பாலியல் கல்வி : சில சிந்தனைகள்

42-18032440.jpg

‘பாலியல் கல்வி நாட்டின் நலனுக்கு எதிரானது’ என்னும் உலக மகா நகைச்சுவையை இல கணேசன் கூறியிருக்கிறார். இதனால் பா.ஜ.க பாலியல் கல்வியை எதிர்க்கும் என்று அவர் ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.

நர்சம்மாவை முத்தமிட்ட ரேணுகாச்சாரிக்கு கூட இதை எதிர்ப்பாரா தெரியவில்லை. பாலியல் கல்வி நாட்டின் நலனுக்கு எதிரானது என்பதை எந்தக் கண்ணோட்டத்தில் இல சொல்கிறார் என்பதும் தெரியவில்லை.

எந்த ஒரு விஷயத்தைக் குறித்தும் சரியான நேரத்தில் சரியான விழிப்புணர்வு மக்களுக்கு இருக்கும் பட்சத்தில் அந்தந்த இடங்களில் தெளிவாக மக்கள் நடந்து கொள்ள முடியும் என்பது அனைவருமே ஒத்துக் கொள்ளக் கூடிய ஒன்று.

ஊடகங்கள் ஷில்பாவின் முத்தத்தை மூன்று வாரங்கள் நிறுத்தாமல் டெஸ்ட் மேட்ச் போல ஒளிபரப்பும் காலம் இது. தொலைக்காட்சித் தொடர்களில் நாலு கணவன், மூன்று மனைவி, இரண்டு வைப்பாட்டி, இன்னும் சில திருட்டுப் புருஷர்கள் எனும் டிரேட் மார்க்கை பிரபலப்படுத்தியிருக்கும் கலாச்சாரம் இது,

இன்றைய யுகத்தில் கல்விநிலையங்களில் பாலியல் குறித்த விழிப்புணர்வைக் கொடுக்காமல் இருந்தால் எது சரியானது, எது தவறானது, பாலியல் தவறுகளினால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதை தெரியாமலேயே மாணவ சமூகம் தவறுக்குள் விழும் அபாயம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

டெண்ட் கொட்டகைகளில் முகத்தை மறைத்துக் கொண்டு பதினோரு மணி காட்சி திரைப்படம் பார்த்து, இடைவேளையில் வரும் இரண்டு நிமிட நிர்வாணக் காட்சிக்கு உடல் வியர்க்கும் காலம் அல்ல இது. அந்தக் காலம் மலையேறிவிட்டது. இணைய யுகத்தில் எந்த வயதினரும் இரண்டு நிமிடங்களில் யாரும் பார்க்காத ஏ.சி அறைகளில் அமர்ந்து கொண்டு சிற்றின்ப சூறாவளிக்குள் சிக்கிக் கொள்ள முடியும்.

இன்றைக்கு சிறுவர், சிறுமியருக்கு எதிராக எழும் பாலியல் தவறுகள் எண்பது விழுக்காடும் குடும்ப உறவினர்களினாலேயே எழுகின்றன என்று ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. எது தவறு எனும் விழிப்புணர்வு சிறு வயதிலேயே ஏற்படும் பட்சத்தில் அவர்களால் இத்தகைய தவறுகளுக்கு எதிராய் எச்சரிக்கையாய் இருக்க முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.

பாலியல் பாடங்களைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களே சங்கோஜப்படுகிறார்கள் என்பது உண்மை. அதற்கு சரியான தீர்வை ஆலோசிக்க வேண்டும். மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித்தனியே வகுப்புகளை அந்தந்த பாலின ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்தினாலே பெரும்பாலான சங்கோஜப் பிரச்சனைகள் மறைந்து விடும் என்பது திண்ணம்.

பெற்றோர் பாலியல் கல்வியை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதை விட ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதே சிறப்பானது. உடல் குறித்தும், உளவியல் குறித்தும் சரியான தெளிவு மாணவ பருவத்திலேயே நடக்க வேண்டியது மிக மிக அவசியம்.

பாலியல் கல்வி பள்ளிக்கூடங்களில் நடக்காமல் இருந்தால் பாலியல் சார்பாக தெருவோர நூல்களோ, இணையமோ, நண்பர்களோ என்ன சொல்கிறார்களோ அவையே பாலியல் கல்வியாக மாணவர்களை சென்று சேரும். குயவன் வனையாத மண், நல்ல பாத்திரமாக முடியாது. பாலியல் கல்வி என்பது வாத்சாயனாரைக் கற்றுக் கொடுப்பதல்ல என்பதையேனும் எதிர்ப்பவர்கள் தெரிந்து கொள்வது நல்லது.

எல்லா இந்துக் கோயில்களிலும் உடலுறவுச் சிற்பங்கள் உட்பட பாலியல் சார்ந்த பல சிற்பங்கள் இருக்கின்றன. இல கணேசன் எல்லா சிலைக்கும் புடவை அணிவிப்பாரா என்பது தெரியவில்லை.

எல்லா பாலியல் கேள்வி பதில் நிகழ்ச்சிகளிலும் சுய இன்பம் தவறானதா எனும் கேள்வி எழுப்பப்படுகிறது. ? எல்லா திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் பாலியல் தவறாக சித்தரிக்கப்படுகிறது. அல்லது சிற்றின்பத்தைத் தூண்டும் விதமாகக் காட்சிகள் இடம்பெறுகின்றன, இத்தகைய சமூகத்தில் பாலியல் கல்வி மறுக்கப்படுதல் நியாயமா ?

பா.ஜ.க தன்னுடைய முக்கியமான கொள்கையான ராமர் கோயில். ராமர் பாலல் அல்லது ராமரும் ராமர் சார்ந்த அனைத்து விஷயங்களையும் பற்றிக் கொண்டு நடக்கட்டும். சமூக விழிப்புணர்வுக்குத் தேவையான விஷயங்கள் நடப்பதையேனும் தடுக்காமல் இருக்கட்டும்.