தூக்கம் குறித்த ஆராய்ச்சிகள் : சிறு அலசல்

sleep.jpg

உலக அளவில் தூக்கம் தொடர்பாக நடைபெற்று வரும் ஆய்வுகள் கணக்கற்றவை. ஒவ்வொர் ஆய்வும் நமக்கு தூக்கத்தைக் குறித்த ‘விழிப்புணர்வை’ வழங்குகின்றது என்பதே உண்மை. சீரற்ற தூக்கம் இதய நோய் வரும் வாய்ப்பை இருமடங்கு அதிகரிக்கும் என்னும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு ஒன்றை வெகு சமீபத்தில் லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் விரிவான அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இதயம் தொடர்பான நோய்களுக்கும் தூக்கத்துக்கும் இடையேயான உறவை ஆராய்ந்தது. அதனடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியை நடத்திய வார்விக் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஏழு மணி நேர தூக்கம் என்பது சரியான தூக்க அளவு என்றும், இந்த காலத்தை குறைக்கும் போது இதய நோய்கள் வரும் வாய்ப்புகளும் இரட்டிப்பாகின்றன என்பது அந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

இந்த ஆராய்ச்சி சொல்லும் சுவாரஸ்யமான இன்னோர் முடிவு என்னவெனில், இந்த தூக்க அளவை திடீரென அதிகரித்தால் கூட இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதாகும்.

சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் வயது, வாழ்க்கைத் தரம், பாலினம், பழக்கங்கள் போன்ற அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிம்மதியற்ற தூக்கமும், ஒழுங்கற்ற தூக்கமும் உடல் நலத்துக்கு எதிரானவை என்று அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இதற்கு முன் தூக்கம் தொடர்பாக செய்யப்பட்ட ஒரு ஆய்வு ஷிப்ட் முறைப்படி வேலை செய்பவர்களின் உடல்நலம் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகவும், அதற்குக் காரணம் அவர்கள் இரவில் தூக்கத்தை இழப்பதும், பகல் தூக்கத்தின் மூலம் அதை ஈடுகட்ட இயலாமல் போவதுமே என்று கூறியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. இரவு ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு இதய நோய் அதிகரிப்பதற்கும் இந்த தூக்கம் கெடுதல் முக்கியமான காரணமாய் விளங்குகிறது.

இரவு ஷிப்ட் வேலை பார்க்கும் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இரவில் செயற்கை ஒளியிலேயே முழு நேரமும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதும் இதற்கான ஒரு காரணம் என்பது அவர்களுடைய ஆய்வு முடிவு. பார்வை தெரியாத பெண்களுக்கு இத்தகைய பாதிப்பு பாதியாகக் குறைகிறது என்பதை அவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

தூக்கம் தொலைவதனால் வரும் இன்னொரு முக்கியமான பிரச்சனை மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு தொடர்பானது. தூக்கமில்லாமல் இருப்பவர்கள் சோர்வாகவும், கவனக் குறைவாகவும் இருப்பார்கள் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் அவர்களுடைய மூளை புதிய செல்களை உற்பத்தி செய்வதும் குறைகிறது என்பது இன்னொரு அதிர்ச்சியூட்டும் தகவலாகும்.

படுக்கையிலிருந்து சரியான தூக்கமில்லாமல் எழுந்திருப்பது நிறைய நேரத்தைத் தந்தாலும் கூடவே மன அழுத்தத்தையும் தரும் என்பது மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்லும் இன்னொரு செய்தியாகும். தினமும் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் பழக்கமுடையவர்கள் அதிக எடையுள்ளவர்களாக மாறிவிடும் ஆபத்து இருப்பதாகவும் மருத்துவ ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன.

இப்படி தூக்கத்தைக் குறித்த ஆய்வு முடிவுகள் ஒட்டுமொத்தமாக நம்மிடம் சொல்வது ஒன்றே ஒன்று தான். நிம்மதியாக தினமும் இரவில் ஏழு, எட்டு மணி நேரம் தூங்குங்கள். தேவையற்ற பல நோய்கள் தானாகவே விலகி ஓடிவிடும்.