பள்ளிக்கூடம் : தங்கரும் விதிவிலக்கல்ல !!!

pk.jpg

தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கடந்த வார இறுதியில் தான் எனக்கு வாய்த்தது. பால்ய நினைவுகளைக் கிளறுவது எப்போதுமே சுவாரஸ்யமானது. அதுவும் கவலைகள் ஏதும் இல்லாத பள்ளிக்கூட வாழ்க்கையையும், வறுமையையும் பணக்காரத் தனத்தையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத ஆரம்பப் பள்ளி நட்பு வட்டாரமும் நினைவுகளில் மிதப்பது ஒரு சுக அனுபவம்.

படித்த பள்ளிக்கூடம் சிதிலமடைந்து கிடப்பதும், வருமானம் இல்லாத பள்ளிக்கூடத்தை மூட வேண்டிய சூழல் ஏற்படும்போது பள்ளிக்கூடத்தை பழைய முன்னாள் மாணவர்களின் உதவியுடன் புதுப்பித்து செயல்பட வைப்பதே பள்ளிக்கூடம் சொல்லும் கதை.

‘மழைக்காகத் தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன், ஆனால் அங்கும் மழையைத் தான் பார்த்தேன்” எனும் அறிஞரின் கூற்றுப்படி வெளியேயும் உள்ளேயும் மழை என்னும் காட்சியுடன் ஆரம்பிக்கும் பள்ளிக்கூடம் பால்ய நினைவுகளை கிளறும் காட்சிகளால் கோர்க்கப்பட்டு திரையில் விரிகிறது.

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியாளராக இருக்கும் வெற்றிவேலும் (நரேன்), திரைப்பட இயக்குனராய் இருக்கும் முத்துவும்(சீமான்) கிராமத்தான் குமார சாமியும்( தங்கர் பச்சான்) கிராமத்து பள்ளிக்கூடத்திலேயே ஆசிரியப் பணி ஆற்றும் கோகிலா(ஸ்நேகா)வும் பள்ளிக்கூடத்தின் பாத்திரங்களாகிறார்கள்.

உணர்ச்சிபூர்வமான ஒரு கதையைச் சொன்னதற்காகவும், இந்த கதையம்சம் வாழ்வின் தேவைகளை முன்னிறுத்தியிருப்பதற்காகவும், அதில் தெரியும் கல்வி சமூக அக்கறைக்காகவும் தங்கர் பச்சானை மனமாரப் பாராட்டலாம்.

கிராமத்துக்காரனாக வலம் வரும் தங்கர் பச்சானின் நடிப்பும், நண்பர்களின் பழைய துணிகளைக் கூட ஆசை ஆசையாய் எடுத்து வைத்துக் கொள்ளும் பாங்கும் நெகிழ வைக்கிறது.

எனினும் தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் திரைப்படம் அவருடைய பள்ளிக்கூடத்தைப் போலவே சிதிலமடைந்து தான் கிடக்கிறது.

காட்சிப் படுத்துவதில் சில இடங்களில் பரிமளிக்கும் தங்கர் பல இடங்களில் படுதோல்வியையே சந்தித்திருக்கிறார். திடீர் திடீரென வந்து போகும் காட்சிகளும், நாடகத் தனமான காட்சிகளும் பள்ளிக்கூடம் முழுக்க நிரம்பி வழிகின்றன.

கலெக்டரை முதன் முதலில் சந்திக்கும் காட்சி, டைரக்டரை சந்திக்கும் காட்சி, கடைசியில் நாயகன் நாயகி சந்திக்கும் காட்சி என எல்லா முக்கியமான கட்டங்களும் நாடகத் தனமாகவே இருப்பது வியப்பான சலிப்பு.

கிறிஸ்தவர்கள் என்றால் கவுண் அணிந்திருப்பார்கள், மாலையில் தண்ணியடிப்பார்கள், வீட்டில் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் என்னும் தமிழ் சினிமாவின் வரைமுறையிலிருந்து பள்ளிக்கூடமும் விலகியிருக்கவில்லை.

ஜெனிபர் என்னும் கிறிஸ்தவப் பெண் பாலியல் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் இங்கும். அவருடைய கணுக்காலை எட்டிப்பார்க்கவும், தொட்டுப்பார்க்கவும் அலையும் சபலக் காரராகத் தான் அவருடைய மழலைக்காலம் கழிந்திருக்கிறது என்பது வேதனை.

கோகிலா என்னும் ஆசிரியை முழுக்க முழுக்க போர்த்தியபடி கலாச்சாரத்தின் (?) சின்னமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதற்கும், ஜெனிபர் என்னும் பெண் கவர்ச்சிப் பொருளாக ஊராரின் தாபக் கனவுக்குள் நடமாடும் பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதற்கும் காரணத்தை அறிய அதிக நேரம் ஆவதில்லை.

ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் ‘ஞாபகம் வருதே’ பாடலுக்கும், பள்ளிக்கூடத்தின் ‘ஞாபகம் வருதே’ பாடலுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கச் சொன்னால் நன்றாக இருக்கும். ஆட்டோகிராஃப் ஒரு சமூக சார்பற்ற கதையைக் கொண்டிருந்தாலும் மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தது. அதாவது உணர்வுகளை படமாக்கிய விதத்தில் ஆட்டோகிராஃப் பள்ளிக்கூடமல்ல, பல்கலைக்கழகம். பள்ளிக்கூடம் படமாக்கப் பட்ட விதத்திலும் ஆட்டோகிராஃபின் பாதிப்பு இருப்பதை ஒத்துக் கொண்டேயாக வேண்டும்.

