்வில் செய்து இறைவனின் இன்புற்றிருப்போம்.

தடுமாற்றங்கள் நிகழ்வதே வாழ்வின் இயல்பு.
தடம்மாறாமல் நடப்பதே மனிதனின் மாண்பு

சிந்தனைகள் பகுதியில் என்னைக் கவர்ந்த சில சிந்தனைகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன். டென்ஷன் ஆயிடாதீங்க 🙂

சிவாஜியை எங்கே பார்க்கலாம் ?

sivaji-02.jpg

சென்னையில் எந்தெந்த திரையரங்குகளில் சிவாஜி படம் வெளியாகப் போகிறது என்று அறிவித்திருக்கிறார்கள். சென்னை வினியோக உரிமையை வாங்கியிருக்கும் அபிராமி ராமநாதன் தனது திரையரங்குகளான அன்னை அபிராமி, பால அபிராமி, சக்தி அபிராமி உட்பட அபிராமி காம்ப்ளக்ஸ்ல் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் படத்தை வெளியிடுகிறார்.

உதயம் காம்ப்ளக்ஸ் ல் உள்ள நான்கு திரையரங்குகளிலும், ஆல்பர்ட் காம்ப்ளக்ஸ் ல் உள்ள இரண்டு திரையரங்குகளிலும், சாந்தி திரையரங்கிலுள்ள இரண்டு திரையரங்குகளிலும், ஜெயபிரதா காம்ப்ளக்ஸ் இரண்டு திரையரங்குகளையும், சத்யம் காம்ப்ளக்ஸ் ல் இரண்டு திரையரங்குகளிலும் , இனோக்ஸ் மல்டிபிளக்ஸ்ல் உள்ள மூன்று திரையரங்குகளிலும்.. என சென்னையில் மட்டுமே சுமார் இருபது இடங்களில் சிவாஜி வரப்போகிறாராம்.

ம்ம்… சென்னை பர்மா பஜாரில் சிவாஜி டிவிடி வெளியாகும் முன்பே சென்னையிலுள்ள மக்கள் எல்லாம் திரையரங்குகளில் படத்தைப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறார்கள் போல.

ம்ம்.. இதெல்லாம் உலக மகா செய்தி போல போட்டுட்டிருக்கியே உனக்கு வேற வேலையே இல்லையா என்று யோசிப்பவர்கள் லத்தி எடுக்கும் முன் விடு ஜூட்…