தூக்கம் குறித்த ஆராய்ச்சிகள் : சிறு அலசல்

sleep.jpg

உலக அளவில் தூக்கம் தொடர்பாக நடைபெற்று வரும் ஆய்வுகள் கணக்கற்றவை. ஒவ்வொர் ஆய்வும் நமக்கு தூக்கத்தைக் குறித்த ‘விழிப்புணர்வை’ வழங்குகின்றது என்பதே உண்மை. சீரற்ற தூக்கம் இதய நோய் வரும் வாய்ப்பை இருமடங்கு அதிகரிக்கும் என்னும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு ஒன்றை வெகு சமீபத்தில் லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் விரிவான அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இதயம் தொடர்பான நோய்களுக்கும் தூக்கத்துக்கும் இடையேயான உறவை ஆராய்ந்தது. அதனடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியை நடத்திய வார்விக் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஏழு மணி நேர தூக்கம் என்பது சரியான தூக்க அளவு என்றும், இந்த காலத்தை குறைக்கும் போது இதய நோய்கள் வரும் வாய்ப்புகளும் இரட்டிப்பாகின்றன என்பது அந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

இந்த ஆராய்ச்சி சொல்லும் சுவாரஸ்யமான இன்னோர் முடிவு என்னவெனில், இந்த தூக்க அளவை திடீரென அதிகரித்தால் கூட இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதாகும்.

சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் வயது, வாழ்க்கைத் தரம், பாலினம், பழக்கங்கள் போன்ற அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிம்மதியற்ற தூக்கமும், ஒழுங்கற்ற தூக்கமும் உடல் நலத்துக்கு எதிரானவை என்று அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இதற்கு முன் தூக்கம் தொடர்பாக செய்யப்பட்ட ஒரு ஆய்வு ஷிப்ட் முறைப்படி வேலை செய்பவர்களின் உடல்நலம் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகவும், அதற்குக் காரணம் அவர்கள் இரவில் தூக்கத்தை இழப்பதும், பகல் தூக்கத்தின் மூலம் அதை ஈடுகட்ட இயலாமல் போவதுமே என்று கூறியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. இரவு ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு இதய நோய் அதிகரிப்பதற்கும் இந்த தூக்கம் கெடுதல் முக்கியமான காரணமாய் விளங்குகிறது.

இரவு ஷிப்ட் வேலை பார்க்கும் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இரவில் செயற்கை ஒளியிலேயே முழு நேரமும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதும் இதற்கான ஒரு காரணம் என்பது அவர்களுடைய ஆய்வு முடிவு. பார்வை தெரியாத பெண்களுக்கு இத்தகைய பாதிப்பு பாதியாகக் குறைகிறது என்பதை அவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

தூக்கம் தொலைவதனால் வரும் இன்னொரு முக்கியமான பிரச்சனை மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு தொடர்பானது. தூக்கமில்லாமல் இருப்பவர்கள் சோர்வாகவும், கவனக் குறைவாகவும் இருப்பார்கள் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் அவர்களுடைய மூளை புதிய செல்களை உற்பத்தி செய்வதும் குறைகிறது என்பது இன்னொரு அதிர்ச்சியூட்டும் தகவலாகும்.

படுக்கையிலிருந்து சரியான தூக்கமில்லாமல் எழுந்திருப்பது நிறைய நேரத்தைத் தந்தாலும் கூடவே மன அழுத்தத்தையும் தரும் என்பது மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்லும் இன்னொரு செய்தியாகும். தினமும் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் பழக்கமுடையவர்கள் அதிக எடையுள்ளவர்களாக மாறிவிடும் ஆபத்து இருப்பதாகவும் மருத்துவ ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன.

இப்படி தூக்கத்தைக் குறித்த ஆய்வு முடிவுகள் ஒட்டுமொத்தமாக நம்மிடம் சொல்வது ஒன்றே ஒன்று தான். நிம்மதியாக தினமும் இரவில் ஏழு, எட்டு மணி நேரம் தூங்குங்கள். தேவையற்ற பல நோய்கள் தானாகவே விலகி ஓடிவிடும்.

