சன் டிவி, கலைஞர் டிவி, அண்ணா அறிவாலயம் !

tv3.jpg

எல்லோரும் கணித்தபடி திமுக வின் கொள்கைப் பரப்புச் சானல் கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பமாகிறது. அதற்காக அண்ணா அறிவாலயத்திலேயே கலைஞர் தொலைக்காட்சிக்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இனிமேல் சன் தொலைக்காட்சி அறிவாலயத்தை விட்டு வெளியேறும் என எதிர்பார்க்கப் படுகிறது. சரத் ரெட்டி என்பவரை நிர்வாக இயக்குனராகக் கொண்டு கலைஞர் டி வி செயல்படும் என்கிறார்கள். ( தமிழ்த் தலைவருக்கு தமிழகத்தில் யாரும் கிடைக்கவில்லையோ ? இல்லை நம்பிக்கையில்லையா ? )

சன் தொலைக்காட்சியிலிருந்து பல நிகழ்ச்சிகள் கலைஞர் தொலைக்காட்சிக்கு இடம் பெயரும் வாய்ப்பு உண்டு. எனினும் சன் தொலைக்காட்சிக்கு பெருமளவில் பாதிப்பு ஏதும் வர வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

சன் டிவியே புதுமை ஏதும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காப்பியடிக்கும் அவலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது எனில் இங்கிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு என்ன இறக்குமதியாகப் போகிறதோ.

எப்படியோ தனிநபர் துதிபாடும் தொலைக்காட்சியாக கலைஞர் டிவி இல்லாமல் பா.ம.க வின் மக்கள் தொலைக்காட்சி போல புதுமையாய் இருக்கும் பட்சத்தில் வரவேற்போம். இல்லையேல் ஜெயா தொலைக்காட்சி போல நகைச்சுவைக்குப் பஞ்சம் வரும்போது செய்திகள் பார்ப்போம் 🙂

முதுமையும் இளமையாகலாம் ! புதிய தகவல்

26.jpg

உடற்பயிற்சி உடலை வலுவாக்குவது மட்டுமல்ல இளமையாகவும் மாற்றும் என்னும் புதிய கண்டுபிடிப்பை கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் நிகழ்ந்தியுள்ளனர்.

உடற்பயிற்சி உடலை வலுவாக்கும் என்பதும் நோயற்ற வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் என்பதும் மருத்துவ உலகம் ஏற்கனவே ஏற்றுக் கொண்ட உண்மைகள். ஆனால் முதுமை நிலைக்கு வந்தபின் உடற்பயிற்சிகள் உடலின் திசுக்களை இளமையாக்கும் எனும் தகவல் அவர்களுக்கே உற்சாகமூட்டுவதாக கனடா மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த சோதனையின் பாகமாக இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கு வாரம் இரண்டு முறை உடற்பயிற்சி நிலையத்தில் வைத்து ஒரு மணி நேர உடற்பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக் காலத்தின் முடிவில் முதியவர்களின் தோல் திசுக்களைப் பரிசோதித்துப் பார்த்தபோது அவை இளைஞர்களின் திசுக்களுக்குரிய குணாதிசயங்களுக்கு மாறியிருந்தது தெரிய வந்தது.

முதுமையில் திசுக்கள் தளர்ந்தபின் அவை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாது எனும் சிந்தனையையே இந்த சோதனை மாற்றியிருக்கிறது. சரியான உடற்பயிற்சியைச் செய்து வந்தால் உடலின் இளைமையைப் பாதுகாக்கலாம் எனும் நம்பிக்கையையும் இந்த சோதனை தந்திருக்கிறது. இந்தச் சோதனையில் ஈடுபட்ட முதியவர்கள் 65 வயதிற்கு மேற்பட்டோர் என்பது குறிப்பிடத் தக்கது.

வயதாகிவிட்டது இனிமேல் உடற்பயிற்சி எதற்கு என்று இனிமேல் முதியவர்கள் நினைக்கத் தேவையில்லை. எந்த வயதிலும் உடற்பயிற்சி செய்து இளமையாகலாம். உடற்பயிற்சிக்காக அலையவும் தேவையில்லை வீட்டிலேயே செய்யலாம் என்றெல்லாம் அறிவுரை வழங்குகின்றனர் கனடியன் ஆராய்ச்சியாளர்கள்