தேவையற்ற கவர்ச்சிப் பாடலையும் தங்கர் வலியத் திணித்திருக்கிறார். வியாபாரத்துக்காக என்று இனியும் அவர் சாக்குப் போக்கு சொன்னால் அவருடைய படத்தைப் பற்றி அதிகம் பேசாமல் இருப்பாராக.

பள்ளிக்கூடத்திற்கு முன்னாள் மாணவர்கள் வருவதும் பல படங்களில் பார்த்த சமாச்சாரம் தான். மலையாள படங்களின் சாயலும் இதில் வீசுகிறது. சில பல மாதங்களுக்கு முன் கதாநாயகனை குணப்படுத்துவதற்காக முன்னாள் மாணவர்கள் எல்லாம் கல்லூரியில் கூடும் கதையம்சத்துடன் திரைப்படம் ஒன்று வெளியானதும் நினைவில் வருகிறது.

கலெக்டர் ஊருக்கு வருவதும் அது தொடர்ந்த காட்சிகளிலும் நெளியும் செயற்கைத் தனம் தங்கரிடம் யாரும் எதிர்பாராதது. கடைசி காட்சிகளில் நண்பனை வரவேற்க தலையில் பெஞ்ச் சுமந்து வரும் இடம் தவிர்த்த இடங்களில் எல்லாம் செயற்கைத் தனம்.

அதுவும் கோகிலாவை பார்க்காமலேயே முறுக்கித் திரியும் கலெக்டர் விழா முடிந்தபின் பேட்டி நேரத்தில் கோகிலாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது நாடகத் தனத்தின் உச்சம் எனலாம். ஒரு மெல்லிய பார்வையிலோ, ஒரு கரம் தொடுதலிலோ உணர்ச்சிகளை பீறிட்டு ஓட வைத்திருக்க முடியும்.

கலெக்டர் சொன்ன உடனேயே கண்ணீருடன் ஓடி வரும் கோகிலா பெண்களை இழிவு படுத்துகிறார். தன்னை இத்தனை நாள் தவிக்க விட்டு, ஒரு வார்த்தை கூட விசாரிக்காமல், ஊருக்கு வந்தபின்பு கூட நேருக்கு நேர் பார்த்து ஒரு காதல் பார்வை கூட வீசாத கலெக்டரிடம் ஒரு அடிமை விடுதலையாகும் உற்சாகத்துடன் கோகிலா ஓடுவதில் ஒட்டு மொத்த பெண்களும் சற்று தலை குனிகிறார்கள்.

மொத்தத்தின் தங்கர் பச்சான் ஒரு கதையை படமாக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவின் சட்டதிட்டங்களை மீறாமல், ஆனால் மீறியிருப்பது போன்ற பாவனையில்.

சிதிலமடைந்து தான் கிடக்கிறது தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் !

5 comments on “பள்ளிக்கூடம் : தங்கரும் விதிவிலக்கல்ல !!!

 1. அது ஏனோ எனக்கு தங்கர் மேல் நல்ல அபிப்ராயம் வர ரொம்ப தயக்கம் ஏற்ப்படுகிறது.
  ஒரு ஏழை பெண்ணின் 600 ரூபாய் சம்பளத்தை கொடுக்க மறுத்தவர் படங்களில் பெண்கள் நடிப்பதே அவமானம் தான்.

  கிறிஸ்த்தவர்கள் உண்மயில் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரியாமல் தான் பெரும்பாலான இயக்குனர்கள் உள்ளார்கள்.

  இத்தகய stereo typingஐப்பற்றி யாரும் எதுவும் சொல்வதில்லை.

  அதே நேரம் சேவியர் சார் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

  கத்தோலிக்க பிரிவின் சில நியதிகளை மிக அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறென்….

  there is a lot of problem in the system(just like any other religiuos system) of having young women and men nuns and priests.i wish the xtian community was open enough to talk about those issues.because i have been in a position to know fully well about what was happening was morally wrong.however the higher ups would brush it under the carpet.
  i am sorry if this hurts your sentiments.

  Like

 2. //கிறிஸ்தவர்கள் என்றால் கவுண் அணிந்திருப்பார்கள், மாலையில் தண்ணியடிப்பார்கள், வீட்டில் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் என்னும் தமிழ் சினிமாவின் வரைமுறையிலிருந்து பள்ளிக்கூடமும் விலகியிருக்கவில்லை.//

  அட கொடுமையே! :(((

  Like

 3. கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே…

  //there is a lot of problem in the system(just like any other religiuos system) of having young women and men nuns and priests.i wish the xtian community was open enough to talk about those issues//

  மன்னிக்கவும். நான் பள்ளிக்கூடம் திரைப்படத்தைக் குறித்த எனது கருத்துக்களை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். மதம் சார்ந்த உரையாடல்களுக்கு நேரமில்லை 🙂 மன்னியுங்கள்

  Like

 4. பள்ளிக்கூடம் படம் அருமையாக எடுக்கப் பட்டிருக்க வேண்டிய படம். திரை உலக விதிகள் தடுத்திருக்கலாம். இருப்பினும் கருத்து அருமை. மறுக்க முடியாது. சிறு வயதில் ஆசிரியையின் அழகில் மயங்கிய மாணவர்களின் மனதில் சலனம் ஏற்படுவது இயற்கை. ஆபத்தில்லாதது. இருப்பினும் களைய வேண்டியது.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s