பள்ளிக்கூடம் : தங்கரும் விதிவிலக்கல்ல !!!

pk.jpg

தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கடந்த வார இறுதியில் தான் எனக்கு வாய்த்தது. பால்ய நினைவுகளைக் கிளறுவது எப்போதுமே சுவாரஸ்யமானது. அதுவும் கவலைகள் ஏதும் இல்லாத பள்ளிக்கூட வாழ்க்கையையும், வறுமையையும் பணக்காரத் தனத்தையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத ஆரம்பப் பள்ளி நட்பு வட்டாரமும் நினைவுகளில் மிதப்பது ஒரு சுக அனுபவம்.

படித்த பள்ளிக்கூடம் சிதிலமடைந்து கிடப்பதும், வருமானம் இல்லாத பள்ளிக்கூடத்தை மூட வேண்டிய சூழல் ஏற்படும்போது பள்ளிக்கூடத்தை பழைய முன்னாள் மாணவர்களின் உதவியுடன் புதுப்பித்து செயல்பட வைப்பதே பள்ளிக்கூடம் சொல்லும் கதை.

‘மழைக்காகத் தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன், ஆனால் அங்கும் மழையைத் தான் பார்த்தேன்” எனும் அறிஞரின் கூற்றுப்படி வெளியேயும் உள்ளேயும் மழை என்னும் காட்சியுடன் ஆரம்பிக்கும் பள்ளிக்கூடம் பால்ய நினைவுகளை கிளறும் காட்சிகளால் கோர்க்கப்பட்டு திரையில் விரிகிறது.

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியாளராக இருக்கும் வெற்றிவேலும் (நரேன்), திரைப்பட இயக்குனராய் இருக்கும் முத்துவும்(சீமான்) கிராமத்தான் குமார சாமியும்( தங்கர் பச்சான்) கிராமத்து பள்ளிக்கூடத்திலேயே ஆசிரியப் பணி ஆற்றும் கோகிலா(ஸ்நேகா)வும் பள்ளிக்கூடத்தின் பாத்திரங்களாகிறார்கள்.

உணர்ச்சிபூர்வமான ஒரு கதையைச் சொன்னதற்காகவும், இந்த கதையம்சம் வாழ்வின் தேவைகளை முன்னிறுத்தியிருப்பதற்காகவும், அதில் தெரியும் கல்வி சமூக அக்கறைக்காகவும் தங்கர் பச்சானை மனமாரப் பாராட்டலாம்.

கிராமத்துக்காரனாக வலம் வரும் தங்கர் பச்சானின் நடிப்பும், நண்பர்களின் பழைய துணிகளைக் கூட ஆசை ஆசையாய் எடுத்து வைத்துக் கொள்ளும் பாங்கும் நெகிழ வைக்கிறது.

எனினும் தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் திரைப்படம் அவருடைய பள்ளிக்கூடத்தைப் போலவே சிதிலமடைந்து தான் கிடக்கிறது.

காட்சிப் படுத்துவதில் சில இடங்களில் பரிமளிக்கும் தங்கர் பல இடங்களில் படுதோல்வியையே சந்தித்திருக்கிறார். திடீர் திடீரென வந்து போகும் காட்சிகளும், நாடகத் தனமான காட்சிகளும் பள்ளிக்கூடம் முழுக்க நிரம்பி வழிகின்றன.

கலெக்டரை முதன் முதலில் சந்திக்கும் காட்சி, டைரக்டரை சந்திக்கும் காட்சி, கடைசியில் நாயகன் நாயகி சந்திக்கும் காட்சி என எல்லா முக்கியமான கட்டங்களும் நாடகத் தனமாகவே இருப்பது வியப்பான சலிப்பு.

கிறிஸ்தவர்கள் என்றால் கவுண் அணிந்திருப்பார்கள், மாலையில் தண்ணியடிப்பார்கள், வீட்டில் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் என்னும் தமிழ் சினிமாவின் வரைமுறையிலிருந்து பள்ளிக்கூடமும் விலகியிருக்கவில்லை.

ஜெனிபர் என்னும் கிறிஸ்தவப் பெண் பாலியல் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் இங்கும். அவருடைய கணுக்காலை எட்டிப்பார்க்கவும், தொட்டுப்பார்க்கவும் அலையும் சபலக் காரராகத் தான் அவருடைய மழலைக்காலம் கழிந்திருக்கிறது என்பது வேதனை.

