
சென்னையில் இந்த ஆண்டு ஐ.டி தம்பதியரிடையே விவாகரத்து 200 மடங்கு அதிகரித்திருப்பதாக திடுக்கிடும் புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
ஏற்கனவே கணினி துறை சார்ந்த மக்கள் தங்களுடைய வாழ்க்கை – வேலை சமநிலையை சரிவரக் கண்காணிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு வாழ்வில் பலவீனமடைந்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான மக்களின் தேவை பணம் என்னும் நிலையிலேயே நீள்கிறது.
குடும்பத்தினரை விட்டுவிட்டு வெளிநாடு பயணம் செய்வது, இரவு பகல் பாராமல் அலுவலகத்தில் இருப்பது, அலுவலகத்து சோர்வை வீட்டில் காட்டுவது என பல வகைகளில் இந்த சமநிலையற்ற தன்மை தொடர்கிறது.
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும் கல்லூரியிலிருந்து வெளியே வந்து வேலை தேடும் படலத்தைச் சந்திக்காத காம்பஸ் வாலாக்கள் வேலை கிடைப்பதன் கஷ்டம் என்ன என்பதையே அறியாமல் இருப்பதும் ஒரு காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.
படித்து முடித்தவுடன் கிடைக்கும் ஐந்திலக்க சம்பளத்தை வைத்துக் கொண்டு N – சீரீஸ் நோக்கியாவை வாங்கியபின் மிச்சபணத்தை என்ன செய்வது என்பதறியாமல் உல்லாசங்களுக்கு ஒதுக்கி விடுகின்றனர்.
மேலைநாட்டின் ஃப்ரைடே ஃபீவர் இந்திய ஐடி மக்களையும் பெருமளவில் பீடித்திருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவுகளில் சோமபானக் கடைகளில் மங்கலான வெளிச்சத்தில் தவம் கிடக்கும் போக்கும் அதிகரித்திருக்கிறது.
மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து விடுவதால், அதிக பணம் கிடைத்து விடுவதால், பக்குவம் என்ற ஒன்று அவர்களுக்குப் பிடிபடாமலேயே போய் விடுகிறது.
விட்டுக் கொடுத்தலே வாழ்க்கை என்னும் அடிப்படை அர்த்தம் அவர்களைப் பொறுத்தவரை விதண்டாவாதம். இன்றைய தினத்தை இன்றே அனுபவிப்போம் என்பதே இன்றைய இளசுகளின் தாரக மந்திரம். இதை இன்றைய ஊடகங்களும் முன்னிலைப்படுத்துவது வேதனைக்குரியது.
திருமணப் பயிற்சி என்னும் ஒன்று இன்றைய இளைஞர்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. சில மதப் பிரிவுகள் திருமணப் பயிற்சியை திருமணத்தின் கட்டாயமாக்கியிருக்கின்றன. இதே நிலை எல்லா இடங்களிலும் வரவேண்டும்.
வெறும் பாலியல் சார்ந்த உடல் தேவையே திருமணம் எனும் பதின் வயது ஈர்ப்புகளிலிருந்து இளைய சமூகத்தினர் விடுபட வேண்டும். இன்றைக்கு விரல் நுனியில் கிடைக்கும் பாலியல் சார்ந்த தகவல்களின் மாயையைத் தாண்டி விரியும் உன்னதமான இடம் தான் குடும்பம் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சிறு சிறு தோல்விகள் வந்தாலோ, சண்டைகள் வந்தாலோ டைவர்ஸ் மட்டுமே ஒரே வழி என்னும் மனப்பான்மை நிச்சயம் விலக வேண்டும். அத்தகைய எண்ணத்தை சார்ந்த சமூகம் எந்த விதத்திலும் ஊக்குவிக்காமல் இருக்க வேண்டியது அவசியம்.
பணம் இருக்கிறது துணை எதற்கு ? எனும் மனோ நிலையிலிருந்து இளைய சமூகம் விடுபட வேண்டும். அதற்கு ஆழமான குடும்ப உறவுகளும், பெற்றோரும், சமூகமும், மதமும், அலுவலகங்களும் அனைத்துமே தன் பங்கை ஆற்ற வேண்டும்
எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன் திருமணமான ஆறு மாதங்களிலேயே விவாகரத்து வாங்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறான். இருவரிடமும் தனித்தனியே பேசினேன். உண்மையில் ஈகோவைத் தவிர எந்த பிரச்சனையும் அவர்களிடம் இல்லை.
மன்னிக்கும் மனப்பான்மையை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதை மதங்களோ, தியானங்களோ, பெற்றோரோ யாரேனும் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்தாக வேண்டும்.
வாழ்க்கை என்பதை அமெரிக்க டாலர்களில் அடைத்துவிட முடியாது.
எண்பது வயதில் “நரையன்” என்று தாத்தாவைத் திட்டிக் கொண்டே இன்பமான குடும்ப வாழ்க்கை வாழ நமது பாட்டிகளால் முடிந்திருக்கிறது.
எழுபது வருடம் சேர்ந்து வாழ்ந்தபின் ஏற்படும் துணை இழப்பையே தாங்க முடியாமல் கதறும் தாக்தாக்களை நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது. அதன் பின்னணியில் வெட்டி விடுதலே விடுதலை என சுற்றும் இளைய சமூகத்தை நினைத்து வேதனைப்படாமல் இருக்க இயலவில்லை.
இளைய சமூகத்தினருக்கு சொல்ல வேண்டியதெல்லாம் ஒன்று தான். யாரும் எதிலும் எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பதில்லை. வெற்றி என்பது அடுத்தவருக்குத் தோல்வியை அளிப்பதில் அல்ல, அடுத்தவருக்கு வெற்றியை அளிப்பதில் என்பதை தம்பதியர் புரிந்து கொள்ள வேண்டும்.
மன்னிப்பு என்பதையே தண்டனையாய் அளிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆழமான குடும்ப உறவுகள், எதிர்காலத்தின் வளமான வாழ்வுக்கு ஆதாரம். இல்லையேல் பலவீனமான குடும்பங்களின் பிரதிநிதிகள் பலவீனமான தேசத்தையே பரிசளிக்க முடியும்.
Like this:
Like Loading...