சாப்பிட்டதுக்கு அப்புறம் தம் அடிக்கலாமா ?

smoke.jpg

நன்றாக உணவு உண்ட பின் நாம் செய்யும் பல செயல்கள் நமது ஆரோக்கியத்தை எந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்பது பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. அந்த பட்டியலில் இந்த ஏழு செய்திகளும் முக்கிய இடம் பிடிக்கின்றன. இந்த ஏழு செய்திகளையும் நினைவில் கொள்ளுங்கள். இவை உணவு உண்ட உடன் செய்யக் கூடாத செயல்கள்.

உணவு உண்ட உடன் நிம்மதியாக சுவரில் சாய்ந்து நின்று கொண்டு ஒன்றோ இரண்டோ சிகரெட் புகைப்பது புகை பிரியர்களின் பட்டியலில் நிச்சயம் இருக்கும். இது மிகவும் ஆபத்தானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உணவு உண்டபின் பிடிக்கும் ஒரு சிகரெட் பத்து சிகரெட் பிடிப்பதன் பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனால் கான்சர் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. எனவே உணவு உண்ட உடன் தம் அடிப்பதை நிறுத்துங்கள்.

உணவு உண்ட உடன் பழங்கள் உண்பதும் பலருடைய வழக்கம். அதுவும் தீமையானது என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் வயிற்றுப் பகுதியில் காற்று அதிகம் நிறையும் நிலை உருவாகிவிடுகிறதாம். எனவே உணவுக்குப் பின் ஒருமணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழிந்து பழங்களை உட்கொள்தலே சிறந்தது.

உணவுக்குப் பின் தேனீர் (டீ) குடிப்பது கூட பலருடைய வழக்கம். தேனீர் அதிக அமிலச்சத்து நிறைந்த பொருள். இந்த அமிலம் உட்கொண்ட உணவின் புரோட்டீன் பொருட்களை இறுகச் செய்து விடுகின்றன. எனவே உணவு எளிதில் செரிமானம் ஆகாமல் போய்விடுகிறது. எனவே உணவுக்குப் பின் உடனே தேனீர் உட்கொள்வதையும் நிறுத்துதல் நலம்.

உணவு உண்டபின் உடனே பெல்ட்டை தளர்த்தி விடுவதும் சரியல்ல என்கின்றனர். இதன் மூலம் குடல் சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதாம்.

உணவுக்குப் பின் உடனே குளிப்பதும் நல்லதல்ல. இதன் மூலம் இரத்த ஓட்டம் உடலின் பல இடங்களுக்கும் வேகமாகப் பாய்வதால் வயிற்றில் இருக்கும் உணவுப் பொருள் செரிமானம் ஆகவேண்டிய அளவுக்கு இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதியில் இருப்பதில்லையாம். எனவே செரிமானப் பிரச்சனைகள் தோன்றும் வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. எனவே கொஞ்சம் பொறுத்தே குளியுங்கள்.

சாப்பிட்ட உடனே கொஞ்சம் நடந்து வந்தால் உண்டது செரிக்கும் என்பது பலருடைய நம்பிக்கை. ஆனால் உண்மையில் இது தவறு. உண்ட உடன் நடந்தால் நாம் உண்ணும் பொருட்களில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லையாம்.

உண்ட உடன் தூங்குதல் கூடாது. இது பலருக்கும் தெரிந்தது தான். இதன் மூலம் வாயுத் தொல்லை உட்பட பல உடல் உபாதைகள் வந்து சேர்கின்றன.

இந்த ஏழு செயல்களையும் நினைவில் கொள்ளுங்கள். அடுத்த முறை உணவு அருந்தியபின் இவற்றை தவிர்க்க வேண்டும் என உறுதி எடுங்கள்.

காலரை தூக்கி விட்டுக்கோங்க !