கோகிலா என்னும் ஆசிரியை முழுக்க முழுக்க போர்த்தியபடி கலாச்சாரத்தின் (?) சின்னமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதற்கும், ஜெனிபர் என்னும் பெண் கவர்ச்சிப் பொருளாக ஊராரின் தாபக் கனவுக்குள் நடமாடும் பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதற்கும் காரணத்தை அறிய அதிக நேரம் ஆவதில்லை.

ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் ‘ஞாபகம் வருதே’ பாடலுக்கும், பள்ளிக்கூடத்தின் ‘ஞாபகம் வருதே’ பாடலுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கச் சொன்னால் நன்றாக இருக்கும். ஆட்டோகிராஃப் ஒரு சமூக சார்பற்ற கதையைக் கொண்டிருந்தாலும் மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தது. அதாவது உணர்வுகளை படமாக்கிய விதத்தில் ஆட்டோகிராஃப் பள்ளிக்கூடமல்ல, பல்கலைக்கழகம். பள்ளிக்கூடம் படமாக்கப் பட்ட விதத்திலும் ஆட்டோகிராஃபின் பாதிப்பு இருப்பதை ஒத்துக் கொண்டேயாக வேண்டும்.

தேவையற்ற கவர்ச்சிப் பாடலையும் தங்கர் வலியத் திணித்திருக்கிறார். வியாபாரத்துக்காக என்று இனியும் அவர் சாக்குப் போக்கு சொன்னால் அவருடைய படத்தைப் பற்றி அதிகம் பேசாமல் இருப்பாராக.

பள்ளிக்கூடத்திற்கு முன்னாள் மாணவர்கள் வருவதும் பல படங்களில் பார்த்த சமாச்சாரம் தான். மலையாள படங்களின் சாயலும் இதில் வீசுகிறது. சில பல மாதங்களுக்கு முன் கதாநாயகனை குணப்படுத்துவதற்காக முன்னாள் மாணவர்கள் எல்லாம் கல்லூரியில் கூடும் கதையம்சத்துடன் திரைப்படம் ஒன்று வெளியானதும் நினைவில் வருகிறது.

கலெக்டர் ஊருக்கு வருவதும் அது தொடர்ந்த காட்சிகளிலும் நெளியும் செயற்கைத் தனம் தங்கரிடம் யாரும் எதிர்பாராதது. கடைசி காட்சிகளில் நண்பனை வரவேற்க தலையில் பெஞ்ச் சுமந்து வரும் இடம் தவிர்த்த இடங்களில் எல்லாம் செயற்கைத் தனம்.

அதுவும் கோகிலாவை பார்க்காமலேயே முறுக்கித் திரியும் கலெக்டர் விழா முடிந்தபின் பேட்டி நேரத்தில் கோகிலாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது நாடகத் தனத்தின் உச்சம் எனலாம். ஒரு மெல்லிய பார்வையிலோ, ஒரு கரம் தொடுதலிலோ உணர்ச்சிகளை பீறிட்டு ஓட வைத்திருக்க முடியும்.

கலெக்டர் சொன்ன உடனேயே கண்ணீருடன் ஓடி வரும் கோகிலா பெண்களை இழிவு படுத்துகிறார். தன்னை இத்தனை நாள் தவிக்க விட்டு, ஒரு வார்த்தை கூட விசாரிக்காமல், ஊருக்கு வந்தபின்பு கூட நேருக்கு நேர் பார்த்து ஒரு காதல் பார்வை கூட வீசாத கலெக்டரிடம் ஒரு அடிமை விடுதலையாகும் உற்சாகத்துடன் கோகிலா ஓடுவதில் ஒட்டு மொத்த பெண்களும் சற்று தலை குனிகிறார்கள்.

மொத்தத்தின் தங்கர் பச்சான் ஒரு கதையை படமாக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவின் சட்டதிட்டங்களை மீறாமல், ஆனால் மீறியிருப்பது போன்ற பாவனையில்.

சிதிலமடைந்து தான் கிடக்கிறது தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் !

T20 – அட்டகாச விளம்பரம் !!!

வீடியோ கான் வாஷிங் மெஷின் விளம்பரம். எல்லாரையும் துவைச்சு காயப்போட்டாச்சுன்னு சிம்பாலிக்கா சொல்றாங்களாம். ம்ம்… யப்பா.. கொஞ்சம் அடங்குங்கப்பா.. அர்த்த ராத்திரியில குடை பிடிக்காதீங்கப்பா….

ad-d.jpg

( படம் சரியா தெரியலைன்னா ஒரு கிளிக் குடுங்க பாஸ்… )

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ! டோனி ஸ்பெஷல் !!!

