புகைக்கு ஏன் அடிமையாகிறோம் ?

smoke.jpg
புகை பிடிப்பதன் தீமைகள் குறித்தும், அதை விலக்குவதற்காக எடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் டன் கணக்கில் கட்டுரைகளும் நூல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

இன்னொரு பக்கம் புகை பிடித்தல் குறித்த ஆராய்ச்சிகள் மருத்துவ அரங்கின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டிருக்கிறது. தினம் தோறும் ஒவ்வோர் ஆராய்ச்சி முடிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. எதுவுமே புகை பிடித்தல் நல்லது என்று சொல்லாத போதும் புகை பிடித்தல் பழக்கம் ஒழியவில்லை என்பது கண்கூடு.

சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு புகைக்கு அடிமையாகும் பழக்கத்தின் வேர்களை வெளிச்சப்படுத்தியிருக்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதும், புகை பிடித்துப் பார்த்தவர்கள் அனைவரும் புகைக்கு அடிமையாவதில்லை என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.

முதன் முதலாக புகை பிடிக்கும்போது புகை நமது மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்களே நாம் புகைக்கு அடிமை ஆவோமா இல்லையா என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதே சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி.

பதின் வயதுகளில் திருட்டுத் தனமாக புகை இழுத்துப் பார்க்கும் போது யார் மிகவும் ஓய்வாகவும், இன்பமாகவும் உணர்கிறார்களோ அவர்களே புகைக்கு அடிமையாவதாக இந்த ஆராய்ச்சி சொல்கிறது.

மூளையில் பரவும் நிக்கோட்டின் புகை எல்லோருடைய மூளையிலும் ஒரே போன்ற மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு அது எந்த மாற்றத்தையும் செய்யாமல், சிலரிடம் அதிகப்படியான மாற்றத்தை நிகழ்த்தி விடுகிறது. இதனால் தான் முதன் முறையாக புகை பிடிக்கும்போது வரும் உணர்ச்சிகள் கலவையாக உள்ளன.

இந்த முதல் முயற்சி தரும் கிளர்ச்சியே பிற்காலத்தில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு நாம் அடிமை ஆவோமா இல்லையா என்பதை நிர்ணயிக்கின்றன.

இந்த கிளர்ச்சி கிடைத்தால் மூளை மீண்டும் மீண்டும் அந்த கிளர்ச்சியை எதிர்நோக்க ஆரம்பித்து விடுகிறது. நமது செயல்பாடுகளின் பின்னணியில் இருக்கும் மூளையின் நேரடி கட்டளைகள் அந்த கிளர்ச்சி சுகத்தை மனக்கண்ணில் அடிக்கடி நிகழ்த்திக் காட்டி புகைக்கு அடிமையாக்கி விடுகிறது.

சிறு வயதில் குழந்தைகள் புகை பிடித்தலை விளையாட்டாகக் கூட முயற்சித்துப் பார்க்கக் கூடாது என்பதற்கான முக்கியமான காரணம் என இதைக் கொள்ளலாம்.

புகை பிடித்தல் தனி மனிதனை மட்டுமன்றி சமூகத்தையும் பாதிக்கிறது என்பதும் நமக்குத் தெரிந்ததே. சீனாவில் மட்டுமே இருபது இலட்சம் பேர் புகை பாதித்து மரணமடையும் வாய்ப்பு இருக்கிறதாம். இதில் உள்ள அதிர்ச்சி கலந்த உண்மை என்னவெனில் இவர்களில் யாருமே புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அல்ல என்பது தான்.

அதாவது நம்மைச் சுற்றி உலவும் சிகரெட் புகையினால் புகை பிடிக்காதவர்களும் கூட சிறிது சிறிதாக பாதிப்படைகிறார்கள். நாளடைவில் இவர்களுக்கும் புகை பிடிப்பவர்களுக்கு வரக்கூடைய பெரிய நோய்கள் வந்து மரணமடையும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

வாரத்துக்கு நாற்பது மணி நேரம் சிகரெட் புகை உலவும் இடங்களில் இருப்பவர்கள், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் அத்தகைய ஒரு சூழலில் இருக்க நேர்ந்தால் அவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் உட்பட பல நோய்கள் தாக்குகின்றன.

புகை பழக்கத்துக்கு அடிமையான பலர் பிற்காலத்தில் அதிலிருந்து விடுபட புகையிலை மெல்லும் பழக்கத்துக்குத் தாவி விடுகின்றனர். அது புகை பிடிப்பதை விட அதிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என நியூயார்க் ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

புகை பிடித்தலின் தீமைகளும், அதை விலக்கும், தவிர்க்கும் முறைகளும் அனைவருக்கும் தெரிந்திருந்தும் அது குறித்த விழிப்புணர்வை பல வேளைகளில் இளைய தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்துவதில்லை. ஊடகங்களின் மலினமான பிரச்சாரங்களை மீறி நமது சமூகத்தைக் காக்கும் கடமை நமக்கு உண்டு என்பதை உணர்ந்து விழிப்புடன் செயல்படுதல் அவசியம்

தாயின் பருமனும், குழந்தையின் புற்றுநோயும் !

kid.jpg

தாய்மார்களின் இடுப்பு அளவிற்கும் அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பருமனான தாய்மார்களின் குழந்தைகளுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு, ஒல்லியான தாய்மார்களின் குழந்தைகளை விட அதிகம் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வரும் தகவலாகும்.

அதிலும் குழந்தை பிறப்பதற்கு முன்பே அவர்கள் தடிமனான உடல் வாகைப் பெற்றிருந்தால் இந்த ஆபத்து மிகவும் அதிகமாம். அதிகப்படியாகச் சுரக்கும் பாலியல் ஹார்மோன் ஆஸ்டிரோஜென் தான் இந்த இடுப்பு அளவு அதிகரிப்பதன் காரணம் என்றும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.

மார்பகப் புற்று நோய்க்கான விதை குழந்தை கருவாக இருக்கும் முதல் கட்டத்திலேயே வந்துவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தாயின் இரத்தத்தில் உலாவரும் இந்த ஆஸ்டிரோஜென் ஹார்மோன்களே இதன் காரணகர்த்தாக்கள்.

இந்த ஹார்மோன்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்குமான தொடர்பு ஏற்கனவே ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை யூ.கே வின் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழக இயக்குனர் மருத்துவர் லெஸ்லி வால்கர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

மார்பகப் புற்று நோய்க்கு பலவிதமான காரணங்களும், சிகிச்சைகளும் மருத்துவ உலகில் உலவி வருகின்ற நிலையில் இந்த ஆராய்ச்சி இன்னோர் கோணத்தில் மருத்துவ உலகை நகர்த்தியிருக்கிறது.

மார்பகப் புற்று நோய் பாரம்பரியமாக வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்பதை கடந்த ஆண்டில் யூ.கே வில் நடந்த இன்னோரு ஆராய்ச்சி நிரூபித்திருந்தது. சாத்தியக் கூறுகள் அதிகம் என்று சொல்லலாமே தவிர நிச்சயம் வரும் என்று சொல்ல முடியாது என்பதையும் ஆய்வுகள் தெளிவு படுத்தியிருக்கின்றன.

இத்தகைய நிலையில் தற்போது தாயின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கும், அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் புற்று நோய் வாய்ப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு தாய்மார்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சரியான ஊட்டச்சத்து உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் உடலை ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் எனினும், ஹார்மோன் சுரப்பு போன்றவற்றை முழுமையாக வரைமுறைப்படுத்தும் சாத்தியமில்லை என்பதால் இந்த சிக்கலுக்கு என்ன வழி என்பதை மருத்துவ உலகம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறது.