இது சிரிக்கிற விஷயம் இல்லீங்க :(

mental.jpg

மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களின் வாழ்க்கை சோகங்களால் சூழப்பட்ட தீவைப்போன்றது. நான்கு புறபும் நிராகரிப்புகளின் தண்ணீர் சூழ கண்ணீர் வாழ்க்கை வாழும் நிலையே அவர்களுக்கு இந்த சமூகத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.

வீடுகளில் பெரும்பாலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுகளே அற்றவர்கள் போல நடத்தப்படுவது வேதனையிலும் வேதனை. அவர்களுடைய மொழிபெயர்க்க முடியாத ஏக்கங்களும் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் நிராகரிக்கப்பட்டு வீட்டின் கொல்லைப்பகுதிகளிலோ, குகைப்பகுதிகளிலோ, அல்லது வெளிச்சம் கூட நுழையாத இடங்களிலோ சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருக்கும் நிலையே பல மூன்றாம் உலக நாடுகளிடம் இருந்து வருகிறது.

தற்போதைய நிலையில் உலகிலேயே மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் மற்ற எந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை விடவும் அதிகம் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது.

மனநோயினால் பாதிப்படைவதனால் உலகில் சுமார் எட்டு இலட்சம் பேர் ஆண்டு தோறும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்னும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவும் வெளியாகி இருக்கிறது. இத்தகைய தற்கொலை நிகழ்வுகள் வறுமையில் உழலும் நாடுகளில் மிகவும் அதிக அளவில் நடை பெறுகின்றன என்பது கவனிக்கத் தக்கது.

அதிலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆய்வு ஒன்றில் உலகிலேயே அதிக அளவு இளையவர்கள் தற்கொலை செய்து கொள்வது தென்னிந்தியாவில் தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உலகின் நோய் விகிதத்தை எடுத்துக் கொண்டால் கூட சுமார் பதினான்கு விழுக்காடு மனநோய் பாதிப்பாகத் தான் இருக்கிறது., இந்த விழுக்காடு புற்றுநோய், இதய நோய் போன்ற சர்வதேச நோய்களை விட அதிகம் என்பதும் கவனிக்கத் தக்கது.

மனநிலை பாதிக்கப்பட்டவர்களில் 90 விழுக்காடு மக்கள் எந்த விதமான சிகிச்சைக்குள்ளும் வருவதில்லை என்பது இன்னோர் அதிர்ச்சிகரமான தகவல். பெரும்பாலும் இதை விதி என்றோ, சாபம் என்றோ எடுத்துக் கொண்டு சிகிச்சை அளிக்காமலேயே விட்டுவிடும் நிலை தான் நிலவுகிறது.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்திருக்கும் சமூகம் இவர்களை மனிதனுக்குக் கீழானவனாகப் பார்ப்பதும், ஊடகங்கள் பல இவர்களை நகைச்சுவைக் கதாபாத்திரங்களாக உலவ விடுவதும் நமது மனித நேயத்தின் மீது கேள்விகளை எழுப்பும் நிகழ்வுகளாகும்.

இந்த மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் கூட இந்த பாதிப்பை உள்வாங்கி சகஜமான வாழ்க்கை வாழ முடியாத நிலை வந்து விடுகிறது.

மனநிலை பாதிப்படைவதன் ஆரம்ப கட்ட மன இறுக்கம், மன அழுத்தம், மனநிலை தடுமாற்றம் போன்றவை இந்தியாவில் சுமார் எட்டு விழுக்காடு மக்களிடம் இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இயல்பான வாழ்க்கைச் சூழலும், மன அளவில் தைரியமும் அமைதியும் வளர்த்துக் கொள்ளாத நிலையும், சமூக அரசியல் காரணங்களும், வறுமை போன்ற தீர்க்க இயலாத பிரச்சனைகளும் இத்தகைய மன அழுத்தங்களை அதிகரிக்கின்றன.

வாழ்க்கை என்பதை நிதானமாகவும் அமைதியாகவும் அணுகுவதும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அதிக பட்ச மனித நேயத்தோடு அணுகுவதும் வாழ்க்கை நம்மை நோக்கி நீட்டப்படும் விண்ணப்பங்களாகும்.