எப்படி இருந்த நான்…..

d1.jpg

இப்படி ஆயிட்டேன் !!!

d2.jpg

டோனி, இதெல்லாம் கிரிக்கெட்ல சகஜம். ஜெயிச்சா வீடு கட்டி தருவாங்கோ, தோத்தா மதிலைக் கூட இடிப்பாங்கோ.. அதனால கொஞ்சம் உஷாராவே இருந்துக்கோங்க.

சாப்பிட்டதுக்கு அப்புறம் தம் அடிக்கலாமா ?

smoke.jpg

நன்றாக உணவு உண்ட பின் நாம் செய்யும் பல செயல்கள் நமது ஆரோக்கியத்தை எந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்பது பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. அந்த பட்டியலில் இந்த ஏழு செய்திகளும் முக்கிய இடம் பிடிக்கின்றன. இந்த ஏழு செய்திகளையும் நினைவில் கொள்ளுங்கள். இவை உணவு உண்ட உடன் செய்யக் கூடாத செயல்கள்.

உணவு உண்ட உடன் நிம்மதியாக சுவரில் சாய்ந்து நின்று கொண்டு ஒன்றோ இரண்டோ சிகரெட் புகைப்பது புகை பிரியர்களின் பட்டியலில் நிச்சயம் இருக்கும். இது மிகவும் ஆபத்தானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உணவு உண்டபின் பிடிக்கும் ஒரு சிகரெட் பத்து சிகரெட் பிடிப்பதன் பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனால் கான்சர் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. எனவே உணவு உண்ட உடன் தம் அடிப்பதை நிறுத்துங்கள்.

உணவு உண்ட உடன் பழங்கள் உண்பதும் பலருடைய வழக்கம். அதுவும் தீமையானது என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் வயிற்றுப் பகுதியில் காற்று அதிகம் நிறையும் நிலை உருவாகிவிடுகிறதாம். எனவே உணவுக்குப் பின் ஒருமணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழிந்து பழங்களை உட்கொள்தலே சிறந்தது.

உணவுக்குப் பின் தேனீர் (டீ) குடிப்பது கூட பலருடைய வழக்கம். தேனீர் அதிக அமிலச்சத்து நிறைந்த பொருள். இந்த அமிலம் உட்கொண்ட உணவின் புரோட்டீன் பொருட்களை இறுகச் செய்து விடுகின்றன. எனவே உணவு எளிதில் செரிமானம் ஆகாமல் போய்விடுகிறது. எனவே உணவுக்குப் பின் உடனே தேனீர் உட்கொள்வதையும் நிறுத்துதல் நலம்.

உணவு உண்டபின் உடனே பெல்ட்டை தளர்த்தி விடுவதும் சரியல்ல என்கின்றனர். இதன் மூலம் குடல் சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதாம்.

உணவுக்குப் பின் உடனே குளிப்பதும் நல்லதல்ல. இதன் மூலம் இரத்த ஓட்டம் உடலின் பல இடங்களுக்கும் வேகமாகப் பாய்வதால் வயிற்றில் இருக்கும் உணவுப் பொருள் செரிமானம் ஆகவேண்டிய அளவுக்கு இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதியில் இருப்பதில்லையாம். எனவே செரிமானப் பிரச்சனைகள் தோன்றும் வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. எனவே கொஞ்சம் பொறுத்தே குளியுங்கள்.

சாப்பிட்ட உடனே கொஞ்சம் நடந்து வந்தால் உண்டது செரிக்கும் என்பது பலருடைய நம்பிக்கை. ஆனால் உண்மையில் இது தவறு. உண்ட உடன் நடந்தால் நாம் உண்ணும் பொருட்களில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லையாம்.

உண்ட உடன் தூங்குதல் கூடாது. இது பலருக்கும் தெரிந்தது தான். இதன் மூலம் வாயுத் தொல்லை உட்பட பல உடல் உபாதைகள் வந்து சேர்கின்றன.

இந்த ஏழு செயல்களையும் நினைவில் கொள்ளுங்கள். அடுத்த முறை உணவு அருந்தியபின் இவற்றை தவிர்க்க வேண்டும் என உறுதி எடுங்கள்.

