இதுகூட மூளையைப் பாதிக்கும் !

brain.jpg

நாம் அறியாமலேயே செய்யும் பல செயல்கள் நம்முடைய மூளையைப் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடுகின்றன. அவற்றைக் குறித்த அறிவு இருந்தால் அவற்றை விலக்கி விடுதல் சுலபமாக இருக்கும்.

காலையில் எதுவுமே உண்ணாமல் இருப்பது பலருக்கு வழக்கம். “நான் பொதுவாவே காலைல சாப்பிடறதில்லீங்க” என்று பெருமையாக சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள். ஆனால் அப்படி இருப்பதனால் இரத்தத்தின் சர்க்கரை அளவு குறைந்து விடுகிறது. இரத்தத்தில் குறையும் இந்த சர்க்கரை அளவினால் மூளைக்குத் தேவையான பல சத்துக்கள் மூளைக்குச் செல்வதில் குறைபாடு ஏற்படுகின்றது. இது மூளையைப் பாதிப்படைய வைக்கிறது.

அதிகமாக உண்பதும் மூளையின் செல்களை கடினப்படுத்தி, மந்தநிலைக்குத் தள்ளி விடுகின்றனவாம். இதனால் மூளையின் செயல்பாடு பலவீனமடைந்து விடுகிறது.

புகை ! அது எப்போதுமே உடலுக்குப் பகை தான். நுரையீரலை மட்டுமல்ல மூளையையும் இது பாதிப்படைய வைக்கிறது. மூளை சுருக்கத்திற்கு புகை பிடிக்கும் பழக்கம் காரணியாகி விடுகிறதாம். இதன் மூலம் அல்சீமர் போன்ற நோய்கள் கூட வர வாய்ப்பு உண்டு என எச்சரிக்கின்றனர் மருத்துவர்.

தூக்கம் மூளையை சற்றே ஓய்வெடுக்க வைக்கும் ஒரு நிலை. சரியான தூக்கம் தொடர்ந்து கிடைக்காத மனிதர்களுடைய மூளையில் அணுக்கள் பலவீனமடையும். மூளையின் செல்கள் இறந்து போகும் வாய்ப்புகள் கூட உண்டு.

தலையை மூடிக்கொண்டு தூங்குவது தவறு. தலையை மூடிக் கொண்டு தூங்கும் போது போர்வைக்குள் சுற்றி வரும் கரியமில வாயுவையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கும் நிலைக்கு மூளை சென்று விடுகிறது. இதனால் மூளைக்குத் தேவையான உயிர் வழி கிடைக்காமல் மூளையின் செயல் பாடுகள் பாதிப்படையும் அபாயம் உண்டு.

அதிகப்படியான இனிப்புப் பொருட்களை உட்கொள்வது கூட மூளைக்குத் தேவையான புரதச் சத்து மற்றும் பிற சத்துக்கள் கிடைப்பதற்குத் தடையாக இருக்கிறது. இது மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் அபாயம் உண்டு.

மாசு கலந்த காற்றைச் சுவாசிப்பதும் மூளையைப் பாதிக்கும். நமது உடலிலேயே அதிக உயிர்வழியை உட்கொள்ளும் இடம் மூளையே. மாசு கலந்த காற்றைச் சுவாசிக்கும் போது மூளைக்குத் தேவையான உயிர்வழி தேவையான அளவு கிடைக்காமல் போய்விடுகிறது. அது மூளையின் செயல்பாட்டைப் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகிறது.

மன அழுத்தமான சூழலில் வேலை செய்வதும், மிகக் கடினமாக வேலை செய்வதும், அதிக நேரம் வேலை செய்வதும் கூட மூளையை பாதிக்கும் காரணிகளில் சில.

மூளையின் செயல்பாடுகள் மனித வாழ்வின் இன்றியமையாத ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆறறிவுக்குள் மனிதனை வகைப்படுத்தும் வலிமை மூளைக்கு இருக்கிறது. எனவே மூளையின் செயல்பாடுகள் பாதிப்படையாமல் இருக்கும் வழி முறைகளைக் கையாள்வது அவசியம்.

குறிப்பாக, புகை போன்ற பழக்கங்களைக் கைவிட வேண்டும். உணவு உட்கொள்ளும் போது சரியான உணவுகளை சரியான அளவு உட்கொள்ள வேண்டும். நல்ல சுகாதாரமான சூழலில் வேலை செய்வதும், சரியான அளவு வேலை செய்வதும், இரவில் நன்றாகத் தூங்குவதும் அவசியம்.

நல்ல சிந்தனைகள் மூளையை வளப்படுத்தும். எனவே வித்தியாசமான சிந்தனைகள், புதுப்புது முயற்சிகளில் மூளையை பயன்படுத்தி மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்துங்கள்.

மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் போட்டிகள், வினாடி வினாக்கள், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் நேரம் செலவழியுங்கள்.

நல்ல ஆரோக்கியமான விவாதங்களையோ, அறிவு சார் விஷயங்களையோ அடிக்கடி பேசுங்கள்.

மூளை முக்கியமானது. கவனமுடன் கையாளுங்கள்