42-18032440.jpg

மூளை ஒரு அதிசயம். ஆனால் இள வயதில் சிந்தனைத் திறனோடும், நல்ல அறிவுச் செயல்பாட்டோடும் திகழ்பவர்கள் முதுமை அடையும் போது சிந்தனைத் தடுமாற்றம் அடைவது இயல்பு.

மூளையின் செயல்பாடுகளில் ஏற்படும் இத்தகைய வீழ்ச்சியை எப்படி சரிசெய்வது என்பது குறித்து உலக அளவில் பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இது தொடர்பாக சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஒரு ஆராய்ச்சி மிகவும் சுவாரஸ்யமானது.

அதாவது ஒரு மொழியில் புலமை வாய்ந்த மக்களை விட இரண்டு மொழிகளில் புலமை வாய்ந்தவர்களுக்கு மூளையின் செயல்பாடுகள் துரிதமாக இருக்கும் என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு. இதன் மூலம் பல மொழிப் புலமையாளர்கள் ஒரு மொழிப் புலமையாளர்களை விட சிறப்பான முதுமையைப் பெறுவார்கள்.

கனடாவில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மேல் நாட்டினரும், ஆங்கிலமும் தமிழும் தெரிந்த தமிழர்களும் ஈடுபடுத்தப் பட்டனர் என்பது தமிழர்களை சற்று பெருமையடையச் செய்யும் செய்தி.

ஏற்கனவே மூளைக்கும் மொழிக்கும் இடையேயான உறவுகளைக் குறித்து பல சுவாரஸ்யமான ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்று ஆங்கில மொழியைப் பேசுபவர்களை விட அதிக மூளை செயல்பாடு சீன மொழி பேசுபவர்களுக்கு இருக்கிறது என்பது.

சைனீஸ் மொழி பேசுபவர்கள் மூளையின் இரண்டு பாகங்களையும் பயன்படுத்துவதாகவும், ஆங்கிலம் பேசுபவர்கள் மூளையின் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும் அந்த ஆராய்ச்சி கோடிட்டுக் காட்டியது.

குழந்தைகள் பிறந்தவுடன் பெற்றோரும் சமூகமும் கற்பிக்கும் அவர்களுடைய தாய்மொழி மூளையில் மிகப்பெரிய ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறது எனவும், பிற்காலத்தில் குழந்தையின் மொழி அறிவுக்கு அந்த அடித்தளம் முக்கிய காரணியாய் விளங்கும் என்பதும் அந்த ஆராய்ச்சியின் இன்னோர் முடிவு.

ஆங்கில மொழி மட்டுமே தெரிந்தவர்கள் பிற்காலத்தில் சைனீஸ் மொழியைப் பேச பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டியதன் காரணம் இத்தகைய அடித்தளமே என்றும் அந்த ஆராய்ச்சி அடித்துக் கூறுகிறது.

மூளையை துடிப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்பவர்களால் முதுமையிலும் மூளை செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்று முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு செய்திருந்தது.

இன்னோர் ஆராய்ச்சி இசைக்கருவிகளை இசைப்பவர்கள், நடனத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதிக புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் போன்றோர் மூளையை உற்சாகமாக முதுமையிலும் வைத்துக் கொள்ள முடியும் என்று கூறியிருந்தது.

மேலும் ஒரு ஆராய்ச்சி குறுக்கெழுத்துப் போட்டிகள், சதுரங்கம், கேரம் போன்ற விளையாட்டுகள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்று சொன்னது.

இப்போது இந்த ஆராய்ச்சி இரண்டு மொழிகளில் சரளமாய் பேசக்கூடியவர்களால், ஒரு மொழியில் மட்டுமே அறிவு பெற்றிருப்பவர்களை விட அதிகமாய் மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது.

முதுமையில் வரும் நினைவு இழத்தல், சிந்தனை மங்கிப் போதல், அல்சீமர் போன்ற பல குறைபாடுகளை இந்த ஆராய்ச்சி இன்னோர் கோணத்தில் அணுகச் செய்திருக்கிறது என்பதே உண்மை.