காலரை தூக்கி விட்டுக்கோங்க !

42-18032440.jpg

மூளை ஒரு அதிசயம். ஆனால் இள வயதில் சிந்தனைத் திறனோடும், நல்ல அறிவுச் செயல்பாட்டோடும் திகழ்பவர்கள் முதுமை அடையும் போது சிந்தனைத் தடுமாற்றம் அடைவது இயல்பு.

மூளையின் செயல்பாடுகளில் ஏற்படும் இத்தகைய வீழ்ச்சியை எப்படி சரிசெய்வது என்பது குறித்து உலக அளவில் பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இது தொடர்பாக சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஒரு ஆராய்ச்சி மிகவும் சுவாரஸ்யமானது.

அதாவது ஒரு மொழியில் புலமை வாய்ந்த மக்களை விட இரண்டு மொழிகளில் புலமை வாய்ந்தவர்களுக்கு மூளையின் செயல்பாடுகள் துரிதமாக இருக்கும் என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு. இதன் மூலம் பல மொழிப் புலமையாளர்கள் ஒரு மொழிப் புலமையாளர்களை விட சிறப்பான முதுமையைப் பெறுவார்கள்.

கனடாவில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மேல் நாட்டினரும், ஆங்கிலமும் தமிழும் தெரிந்த தமிழர்களும் ஈடுபடுத்தப் பட்டனர் என்பது தமிழர்களை சற்று பெருமையடையச் செய்யும் செய்தி.

ஏற்கனவே மூளைக்கும் மொழிக்கும் இடையேயான உறவுகளைக் குறித்து பல சுவாரஸ்யமான ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்று ஆங்கில மொழியைப் பேசுபவர்களை விட அதிக மூளை செயல்பாடு சீன மொழி பேசுபவர்களுக்கு இருக்கிறது என்பது.

சைனீஸ் மொழி பேசுபவர்கள் மூளையின் இரண்டு பாகங்களையும் பயன்படுத்துவதாகவும், ஆங்கிலம் பேசுபவர்கள் மூளையின் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும் அந்த ஆராய்ச்சி கோடிட்டுக் காட்டியது.

குழந்தைகள் பிறந்தவுடன் பெற்றோரும் சமூகமும் கற்பிக்கும் அவர்களுடைய தாய்மொழி மூளையில் மிகப்பெரிய ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறது எனவும், பிற்காலத்தில் குழந்தையின் மொழி அறிவுக்கு அந்த அடித்தளம் முக்கிய காரணியாய் விளங்கும் என்பதும் அந்த ஆராய்ச்சியின் இன்னோர் முடிவு.

ஆங்கில மொழி மட்டுமே தெரிந்தவர்கள் பிற்காலத்தில் சைனீஸ் மொழியைப் பேச பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டியதன் காரணம் இத்தகைய அடித்தளமே என்றும் அந்த ஆராய்ச்சி அடித்துக் கூறுகிறது.

மூளையை துடிப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்பவர்களால் முதுமையிலும் மூளை செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்று முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு செய்திருந்தது.

இன்னோர் ஆராய்ச்சி இசைக்கருவிகளை இசைப்பவர்கள், நடனத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதிக புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் போன்றோர் மூளையை உற்சாகமாக முதுமையிலும் வைத்துக் கொள்ள முடியும் என்று கூறியிருந்தது.

மேலும் ஒரு ஆராய்ச்சி குறுக்கெழுத்துப் போட்டிகள், சதுரங்கம், கேரம் போன்ற விளையாட்டுகள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்று சொன்னது.

இப்போது இந்த ஆராய்ச்சி இரண்டு மொழிகளில் சரளமாய் பேசக்கூடியவர்களால், ஒரு மொழியில் மட்டுமே அறிவு பெற்றிருப்பவர்களை விட அதிகமாய் மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது.

முதுமையில் வரும் நினைவு இழத்தல், சிந்தனை மங்கிப் போதல், அல்சீமர் போன்ற பல குறைபாடுகளை இந்த ஆராய்ச்சி இன்னோர் கோணத்தில் அணுகச் செய்திருக்கிறது என்பதே உண்மை.

