வேல் : ஹரி.. வெரி வெரி சாரி..

vel.jpg

ரொம்ப நல்ல படம்டா.. போய் பாருடான்னு உசுப்பேத்தி வுட்டாங்க பசங்க. நானும் பார்த்தேன்.

‘இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா..’ சங்கர் மகாதேவன் உச்சஸ்தாயியில் பாடுகிறார் வேல் படத்தில். ரொம்ப அமைதியான ஊர் போல, என்று நினைத்துக் கொண்டே படம் பார்த்தால் படம் முழுக்க ஜீப்கள் எரிகின்றன, மரங்கள் எரிகின்றன, ஆலைகள் எரிகின்றன இத்யாதி.. இத்யாதி.

“இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா..” பாடல் வரிகளை எங்கே புடிச்சாங்கன்னு தெரியலை. ரசிக்கும் படியா இருக்கு. ஆனா, படம் முழுக்க அரிவாள் ஓய்வில்லாமல் வெட்டிக் கொண்டே இருக்கிறது. ஒருவேளை “இங்கே எறும்பு மட்டும் யாரையுமே கடிக்காதுடா” ன்னு இருக்கணுமோ தெரியலை.

பாடலாசிரியர்கள் கொஞ்சம் கவனம் செலுத்தினால் தேவலை. இது மட்டுமல்ல, இரண்டாவது வரியில் இப்படி “எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா “ என்றவர் அதே பாடலில் “புள்ளையார் சுண்டல் கேட்பார், பிள்ளைங்க சண்டை கேட்பர்” என்று கூறியிருக்கிறார், குண்டு போட்டா சிதறும்ன்னு சிலிர்க்க வைக்கிறார்  ஐயா.. கனவான்களே… பாடல்கள் கதையோட்டத்தைப் பிரதிபலிக்காவிட்டால் கூட பரவாயில்லை. வரிக்கு வரி முரண் மூட்டைகளை விரித்து பாடல்களை நகைச்சுவைக் களமாக்கி விடாதீர்கள்.

( இப்படி தான் சிவாஜி படத்துல, “ஆடு மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேக்கச் சொல்லிக் கேட்கும்” ன்னு சொல்லிட்டு ஆடு, மாடு, கோழி எல்லாம் சந்தோசாமா சிரிச்சிட்டிருக்கும் போதே, “அம்மியில் அரச்சு ஆக்கி வெச்ச நாட்டு கோழி பட்ட கிளப்பும்” ன்னு ஒரு குண்டை தூக்கி போட்டீங்க !. )

அதெல்லாம் விடுங்க. ஒரு கதை சொல்றேன் கேளுங்க.

ஒரு ஊரில ஒரு பெற்றோருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்குது ( ஆமா, இரண்டும் ஆண் பிள்ளைங்க தான் ) அதுல ஒரு குழந்தை திருடு போயிடுது. இரண்டு பிள்ளைங்களும் இரண்டு இடத்துல வளர்ராங்க. குழந்தையைப் பறிகொடுத்த தாய் இருபத்து ஏழு வருஷமாய் ( ஆமாங்க… எந்த ஹீரோக்கு தான் என்னிக்கு தான் முப்பது வயசு தாண்டியிருக்கு ? ) குழந்தைக்காய் அழுகிறாள்.

குழந்தை கிடைத்த தாய், குழந்தை பறி போய் விடக் கூடாதே என அழுகிறாள். கடைசியில் இருவரும் சந்தித்துக் கொள்ள, தாய் மகனைக் கேட்க, வளர்ப்புத் தாய் அழ….

“இது எம்.ஜி.யார் பட கதை தானே”

யாருப்பா .. குறுக்கால பேசறது ? ஒழுங்கா வேல் பட கதையைச் சொல்ல விடமாட்டியே… சரி இன்னொரு கதை சொல்றேன்.

ஹீரோவின் பெற்றோர் வில்லனுடன் உரசிக் கொள்ள, அவமானமடையும் வில்லன் சிறை சென்று திரும்பியபின் ஹீரோவின் பெற்றோரைக் கொலை செய்ய, ஹீரோ வளர்ந்து பழி வா….

“ வெரி..சாரி சார்… இது எந்த ஹீரோன்னு குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி எல்லாரும் நடிச்ச கதை….”

மறுபடியும் குறுக்கே பேச வந்துட்டியா ? வேல் படத்தோட கதை இவ்ளோ தான். இனிமேலாச்சும் கொஞ்சம் சைலண்டா இரு.

என்னது ? வேல் படத்தோட கதை இவ்ளோ தானா ? அப்போ எப்படி படம் சூப்பர் அது இதுன்னு சொல்றாங்க ? ஒருவேளை காட்சிப்படுத்தல்ல கலக்கிட்டாங்களோ ?

மண்ணாங்கட்டி. அதே லாரி, அதே கிராமம், அதேமாதிரி ஆளாளுக்கு நாலஞ்சு அரிவாள், பெரிய மீசை, அரைக்கை சட்டை இப்படியே ஹரியோட ஏதாவது ஒரு படத்தை நினைச்சு பாரு. அதுல இருந்து கொஞ்சமும் மாற்றமில்லை இந்த வேல்.

ஒருவேளை பாடல், சண்டைக்காட்சி ?

என்னப்பா.. இந்திய கிரிக்கெட் டீம் போல, அடுத்தவன் அடிப்பாங்கற கணக்கா, விடாம கேள்வியா கேட்டுட்டே இருக்கே ? அதெல்லாம் ஒண்ணும் இல்லை.

பின்னணி..

முன்னணிக்கு வரத் தகுதியில்லாத காது வலி.
யுவன்.. நிஜமாவே நீங்க தான் இசையா ? இல்லை பினாமியா ?

அசின் ? சரி.. கதாநாயகியைப் பற்றி என்னத்தை பேசிட்டு. ஆட்டம் போடறீங்க இல்ல ? அது போதும் தமிழ் சினிமாவுக்கு.

வடிவேலு, நீங்க கூட இப்படியாயிட்டீங்களே. இருந்தாலும், ஏதோ நீங்க இருக்கிறதனால சில செண்டர்களிலயாவது வேலுக்கு வேலையிருக்கு.

ஹரி… என்னப்பா படம் எடுக்கறே ? சூர்யா போன்ற ஒரு நடிகரோட கால்ஷீட் கிடச்சாலும் உங்களுக்கு கதை இது தானா ? வித்தியாசமா யோசிக்கவே மாட்டீங்களா ? ஆறறிவை சூர்யா பயன்படுத்தப் போகிறார்ன்னு கொக்கி போட்டுட்டு டேபிள்ல கஞ்சா ஒளிச்சு வெக்கிறது, இன்கம் டாக்ஸ் காரங்களை வீட்டுல அனுப்பறது, செல்போன்ல டயலாக் விடறது … இவ்ளோ தானா ? மன்னிக்கவும்.. நீங்க உங்க படத்தைத் தவிர வேறு படங்களை பாக்கவே மாட்டீங்களா ?

ஏதோ சுரேஷ் கோபியோட மலையாள படம் பார்த்த மாதிரி ஒரே டயலாக் மழை.

வேல் – ஹரியிடம் சரக்கில்லை என்பதை நிரூபிக்கும் படம்.