தலைப்பைப் பார்த்து விட்டு இது ஆரோக்கியமற்ற கட்டுரையாய் இருக்கும் என்று நினைத்தீர்களெனில் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிய ஒரு தகவல் தான்.
புற்று நோய் இன்று தமிழகத்தின் பல பாகங்களிலும் மிக வேகமாகப் பரவி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக குமரி மாவட்டம் இப்போது புற்று நோயாளிகளின் கூடாரமாகவே மாறிவிட்டது.
இதன் பின்னணியில் சமூக நலனில் அக்கறை கொள்ளாத சமூக அரசியல் இருப்பது வேதனைக்குரியது. அது ஒருபுறம் இருக்கட்டும். நான் சொல்லவந்த விஷயம் அதுவல்ல. புற்று நோயைக் கட்டுப்படுத்த புதிதாக வந்திருக்கும் ஆராய்ச்சி பற்றி.
என்னய்யா இது ? தினம் ஒரு கண்டுபிடிப்பு, தினம் ஒரு சோதனை?. நேற்று ஒன்றைச் சரியென்பார்கள், இன்று அதையே தப்பு என்று சொல்வார்கள் என்று புலம்பித் திரிபவர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது இந்த புதிய ஆராய்ச்சி.
அந்த ஆராய்ச்சி முடிவு இது தான். அதாவது நல்ல அடர் நிறமுள்ள பழங்கள் புற்று நோயை எதிர்க்கும் சக்தியுடையவைகளாக இருக்கின்றன. அந்த அடர் நிறத்தில் இருக்கும் ஒரு பொருள் புற்று நோயுடன் போரிடுகிறதாம்.
புற்று நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்துவதோடு நின்று விடாமல் கூட இருக்கின்ற புற்று நோய் செல்களையும் இவை இருபது விழுக்காடு வரை அழிக்கின்றனவாம்.
இதற்கு முன் வெளியான ஆராய்ச்சி முடிவு ஒன்று தக்காளிப் பழத்தைப் பரிந்துரை செய்தது. தினமும் தக்காளிப் பழத்தைப் பயன்படுத்துபவர்கள் புற்று நோய் தாக்கும் வாய்ப்பிலிருந்து 45 விழுக்காடு தப்பித்து விடுகிறார்கள் என்கிறது அதே ஆய்வு. இந்த ஆய்வை மேற்கோளாய் கொண்டு புற்று நோயுடன் போராடும் சிறப்புத் தக்காளிப்பழத்தைப் பயிரிட்டு விற்பனை செய்து சம்பாதித்தது ஒரு தனிக்கதை.
தக்காளியுடன் நிற்கவில்லை புற்று நோய் ஆராய்ச்சி. இன்னொரு ஆய்வு மாதுளம் பழத்தை புற்று நோய் நிவாரணியாய் சுட்டிக் காட்டியது/
தினமும் மாதுளம் பழமோ, பழச்சாறோ சாப்பிடுபவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு என அந்த மருத்துவ ஆராய்ச்சி தெரிவித்தது. இந்த மாதுளம் பழ செய்தி தற்போதைய புதிய ‘அடர் நிற பழங்கள்” சாப்பிட்டால் புற்று நோய் வீரியம் குறையும் எனும் சோதனையோடு ஒத்துப் போகிறது. அதாவது அடர் நிற மாதுளை உண்டால் புற்று நோய் பாதிப்பு வெகுவாகக் குறைகிறதாம்.
குறிப்பாக ஆண்களுக்கு வரும் புரோஸ்டேட் எனும் வகைப் புற்று நோய்க்கு இந்த மாதுளம் பழச் சாறு ஒரு நல்ல மாற்றாக உள்ளது.
உயிரைக் கொல்லும் புற்று நோயை அடர் நிற பழங்கள் எதிர்க்குமெனில் இன்னும் என்ன தாமதம். சாப்பிடுங்க. ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளுங்க
ஃ