சற்றுமுன் – க்கு நன்றி !!!

xavier-portrait.jpg

இரு தினங்களுக்கு முன் அலுவலகம் முடிந்து சோர்வாக வீட்டுக்குச் சென்று சேர்ந்த போது வாசலில் வரவேற்றது ஒரு பொட்டலம். நம்மைப் போன்ற புத்தகப் பிரியர்கள் பாஷையில் சொல்வதென்றால் பொக்கிஷம்.

எல்லாம் ‘சற்று முன்’ தயவால் கிடைத்த பரிசுப் புத்தகங்கள். முப்பத்து ஐந்து புத்தகங்களை ஒரே நேரத்தில் பார்த்தபோது எதை முதலில் படிப்பது என்பதே மிகப்பெரிய சவாலாகிப் போனது.

புத்தகக் கண்காட்சி, அமெரிக்கப் பயணம் போன்ற சந்தர்ப்பங்கள் தவித்து இத்தனை புத்தகங்கள் ஒரே நேரத்தில் நான் வாங்கியது கிடையாது. எனவே பூரித்துப் போய்விட்டேன்.

நன்றி சற்றுமுன் ! புத்தகங்களால் குளிப்பாட்டியமைக்கு !

செக்ஸ் டே !!! லீவ் எடு கொண்டாடு !!!

suv.jpg

சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பின் ரஷ்யா சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று மக்கள் தொகை விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவு. இந்த சரிவை நிவர்த்தி செய்வதற்கு ரஷ்ய அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.

இந்தியாவில் மக்கள் தொகையை எப்படி கட்டுக்குள் வைப்பது என்பது குறித்து ஆளாளுக்கு தலையைப் பிய்த்துக் கொண்டு திட்டங்களை வகுத்து வருவது போல ரஷ்யாவில் எப்படி அதிகரிப்பது என்று தலையைப் பிய்க்கிறார்கள்.

இரண்டு குழந்தைகள் அல்லது அதற்கு அதிகமான குழந்தைகள் உள்ளவர்களுக்கு கல்வி, வீட்டுப் பொருட்கள் போன்றவை வாங்க பல இலட்சம் ரூபாய்களை ரஷ்ய அரசு இலவசமாகவே வழங்கி வருகிறது.

மைய ரஷ்யாவான Ulyanovsk பகுதியிலுள்ள கவர்னர் கடந்த புதன் கிழமையை “குடும்ப உறவு தினம்” என்று அறிவித்தார். அன்றைய தினம் அலுவலகப் பணிகளை விட்டு விட்டு எல்லோடும் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று மனைவியுடன் காதலுடன் கசிந்துருகி காமத்தில் திளைத்திருக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

அன்றைய தினத்திலிருந்து சரியாக ஒன்பது மாதங்கள் கழிந்து அதாவது ஜூன் பன்னிரண்டாம் தியதி பிறக்கும் குழந்தைகளுக்கு பல பரிசுகள் வழங்கப்படுமாம். தொலைக்காட்சி, கார் போல பல பரிசுகள் இந்த பரிசுப் பட்டியலில் உண்டு. இந்த ஆண்டு “வெற்றிகரமாக” குழந்தை பெற்றுக் கொண்டவர்களில் பம்பர் பரிசாக ஒரு SUV கார் வழங்கப்பட்டிருக்கிறது !

கடந்த மூன்று ஆண்டுகளாகவே செயல்பட்டு வரும் இந்தத் திட்டத்தினால் அந்தப் பிராந்தியத்தில் சுமார் 4.5% பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது என்பது ஆஹா.. செய்தி !

சரி.. இந்த விஷயத்தை மட்டும் இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் பண்ண முடிஞ்சிருந்தா பிரச்சனை எப்பவோ முடிஞ்சிருக்குமே !!!

இதுகூட மூளையைப் பாதிக்கும் !

brain.jpg

நாம் அறியாமலேயே செய்யும் பல செயல்கள் நம்முடைய மூளையைப் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடுகின்றன. அவற்றைக் குறித்த அறிவு இருந்தால் அவற்றை விலக்கி விடுதல் சுலபமாக இருக்கும்.

காலையில் எதுவுமே உண்ணாமல் இருப்பது பலருக்கு வழக்கம். “நான் பொதுவாவே காலைல சாப்பிடறதில்லீங்க” என்று பெருமையாக சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள். ஆனால் அப்படி இருப்பதனால் இரத்தத்தின் சர்க்கரை அளவு குறைந்து விடுகிறது. இரத்தத்தில் குறையும் இந்த சர்க்கரை அளவினால் மூளைக்குத் தேவையான பல சத்துக்கள் மூளைக்குச் செல்வதில் குறைபாடு ஏற்படுகின்றது. இது மூளையைப் பாதிப்படைய வைக்கிறது.

அதிகமாக உண்பதும் மூளையின் செல்களை கடினப்படுத்தி, மந்தநிலைக்குத் தள்ளி விடுகின்றனவாம். இதனால் மூளையின் செயல்பாடு பலவீனமடைந்து விடுகிறது.

புகை ! அது எப்போதுமே உடலுக்குப் பகை தான். நுரையீரலை மட்டுமல்ல மூளையையும் இது பாதிப்படைய வைக்கிறது. மூளை சுருக்கத்திற்கு புகை பிடிக்கும் பழக்கம் காரணியாகி விடுகிறதாம். இதன் மூலம் அல்சீமர் போன்ற நோய்கள் கூட வர வாய்ப்பு உண்டு என எச்சரிக்கின்றனர் மருத்துவர்.

தூக்கம் மூளையை சற்றே ஓய்வெடுக்க வைக்கும் ஒரு நிலை. சரியான தூக்கம் தொடர்ந்து கிடைக்காத மனிதர்களுடைய மூளையில் அணுக்கள் பலவீனமடையும். மூளையின் செல்கள் இறந்து போகும் வாய்ப்புகள் கூட உண்டு.

தலையை மூடிக்கொண்டு தூங்குவது தவறு. தலையை மூடிக் கொண்டு தூங்கும் போது போர்வைக்குள் சுற்றி வரும் கரியமில வாயுவையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கும் நிலைக்கு மூளை சென்று விடுகிறது. இதனால் மூளைக்குத் தேவையான உயிர் வழி கிடைக்காமல் மூளையின் செயல் பாடுகள் பாதிப்படையும் அபாயம் உண்டு.

அதிகப்படியான இனிப்புப் பொருட்களை உட்கொள்வது கூட மூளைக்குத் தேவையான புரதச் சத்து மற்றும் பிற சத்துக்கள் கிடைப்பதற்குத் தடையாக இருக்கிறது. இது மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் அபாயம் உண்டு.

மாசு கலந்த காற்றைச் சுவாசிப்பதும் மூளையைப் பாதிக்கும். நமது உடலிலேயே அதிக உயிர்வழியை உட்கொள்ளும் இடம் மூளையே. மாசு கலந்த காற்றைச் சுவாசிக்கும் போது மூளைக்குத் தேவையான உயிர்வழி தேவையான அளவு கிடைக்காமல் போய்விடுகிறது. அது மூளையின் செயல்பாட்டைப் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகிறது.

மன அழுத்தமான சூழலில் வேலை செய்வதும், மிகக் கடினமாக வேலை செய்வதும், அதிக நேரம் வேலை செய்வதும் கூட மூளையை பாதிக்கும் காரணிகளில் சில.

மூளையின் செயல்பாடுகள் மனித வாழ்வின் இன்றியமையாத ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆறறிவுக்குள் மனிதனை வகைப்படுத்தும் வலிமை மூளைக்கு இருக்கிறது. எனவே மூளையின் செயல்பாடுகள் பாதிப்படையாமல் இருக்கும் வழி முறைகளைக் கையாள்வது அவசியம்.

குறிப்பாக, புகை போன்ற பழக்கங்களைக் கைவிட வேண்டும். உணவு உட்கொள்ளும் போது சரியான உணவுகளை சரியான அளவு உட்கொள்ள வேண்டும். நல்ல சுகாதாரமான சூழலில் வேலை செய்வதும், சரியான அளவு வேலை செய்வதும், இரவில் நன்றாகத் தூங்குவதும் அவசியம்.

நல்ல சிந்தனைகள் மூளையை வளப்படுத்தும். எனவே வித்தியாசமான சிந்தனைகள், புதுப்புது முயற்சிகளில் மூளையை பயன்படுத்தி மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்துங்கள்.

மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் போட்டிகள், வினாடி வினாக்கள், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் நேரம் செலவழியுங்கள்.

நல்ல ஆரோக்கியமான விவாதங்களையோ, அறிவு சார் விஷயங்களையோ அடிக்கடி பேசுங்கள்.

மூளை முக்கியமானது. கவனமுடன் கையாளுங்கள்

இது சிரிக்கிற விஷயம் இல்லீங்க :(

mental.jpg

மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களின் வாழ்க்கை சோகங்களால் சூழப்பட்ட தீவைப்போன்றது. நான்கு புறபும் நிராகரிப்புகளின் தண்ணீர் சூழ கண்ணீர் வாழ்க்கை வாழும் நிலையே அவர்களுக்கு இந்த சமூகத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.

வீடுகளில் பெரும்பாலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுகளே அற்றவர்கள் போல நடத்தப்படுவது வேதனையிலும் வேதனை. அவர்களுடைய மொழிபெயர்க்க முடியாத ஏக்கங்களும் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் நிராகரிக்கப்பட்டு வீட்டின் கொல்லைப்பகுதிகளிலோ, குகைப்பகுதிகளிலோ, அல்லது வெளிச்சம் கூட நுழையாத இடங்களிலோ சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருக்கும் நிலையே பல மூன்றாம் உலக நாடுகளிடம் இருந்து வருகிறது.

தற்போதைய நிலையில் உலகிலேயே மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் மற்ற எந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை விடவும் அதிகம் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது.

மனநோயினால் பாதிப்படைவதனால் உலகில் சுமார் எட்டு இலட்சம் பேர் ஆண்டு தோறும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்னும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவும் வெளியாகி இருக்கிறது. இத்தகைய தற்கொலை நிகழ்வுகள் வறுமையில் உழலும் நாடுகளில் மிகவும் அதிக அளவில் நடை பெறுகின்றன என்பது கவனிக்கத் தக்கது.

அதிலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆய்வு ஒன்றில் உலகிலேயே அதிக அளவு இளையவர்கள் தற்கொலை செய்து கொள்வது தென்னிந்தியாவில் தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உலகின் நோய் விகிதத்தை எடுத்துக் கொண்டால் கூட சுமார் பதினான்கு விழுக்காடு மனநோய் பாதிப்பாகத் தான் இருக்கிறது., இந்த விழுக்காடு புற்றுநோய், இதய நோய் போன்ற சர்வதேச நோய்களை விட அதிகம் என்பதும் கவனிக்கத் தக்கது.

மனநிலை பாதிக்கப்பட்டவர்களில் 90 விழுக்காடு மக்கள் எந்த விதமான சிகிச்சைக்குள்ளும் வருவதில்லை என்பது இன்னோர் அதிர்ச்சிகரமான தகவல். பெரும்பாலும் இதை விதி என்றோ, சாபம் என்றோ எடுத்துக் கொண்டு சிகிச்சை அளிக்காமலேயே விட்டுவிடும் நிலை தான் நிலவுகிறது.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்திருக்கும் சமூகம் இவர்களை மனிதனுக்குக் கீழானவனாகப் பார்ப்பதும், ஊடகங்கள் பல இவர்களை நகைச்சுவைக் கதாபாத்திரங்களாக உலவ விடுவதும் நமது மனித நேயத்தின் மீது கேள்விகளை எழுப்பும் நிகழ்வுகளாகும்.

இந்த மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் கூட இந்த பாதிப்பை உள்வாங்கி சகஜமான வாழ்க்கை வாழ முடியாத நிலை வந்து விடுகிறது.

மனநிலை பாதிப்படைவதன் ஆரம்ப கட்ட மன இறுக்கம், மன அழுத்தம், மனநிலை தடுமாற்றம் போன்றவை இந்தியாவில் சுமார் எட்டு விழுக்காடு மக்களிடம் இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இயல்பான வாழ்க்கைச் சூழலும், மன அளவில் தைரியமும் அமைதியும் வளர்த்துக் கொள்ளாத நிலையும், சமூக அரசியல் காரணங்களும், வறுமை போன்ற தீர்க்க இயலாத பிரச்சனைகளும் இத்தகைய மன அழுத்தங்களை அதிகரிக்கின்றன.

வாழ்க்கை என்பதை நிதானமாகவும் அமைதியாகவும் அணுகுவதும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அதிக பட்ச மனித நேயத்தோடு அணுகுவதும் வாழ்க்கை நம்மை நோக்கி நீட்டப்படும் விண்ணப்பங்களாகும்.